மாருதி சுசுகி நிர்வாகத்தின் கொடிய அடக்குமுறைக்கு எதிராக ஜுலை 18 அன்று வெடித்த தொழிலாளர் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஆலையில் கதவடைப்பு அறிவிக்கப்பட்டது. ஆலையின் சுற்றுவட்டார கிராமங்களில் வசித்து வந்த மாருதி தொழிலாளர்கள் மீது போலீசு அடக்குமுறையும் பொய்வழக்குகளும் பாய்ந்தன.
இப்போது மாருதி சுசுகி தொழிற்சாலை மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே வேலைக்கு வந்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.
1528 நிரந்தரத் தொழிலாளர்களில் 500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். பணி நீக்க அறிவிப்பும் ஆலை இயங்கத் தொடங்கும் என்ற அறிவிப்பும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.‘காயம்பட்ட அதிகாரிகள் யாரையெல்லாம் அடையாளம் காட்டினார்களோ, அவர்கள் அனைவரையும் வேலை நீக்கம் செய்திருக்கிறோம்; இன்னும் யாரெல்லாம் அடையாளம் காட்டப்படுகிறார்களோ, அவர்களையெல்லாம் வேலைநீக்கம் செய்வோம்” என்று அறிவித்திருக்கிறார் மாருதியின் தலைவர் பார்கவா.
எந்த விதமான விளக்கமும் கேட்காமல், விசாரணையும் நடத்தாமல் பணிநீக்கம் செய்வது, சட்டத்துக்குப் புறம்பானது என்று தெளிவாகத் தெரிந்த போதும், மாநில அரசு மூச்சுவிடவில்லை. 500 போலீசாரை ஆலைக்குள்ளேயே குவித்திருக்கிறது மாநில அரசு. முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்ட 100 ஆயுதம் தாங்கிய தனியார் படையினரை நிர்வாகம் நிறுத்தியிருக்கிறது. வெளிப்படையாக நிர்வாகத்தின் அடியாள் படையாகவே போலீசு நிறுத்தப்பட்டிருப்பதால், வேறு வழியின்றி காங்கிரசு, பா.ஜ.க. தொழிற்சங்கங்களே, ‘ஆலைக்குள்ளிருந்து போலீசைத் திரும்பப் பெறவேண்டும்’ என்று கோரியிருக்கின்றன.
அரியானா மாநிலம் போன்ட்சி சிறையில் 154 தொழிலாளர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இ.பி.கோ 302, 307, 323, 147, 148, 149, 34, 114 உள்ளிட்ட பல பிரிவுகளில் பொய்வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. பெயர் குறிப்பிடமுடியாத, ஆனால் கண்டால் அடையாளம் காணத்தக்க 500, 600 தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை போலீசு வருவதாகவும், தங்களை மிரட்டுவதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர். தலைமறைவாகியிருக்கின்ற தொழிலாளிகளைப் பிடிக்க, போலீசார் தபால்காரர்கள் போல வேடமணிந்து வந்து விசாரிப்பதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவருமே போலீசால் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றனர். நிர்வாகத்திலிருந்து வந்த அதிகாரிகள் போலீசுடன் சேர்ந்து விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனர். அனைவருமே நிர்வாணப்படுத்தப்பட்டு, தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு அடிக்கப்பட்டுள்ளனர். மூச்சு முட்டித் தவிக்கும் வரை தலையைத் தண்ணீர் தொட்டிக்குள் அமுக்குவது, மின்சார ஷாக் கொடுப்பது போன்ற கொடிய சித்திரவதைகளுக்குப் பின், நிர்வாக அதிகாரிகள் தொழிலாளர்களிடம் வெள்ளைத் தாள்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். ஒரு முன்னணித் தொழிலாளியை படுக்கவைத்து அவர் மீது 90 கிலோ உருளையை உருட்டியிருக்கின்றனர். போலீசு நிலையத்தில் இருக்கும் வரை தொழிலாளர்கள் யாரும் வழக்குரைஞர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
சித்திரவதைகள் குறித்து தொழிலாளர்களின் வக்கீல் விவரித்த பின்னரும் நீதிமன்றம் அதைப் பதிவு செய்யவில்லை. போலீசு கையில் வைத்திருக்கும் தொழிலாளிகளின் பட்டியல், நிர்வாகம் எழுதிக் கொடுத்ததேயன்றி, போலீசு விசாரணை செய்து கண்டுபிடித்தது அல்ல என்பதைத் தொழிலாளர் தரப்பு வக்கீல் பதக் நீதிமன்றத்தில் நிறுவிய பின்னரும், அதனை நீதிபதி கண்டுகொள்ளவில்லை.
“நிர்வாகம் கொடுத்திருக்கும் அந்தப் பட்டியலில் உள்ள தொழிலாளர்கள்தான், சுயேச்சையான தொழிற்சங்கம் ஒன்றைக் கட்டுவதற்காக கடந்த ஒரு ஆண்டாக இடைவிடாமல் போராடி வருபவர்கள். அடக்குமுறைகள் ஒவ்வொன்றின்போதும் அடங்கிப்போகாமல், நிர்வாகத்தை உறுதியாக எதிர்த்து நின்றவர்கள். வேலையிலிருந்து நீக்கப்பட்டாலும், வெளியில் இருந்தபடி மீண்டும் சங்கத்தைக் கட்டியமைக்கக் கூடியவர்கள். எனவே, மீண்டும் ஒரு சுயேச்சையான சங்கம் தலையெடுப்பதைத் தடுக்க வேண்டுமானால், இவர்கள் அனைவரும் சிறையில் இருந்தாகவேண்டும். நிர்வாகம் தனது கைக்கூலி சங்கம் ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்துவதும்கூட, இவர்கள் வெளியில் வந்து விட் டால் இயலாமல் போய்விடும் என்பதுதான் நிர்வாகத்தின் அச்சம்” என்கிறார்கள் தொழிலாளர்கள்.
அரசாங்கமும் ஊடகங்களும் ஒரு தரப்பாக, நிர்வாகத்தின் ஊதுகுழலாக இருப்பதால், அன்று ஆலைக்குள் நடைபெற்ற சம்பவம் என்ன என்பது இன்னமும் முழுமையாக வெளிவரவில்லை. சில பத்திரிகையாளர்களும், பிற தொழிற்சங்கங்களைச் சேர்ந்த முன்னணியாளர்களும், தலைமறைவாக இருக்கின்ற தொழிலாளிகளிடம் விசாரித்ததில் புதிதாகப் பல தகவல்கள் தெரிய வருகின்றன.
மானேசர்-குர்கான் ஆலைகள் அனைத்திலுமே, தொழிலாளர்களை மேலாளர்கள் கெட்டவார்த்தையால் திட்டுவது என்பது மிகவும் சகஜம் என்றும், தொழிற்சங்கத்துடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தும் நேரங்களில், பேச்சுவார்த்தை நடக்கும் அறைக்கு உள்ளேயே நிர்வாகத்தின் அடியாட்படை நின்று கொண்டிருக்கும் என்பதையும், ஒரு பழகிப்போன சம்பிரதாயம் போல விவரிக்கிறார்கள் அப்பகுதி தொழிலாளர்கள்.
அன்று மாருதி ஆலையில் பேச்சுவார்த்தைக்குப் போன தொழிற்சங்க முன்னணியாளர்கள் நாற்காலியில் அமர்ந்தவுடன், நிர்வாகத் தரப்பு மேசையின் மீது ஒரு ரிவால்வரை எடுத்து வைத்ததாகவும், பேச்சுவார்த்தையின் ஊடாகவே தலைவர்கள் அடியாட்களால் தாக்கப்பட்டதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
எத்தனை உண்மைகள், எத்தனை ஆதாரங்கள் தரப்பட்டாலும் அவை எதையும் அரசோ, போலீசோ, நீதிமன்றமோ கணக்கில் கொள்ளப்போவதில்லை. ஜூலை சம்பவத்துக்குப் பின்னர் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த மாருதி சுசுகியின் தலைவர் பார்கவா, சுயேச்சையான தொழிற்சங்கத்தைத் தாங்கள் எதிர்க்கவே இல்லையென்றும், அரியானா மாநில அரசுதான் சங்கத்தைப் பதிவு செய்வது தொடர்பாக சில பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருந்தது என்றும், சங்கத்தை விரைவாகப் பதிவு செய்து தருமாறு தாங்கள் அரசைக் கேட்டுக் கொண்டதாகவும் கூறினார்.
இதைவிடக் கடைந்தெடுத்த ஒரு பொய் இருக்க முடியாது. சுயேச்சையான தொழிற்சங்கத்துக்கான அங்கீகாரம் என்ற கோரிக்கையை முன்வைத்து 2011இல் மட்டும் 5 மாதம் போராட்டம் நடந்துள்ளது. மாருதியின் உற்பத்தி வீழ்ந்தது. பங்கு விலை வீழ்ச்சி அடைந்தது. என்ன நடந்தாலும், சங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஜுலை 2011இல் அறிக்கை விட்டார், மாருதியின் தலைமை நிர்வாக அதிகாரி சித்திகி. இறுதியில் தொழிலாளர்கள் தமது கோரிக்கையில் வென்றவுடனே, தொழிற்சங்கத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் 16 இலட்சம் ரூபாய் கொடுத்து ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியது நிர்வாகம். இவையனைத்தும் உலகறிந்த உண்மைகள். எனினும், ஒரு ஊடகம்கூட பார்கவாவிடம் எதிர்க்கேள்வி கேட்கவில்லை.
குர்கானில் உள்ள மாருதி உத்யோக் காம்கார் யூனியனின் செயலர் குல்தீப் ஜங்கு, “500 தொழிலாளர்களின் வேலைநீக்க உத்தரவை ரத்து செய்யவேண்டும்” என்று கோரியிருக்கிறார். அச்சங்கத்தின் சார்பில் 5000 தொழிலாளர்கள், மாருதி தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். தமிழகத்தில் மாருதி தொழிலாளர்களின் போராட்டத்தை வாழ்த்தி வரவேற்று பு.ஜ.தொ.மு., பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறது.
மாருதி போராட்டத்தை ஆதரிக்கவும் விரும்பாமல், கண்டிப்பதற்கும் துணிவில்லாமல் சிக்கித் தவிக்கின்றன போலி கம்யூனிஸ்டு தொழிற்சங்கத் தலைமைகள். சட்டத்தின் ஆட்சியைத் துளியும் மதிக்காமல், தங்களை இப்படிப்பட்ட இக்கட்டுகளில் இழுத்துவிடும் முதலாளிகளின் மீதும், தொழிலாளிகளின் மீதும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு கோபம் வருகிறது. இருந்த போதிலும், அவர்கள் சட்டத்தைப் உறுதியாகப் பற்றி நிற்கிறார்கள்.
“மாநில அரசைக் கலந்து கொள்ளாமல் இவ்வளவு பேரை நிர்வாகம் வேலை நீக்கம் செய்திருப்பது சட்டவிரோதமானது. நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவருவோம்” என்று கூறியிருக்கிறார் ஏ.ஐ.டி.யு.சி.யின் தேசியச் செயலர் சச்தேவா.
ஒத்திவைப்புத் தீர்மானமல்ல முதலாளிகளின் கவலை. பிரிகால், ஏனாம், மாருதி என்று அடுத்தடுத்து தொடரும் தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணம்தான் முதலாளி வர்க்கத்தின் கவலை. மானேசரில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலா என்று தேடுகிறார்கள். தமிழகத்தில் பு.ஜ.தொ.மு. மற்றும் அதன் தோழமை அமைப்புகளை ஒடுக்க வேண்டுமென்று தென்னிந்திய முதலாளிகள் சங்கம் ஜெயலலிதாவிடம் மனுகொடுக்கிறது. உடனே உளவுத்துறையும் போலீசும் தமது நடவடிக்கைகளைத் தொடங்குகின்றன.
நக்சல் அபாயம் என்பது முதலாளி வர்க்கத்துக்கு உண்மையான அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. தொழிலாளிகளின் மீது அரசு அடக்குமுறையை ஏவிவிடுவதற்கான பூச்சாண்டியாகவும் அதற்குப் பயன்படுகிறது. இருப்பினும், மாருதி பிரச்சினையின் ஊடாக தனது வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலை இந்தியத் தொழிலாளி வர்க்கம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை.
“அன்று இப்படி ஒரு சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்த குறிப்பான நிகழ்வுகள் என்ன என்பது குறித்துத் தனக்கு தெரியாதெனினும், இத்தகைய போக்கினை ஈவு இரக்கமின்றி நசுக்கவேண்டும்” என்று பேசியிருக்கிறார் விப்ரோ நிறுவனத்தின் முதலாளி அசிம் பிரேம்ஜி. மாருதி சம்பவத்தை ‘ஒரு வர்க்கத் தாக்குதல்’ என்று வருணிக்கிறார், மாருதி சுசுகியின் தலைவர் பார்கவா.
‘வர்க்க உணர்வு’ என்பதை முதலாளி வர்க்கத்திடமிருந்து ஒரு எதிர்மறைப் பாடமாகக்கூடத் தொழிலாளி வர்க்கம் சில சந்தர்ப்பங்களில் கற்றுக் கொள்ள முடியும்.
_______________________________________________
– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.
_____________________________________________________