Friday, May 7, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா வெனிசுவேலா: இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நாடு!

வெனிசுவேலா: இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நாடு!

-

வெனிசுவேலாவில் வீட்டில் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்களின் வேலை அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

பொதுவாக முறை சாரா துறைகளில் வேலை பார்க்கும் உழைக்கும் மக்களும், வெளியில் சென்று வேலை பார்க்காமல் குடும்பத்தை கவனித்துக் கொள்வதில் தமது வாழ்நாளை செலவிடும் பெண்களும் வயதான பிறகும் தொடர்ந்து உழைக்க வேண்டியிருக்கிறது, முடியா விட்டால் தமது குழந்தைகள் அல்லது உறவினர்கள் தயவில் அல்லது தரும பிரபுக்களின் தயவில் காலத்தை ஓட்டி வேண்டியிருக்கிறது.

உழைக்க முடியாதபடி உடல் நிலை தளரும் போது சாகும் வரை ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் கௌரவத்துடன் வாழ்வது போல மற்ற பிரிவினர் வாழ முடிவதில்லை என்பது நிதர்சனம்.

திரிசூலம் ரயில் நிலையம் அருகில் மலைக்கு போகும் வழியில் ஒரு பாட்டியை பார்த்தோம். அவருக்கு சுமார் 70 வயது இருக்கலாம். இரண்டு மகள்களாம். தஞ்சாவூரைச் சேர்ந்த அவரது கணவர் சிறு வயதிலேயே இறந்து போயிருக்கிறார். இவர் சென்னைக்கு குழந்தைகளுடன் வந்து வீட்டு வேலை பார்த்து வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். இப்போது இரண்டு பெண்களும் கல்யாணம் ஆகி குடும்பத்தோடு வாழ்கிறார்களாம். ‘என்ன ஆனாலும் மருமகன் வீட்டில் போய் இருக்கக் கூடாது’ என்றார்.  தினமும் அருகில் விமான நிலையத்தின் குப்பை கூடைகளில் வீசப்படும் தண்ணீர் பாட்டில்களை சேகரித்து கோணிப்பைகளில் நிரப்புகிறார்.

நாங்கள் பார்க்கும் போது மூன்று பைகளை நிரப்பியிருந்தார், இரண்டு நாள் வேலையின் பலன் என்று சொன்னார். அவற்றை கடையில் கொடுத்தால் ரூ 200 கிடைக்குமாம். ‘என் வயித்துப்பாட்டுக்கு அது போதும், என்னைக்கு என்னால முடியாதுன்னு ஆகுதோ அன்றைக்கு தற்கொலை செய்து கொண்டு செத்து போவேன்’ என்று இயல்பாக சொன்னார்.

இது போன்று கோடிக்கணக்கான முதியவர்கள் உலகெங்கிலும் இருக்கிறார்கள். தமது குழந்தைகள் அல்லது மற்ற உறவினர் வீடுகளில் போய் வசித்தாலும் அவர்களுடைய ‘தயவில்’ வாழ வேண்டிய அவலம். மூன்றாம் நபர்களின் தயவில் அடிமைத்தனத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வது அதை விட குறுகிப் போகச் செய்யும் ஒன்று.

உடலில் தெம்பு இருக்கும் வரை சலிக்காமல் உழைக்கும் விவசாயிகள், பெண்கள், கூலி தொழிலாளர்கள் முதிய வயதில் கௌரவத்துடன் வாழ வழி செய்து கொடுப்பது எத்தனை சமூகங்களில் நடக்கிறது?

வெனிசுவேலா-2

வெனிசுவேலாவின் மக்கள் ஆட்சி நிர்வாகம் இந்த திசைகளில் சிந்திக்கிறது. இப்போதைய அதிபரான ஹூயுகோ சாவெஸ் 1998-ல் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு 1999-ல் புதிய அரசியல் அமைப்பு சட்டம் எழுதப்பட்டது. பொதுவாக ஆவணங்கள் எழுதப்படும் போது குடிமக்களை குறிப்பதற்கு அவன் (ஆங்கிலத்தில் he) என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவார்கள். வெனிசுவேலாவின் அரசியல் அமைப்பு சட்டம் பாலின வேறுபாடு இல்லாத மொழியில் எழுதப்பட்டது. அந்த அடிப்படை சட்டத்திலேயே பெண்களுக்கான உரிமைகள் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டன.

 • ஒரே வேலையை செய்யும் போது ஆண்களுக்கு  சமமான ஊதியம் பெறும் உரிமை,
 •  வீட்டிலும் பொது இடங்களிலும் வன்முறைக்கு ஆளாகாமல் வாழும் உரிமை,
 •  குழந்தைப் பேறு காலத்தில் தேவையான அரசு உதவிகளையும் அரசாங்கம் மூலம் பெறும் உரிமை

என்று ஆண்களையோ பிற உறவினர்களையோ சார்ந்திராமல் தமது வாழ்க்கையை சுதந்திரமாக நடத்துவதற்கான உரிமையை பெண்களுக்கு பதிவு செய்தது அரசியலமைப்பு சட்டம்.

தொடர்ந்து வந்த 13 ஆண்டுகளில் இன்னும் பல நல்வாழ்வு திட்டங்களும் அமல் படுத்தப்பட்டுள்ளன.

 • பணக்கார நிலப்பிரபுக்களின் நிலம் கைப்பற்றப்பட்டு ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட போது, பெண்களை குடும்பத் தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
 • நாடெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள சமூகக் குழுமங்களில் 70% உறுப்பினர்கள் பெண்கள்.
 • உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து மத்திய அரசு வரை ஒவ்வொரு மட்டத்திலும் பெண்கள் அதிகார பதவிகளை வகிக்கிறார்கள்.

உலகிலேயே எண்ணெய் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வெனிசுவேலா நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஆதாயங்கள் கடந்த 13 ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. வெனிசுவேலா நாடு தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. 9.16 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (தென்னிந்தியாவை விட ஒன்றரை மடங்கு பெரியது) 2.9 கோடி மக்கள் வசிக்கும் நாடு (கேரளாவை விட கொஞ்சம் குறைவு).

1980களில் எண்ணெய் விலைக் குறைவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போது ஐஎம்எப் உலக வங்கியின் பரிந்துரைகளின் படி புதிய தாராளமய, தனியார்மய கொள்கைகள் அமல் படுத்தப்பட்டன. அது மக்களின் வாழ்க்கையை இன்னமும் கடும் நெருக்கடிக்குள் செலுத்தியது. மொத்த மக்கட் தொகையில் 80 சதவீத மக்கள் வறுமையிலும் பட்டினியிலும் பரிதவிக்க, 20 சதவீத தரகு முதலாளித்துவ மேட்டுக் குடியினரும் அதிகார வர்க்கத்தினரும் மட்டுமே ஆடம்பர சுகபோகங்களில் மூழ்கித் திளைத்தனர்.

வாழ்விழந்த மக்கள் தனியார்மய தாராளமயத் தாக்குதல்களுக்கு எதிராக தன்னெழுச்சியாகத் திரண்டு போராடினர். ஏதுமற்ற மக்கள் நகர்ப்புற சூப்பர் மார்க்கெட்டுகளைச் சூறையாடுவது பலமுறை நடந்தது. துறைமுகங்களில் இறக்குமதியாகும் உணவுப் பொருட்களைப் பட்டினிப் பட்டாளம் பறித்தெடுப்பதும் தொடர்ந்தது. அன்றைய அமெரிக்கக் கைக்கூலி அதிபர் கார்லோசின் அரசு, நாடெங்கும் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி, இராணுவத்தை ஏவி இப்போராட்டங்களை ஒடுக்கி, பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்றொழித்து பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

சாவேஸ்

முன்னாள் ராணுவ அதிகாரியான ஹூயுகோ சாவெஸ் 1998 அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தனியார்மய தாராளமயக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வந்த சூழலில், சாவெஸ் இவற்றை எதிர்த்து மக்கள் நலக் கொள்கைகளை முன்வைத்துப் பிரச்சாரம் செய்தார். ஓட்டுக் கட்சிகளின் ஊழல் ஒடுக்குமுறை ஆட்சிகளால் வெறுப்புற்றிருந்த உழைக்கும் மக்கள், தமது உணர்வுகளைப் பிரதிபலித்த சாவெசை ஆதரித்தனர்.

அவரது தலைமையிலான ஆட்சி ஏற்பட்ட பிறகு, வெனிசுவேலாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான PDVSA நாட்டுடமையாக்கப்பட்டு பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் ஆதிக்கம் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டது. பெண்கள், குழந்தைகள், பழங்குடி மக்கள் உள்ளிட்ட பரவலான உழைக்கும் மக்களுக்கு தேவையான நல வாழ்வு திட்டங்களுக்கு எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாய் பயன்படுத்தப்படுகிறது.

 • கடந்த 10 ஆண்டுகளில் சமூக நல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு 60.6% அதிகரித்திருக்கிறது. ஆண்டுக்கு $77 பில்லியன் அல்லது சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது.
 • 70% அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலையிலும் மதியமும் இரண்டு வேளை சத்துணவு வழங்கப்படுவதோடு மாலை வீட்டுக்குப் போவதற்கு முன்பு சிற்றுண்டியும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து குறைவு வீதம் வெகுவாக குறைந்திருக்கிறது.
 • நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. வெனிசுவேலாவின் எண்ணெயை கியூபாவுக்கு ஏற்றுமதி செய்து அங்கிருந்து மருத்துவ சேவைக்காக மருத்துவர்களையும், பிற ஊழியர்களையும் வரவழைத்திருக்கிறார்கள். குழந்தை பிறப்பின் போது பெண்களின் இறப்பு வீதம் வெகுவாக குறைந்திருக்கிறது. அரசு மருத்துவ திட்டத்தின் கீழ் குழந்தை பெறும் பெண்களில் 99.3% பேர் உயிர் பிழைக்கிறார்கள்.
 • சிறு குழந்தை இறப்பு வீதம், வறுமை வீதம் போன்றவையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.
 • பெண்களுக்கான வங்கி அமைக்கப்பட்டு பெண்கள் சிறு தொழில் செய்ய ஊக்கம் அளிக்கப்படுகிறது. 25 லட்சம் பெண்களுக்கு 1.5 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹூயுகோ சாவெஸ் தலைமையிலான வெனிசுவேல அரசு உள்நாட்டில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதோடு மட்டுமில்லாமல் பன்னாட்டு அரங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உலக நாடுகளை அணி திரட்டும் முயற்சியிலும் ஈடுபடுகிறது.

 • சாவெஸ், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பை வலுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார்.
 • அமெரிக்க எதிர்ப்பாளரான கியூபா அதிபர் காஸ்ட்ரோவை தனது ஆசான் என்று போற்றி ஆதரிக்கும் அவர், பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள கியூபாவுக்குச் சலுகை விலையில் பெட்ரோலிய எண்ணெய் கொடுத்து உதவுகிறார்.
 • வெனிசுலாவிலிருந்து தெற்கே அர்ஜெண்டினா வரை எரிவாயு குழாய் பதித்து தென்னமெரிக்க கண்டத்து நாடுகளுக்கு மலிவு விலையில் எரிவாயுவை விநியோகிப்பதை சாவெஸ் தனது நீண்டகாலத் திட்டமாக அறிவித்துள்ளார்.
 • மேற்கத்திய ஏகாதிபத்திய நிறுவனங்கள் அல்லாமல், இந்தியா, சீனா, ரஷ்யா முதலான இதர நாடுகளை இத்திட்டத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைத்துள்ளார். இத்திட்டமானது அமெரிக்க எதிர்ப்பு கொண்ட பிராந்திய ஐக்கியத்தைக் கட்டியமைக்கும் என்று கூறுகிறார்.
 • தென் அமெரிக்காவில் ஐஎம்எப்பின் ஆதிக்கம் கிட்டத்தட்ட முற்றிலும் இல்லாமல் ஆகி விட்டது. 2005-ம் ஆண்டில் இந்த பிராந்தியம் ஐஎம்எப்பிடமிருந்து வாங்கப்பட்ட கடன்களில் 80%ஐ செலுத்திக் கொண்டிருந்தது. 2004ம் ஆண்டில் $100 பில்லியனாக இருந்த ஐஎம்எப் கடன்களின் மதிப்பு  2008-ம் ஆண்டு $20 பில்லியனாக குறைந்தது.  உலகளாவிய கடன்களில் 1%மான $50 மில்லியன் மட்டுமே இந்த பகுதியில் கொடுக்கப்பட்டிருந்தது.

ஐரோப்பாவில் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்க நாடு வெனிசுவேலாவின் முன்னுதாரணத்தை பின்பற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன.

வெனிசுவேலா-4

மக்கள் நலனில் அக்கறை கொண்ட பல சீர்திருத்த நடவடிக்கைகளை சாவெஸ் தலைமையிலான அரசாங்கம் செயல்படுத்தியிருந்தாலும் இன்னும் பல சவால்கள் வெனிசுவேலாவின் முன்பு இருக்கின்றன.

 1. அதிபர் சாவெஸ் தேர்தல் மூலம் பதவிக்கு வந்துள்ளாரே தவிர, அந்நாட்டின் ஆளும் வர்க்கங்களான தரகுப் பெருமுதலாளிகளும், நிலப்பிரபுக்களும் வீழ்த்தப்படவில்லை. அவர்களின் சொத்துக்கள் நட்டஈடின்றி பறிமுதல் செய்யப்படவில்லை.
 2. இந்த ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் வகையில் பாசிச முறையில் கட்டியமைக்கப்பட்டுள்ள அரசு எந்திரம் அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறை, சிறைச்சாலை அடங்கிய ஒட்டுமொத்த அரசு எந்திரம் தூக்கியெறியப்படவில்லை.
 3. மக்கள் போராட்டங்களால் தற்காலிகமாக ஆளும் வர்க்கங்கள் பின்வாங்கிக் கொண்டுள்ளதே தவிர, அதன் பொருளாதார பலமும் ஆதிக்கமும் வீழ்த்தப்படவில்லை. தேசிய வருமானத்தில் பெரும் பகுதியை ஈட்டித் தரும் அரசு பெட்ரோலியத் துறையை, நிர்வகித்துக் கட்டுப்படுத்தம் அதிகாரம் கொண்டதாகவே மேட்டுக்குடி கும்பல் இன்னும் நீடிக்கிறது. நாடாளுமன்றம், நீதித்துறை, மாநில அரசுகளின் நிர்வாகம் முதலானவற்றில் எதிர்த்தரப்பு பலமிக்கதாகவே உள்ளது.
 4. பத்திரிகை ஊடகத் துறையில் சாவெஸ் எதிர்ப்பு தரகு முதலாளிகளே ஏகபோகமாக உள்ளனர். பெரும்பான்மை அதிகார வர்க்கமும் சாவெஸ் எதிர்ப்பாளர்களாகவே உள்ளனர். ‘எனது கொள்கைகளைச் செயல்படுத்த முடியாமல் பெரும் முட்டுக் கட்டையாக இருப்பது அதிகார வர்க்கம்தான்” என்று சாவெஸ் வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார்.
 5. அமைப்பாக்கப்படாத கூலித் தொழிலாளர்கள் சாவெஸ் அரசை ஆதரிக்கும் அதேசமயம், அமைப்பு ரீதியிலான மேட்டுக்குடி தொழிலாளர்கள் அரசியல் உணர்வின்றி, ஆளும் வர்க்கங்களுக்கு விலைபோகுமளவுக்கு பிழைப்புவாதத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். கிராமப்புற விவசாயிகளும் நகர்ப்புற ஏழைகளும் சாவெசுக்கு ஆதரவாக உள்ள போதிலும், அவர்கள் புரட்சிகரமான கட்சி ஒன்றால் திரட்டப்படவில்லை.
 6. வெனிசுவேலாவின் பொருளாதாரம் இன்னமும் எண்ணெய் ஏற்றுமதியையே பெருமளவு சார்ந்திருக்கிறது. ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 95%, மத்திய அரசின் வருவாயில் 40%, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% எண்ணெய் துறையிலிருந்தே வருகின்றன. ஆனால், அரசுத்துறை எண்ணெய் நிறுவனத்தின் மூலம் ஏறத்தாழ 45,000 தொழிலாளிகளே வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். இது வெனிசுவேலாவின் மொத்த உழைப்பாளர் எண்ணிக்கையில் 1%க்கும் குறைவானதாகும்.

வெனிசுவேலாவின் ஏற்றுமதியைச் சார்ந்த எண்ணெய் உற்பத்தியும் விரிவாக்கமும் உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது; அதன் ஆதிக்கம், கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. புரட்சி என்பது, இத்தகைய ஏகாதிபத்திய கட்டுமானத்தைத் தகர்த்தெறிவதாகும். ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, சுயசார்பான தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதாகும்.

 1. பின்தங்கிய ஏழை நாடான வெனிசுவேலாவில் விவசாயத்துக்கு முன்னுரிமையும், விவசாயத்துக்கு உதவும் வகையிலும் சமூகத் தேவைகளை ஈடு செய்யும் வகையிலும் சிறுதொழில் உற்பத்திக்கு இரண்டாம்பட்ச முன்னுரிமையும், கனரகபெருந்தொழில் துறைக்கு மூன்றாம்பட்ச முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலமே சுயசார்பான தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்து, ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து வெனிசுவேலா விடுதலையடைய முடியும். ஆனால் சாவெசின் பொருளாதாரத் திட்டங்கள் கனரக எண்ணெய் தொழிற்துறைக்கு முதல் முக்கியத்துவமளிப்பதாகவும், எண்ணெய் உற்பத்தியை விரிவுபடுத்த ஏகாதிபத்திய நிதிமூலதனத்தைச் சார்ந்திருப்பதாகவும் திரும்பத் திரும்ப உலக ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவில் பின்னிப் பிணைவதாகவுமே உள்ளன. எண்ணெய் ஏற்றுமதியில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, நிலச்சீர்திருத்தம் விவசாய சீர்திருத்தங்களுக்கான முதலீட்டைப் பெறுவது என்ற சாவேசின் திட்டம் இதனாலேயே முன்னேற முடியாமல் நிற்கிறது.
 2. நிலப்பிரபுக்களின் பயன்படுத்தப்படாத பெரும்பண்ணைகளை (லத்திபண்டியா) கிராமப்புற விவசாயிகள் எழுச்சியின் மூலம் கைப்பற்றி தமது அதிகாரத்தை நிறுவுவது என்ற புரட்சிகரப் பாதைக்குப் பதிலாக, நிலப்பிரபுக்களுக்கு நட்டஈடு கொடுத்து அரசே நிலத்தைக் கைப்பற்றி அவற்றை விவசாயிகளுக்கு விநியோகித்து, கூட்டுறவு மூலம் விவசாயத்தை உயிர்ப்பித்து தன்னிறைவையும் சுயசார்பையும் நிலைநாட்டுவது என்கிற முதலாளித்துவ சீர்திருத்த வழியையே சாவெஸ் செயல்படுத்த விழைகிறார். ஆனால் நகரங்களில் குவிந்துள்ள மக்களை நாட்டுப்புறங்களுக்கு அனுப்பி விவசாயத்தை உயிர்ப்பிக்க வேண்டுமானால், அரசு கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஆதரவளிக்க வேண்டும். எண்ணெய் வருவாயிலிருந்து இம்முதலீட்டைச் செய்ய வேண்டுமானால், வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தியையும் ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டும்; சந்தைக்கும் விரிவாகத் திட்டங்களுக்குமான முதலீடுகளுக்கு மீண்டும் ஏகாதிபத்தியப் பொருளாதாரக் கட்டமைவையே சார்ந்திருக்க வேண்டும். இது மீள முடியாத நச்சுச்சூழல்.

இந்த சீர்திருத்தங்கள் ஏகாதிபத்திய சக்திகளின் இடைவிடாத தாக்குதல்களுக்கு இடையில்தான் நடத்தப்படுகின்றன.

வெனிசுவேலா-5

 1. 2002-ம் ஆண்டு சாவெஸ் தலைமையிலான அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கண்டு ஆத்திரமடைந்த பன்னாட்டு எண்ணெய் ஏகபோக நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் நிலப்பிரபுக்களும் அதிபர் சாவெசைப் பதவியிலிருந்து தூக்கியெறிய கூட்டுச் சதியில் இறங்கி கலகங்களைத் தூண்டி விட்டனர்.

பத்திரிகை முதலாளிகள் சாவெசுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். ஊழல் அதிகாரிகள் அதிபரின் உத்தரவுகளைச் செயல்படுத்த மறுத்து முட்டுக் கட்டை போட்டனர். 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதியன்று அமெரிக்காவின் ஆசியுடன் திடீர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு, அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு சாவெஸ் சிறையிடப்பட்டார். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திட்டமிட்டுக் கொடுத்த இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு, ‘ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை” என்ற அமெரிக்க அரசின் துணை அமைப்பு கோடிக்கணக்கான டாலர்களை வாரியிறைத்தது. அமெரிக்கக் கைக்கூலியான எண்ணெய் நிறுவன முதலாளி புதிய அதிபராக்கப்பட்டார்.

அதிபர் சாவெசை ஆதரித்து நகர்ப்பற ஏழைகளும் கிராமப்புற விவசாயிகளும் நாடெங்கும் போராடத் தொடங்கினர். சாவெசை ஆதரித்து இராணுவமே பிளவுபட்டது. எல் வேலவின் சேரிப் பகுதியில் பெண்கள், ராணுவ தலைமையகத்தை சூழ்ந்து கொண்ட கூட்டத்தை ஒருங்கிணைத்து, மக்களை எதிர் கொள்ள வந்த ராணுவ வீரர்களை இடித்துரைத்து ஆயுதங்களை கீழே போட வைத்தார்கள். தனது நண்பர்களை திரட்டி மோட்டார் பைக்குகளில் போய் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த தொலைக்காட்சி நிலையத்தை மீட்டார் ஒரு பெண்.

வெனிசுவேலாவில் பெருகிய அதிருப்தி கலகத்தாலும், அமெரிக்காவையும் அதன் எடுபிடி கொலம்பியாவையும் தவிர, இதர தென்னமெரிக்கக் கண்டத்து நாடுகள் எவையும் இச்சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிக்காததாலும் அம்பலப்பட்டுத் தனிமைப்பட்டு போன நிலையில், இத்திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு 28 மணி நேரத்தில் படுதோல்வியடைந்தது. சாவெஸ் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றார்.

 1. சாவெஸ் முன்வைக்கும் சோசலிசத் திட்டங்களுக்கு ஏற்ப அந்நாட்டின் அரசியல் சட்டத்தைத் திருத்தியமைப்பதா, கூடாதா என்பதற்கான கருத்துக் கணிப்புத் தேர்தல் 2007-ம் ஆண்டு இறுதியில் நடைபெற்றது. ஏறத்தாழ 90 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட வெனிசுவேலாவில், இக்கருத்துக் கணிப்புத் தேர்தலில் 45% பேர் வாக்களிக்கவில்லை. எஞ்சிய 55% வாக்காளர்களில் 28% பேர் சாவேசின் திட்டங்களுக்கு எதிராகவும், 27% பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர்.

வெனிசுவேலாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளிப்படையாகவே அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது. அமெரிக்கக் கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வும் அமெரிக்காவின் “”எயிட்”, “”நெட்” முதலான நிறுவனங்களும் கோடிக்கணக்கான டாலர்களை வாரியிறைத்து பிரச்சாரம் செய்ததோடு, வதந்திகளைப் பரப்பி மக்களைப் பீதியூட்டின. ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனங்களான தன்னார்வக் குழுக்களும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் சாவேசின் திட்டங்களை எதிர்த்துப் பிரச்சாரம், விளம்பரங்களில் ஈடுபட்டதோடு வீதிகளில் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தன.

வெனிசுவேலாவின் தரகு முதலாளிகள் சாவெஸ் எதிர்ப்புக் குழுக்களுக்கு வெளிப்படையாக நிதியுதவி செய்ததோடு, அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கிச் செயற்கையான தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் உருவாக்கினர். வெனிசுவேலா உழைக்கும் மக்களின் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து, கட்டாயக் கல்வியின் பெயரால் குழந்தைகளைப் பள்ளிகளில் அடைக்கத் திட்டமிட்டுள்ளதாக வதந்திகளைப் பரப்பி, தனியார் தொலைக்காட்சிகள் அவதூறு பிரச்சாரம் செய்தன.

கத்தோலிக்க மதகுருமார்களும் திருச்சபைகளும் சாவேசுக்கு எதிராக அணிவகுத்துப் பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன. இக்கும்பல் நடத்திய சாலை மறியல் போராட்டத்தைத் தடுத்த சாவெஸ் ஆதரவாளர், கிறித்துவ மதவெறி குண்டர்களால் கொல்லப்பட்டார். சாவெஸ் அரசின் ஆளுநர்களும் மாநகராட்சித் தலைவர்களும் ஏகாதிபத்தியாவதிகளால் விலை பேசப்பட்டனர்; அல்லது நடுநிலை வகிக்குமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அதிபர் சாவெஸ் நிரந்தரமாகச் சர்வாதிகாரம் செய்யத் துடிப்பதாக எதிர்த்தரப்பினர் திரும்பத் திரும்பக் குற்றம் சாட்டினர்.

வெனிசுவேலா-6

அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்கான வரம்பை நீக்கிவிட சாவெஸ் விழைவதையே இப்படி சர்வாதிகாரியாகத் துடிப்பதாக ஏகாதிபத்தியவாதிகள் சித்தரித்து அவதூறு செய்கின்றனர். ஆனால் சாவெஸ் அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் தனிநபர் சர்வாதிகாரத்தை நிலைநாட்ட விழையவில்லை. மாறாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட மாற்றுப் பொருளாதார அரசியலமைப்பு முறை தொடர்ந்து நீடிக்கவே விழைந்தார். அத்தகைய கொள்கைகளைச் செயல்படுத்தும் நிறுவனமாக அதிபர் பதவியைக் கருதி, அதனைக் காலவரம்பின்றி நீடிக்க விரும்பினாரே தவிர, தனிநபர் என்ற முறையில் பதவி சுகத்தை வரம்பின்றி அனுபவிப்பவதற்காக அல்ல. ஏகாதிபத்தியக் கைக்கூலிகளை அதிபராகக் கொண்ட மறுகாலனியாதிக்கக் கொள்கை தொடர்ந்து நீடிப்பதா, அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களை அதிபராகக் கொண்ட சுயசார்பான கொள்கை தொடர்ந்து நீடிப்பதா என்பதுதான் அந்த கருத்துக் கணிப்புத் தேர்தலில் மையமான விவகாரம்.

வெனிசுவேலாவின் தரகுப் பெருமுதலாளிகளும் வர்த்தக சூதாடிகளும் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி, செயற்கையான தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் செய்தபோது, அதற்கெதிராக சாவெஸ் அரசு உறுதியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தட்டுப்பாட்டைப் போக்க பல கோடிகளைச் செலவிட்டு வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்தபோதிலும், ஊழல் மிகுந்த அதிகார வர்க்கத்தின் இழுத்தடிப்புகளால் அவை உழைக்கும் மக்களுக்குப் போய்ச் சேரவில்லை.

அரசியல் சட்டத்தைத் திருத்தக் கூடாது என்று எச்சரிக்கும் வகையில், தரகுப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் வெனிசுவேலாவில் போட்டுள்ள முதலீடுகளை திரும்பப் பெறப் போவதாக வதந்தியைப் பரப்பி பீதியூட்டின. தனியார் வங்கிகளும் இதற்குப் பக்கபலமாக நின்று நாட்டின் பொருளாதாரத்தையே அச்சுறுத்தின. ஆட்சிக் கவிழ்ப்பு நடக்குமோ எனுமளவுக்குப் பீதி நிலவியது. இருப்பினும், இதற்கெதிராக சாவெஸ் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுமாறியது.

2007-ம் ஆண்டு கருத்துக் கணிப்பின் தோல்விக்குப் பிறகு பிப்ரவரி 2009-ம் ஆண்டு நடத்தப்பட்ட அதிபர் பதவிக்கான வரம்புகளை ரத்து செய்வது பற்றிய கருத்துக் கணிப்பில்  சாவெஸூக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாயின.

2009-ம் ஆண்டு பரவிய உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக உலகப் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ள வெனிசுவேலாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டது, 2011-ம் ஆண்டில் பண வீக்கம் 28% ஆக அதிகரித்துள்ளது. 2011-ல் அரசின் வரவு செலவு பற்றாக்குறை உள்நாட்டு உற்பத்தியில் 5.2% ஆக இருக்கிறது. வெனிசுவேலா நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இன்னும் மூன்று மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. 13 ஆண்டுகளாக நாட்டின் அதிபராக இருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹியூகோ சாவேஸூம், தான் ‘அனைத்து தரப்பினரையும் பிரதிநிதிப்படுத்துவதாக’ சொல்லும் ஹென்ரிக் கேப்ரில்ஸூம் அக்டோபர் 7-ம் தேதி தேர்தலில் போட்டியிட பதிவு செய்துள்ளனர்.

கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ‘அவரது உடல் நிலை பற்றிய சந்தேகங்களை நீக்கி, தன்னை மக்கள் முன் நிறுத்திக் கொண்டால் வரும் தேர்தலிலும் இனி வரும் தேர்தல்களிலும் சாவெஸ் வெற்றி பெறுவது உறுதி, 2030-ம் ஆண்டு வரை அவர் அதிபராக இருப்பதற்கு தேவையான மக்கள் ஆதரவை பெற்றிருக்கிறார்’ என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் சாவேஸின் பலம் மக்கள் நலன் சார்ந்த பார்வையும், விருப்பமும் என்றால் அதை முற்றிலும் செயல்படுத்தக்கூடிய மக்களை அமைப்பாக்கித் திரட்டி வைத்திருக்கும் கட்சியாக அவரது பின்னணி இல்லை என்பதே பலவீனம். தனிநபராக இருந்து மட்டும் ஒரு நாட்டை அப்படி முன்னேற்றிவிட முடியாது. சோசலிசம் என்பது உடமை வர்க்கங்களுக்கும், உடமையற்ற வர்க்கங்களுக்கும் இடையே நிலவும் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக மலருவது. அதை கற்பனை விருப்பங்களால் நிறைவேற்றிட முடியாது. இந்த சூழல்தான் சாவேஸை இறுதியில் வெல்லமுடியாதபடி அலைக்கழிக்கிறது.

பெண்கள் உள்ளிட்ட மனித குலத்தின் முழுமையான விடுதலையை சாத்தியமாக்கும் சோசலிச சமூகத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றின் தலைமையிலான புரட்சி ஒன்றே வழியாகும்.

சோசலிசம் என்பது பாட்டாளி வர்க்கக் கட்சியால் தலைமை தாங்கப்படும் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் மலர்வதேயின்றி, தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வருவதல்ல. அதிகாரத்திலிருந்து வீழ்த்தப்பட்ட ஏகாதிபத்தியவாதிகள், தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் சொத்துக்களையும், உரிமைகளையும் பறித்து, உழைக்கும் மக்கள் தமது சர்வாதிகாரத்தைச் செலுத்தி அதிகாரம் செய்வதுதான் சோசலிசமே அன்றி, சுரண்டும் வர்க்கங்களுக்கு ஜனநாயகப் பன்மைவாதம் அளிப்பதல்ல. பாட்டாளி வர்க்க சித்தாந்தமோ, பாட்டாளி வர்க்கப் புரட்சியோ, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமோ இல்லாமல் சோசலிசத்தை நிறுவ முடியாது; தனிநபரின் உயர்ந்த நோக்கங்களால் சோசலிசத்தைக் கட்டியமைக்கவும் முடியாது.

வலுவான, அரசியல் படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் சோசலிச புரட்சி ஒன்றை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவினாலும், ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும் முதலாளித்துவ சக்திகளுக்கு எதிராகவும் வெனிசுவேலா மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு உலகெங்கிலும் உள்ள புரட்சிகர சக்திகள் ஆதரவு அளிக்கின்றன.

________________________________________________

– செழியன்
________________________________________________

குறிப்பு – இந்தக் கட்டுரை கடந்த மாதத்தில் எழுதப்பட்டது. நேற்று (08/10/2012) வெளியான தேர்தல் முடிவுகளின்படி சாவேஸ் மீண்டும் வென்றிருக்கிறார்

 1. வருங்கால முதல்வர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெனிசுவேலா போய் சாவேசை சந்தித்து அங்கே சிலகாலம் தங்கி,சீர்திருத்த நடவடிக்கைகளையும் அவற்றை செயல்படுத்தும் முறைகளையும் தெரிந்து கொண்டு வந்து எதிர்காலத்தில் தமிழகத்தை ஆளும் போது சிறப்பான ஆட்சியை தரவேண்டும்.அவருக்கு பின் அவர் மகனும் நல்லாட்சியை தரவேண்டும்.

 2. // உடலில் தெம்பு இருக்கும் வரை சலிக்காமல் உழைக்கும் விவசாயிகள், பெண்கள், கூலி தொழிலாளர்கள் முதிய வயதில் கௌரவத்துடன் வாழ வழி செய்து கொடுப்பது எத்தனை சமூகங்களில் நடக்கிறது? //

  அனாதரவாக கைவிடப்பட்டு பிச்சையெடுக்கும் வயதான மூதாட்டிகளையும் (முதியவர்களையும்) பராமரிக்காமல் வேடிக்கை பார்க்கும் சமூகங்களும், அரசுகளும் அவர்களை கௌரவத்துடன் பராமரிக்கும் ஏற்பாடுகள் ஏதேனும் செய்யவேண்டும்… வெனிசுவேலாவின் மனசாட்சி வாழ்க….

 3. பாரபட்சம் மிகுந்த வினவுக்கு :

  நான் பிரன்சில் வாழ்கிறேன். இங்கு சில பத்தாண்டுகளாகவே யுகோ சவெஸ் அளிக்கும் அத்தனை வசதிகளும் அதற்கு மேலும் பல சலுகைகளும் உண்டு. தாய்மார்களுக்கு ஓய்வூதியம் உட்பட. தங்களது வாழ்நாளில் வேலை எதையுமே செய்யாமல் அனைத்தையும் (உழைக்கும் மக்களின் வரி பணத்தில்) ஓசியில் பெற்று உடல் வளர்க்கும் சொர்க்க பூமியான பிரான்ஸுக்கு அடுத்ததுதான் உங்க சவெஸ் நாடு. இத்தனைக்கும் பிரான்ஸ் ஒரு மக்களாட்சி முறை நாடே.

 4. வினவு,
  சாவெசின் அடிப்பற்றி தேர்தல் பாதையை தேர்வு செய்வதில் இந்தியநக்சல் அமைப்புகளுக்கு உள்ள தயக்கம் என்ன?
  இல்லை ! அங்கும் இங்கும்நிலவும் தேர்தல் பாதைகள் மற்றும் சமூகநிலைமைகள் வேறா ?
  இவற்றை காட்டி தானே சிபிஐ மற்றும் சிபிஎம் தேர்தல் பாதையை வலியுறுத்துகிறட்கு.

 5. மிஸ்டர் மாரிமுத்து ! சாவேஸ் போகும் தேர்தல் பாதையால்தான் சோசலிசக் கொள்கைகளை நிறைவேற்ற முடியாமலும், என்னேரமும் ஆட்சி கவிழ்ப்பு சதி பயத்திலும், பதுக்கல்களை தடுக்க முடியாமலும் சிரமப்படுவதாக கட்டுரையிலேயே குறிப்பிடப்பட்டுள்ள போது, அதே திருடர்பாதை தேர்கல் பாதையை பரிந்துரைக்கின்றீர்கள் ?

  • இவ்வளோ செஞிருக்காங்க ஒரு கம்யூனிச ஆட்சி கூட இல்லாதவிங்க ! ஆனா 34 வருசமா இந்த காரட்டு முள்ளங்கி தலைவரு கட்சி கார்ங்க என்னய்யா செஞ்சாங்க ? இன்னும் கல்கத்தாவுல விபச்சாரம் தான் இருக்கு!

 6. மிஸ்டர் மாரிமுத்து பிரான்சு – பல நூற்றாண்டுகளாக ஏன் சமீப காலம் வரை அர்ஜெண்டினா, வியட்நாம் என்று எல்லா மக்களையும் சுரண்டி கொழுத்த பணத்தில் – ரழ்யப் புரட்சியில் எங்கே மக்கள் கம்பியுணிசம் பக்கம் சாய்ந்து விடுவார்களோ என்று – வழங்கப்பட்டு வரும் நாடு பிரான்சு உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள். இப்போது உழைக்கும் மக்கள் பொருளாத மந்தத்தால் அடி வாங்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் வெனிசுலா — ? கட்டுரையை திரும்ப படிக்கவும்

 7. அண்ணாமலை ! கேரளாவிலும், வங்கத்திலும் நடந்தது, நடப்பது போலி கம்பியுனிஸ்டுகளின் ஆட்சி என்பதை நிறைய கட்டுரைகள் மூலம் வினவு விளக்கி உள்ளது

 8. பின் ஏன் சாவேஸ் இலங்கைஇல் நடைபெற்ற அத்தனைக்கும் ஆதரவு அளித்தார்

Leave a Reply to மாசிலா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க