privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்அந்நிய முதலீடுகளும், சுதேசி புரோக்கர்களும்!

அந்நிய முதலீடுகளும், சுதேசி புரோக்கர்களும்!

-

இந்தியா-விற்பனைக்குநிலக்கரி திருட்டு விவகாரத்தில் மூஞ்சியெங்கும் கரி அப்பிக் கொண்டு நிற்கும் மத்திய அரசு பாராளுமன்றத்தில் நடந்த கூச்சல் பஜனையில் ஊக்கத்தோடு பங்கேற்று வந்தது நாம் அறிந்ததே. இதில் பாரதிய ஜனதாவைப் பற்றி காங்கிரசும், காங்கிரசைப் பற்றி பாரதிய ஜனதாவும், இவர்களிருவரையும் பற்றி மற்ற எதிர்கட்சிகளும், மாற்றி மாற்றி பல்வேறு அரிய உண்மைகளைப் பரிமாறிக் கொண்ட கண் கொள்ளாக் காட்சி சென்ற வாரம் வரை பாராளுமன்ற மேடையில் செவ்வனே அரங்கேறி வந்தது.

நடந்த அமளி துமளியால் காங்கிரசு அசந்து போயிருக்கும் என்று யாரும் நினைத்து விடக்கூடாது  என்பதில் குறியாய் இருக்கும் மன்மோகன் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, சந்தடி சாக்கில் தேசத்தின் தலையெழுத்தையே நிர்ணயிக்கக் கூடிய அறிவுப்புகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.

சில்லறை வணிகத்தில் 51% அன்னிய முதலீட்டை அனுமதிப்பது, சிவில் விமானப் போக்குவரத்தில் 49% அன்னிய முதலீட்டை அனுமதிப்பது, தொலைக்காட்சி சேவையில் அன்னிய முதலீட்டை 49 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக அதிகரிப்பது, மற்றும் இதனோடு சேர்ந்து நான்கு முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டுவது – இவை தான் அந்த அறிவிப்புகள்.

அறிவிப்பு வெளிவந்த உடனே முதலாளிகள் குழாம் மன்மோகனை உச்சி மோந்து பாராட்டியுள்ளது. மிட்டல் குழுமத்தின் ரஞ்சன் மிட்டல், “இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தப் பாதையில் இந்த முடிவு ஒரு மைல்கல்” என்று குதூகலித்திருக்கிறார். மேலும், “இது விவசாயிகளுக்கும் சிறு வணிகர்களுக்கும் ஆதாயம் அளிக்கும் முடிவு” என்று அறிவித்துள்ளார்.  வால்மார்ட்டால் உலகெங்கும் அழித்தொழிக்கப்பட்ட விவசாயிகள், சிறு முதலாளிகள், வணிகர்களின் கதைகள் இங்கே ஒருவருக்கும் தெரியாது என்கிற திமிரிலிருந்து தான் மிட்டலின் குதூகலம் கொப்பளிக்கிறது.

மிட்டலின் கூட்டாளியான  வால்மார்ட்டின் இந்தியப் பிரிவின் தலைவர் ராஜ் ஜெயின், “இந்தியாவின் வினியோகச் சங்கிலியை மேம்படுத்த நாங்கள் எந்தளவுக்கும் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று அறிவித்திருக்கிறார். ஏற்கனவே உள்ளூர் ரவுடிகளான ரிலையன்சும் ஐ.டி.சியும் உள்ளே புகுந்து விட்டதில் விளை பொருட்களுக்கு ஒழுங்கான விலை கிடைக்காமல் புழுங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள், இனிமேல் சர்வதேச மாஃபியாவான வால்மார்ட்டையும் எதிர்கொண்டாக வேண்டும் என்பதே இந்த அறிவிப்பின் பொருள்.

முதலாளித்துவ பத்திரிகைகளோ மன்மோகன் சிங்கை செயலற்ற உதாவாக்கரை என்று தூற்றிய அமெரிக்கப் பத்திரிகைகளுக்கு இப்போது சரியான பதிலைக் கொடுத்து விட்டார் என்று புகழ்கின்றன. வீழ்வது அரசாக இருந்தாலும் வாழ்வது பொருளாதாரமாக இருக்கட்டும் என்று துணிச்சலுடன் முடிவெடுத்து விட்டார் நமது பாரதப் பிரதமர் என்று வியந்தோதுகின்றன. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்திருப்பதன் மூலம் தேங்கிக் கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தையே நிமிர்த்தி விட்டாரென்றும், சிவில் விமானப் போக்குவரத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்திருப்பது, தடுமாறிக் கொண்டிருக்கும் மல்லையாக்களைக் கைதூக்கி விடும் முடிவு என்றும் கொண்டாடுகின்றன.

சோழியன் குடுமியொன்றும் சும்மா ஆடவில்லை நண்பர்களே – ஊடகத்துறையில் அந்நிய முதலீட்டை அதிகரித்திருப்பதன் மூலம் இவர்களுக்குத் தேவையான எலும்புத் துண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இதைத் தான் “குடுத்த காசுக்கு மேல கூவுவது” என்பார்கள்.

எதிர்கட்சிகள் அரசின் முடிவை எதிர்ப்பதாகவும், இம்முடிவுகளை எதிர்த்து வரும் 20-ம் தேதி பொது வேலை நிறுத்தத்தை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளன. குறிப்பாக பாரதிய ஜனதாவின் உமா பாரதி, வால்மார்ட் கடை திறந்தால் அதைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டு சிறை செல்லவும் தயார் என்று சொல்லியிருக்கிறார் – ஆனால், இதே பாரதிய ஜனதா கட்சி ஆளும் சில மாநிலங்கள் இந்த அறிவிப்பு வெளியாகும் முன்பே தங்கள்  மாநிலங்களில் வால்மார்ட்டின் நுழைவைத் தடுக்கப் போவதில்லை என்று முன்பே அறிவித்திருந்தன.

பாரதிய ஜனதாவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜாவடேகர், மத்திய அரசு ஏற்கனவே 82 நாடுகளுடன் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும், மாநில அரசாங்கங்கள் அந்நிய நிறுவனங்கள் தமது மாநிலத்தின் எல்லைக்குள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அது சட்டப்படி செல்லாது என்றும், எனவே எதார்த்தத்தில் எந்த மாநிலமும் வால்மார்ட்டின் வருகையைத் தவிர்க்க முடியாது என்றும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். எனினும், பாரதிய ஜனதா வால்மார்ட்டை விடாமல் எதிர்க்கும் என்று அறிவித்துள்ள பாரதிய ஜனதா, வரும் 20-ம் தேதி நடக்க உள்ள பொது வேலை நிறுத்தத்திற்கு தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

இத்தனைக்கும் பாரதிய ஜனதா ஒன்றும் அந்நிய எதிர்ப்பில் முனைப்பாக நின்று போராடிய கட்சியல்ல; இவர்களது முந்தைய ஆட்சிக் காலத்தில் தான் உலகில்  வேறெந்த நாட்டிலும் இல்லாத சிறப்பாக பொதுத்துறைகளை தனியாருக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் திறந்து விடுவதற்காக ஒரு அமைச்சகமே உருவாக்கப்பட்டு அதற்கொரு அமைச்சரும் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆக, இப்போது பாரதிய ஜனதா சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பது போல் நடிப்பதும் கூட உண்மையான எதிர்ப்பு கொண்டவர்களுடன் கலந்து குட்டையைக் குழப்புவதற்குத்தான். ஆனாலும் காங்கிரசு கூட்டணி அரசு வெளிப்படையாக இந்த அறிவிப்புகளை உத்திரவு போல அமல்படுத்துவதும், இவற்றினை திரும்ப பெற வாய்ப்பே இல்லை என்று உறுதியாக இருப்பதும்தான் முக்கியமானது. இந்திய மக்களின் வாழ்வாதரத்தை விட பன்னாட்டு முதலாளிகளின் இலாபமே பெரிது என்று இதை விட ஒரு புரோக்கர் கும்பல் ஆடமுடியாது.

முழு இந்தியாவையும் கூறு போட்டு விற்பனை செய்யும் ஒரு தரகர் கும்பலின் கீழ் நமது தலைவிதி சிக்கியிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?