privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காவால் ஸ்டிரீட் போராட்டம் - ஓராண்டு நிறைவு!

வால் ஸ்டிரீட் போராட்டம் – ஓராண்டு நிறைவு!

-

முற்றுகைமெரிக்காவில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், அமெரிக்க அரசாங்கம் பெருமுதலாளிகளின் கைப்பாவையாக இருப்பதையும் எதிர்த்து சென்ற ஆண்டு நடந்த வால்வீதி ஆக்கிரமிப்பு போராட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் செப்டம்பர் 17-ம் தேதி நடந்தது.

படிக்க

2008-ம் ஆண்டு ஆரம்பித்த பொருளாதார நெருக்கடி அமெரிக்காவில் தொடர்ந்து நீடிக்கிறது. அதன் கடன் $14 ட்ரிலியனை தாண்டி விட்டது. வேலை இன்மை, தனி நபர் கடன் சுமை, வீட்டுக் கடன் கட்ட முடியாமல் தெருவில் விடப்படுதல் என்று 99 சதவீதம் மக்கள் அவதிப்பட, திவாலான வங்கிகளுக்கு மக்கள் வரிப்பணம், பணக்காரர்களுக்கு வரிச்சலுகை என்று 1 சதவிதத்தினர் அராஜகம் செய்யும் பொருளாதார ஏற்றத் தாழ்வு வலுத்து நிற்கிறது.

சென்ற ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி மக்கள் பலர் மன்ஹாட்டனில் இருக்கும் ஜூகோட்டி பூங்காவில் முகாமிட ஆரம்பித்தனர். நியூயார்க் பங்குச் சந்தைக்கு அருகில் இருக்கும் அந்த கிரானைட் வளாகத்தில் போராட்டக்காரர்கள் தூங்குவதற்கு கூடாரங்கள் அமைத்துக் கொண்டார்கள். உணவு தயாரித்து உண்டார்கள். இரவு முழுவதும் முரசுகளை அடித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஆரம்பத்தில் கூடிய இளைஞர்களுடன் ஆயிரக்கணக்கான மக்கள் சேர்ந்து கொண்டார்கள்.

“பட்டினி கிடப்போரே பணக்காரனைத் தின்று பசியாறுங்கள்!”
“பறித்துக் கொண்டோரிடமிருந்து பறிமுதல் செய்வோம்!”
“நமது அரசியல்வாதிகள் முதலாளித்துவத்தின் பூசாரிகள்!”
“வால் ஸ்டிரீட்டில் இருக்கின்றன பேரழிவு ஆயுதங்கள்!”
“மார்க்ஸ் கூறியது உண்மை உண்மை!”

என்ற முழக்கங்களுடன் கார்ப்பரேட் லாப வேட்டையையும், ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்த்து தெருக்களில் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தினார்கள் போராட்டக்காரர்கள். அக்டோபர் 1-ம் தேதி புரூக்ளின் பாலத்தில் நடந்த பேரணியை தாக்கி 700க்கும் மேற்பட்ட மக்களை கைது செய்தனர் போலீஸ் படையினர்

போராட்டம் பிரிட்டன், பிரான்சு, கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி என்று நாடு விட்டு நாடு பரவியது. அமெரிக்கா முழுவதும் நகரங்களில் ஆக்கிரமிப்பு போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

நவம்பர் 15-ம் தேதி நியூயார்க் நகர போலீஸ் கூடாரங்களை தாக்கி அழித்தனர். கூடாரங்கள் அமைப்பதற்கான பொருட்களை பூங்காவிற்குள் கொண்டு வருவதை தடை செய்யும் புதிய விதிகள் ஏற்படுத்தப்பட்டன. அடுத்தடுத்த வாரங்களில் மற்ற நகரங்களிலும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அழிக்கப்பட்டன. போராட்டத்தில் பங்கெடுத்த மக்கள் கடுமையான அடக்குமுறைக்குள்ளாகினர்,  வேவு பார்க்கப்பட்டனர்.

occupy-wall-street

நேற்று ஆக்கிரமிப்பு போராட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நியூயார்க் பங்குச் சந்தைக்கு அருகில்  கூடுமாறு ஆக்கிரமிப்பு இயக்கத்தினர் அழைப்பு விடுத்தனர். உலகெங்கிலும் உள்ள 30க்கும் மேற்பட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

எப்படியெல்லாம் போலிஸார் வம்பிழுப்பார்கள். என்னென்ன வழக்குகள் போட்டு கைது செய்வார்கள், அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று போராட வருபவர்களுக்கு முன்னரே அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

என்ன முழக்கம் இட வேண்டும், எப்படி படம் பிடிக்க வேண்டும் என்று போராட்டக் காரர்கள் திட்டமிட்டிருந்தனர். போலிசார் போராட்ட நாளுக்கு முன்பாகவே ட்ராபிக் மீறல், சத்தம் போடுதல் என்ற சம்பந்தமில்லாத வழக்குகளில் போராட்டக்காரர்களை கைது செய்தனர்.

அதையும் மீறி வால் வீதியின் நாலாபுறமும் நூற்றுக்கணக்கானோர் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். போராட்டக்காரர்களை தாக்குவது, பலவந்தமாக கைது செய்வது என போலிசார் போராட்டத்தை அடக்க முயன்றனர்.

முக்கியமான மீடியாக்களில் இந்த போராட்டங்கள்  இருட்டடிப்பு செய்யப்பட்டன. போராட்டக்காரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தங்கள் வலைதளங்களிலும் நடப்பது அனைத்தையும் நேரடியாக ஒளிபரப்பினார்கள். மொத்தமாக சுமார் 1800 பேர் வரை கைதானதாகவும், வால் வீதியில் சுமார் 150 பேர் வரை கைதானதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினில் ஆக்கிரமிப்பு இயக்கம் பரந்து பட்ட மக்கள் போராட்டமாக உருவாகியிருக்கிறது.

போராட்டங்களை இருட்டடிப்பு செய்த முதலாளித்துவ ஊடகங்கள், அடுத்த நாள் வால் வீதி போராட்ட்ங்கள் தோல்வி அடைந்ததாகவும், சில நூறு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியிட்டுள்ளன. இத்தகைய போராட்ட்ங்களுக்கு எதிர்காலமில்லை எனவும் ஆருடங்கள் சொல்லிக் கொண்டிருகின்றன.

ஆக்கிரமிப்பு போராட்டங்கள் வர்க்கப் போரின் முதல் எதிரியை சரியாக அடையாளம் கண்டிருக்கின்றன. அரசு, ஓட்டுக் கட்சிகள், போலிஸ்,  ராணுவம் இவை அனைத்தும் முதலாளிகளுக்கு வாலாட்டும் நாய்க்குட்டிகள்தான் என அம்பலப்படுத்தியுள்ளன. ஆனால் பலம் வாய்ந்த எதிரியை வீழ்த்த வேண்டுமானால் அரசியல் ரீதியில் அமைப்பாக திரண்டு  வர்க்கப் போர் நடத்த வேண்டும் இல்லையேல் எதிரிகளை இத்தகைய போராட்டங்கள் அசைத்து விடாது என்பது கடந்த ஓராண்டு போராட்டங்களின் பாடம்.