privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாசல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?

சல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?

-

சல்மான்-கான்-கொலை“இன்றைய தேதியில் ரூபாய் நூறு கோடி வசூலை குறுகிய காலத்தில் எட்டும் நடிகர் யார்? சந்தேகமேயில்லாமல் சல்மான்கான்தான். இந்தி நடிகரான இவரது ‘வாண்டட்’, ‘தபங்’, ‘ரெடி’, ‘பாடிகாட்’ ஆகிய படங்கள் அனைத்துமே நூறு கோடி ரூபாய் வசூலை தாண்டியவை. அதுவும் இந்த ஆண்டு ரம்ஜானை ஒட்டி வெளியான ‘ஏக் தா டைகர்’ இந்திப் படம், முதல் ஐந்து நாட்களிலேயே இந்த நூறு கோடி ரூபாய் வசூலை கடந்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. எனவே அவர்தான் இன்றைய தேதியில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ” என ஏகமனதாக இந்தி(ய) பத்திரிகைகள் அனைத்தும் எழுதுகின்றன, தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றன. இன்றைய தேதியில் ஒரு படத்துக்காக அவர் வாங்கும் தொகை கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்.

சட்டப்படி இன்னும் சல்மான் கானுக்கு திருமணமாகவில்லை. எனவே ஏராளமான காதல் கதைகளும், கிசுகிசுக்களும் அவரைக் குறித்து உலாவுகின்றன. எனினும் அந்த கிசுகிசுக்களுக்கிடையில் சமூக நலன்களுக்காகவும், சமுதாய முன்னேற்றத்துக்காகவும் அடிக்கடி தன்னார்வக் குழுக்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் சிறப்புரை ஆற்றுவார். மறுநாள் அவை தலைப்புச் செய்திகளாக இடம்பெறும். கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தபோதும் எந்தவொரு கிரிக்கெட் அணியையும் அவர் ஏலத்தில் எடுக்கவில்லை. இதுவொரு தனிச்சிறப்பான தகுதி என மெய்சிலிர்த்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள்.

இப்படி சல்மான் கான் எது செய்தாலும் அதை செய்தியாக எழுதும் அச்சு ஊடகங்களும் சரி, மைக் பிடித்து மயிர் பிளக்கும் வாதங்களை ஒளிபரப்பும் காட்சி ஊடகங்களும் சரி, கவனமாக ஒரு விஷயம் குறித்து வாயே திறக்காமல் மவுனம் சாதிக்கின்றன. அல்லது பத்தோடு பதினொன்றாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுகின்றன.

அந்த விஷயம், அல்லது சம்பவம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இன்னும் முற்றுப்பெறாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. 2002 ஆம் ஆண்டு, செப்டம்பர் 28 அன்று இரவு முழு போதையுடன் தனது டயோட்டா லேண்ட் க்ரூசியரை (Toyota Land Cruiser ) சல்மான் கான் ஓட்டி வந்தார். வண்டி தாறுமாறாக செல்கிறது என்பதை உணரும் நிலையில் அவர் இல்லை. மிதப்புடன் வண்டி ஓட்டி வந்தவர், வேகத்துடன் பந்தாராவின் புறநகரிலுள்ள ஒரு திருப்பத்தில் தன் வண்டியை திருப்பினார்.

கட்டுப்பாட்டை இழந்த வண்டி, ப்ளாட் ஃபார்ம் மீது ஏறி பறந்தது. வசிக்க வீடின்றி அங்குதான் ஐந்து உழைக்கும் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த ஐவரின் உடலையும் சல்மான் கானின் வண்டிச் சக்கரம் பதம் பார்த்தது. ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்ற நால்வரும் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதைக் கேள்விப்பட்ட நிகில் வாகலே (Nikhil Wagle) என்னும் பத்திரிகையாளர், மறுநாளே சல்மான் கான் மீது பொதுநல வழக்கை தொடர்ந்தார். இதனை தொடர்ந்து பந்தாரா காவலர்கள் அவரை கைது செய்தனர். குடித்துவிட்டு வண்டி ஓட்டியது, கொலை முயற்சி, கொலை ஆகிய குற்றங்களின் கீழ் அவரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால், எளிதில் ஜாமீனில் வெளிவரக் கூடிய செக்ஷனில் அவரை கைது செய்த காவலர்கள், அன்று மாலையே நீதிமன்ற உதவியுடன் ரூபாய் 950 ஜாமீன் தொகையுடன் விடுவித்தனர்.

இதனை எதிர்த்து நிகில் வாகலே நீதி மன்றம் சென்றார். வழக்கை விசாரித்த நீதிபதி இடைக்கால நிவாரணமாக பாதிக்கப்பட்ட ஐவருக்கும் ரூபாய் 17 லட்சத்தை சல்மான் கான் தர வேண்டும் என்றும், மாநில அரசு இந்த வழக்கை தீர விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

உடனே ரூபாய் 17 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்திய சல்மான் கான், வெளியே வந்தார். அரசு மேற்கொண்டு விசாரணை நடத்தும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், எதுவும் நடக்கவில்லை. சென்ற மாத இறுதியில் நிகில் வாகலே, மீண்டும் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். நீதிமன்றத்தில் சல்மான் கான் செலுத்திய ரூபாய் 17 லட்சத்தை இதுவரை அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்துக் கொடுக்கவேயில்லை என்றும், விசாரணையை மேற்கொள்ளவே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த அதிர வைக்கும் உண்மை, எந்த ஊடகத்திலும் பெரிதாக வரவில்லை. அம்பிகள் இதை விவாத நிகழ்ச்சியாக காட்சி ஊடகங்களில் நடத்தவே இல்லை.

2002ல் இந்த படுகொலை நிகழ்ந்த போது, சல்மான் கான் இறங்கு முகத்தில் இருந்தார். தொடர் தோல்விகளை சந்தித்து வந்தார். ஆனாலும் அவர் ஒரு நடிகர் என்பதால் பிணையில் வர முடியாத சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு பதில், வெறும் ரூ.950 ஜாமீன் தொகையில் காவலர்கள் அவரை விடுவித்தனர். இன்றோ, தொழில் முறையில் ரூபாய் நூறு கோடி வசூல் சக்கரவர்த்தியாக திகழ்கிறார். எனவே மாநில அரசு பெயரளவுக்குக் கூட விசாரணையை மேற்கொள்ளவேயில்லை.

நீதி மன்றத்தில் அவர் செலுத்திய இழப்பீட்டுத் தொகையான ரூபாய் 17 லட்சத்தை இதுவரை மாநில அரசு பாதிக்கப்பட்ட, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு வழங்கவில்லை.

சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு வாழவேண்டியவர்கள் சாமான்ய மக்களும் உழைக்கும் வர்க்கமும்ம்தான். பணக்காரர்களுக்கு அல்ல என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். ஏற்கனவே ராஜஸ்தானில் மானை வேட்டையாடி கறி உண்ட வழக்கும் சல்மான் கான் மீது இருந்தாலும் அதையும் ஊற்றி மூடி விட்டார்கள். மானையோ இல்லை மனிதர்களையோ ஒரு நட்சத்திர நடிகர் கொன்றால் இந்தியாவில் தண்டனை இல்லை.

சாதாரண அப்பாவி முசுலீம் மக்களெல்லாம் அவர்களது அடையாளத்தை வைத்து அதிகார அமைப்புக்களால் எப்போதும் துன்புறுத்தப்படுகிறார்கள். அதுவே ஒரு நட்சத்திர நடிகரெனும் போது அவர் இசுலாமியராக இருந்தாலும், குற்றமே செய்திருந்தாலும் விசாரணையோ, தண்டனையோ இல்லை. ஊடகங்களும் சினிமா உலகம் தும்மினாலும், துவண்டாலும் செய்தியாக்கி வியாபாரம் செய்வதால் நட்சத்திர நடிகர்களை விட்டுக் கொடுக்காமல் காப்பாற்றுகின்றன.

எனில் சல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?

படிக்க