
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் எச் கபாடியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்ட ‘ஆசியாவில் பொருளாதார வளர்ச்சியும் கார்ப்பொரேட் சூழலில் மாற்றங்களும்’ பற்றிய பன்னாட்டு மாநாட்டில் தலைமை நீதிபதி உரையாற்றினார்.
இயற்கை வளங்களின் மதிப்பை தீர்மானிப்பது பற்றிய சர்ச்சைகளுக்கிடையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார்.
2G அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி வயல் ஒதுக்கீடு மூலம் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய விவாதங்களை நேரடியாக குறிப்பிடா விட்டாலும் இப்போது நடந்து கொண்டிருக்கும் ‘மதிப்பீடு பற்றிய விவாதங்களை’ப் பற்றி விளக்குவதாக அவர் தெரிவித்தார்.
“தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து நமது கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால், எத்தனை பேருக்கு இயற்கை வளங்களை மதிப்பிடுவதற்கான அடிப்படை பற்றி தெரியும்” என்று கேட்டு விட்டு, “இழப்பு என்பது நிதர்சனம், லாபம் அல்லது ஆதாயம் என்பது அனுமானம் மட்டுமே” என்று கூறியிருக்கிறார்.
‘இழப்பு உண்மை, அதாவது திருடு போனது உண்மை, ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு லாபம் என்பது அனுமானம், திருடர்கள் என்பது அனுமானம்’ இப்படித்தான் இதை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒருவன் பர்சை திருடிவிட்டு ஓடுகிறான், மக்கள் அவனை பிடிக்கிறார்கள், கபாடியாவின் முன்பு வழக்கு வருகிறது. ‘நீங்கள் பர்சை இழந்தது நிதர்சனம், ஆனால் அதனால் திருடனுக்கு லாபம் என்பது அனுமானம் மட்டுமே, அவன் பர்சிலிருக்கும் பணத்தை பயன்படுத்த முடியும் என்று என்ன நிச்சயம்? பணத்தை அவன் டாஸ்மாக் கடையில் செலவிட்டு விட்டால் அவனுக்கு லாபம் எதுவும் கிடைத்திருக்காது’ என்று தீர்ப்பு சொல்கிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருக்கும் கபாடியா.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தி “லாபம் என்பது ஒரு அனுமானம் மட்டுமே, கையில் இருக்கும் பணம் மட்டுமே நிதர்சனம்” என்று சொல்லியிருந்தார்.
கார்ப்பரேட்டுகளின் வரவு செலவு கணக்கு அல்லது நிதி நிலை அறிக்கை தயாரிப்பதில், ஆராய்ச்சி செலவுகளை எப்படி காட்ட வேண்டும், சரக்கின் மதிப்பை எப்படி கணக்கிட வேண்டும், விற்பனை மதிப்பை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் போன்றவற்றில் பலவிதமான தில்லுமுல்லுகள் செய்து லாபம் அல்லது நஷ்டத்தை கூட்டி அல்லது குறைத்துக் காட்டலாம்.
இவ்வாறாக, சாதாரண உலகில் உழைக்கும் மக்களுக்கு எளிதாக புரியும் லாப நஷ்ட கணக்குகள் கார்ப்பொரேட் உலகில் நாராயண மூர்த்தி போன்ற மேதைகளுக்கே பிடிபடாத மர்மங்களாக மாறி விடுகின்றன. இன்னும் மேல்மட்டங்களில், ‘நாட்டின் வளங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் அரசாங்கத்தை நியாயப்படுத்துவதற்கு’ தலைமை நீதிபதி கபாடியா பேசியது போன்ற திகைக்க வைக்கும் பொருளாதார அறிவு தேவைப்படுகிறது.
நாராயண மூர்த்தி சொன்ன ‘லாபம் என்பது ஒரு அனுமானம்தான்’ என்ற ‘கார்ப்பரேட்’ பொருளாதாரக் கல்வியை நிறுவனங்களின் லாப நஷ்ட கணக்குகளை படிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கபாடியாவின் ‘தனியார்மய’ பொருளாதாரக் கல்வி அரசாங்கம் நாட்டின் இயற்களை வளங்களை தனியார் நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதையும், அதன் மூலம் தனியார் நிறுவனங்கள் ஆதாயம் பெறுவதையும் நியாயப்படுத்த முனைகிறது. இதை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
“நாடு வளரும் போது சில பகுதிகளில் வளர்ச்சி என்பது தங்களுக்கு இழப்பு என்ற பயம் மக்களுக்கு ஏற்படுகிறது. பழங்குடி மக்களும் விவசாயிகளும் இப்படி பயப்படுகிறார்கள். அவர்களது அச்சங்கள் நீக்கப்பட வேண்டும்” என்றும் “மக்களுக்கு அடிப்படை பொருளாதாரக் கல்வியும், சட்டக் கல்வியும் வழங்கப்பட வேண்டும்’ என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார் தலைமை நீதிபதி.
அதாவது தண்டகாரன்யாவில் போராடும் மக்களுக்கு அவர்களது வாழ்விடங்களை ஒழிக்கும் கனிமக் கொள்ளைகள் உண்மையில் வளர்ச்சி என்று கல்வியாக போதிக்கப்பட்டால் அவர்களது பயம் நீங்குமாம். இதை இன்னும் நீட்டிப் பார்த்தால் வேலையில்லா திண்டாட்ட பயம், விலைவாசி உயர்வு கவலை, மருத்துவ செலவு பயம், கல்வி செலவு பீதி போன்ற எல்லாவற்றையும் கபாடியா சொல்லும் கல்வியை கற்றுக் கொடுத்து விட்டால் நீக்கிவிடலாம்.
உச்சநீதிமன்ற நீதிபதியின் அறிவே இப்படி சிந்திக்குமென்றால் மற்றவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?
படிக்க
கரிசிங் எஸ்கேப்டு…
உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதி கபாடியா உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், அரசுக்கு சாதகமாக இன்று கொடுத்த நீதிமன்ற கருத்து.. :
http://www.hindustantimes.com/India-news/NewDelhi/SC-says-auction-order-not-for-all-natural-resources-govt-welcomes-decision/Article1-936457.aspx
//எத்தனை பேருக்கு இயற்கை வளங்களை மதிப்பிடுவதற்கான அடிப்படை பற்றி தெரியும்” என்று கேட்டு விட்டு, “இழப்பு என்பது நிதர்சனம், லாபம் அல்லது ஆதாயம் என்பது அனுமானம் மட்டுமே” என்று கூறியிருக்கிறார்.//
போபர்ஸ் முதல் நிலக்கரி ஊழல் வரை நடந்த கொல்லை,நட்டம்,கையாடல்,ஊழலை மதிப்பிட தெரிந்த அறிவளிகளுக்கும்,மக்களுக்கும்,இயற்கை வளங்களை மதிப்பிடுவதர்க்கு தெரியாதா?அப்படி தெரியாது என்று நினைத்துதான் தண்டகாருண்யா தனியார் முதலைகளுக்கு தாரை வார்க்கப்பட்டதா?இல்லை தெரியாமல் தான் தண்டகாருண்ய பழங்குடி மக்கள் போராடுகிறார்களா?தெரியக்கூடாது என்று எண்ணிதான் இருட்டடிப்பு செய்கிறது இந்த அரசாங்கம்.சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு உட்பட.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் சில மாதங்கள் மட்டுமே பதவி வகிக்கிறார்கள்.அதற்குள் அவர்களது முக விலாசத்தைக் காட்டிவிடுகிறார்கள்.போகிறபோக்கில் கபாடியா 2ஜி ஊழல் பற்றி அளித்த தீர்ப்பை வெடி வெடித்து கொண்டாடி இருக்கிறார்கள் காங்கிரஸ் கயவாளிகள்.தினமணிக்கே பொறுக்காமல் கண்டித்து தலையங்கம் எழுதியிருக்கிறது.இந்த யோக்கிய சிகாமணிகளை பதவியில் நீடிக்க வைத்தால் ஓட்டுப் பொறுக்கிகளை விட வேகமாக நாட்டை விற்றுவிடுவார்கள்,சந்தேகமேயில்லை.