Sunday, May 4, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்வி'பி ஸ்கூல்கள்'.....புஸ்..........!

‘பி ஸ்கூல்கள்’…..புஸ்……….!

-

ஆப்புந்தியாவின் தனியார் மேலாண்மை கல்லூரிகளில் பல நொடித்துப் போகும் நிலையில் இருக்கின்றன. 2012-ல் மேலாண்மை  கல்லூரிகளின் 35 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.

கல்லூரியே வேலை வாங்கிக் கொடுத்து விடும் ‘பிளேஸ்மென்ட்’ என்பதன் கவர்ச்சியில் மாணவர்கள் இந்த கல்லூரிகளுக்கு படை எடுக்கிறார்கள். ‘பெரும் பணத்தை கொட்டிக் கொடுத்து படித்தாலும், உயர்ந்த சம்பளத்தில் வேலை கிடைப்பது குதிரைக் கொம்புதான்’ என்று மாணவர்களுக்கு புரிய ஆரம்பித்ததும் இந்த மோகம் வடிய ஆரம்பித்திருக்கிறது.

2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மும்பைக்கு அடுத்த பூனாவில் இருக்கும் அஸ்மா கல்லூரியின் சேர்மன் அன்சுல் ஷர்மா “பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தொழிலுக்கு வந்தவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைந்து விட்டதால் தொழிலை விட்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். கல்லூரியை நடத்துவதே பெரும்பாடாய் உள்ளது” என்று ‘சோக’த்துடன் சொல்கிறார்.

ஐஐம் (IIM – இந்திய மேலாண்மை கழகம்) போன்ற முன்னணி கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு பணத்தில் மிதக்கும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும் வங்கிகளும் சராசரியாக ரூ 17 லட்ச ரூபாய் ஆண்டு சம்பளத்தில் வேலை கொடுக்கின்றன.  ‘தாமும் எம்பிஏ படித்தால் அதிக சம்பளம் தரும் அத்தகைய மேல் தட்டு வேலை ஒன்றில் உட்கார்ந்து விடலாம்’ என்று மாணவர்கள் பல லட்ச ரூபாய்கள் கட்டணம் வசூலிக்கும் பிற தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கு படை எடுத்தார்கள்

கொஞ்சம் நிலமும் பணமும் வைத்திருக்கும் முதலாளிகள் இதை ஒரு  வாய்ப்பாக பார்த்து மள மளவென மேலாண்மை கல்லூரிகளை ஆரம்பித்தனர். 2008-ம் ஆண்டில் உலகப் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்த போது இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதுப்புது மேலாண்மை கல்லூரிகள் முளைத்தன். மேல்நிலைப் பள்ளி வசதி இல்லாத சிறு நகரங்களில் கூட மேலாண்மை கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன.

புனே போன்ற நகரங்களில் ரூ 4 கோடி முதல் ரூ 5 கோடி வரை செலவழித்து இரண்டு ஆண்டுகளில் ஒரு கல்லூரியை ஆரம்பித்து விடலாம்.  “தகுதியுள்ள ஆசிரியர்கள், பொருத்தமான இடவசதி,  மாணவர்களுக்கு தரமான கல்வி அளிப்பது என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்லூரியை ஆரம்பித்து விட்டால் போதும் என்று தனியார் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன” என்கிறார் பிரைஸ்வாட்டர் ஹவுஸ் நிறுவனத்தின் இயக்குனர் தீரஜ் மாதுர்.

இப்போது மேலாண்மை கல்லூரிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காகி 4,000 ஆக உயர்ந்திருக்கிறது. மார்ச் 2012-ல் முடிந்த ஐந்து ஆண்டுகளில் எம்பிஏ படிப்புக்கான இடங்கள் 3.52 லட்சமாக உயர்ந்திருக்கின்றன.

“வேலை வாங்கிக் கொடுப்போம் என்றும், மிக உயர்ந்த சம்பளங்கள் கிடைக்கும் என்று சொல்லித்தான் இந்த கல்லூரிகள் தம்மை சந்தைப் படுத்திக் கொண்டன” என்கிறார் ஆதித்யா தீகே என்ற மாணவர்.

அடுத்த ஆண்டுக்கு புதிய மாணவர்களை பிடிக்கும் வேலையை ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடமே விட்டு விடுகின்றன இந்த கல்லூரிகள்.  ஒரு மாணவரை பிடித்துகொடுத்தால் ரூ 40,000 கூலியாக கல்லூரி தருகிறது. இதைத் தவிர ஆள் பிடிக்கும் ஏஜென்டுகளுக்கு ஒரு மாணவருக்கு ரூ 50,000 வரை கமிஷன் கொடுத்து மாணவர்களை திரட்டுகின்றன இந்த கல்லூரிகள்.

‘எதை சொல்லித் தருகிறார்கள் எப்படி சொல்லித் தருகிறார்கள் என்று மாணவர்கள் கேட்பதில்லை, கல்லூரி என்ன சம்பளத்தில் வேலை வாங்கித் தரும் என்றும் கட்டணத்தில் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்று மட்டும்தான் கேட்கிறார்கள்’ என்கிறார் அஸ்மா கல்லூரியின் அன்சுல் ஷர்மா.

ஆனால், இந்த புதிய கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் கிடைக்கவில்லை. முன்னணி 20 கல்லூரிகளை தவிர்த்த பிற கல்லூரிகளில் படித்து முடித்த 29 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரி மூலமாக வேலை கிடைத்திருக்கிறது. ‘இந்த பட்டதாரிகளுக்கு சராசரியாக $7,550 (ரூ 4 லட்சம்) சம்பளத்தில்தான் வேலை கிடைக்கிறது’ என்கிறது MyHiringClub.com என்ற வேலை வாய்ப்பு இணைய தளம்.

ரூ 3 லட்சம் கடன் வாங்கி படித்த தடானி என்ற மாணவர் இப்பொழுது வருடத்திற்கு ரூ 2 லட்சம் மட்டுமே சம்பளம் தரும் வேலையில் இருக்கிறார். ‘இது தெரிந்திருந்தால் எம்பிஏ படித்தே இருக்க மாட்டேன்’ என்று சொல்கிறார் அவர்.

ஆதித்யா தீகே ரூ 3.3 லட்சம் கடன் வாங்கி மேலாண்மை படிப்பு முடித்திருக்கிறார். பதினெட்டு நேர்முக தேர்வுகளுக்கு சென்றும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. 26 வயதாகி விட்ட அவர் கடனுக்கான மாதத் தவணை ரூ 10,000 கட்ட முடியாத நிலைமையில் உள்ளார்.

தனியார் கல்வி மாணவர்களை உருவாக்குவதில்லை, சந்தைகளையே உருவாக்குகிறது. மாணவர்கள் சந்தைகளில் விலை போவதற்கான சரக்காக  தயாரிக்கப்படுகிறார்கள்.  நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப உயிருள்ள இயந்திரமாய் வடிவமைக்கப்படுகிறார்கள் மாணவர்கள்.

சந்தையின் தேவை ஐந்தாயிரம் பேர் என்றால் போட்டி போடும் தனியார் நிறுவனங்கள் ஐந்து லட்சம் பேரை தயார் செய்கின்றன. ஐந்து லட்சம் பேரும் சந்தையில் மோதும் போது வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் குறைந்த சம்பளம் கொடுத்து தமக்கு தேவையான ஆட்களை பெற்றுக் கொள்கின்றன.  தேவைக்கு அதிகமாக எஞ்சி நிற்கும் இளைஞர்கள் பெற்றோர் கையில் இருக்கும் பணத்தின் அளவை பொறுத்து அடுத்த சந்தை வாய்ப்பை நோக்கி போக வேண்டும், அல்லது ஏதாவது ஒரு வேலையில் அமர்ந்து வாழ்நாள் முழுதும் கடன் அடைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

முதலாளித்துவ ஆதரவாளர்கள் விதந்தோதும் சந்தை போட்டியின் சப்ளை-டிமாண்ட் இப்படித்தான் செயல்படுகிறது.

படிக்க