Thursday, August 11, 2022
முகப்பு செய்தி ஒரு வரிச் செய்திகள் – 05/10/2012

ஒரு வரிச் செய்திகள் – 05/10/2012

-

செய்தி: கருப்புச் சட்டை அணிந்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி துவக்கி வைத்து உரையாற்றும் போது, தமிழகம் முழுவதும் துண்டறிக்கை போராட்டம் நடத்த வழிவகுத்த ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நீதி: ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சி பிட் நோட்டீசில் செட்டிலாக வைத்த ‘புரட்சித்தலைவிக்கு’ நன்றி செலுத்தவும் ஒரு மனசு வேணும்!

____________

செய்தி: தமிழகத்தில் கூடுதலாக 1,008 பணியிடங்களை காவல்துறையில் ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.

நீதி:  லாக்-அப் கொலை, கற்பழிப்பு, திருட்டு, கந்துவட்டி என கிரைம் ரேட் தமிழகத்தில் ஏற 1,008 வாய்ப்புகள் அதிகரித்துள்ளன!

____________

செய்தி: இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் பங்குச் சந்தை குறியீடு 19 ஆயிரத்தை தாண்டியது.

நீதி: சூதாட்ட கிளப்பின் இந்த தாண்டலில் நடுத்தர வர்க்கத்தின் எவ்வளவு பணம் அம்பேல் ஆனது என்ற கணக்கை யார் தருவது?

____________

செய்தி: இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, தனது அனைத்து மாடல் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

நீதி: இலாபவெறி கொண்ட இந்த பிராணி தொழிலாளியை கடித்துச் சுவைத்த பின் அடிமடியை கடிக்க உங்களை நோக்கித்தான் வருகிறது!

_____________

செய்தி: பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ஓய்வூதியத் துறையில் முதன்முறையாக அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும், காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.

நீதி: மக்களின் நிகழ்காலத்தை சுருட்டுவது போதாதென்று எதிர்காலத்தையும் சுருட்ட  ஆண்டைகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது!

_____________

செய்தி:  ஆதர்ஷ் குடியிருப்பில் உறவினர்கள் வீடு ஒதுக்கீடு பெற்றது தனக்குத் தெரியாது. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான பின்பே தெரிய வந்தது என்று முன்னாள் முதல்வர் அசோக் சவாண் தெரிவித்தார்.

நீதி: தனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள் என்றே செய்தித்தாள் பார்த்துத்தான் தெரிந்து கொண்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன், அசோக் சவாண் அவ்வளவு அப்பாவி!

_____________

செய்தி: மின் ஆளுகை மூலம் ஊழலை ஒழிக்கலாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நீதி: அதாவது பங்காரு இலட்சுமணன் போல கேமராவில் கையும் கட்டுமாக மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம் என்று சொல்கிறீர்கள்!

_____________

செய்தி:  தேசிய அளவில் அமைக்கப்படும் புதிய கூட்டணியில் மம்தா பானர்ஜி சேர்க்கப்பட மாட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

நீதி: முதல்ல உங்கள கூட்டணியில சேப்பாங்களா? லெட்டர் பேடு கட்சிக்கெல்லாம் சீட்டு தரதில்லையாம்…!

_____________

செய்தி: ராகுல் காந்தி பிரதமராகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மத்திய மரபு சாரா எரிசக்தித்துறை அமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

நீதி: செருப்பாண்ட ஜனநாயக நாடு! வெட்கக்கேடு!!

______________

செய்தி: மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டைக்கு உதவும் விதத்தில், இரவிலும் மனிதர்களைக் கண்டறியக்கூடிய 4 ஆயிரம் சிறப்பு கருவிகளைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நீதி: பட்டப்பகலில் கொல்லப்படும் பழங்குடி மக்கள் இனி இரவிலும் கொல்லப்படுவார்கள்!

_______________

செய்தி: இந்திய தயாரிப்பான பிருத்வி-2 ஏவுகணை வியாழக்கிழமை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

நீதி: அமெரிக்கா அனுமதியில்லாம பாகிஸ்தான் நோக்கி ஒரு தீவாளி ராக்கெட்டு கூட வுட முடியாது, இதுக்கு எதுக்கு இந்த வெத்து பில்டப்பு?

______________

செய்தி: இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 600 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஈரான் மற்றும் அல் காய்தா, தலிபான் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதி: நல்லது. அமெரிக்கா உலக நாடுகள் பலவற்றில் ஏற்படுத்திய கொலை, கொள்ளை, பேரழிவுக்கு உரிய நிவாரணத்தை – இதை எண்ணவே பல வருசம் ஆகும் – எப்ப குடுப்பீங்கண்ணே?

_______________

செய்தி: உலகளவில் கலிஃபோர்னியா தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், ஆக்ஸ்போர்டு, ஸ்டாண்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு, இம்பீரியில் கல்லூரி முதலான அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் கல்வி தரத்தில் தொடர்ந்து முதலிடம் வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீதி: என்ரான், லெஹ்மென் பிரதர்ஸ், ஏஐஜி, கோல்டுமேன் சாக்ஸ் இன்ன பிற இன்ன பிற உலக மகா பிராடு கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள் அனைவரும் மேற்கண்ட பல்கலையில்தான் குப்பை கொட்டியவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. //அமெரிக்கா அனுமதியில்லாம பாகிஸ்தான் நோக்கி ஒரு தீவாளி ராக்கெட்டு கூட வுட முடியாது, இதுக்கு எதுக்கு இந்த வெத்து பில்டப்பு?
    //

    செம காமெடி…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க