privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவிவசாயிகளின் வாழ்வை அழிக்கும் வளர்ச்சி!

விவசாயிகளின் வாழ்வை அழிக்கும் வளர்ச்சி!

-

indira-sagar-dam-protest

ழை எளிய மக்கள் தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எப்படியெல்லாம், தமது உயிரையும் உடலையும் துச்சமாக மதித்துப் போராட வேண்டியிருக்கிறது என்பதற்கு இந்தப் படமே சாட்சி.

மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹர்தா மாவட்டத்தில் நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்திரா சாகர் அணையின் நீர்மட்டத்தை 260 மீட்டரிலிருந்து 262 மீட்டராக உயர்த்தும் நடவடிக்கையில் இறங்கியது, அம்மாநில அரசு.  நீர் மட்டத்தை உயர்த்துவதால் மூழ்கவுள்ள கிராமங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படவுள்ள மக்களுக்கு உரிய நிவாரணமும், இருப்பிடமும், நிலமும் நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு முன்பாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடந்த போராட்டம்தான் இது.

இதே போன்றதொரு போராட்டம் அதே மாநிலத்தின் மற்றொரு மாவட்டமான காண்ட்வாவில் அமைந்துள்ள கோகல்காவோன் என்றொரு கிராமத்திலும் நடந்தது.  அம்மாவட்டத்தில் நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஓம்கரேஷ்வர் அணையின் நீர் மட்டத்தை உரிய நிவாரணமும், நிலமும் வழங்கப்படுவதற்கு முன்பாக உயர்த்தக்கூடாது என்பதுதான் அக்கிராம மக்களின் கோரிக்கையாக இருந்தது.

இவ்விரண்டு அணைக்கட்டுகளின் நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு முன்பாக, அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிவாரணமும் நிலமும் வழங்கப்பட்ட பிறகே, நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளன.  இந்த உத்தரவை ஒத்துக் கொள்வதாக நீதிபதிகளின் முன் தலையாட்டிய அம்மாநில அரசு, தனது வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, நீர்மட்டத்தை உயர்த்தத் தொடங்கிய அடாவடித்தனத்தை எதிர்த்துதான் இந்தப் போராட்டங்கள் நடந்தன.

நீர்மட்டத்தை உயர்த்திக் கிராமங்களை மூழ்கடித்தால், போராட்டமும் பிசுபிசுத்துப் போவிடும்; உரிய நிவாரணமும், நிலமும் வழங்காமலேயே போராட்டத்தில் குதித்திருக்கும் மக்களைக் கிராமங்களிலிருந்து துரத்திவிட வும் முடியும் எனத் திட்டம் போட்டு, அதனை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியது, அம்மாநில பா.ஜ.க. அரசு.  ஆனால், போராட்டத்தில் இறங்கிய மக்களோ, அணையின் நீர் மட்டம் உயருவதற்கு ஏற்ப கிராமத்துக்குள் புகுந்த நீர் தமது கழுத்தளவைத் தொட்ட பிறகும்; பாதங்களும், உடம்புத் தோலும் புண்ணாகி உரிந்துவிடும் அளவிற்குப் பாதிப்படைந்தபோதிலும் நீரிலிருந்து வெளியேறவுமில்லை; கிராமங்களைக் காலிசெது ஓடவும் துணியவில்லை.

அவ்விரண்டு பகுதிகளிலும் ஜல சத்தியாகிரகம் என்ற இந்தப் போராட்டம் நடந்துவந்த அதே சமயத்தில், நர்மதா பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த முன்னணியாளர்கள் ஹர்தா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  இந்நிலையில், ஒருபுறம் ஓம்கரேஷ்வர் அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பதாக அறிவித்த பா.ஜ.க. அரசு, இன்னொருபுறம் இந்திரா சாகர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதை எதிர்த்துப் போராடிய மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திச் சிறையில் தள்ளியது.

இவ்விரண்டு போராட்டங்களும் பா.ஜ.க. அரசின் ஈவிரக்கமற்ற கோர முகத்தை மட்டுமின்றி, அதன் இரட்டை வேடத்தையும் நாடெங்கும் அம்பலப்படுத்தின.  இரண்டு வார காலமாக நடந்துவந்த ஜல சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தற்பொழுது முடித்துக்கொண்டுள்ள நர்மதா பாதுக்காப்பு இயக்கத்தினர், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.

அணைக்கட்டுகள் தொடங்கி அணுமின் நிலையங்கள் வரையிலான அனைத்து ‘வளர்ச்சித்’ திட்டங்களும் அடித்தட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கையைச் சூறையாடுவதாகவே உள்ளன என்பதை இப்போராட்டங்கள் எடுத்துக்காட்டவில்லையா?

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012
__________________________________________________