privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசென்னை -மதுரவாயல்: தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!

சென்னை -மதுரவாயல்: தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!

-

னிக்கிழமை (25/8) மாலை மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் ஒருவர் கொலை செய்து வீசப்பட்டிருந்தார். விசாரணைக்காக போலீசு வந்தது. கொலை சம்பவம் என்பதால் பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் வேடிக்கை பார்த்த பகுதி இளைஞர்களை குறிவைத்த போலீசு அவர்களைத் தூக்க முடிவு செய்தது. வழக்கமாக குற்றவாளிகள் கிடைக்காமல் இப்படி அப்பாவிகள் மீது வழக்கு போடுவது போலீசின் உத்தி. அருகில் நின்று கொண்டிருந்த புரட்சிகர மாணவர் இளைஞர்-முன்னணி தோழர்கள் திவாகரும், குமரேசனும் மாணவர்களுக்கே உரிய துணிவோடு கொலையில் சம்பந்தமற்ற அப்பாவி இளைஞர்களை எதற்காக கைது செய்கிறீர்கள் என்று போலீசு கும்பலை எதிர்த்துக் கேட்டனர். உடனே தோழர்களை தாக்கிய காக்கிச்சட்டை ரவுடிகள் அவர்களையும் வண்டிக்குள் திணித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு பறந்தனர்.

போலீசு அந்த இளைஞர்களையும், தோழர்களையும் கைது செய்யவில்லை மாறாக கடத்தியிருக்கிறது. போலீசு ரவுடிகளால் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களும் தோழர்களும் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருக்கின்றனர்.

தகவலை அறிந்த பு.மா.இ.மு தோழர்கள் பகுதி மக்களை அணிதிரட்டிக் கொண்டு காக்கிச்சட்டை குண்டர்களுக்கு எதிராக முழக்கமிட்டபடியே மதுரவாயல் காவல் நிலையத்திற்கு முன்பு கூடினர். பொய் வழக்கில்  கைது செய்யப்பட்ட தோழர்களையும், இளைஞர்களையும் உடனடியாக விடுவிக்க கோரியும், அவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தையும் கேட்ட போது நீங்கள் காவல்துறை ஆய்வாளரை தாக்கியுள்ளீர்கள் எனவே தான் கைது செய்துள்ளோம் என்றார் உதவி ஆணையர் சீனிவாசன். போலீசின் அபாண்டமான குற்றச்சாட்டை மறுத்த தோழர்கள் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால் முற்றுகைப் போராட்டம் நட்த்துவோம் என்று கூறி காவல் நிலையத்தின் வாயிலிலேயே அமர்ந்தனர்.

முழக்கமிட்டபடி அமர்ந்திருந்த தோழர்களை போலீசு கும்பல் முதலில் அமைதியான முறையில் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றது. அதற்கடுத்த சில நிமிடங்களில் கடித்து குதறுவதற்காக காத்திருக்கும் வெறிநாய்களைப் போல தோழர்கள் மீது பாய்ந்தது. அவர்களுடைய லத்திக் கம்புகள் தோழர்களுடைய எலும்புகளை முறித்தன, தோல்களை உரித்தெடுத்தன. கண்ணில் தென்பட்ட சிவப்புச் சட்டை உருவங்கள் அனைத்தையும் விளாசி எடுத்தன லத்திக்கம்புகள். பட்டப்பகலில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாசிச ஜெயாவின் வளர்ப்புப்பிராணிகள் இவ்வாறு வெறியாட்டம் போட்டன.

இவ்வாறு கொலைவெறித்தாக்குதல் நடத்தியதுடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டவர்களை கைதும் செய்திருக்கிறது. இந்த காட்டுமிராண்டி தாக்குதலில் ஒரு தோழருடைய மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, இரு தோழர்களுடைய எலும்புகள் விரிசல் விட்டு உடைந்திருக்கின்றன. பலத்த காயம் அடைந்திருக்கும் இந்த மூன்று தோழர்களும் கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அபாய கட்டத்தோடு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்று கைது செய்யப்பட்டவர்களில் பதினாறு பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாற்பத்து மூன்று மாணவர்கள் இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.  பு.மா.இ.மு தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளையும் கையிலெடுத்துப்போராடி வருவது ஆளும் வர்க்கத்திற்கும் அதன் ஏவல் நாய்களான போலீசுக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே தான் தோழர்களை சிறைக்குள் தள்ளுவதன் மூலம் அவர்களை போராட்டக்களத்திலிருந்து அப்புறப்படுத்திவிடலாம் என்று கனவு காணுகிறார்கள். நக்சல்பாரி இயக்கத் தோழர்கள் என்றுமே சிறையைக்கண்டு அஞ்சியதில்லை.

பாசிச ஜெயாவின் ஆட்சியில் புழல் மட்டுமா சிறைச்சாலையாக இருக்கிறது. தமிழகமே சிறைச்சலையாகத்தான் இருக்கிறது. அத்தகைய மிகப்பெரிய சிறைக்குள்ளிருந்து கொண்டு புழல் என்கிற சிறிய சிறைக்கு அஞ்சுபவர்கள் அல்ல இந்தத் தோழர்கள். போராட்டக் களத்திலிருந்து பு.மா.இ.முவை ஒழிக்க வேண்டும் என்று ஆட்டம் போடும் போலீசின் கொழுப்பும், திமிரும் உழைக்கும் மக்களது போராட்டத்தால் ஒடுக்கப்படுவது உறுதி.