privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க டாலருக்காகப் பலியான பாகிஸ்தான் உயிர்கள்!

அமெரிக்க டாலருக்காகப் பலியான பாகிஸ்தான் உயிர்கள்!

-

ஒரு தெருவுக்கு ஏறத்தாழ 8 பேர் விதம் கொல்லப்பட்ட கொடூரம் : ஒரே நேரத்தில் கணவனைய்யும் மகனையும் மகளையும் சகோதரணையும் இழந்துவிட்ட மாளாத்துயரில் கதறும் தாய்மார்கள்
 மாளாத்துயரில் கதறும் தாய்மார்கள்

ண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த செப்டம்பர் 12 அன்று அலி எண்டர்பிரைசஸ் என்ற ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிற்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 289 தொழிலாளர்கள் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இது, பாகிஸ்தான் இதுவரை கண்டிராத மிகக் கொடிய கோரமான ஆலை விபத்து. கராச்சியின் வடமேற்கேயுள்ள பால்தியா நகரத் தொழிற்பேட்டையிலுள்ள இத்தொழிற்கூடத்தின் மூன்று மாடிகளிலும் தீப்பற்றியதால், தப்பிக்க வழியில்லாமல் கூண்டில் சிக்கிய பறவைகள் போலத் தொழிலாளர்கள் தீயில் வெந்து கரிக்கட்டைகளாகியுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள். இன்னும் பலர் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள். ஏறத்தாழ 1200 முதல் 1500 பேர்வரை வேலை செயும் அந்தத் தொழிற்கூடத்தில் அன்றைய ஷிப்ட்டில் ஏறத்தாழ 400 பேர் பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான் இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

அதேநாளில் லாகூரின் கிழக்குப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த ஒரு செருப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மொத்தத்தில் 315-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அடுத்தடுத்து நடந்த தீ விபத்துகளில் கொல்லப்பட்டுள்ளனர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கராச்சியிலுள்ள ஆயத்த ஆடைத் தொழிற்கூடத்தில் அவசர வழிகள் ஏதும் கிடையாது. ஆலைக்குள் தண்ணீர் தெளிப்பான்களோ, தீ தடுப்புச் சாதனங்களோ கிடையாது. ஆடைத் துண்டுகளும் பாதுகாப்பற்ற இரசாயனப் பொருட்களும் குவிந்திருந்ததால் விரைவில் தீப்பற்றி நச்சுவாயு பரவிப் பலரை மயக்கமடையச் செது, தப்பிக்க முடியாத நிலையில் கொத்துக்கொத்தாக தொழிலாளர்கள் தீயில் சிக்கி பலியாகியுள்ளனர்.

ஆலைக்கு வரும் தொழிலாளர்களை ஷிப்ட் முடிந்த பிறகு சோதனையிட்ட பின்னரே வெளியே அனுப்புவதற்காக ஒரேயொரு கதவை மட்டும் வைத்து, அக்கதவையும் மூடிவிடுவதுதான் அங்கு வழக்கமாக இருந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் நாற்புறமும் தீப்பற்றியதும் தப்பிச் செல்ல முடியாமல் துடிதுடித்து தீயில் சிக்கி மாண்டு போயுள்ளனர். ஒரு சில தொழிலாளர்கள் இரும்புக் கம்பிகளைக் கொண்டு ஜன்னலை உடைத்து நெருப்பிலிருந்து தப்பிக்க மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து கை கால் முறிந்து மாண்டு போயுள்ளனர். ஒரு சிலரே உயிர் பிழைத்து மருத்துவமனையில் குற்றுயிராகக் கிடத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நவீன வடிவமைப்புகளுடன் விற்பனை செயப்படும் ஆயத்த ஆடைகளில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்கள் பன்னாட்டு நிறுவனங்களுடையவை. உழைப்போ, பாகிஸ்தான் போன்ற ஏழை நாட்டுத் தொழிலாளிகளினுடையவை. இத்தொழிற்கூடங்களில் 8 மணி நேர வேலை என்பதெல்லாம் கிடையாது. 12 மணிநேர வேலைக்கு மாதத்துக்கு 58 டாலர்தான் ஊதியமாகத் தரப்படும்.

289 பேரைப் பலி கொண்ட முதலாளித்துவ பயங்கரவாதத்தின் கோரம் ; பிணக்குவியலில் தமது உற்றார் உறவினரைத்தேடும் அவலம்
289 பேரைப் பலி கொண்ட முதலாளித்துவ பயங்கரவாதத்தின் கோரம் ; பிணக்குவியலில் தமது உற்றார் உறவினரைத்தேடும் அவலம்

தனியார்மயம் -தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கை பாகிஸ்தானில் திணிக்கப்பட்ட பிறகு, 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பஞ்சாப் தொழிற்கொள்கை, தொழிலாளர் நலனையும் கண்காணிப்புகளையும் அறவே புறக்கணித்தது. ஆயத்த ஆடை ஏற்றுமதி மூலம் பெருமளவு அந்நியச் செலாவணி கிடைப்பதால், தொழில் வளர்ச்சிக்கு இது அவசியமானது என்று நியாயம் கற்பித்தது. பாகிஸ்தானின் பொருள் உற்பத்தித் துறையில் ஏற்றுமதிக்கான ஆடைகள் தயாரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏறத்தாழ 38 சதவீத தொழிலாளர்கள் இத்துறையில் பணியாற்றுகின்றனர். அனைத்துலகச் சந்தையைப் பிடிக்க பாகிஸ்தான் தரகுப் பெரு முதலாளிகள் எவ்விதப் பாதுகாப்புமின்றி அற்பக் கூலிக்குத் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து கொத்தடிமைகளாக நடத்துகின்றனர்.  கடந்த 2011-இல் மட்டும் பாகிஸ்தானில் 151 தொழிலாளர்கள் விபத்துகளில் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொடிய சுரண்டலும் கொத்தடிமைத்தனமும் அடக்குமுறையும் பாதுகாப்பின்மையும் அந்நியச் செலாவணியின் பெயராலும் வேலைவாப்பின் பெயராலும் ஏழை நாடுகளில் நியாயப்படுத்தப்படுகின்றன.

இத்தனியார்மய – உலகமயக் கொள்கைதான் எவ்விதப் பாதுகாப்புமின்றித் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்துவதோடு, ஊழலையும் கொள்ளையையும் ஊட்டி வளர்த்துத் தொழிலாளர்களின் உயிரையும் பறிக்கிறது. முதலாளித்துவ ஊடகங்களோ இதனை முதலாளிகள் நடத்திய படுகொலையாகக் காட்டாமல், அக்கறையின்மையால் ஏற்பட்ட விபத்தாகச் சித்தரிக்கின்றன. எந்தத் தனியார்மயமும் உலகமயமும் வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்களைத் தீ விபத்துகளில் தள்ளி உயிரைப் பறிக்கிறதோ, எந்தத் தனியார்மயம் தமிழகத்தில் ஜேப்பியார் கல்லூரியின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களைப் பலி கொண்டதோ, அந்தத் தனியார்மயமும் உலகமயமும்தான் பாகிஸ்தான் தொழிலாளர்களின் உயிரையும் பறித்துள்ளது.

தனியார்மயம் – உலகமயம் எனும் கொடிய சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டுள்ள ஏழை நாடுகளின் தொழிலாளி வர்க்கம், தமது பொது எதிரியான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்கும் அவற்றின் கூட்டாளிகளான உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் எதிராக ஓரணியில் திரண்டு போராட வேண்டிய அவசியத்தை இன்றைய உலக நிலைமைகள் சுட்டிக் காட்டுகின்றன. தனியார்மயமும் உலகமயமும் எவ்வளவு கொடூரமானது, பயங்கரமானது என்பதை உலகுக்கு மீண்டும் உணர்த்திவிட்டு, பாகிஸ்தான் தொழிலாளி வர்க்கம் மீளாத்துயரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012

__________________________________________________