privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்பட்டுத் தறி... பறி போன கதை!

பட்டுத் தறி… பறி போன கதை!

-

திண்ணையில் உட்கார்ந்து காலை ஆட்டுபவரை கண்டால், ”இங்க ஏம்பா காலை ஆட்டுற, காஞ்சிபுரத்துக்கு போயி காலை ஆட்டினா சோறு கிடைக்கும்” என்பார்கள். காரணம், உழைப்பாளின் உற்பத்திப் பொருட்களின் பளபளப்புக்கு பின்னே இருக்கும், துயரம் தெரிவதில்லை. பட்டு விளம்பரத்தில் வரும் வத்ஸரகலா, சமுத்திரிக்கா என்று ஜொலிக்கும் பட்டின் பின்னாலிருக்கும் சோகம் விடியாத, இருள் போன்றது.  பாவு போல சிக்கலானது. பச்சை பாவுப் போல் நையிந்துப் போனது.

பட்டின் கதையை பட்டுனு சொல்லிவிட முடியாது. இது, பட்டு புழு…. பட்டுபுடவையாகும் நீண்ட…. கதை.

பட்டு புழு, பட்டு இழை,  பட்டு நூல், பட்டு கோறா, பாவு பட்டு, தறிப்பட்டு, தங்கம் வெள்ளியிலிருந்து ஜரிகை. இவை, நெசவுக்கு வெளியே நடக்கும் வேலைகள்.

அடுத்து, நெசவு வேலைகள். இதில் மூன்று நிலைகள். ”நெசவுக்கு முன், நெசவு, நெசவுக்கு பின்”.

நெசவுக்கு முன்; கோறா தலா- எண்ணிக்கை பிரிப்பது,  சாயம் போடுவது, கஞ்சி போடுவது, அச்சுப் பிணைப்பது, பண்ணையில் வாங்குவது, பட்டு இழைப்பது, நான்கு இழைகளாக சோர்ந்து, தார் திரிப்பது – ஜரிகைக்கும் இதே வேலை.

பிறகுதான் நெசவு வேலை; பண்ணையில் வாங்குவது. நெய்யும்போது சரியான இறுக்கத்தில், பாவு கட்டுவது, -எயட்டு கட்டுவது- அச்சு மரம் அடிப்பது, டிசைனுக்கு தகுந்தவாறு பேட்டு குச்சு இழுப்பது, இதில் எதாவது ஒன்று  பிசகினாலும், அனைத்து வேலையும் நாசம். இந்த வேலைகள் ஒருவரால் செய்ய முடியாது.  குடும்பமே உழைக்க வேண்டும். பாவுக்கு கஞ்சிப் போடும்போது, பிற தறிக்காரர்களின் உதவி முக்கியம். இவ்வளவு நுணுக்கமான வேலையினையும், சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும் செய்யும் நெசவாளர்களுக்கு நேரம், காலம் கிடையாது. வாழ்க்கையுடன் தொழிலும் பிணைந்தே இருக்கும்.  குழந்தைகளும் உதவும்.

நெசவாளர்கள் எப்போதும் எளிமையான யதார்த்தமான வாழ்க்கை முறையினை பின்பற்றுவர். சாமி கும்பிடும்போது முதலில் வணங்குவது தறியைதான். அமாவாசை, கிருத்திகையை வீட்டு முருங்கைக்கீரையிலேயே முடித்துவிடுவார்கள். தொழிலுடன் ஒன்றி எளிமையாக வாழும் பட்டு நெசவாளர்களுக்கு கிடைக்கும் கூலியோ சொற்பத்திலும் சொற்பம். இருந்தாலும் பட்டுதான் அவர்கள் சுவாசம்.  குழந்தையைக்கூட ‘பட்டூ’ என்றுதான் வாய் நிறைய  கொஞ்சுவார்கள்.

பட்டு தறி பறிபோகும் நிலை

நெசவாளியிடம், ”உங்கள் குழந்தை என்ன தொழில் செய்ய ஆசைப்படுகிறீர்கள்” என்று கேட்டால்,  ”பட்டு தறியைவிட வேறு எதாவது படிச்சுட்டு செய்யட்டும், இந்த கஷ்டம் என்னோடு போகட்டும்” என்பார்கள். ஆனால், நிலைமை இப்போது அப்படியில்லை.  தறித் தொழிலே எவ்வளவோ ‘மேல்’ என்றாகிவிட்டது. காரணம், வேலை செய்யும் போது யாருடைய ஆணைக்கும் காத்திருக்க தேவையில்லை. வீட்டிலேயே வேலை, சோர்வுற்ற போது ஓய்வு. குழந்தைகளுக்கு, வளரும் போதே தொழிலை கற்றுத் தருவார்கள்.

எனக்கும்  அந்த அனுபவம் உண்டு. 5, 6-ம் வகுப்பு படிக்கும்போதே பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்கு நானும், என் தோழியும் சாதாவாட்டு, கோர்வை, பிட்னி எடுக்க கூலிக்கு செல்வோம். ஒரு நாளைக்கு ரூ.5 சம்பாதித்து,  நோட்டு, பாக்ஸ், வாட்டர் கேன் வாங்கி பள்ளிக்கு எடுத்துச் சென்றதும்,  பாட்டி நோயுற்றபோது ”காப்பி” வாங்கிக் கொடுத்தது இன்னும் மறக்கவேயில்லை. தறிகார பெண்கள் , கூடவே வீட்டு வேலையும் வாங்குவார்கள், இதனால்,  வீட்டு வேலைகளும் அத்துபடி.  அந்த வேலைகள் எல்லை மீறும்போது பாட்டிகள் அவர்களிடம் சண்டைப் போட்டு மீட்டு வருவார்கள்.

குழந்தைகளைப் போல பெண்களும்  கூலிக்கு செல்வதுண்டு. புடவையின் முந்தானைக்கான கலர் மாற்ற  வேண்டி புது பாவினை இழை, இழையாக அச்சில் ஏற்றுவது – பிட்னி ஏற்றுவது –  குழந்தைகள் பிட்னி எடுத்துக் கொடுக்கும்- பிறகு, முந்தானைக்கான டிசைனை கையினாலயே, பலகை மூலம் பாவுனுள் செலுத்தி தூக்குவது -செல்ப் பாசுவது-. மிகவும் நுட்பமான வேலை, கடினமான வேலையும் கூட. தறிக்குக்கேற்றவாறு உட்கார்ந்து தரையோடு குனிந்து பாச வேண்டும் இவ்வளவு கஷ்டப்பட்டாலும் முறையான கூலி கிடையாது. ஆனால், இந்த வேலை செய்யும்போது ஒரு சந்தோஷம் உண்டு. புடவை முடிவதற்கான கடைசி வேலை.

முக்கியமான பின் நெசவு வேலை

புடவை மடிப்பது.  கண்டிப்பாக இதற்க்கு அனுபவம் வாய்ந்த இருவரின் உதவி தேவை.  குஞ்சம் கட்டி பிசிறு எடுத்து முந்தானை, பார்வையிடம் என்று அனைத்தும் சரியான இடத்தில் மடிக்க வேண்டும். இந்த வேலையை முழுபலத்துடன் இழுத்தவாக்கில் இரண்டுப் பேர் செய்ய வேண்டும்.  நேர்த்தியும், பளப்பளப்பும் இங்குதான் கிடைக்கும். புடவை மின்னும்.

பட்டுக்கு உழைப்பை கொட்டுவது மட்டுமல்ல. தன் வீடு கட்டும்போது கூட  தனக்காக அல்ல, பட்டு தறிக்காகவே வீடு கட்டுவார்கள்.  தறி பொருட்களை  சுத்தமாக, பாதுகாக்க இடம் ஒதுக்குவார்கள். வீடுகட்டியும் படுக்க இடம் இல்லாமல் தறிக்கு அடியிலேயே முடங்கி தூங்குவார்கள். தறி நெய்யும்போது வரும் சத்தம் காது நோகும். நோயுற்றவர்களுக்கு வேதனையாக இருக்கும். இவ்வளவுக்கும், தறி மட்டும்தான் தறிக்காரர்களுக்கு சொந்தம்.  புடவைக்கான பாவு, பட்டு ஜரிகை முதலாளிக்கானது. அற்பமானதுதான் தறிக்காரர்களுக்கு. பட்டு புடவை அல்ல, மீந்த பட்டுஅரைஞாண் கயிறுதான் நெசவாளிக்குழந்தைக்கு.

இன்னமும் 94 ஆம் ஆண்டு  கொடுத்த கூலி ஏறவே இல்லை. தொழில் நுட்ப வளர்ச்சியினால், இயந்திரங்களைக் கொண்டு வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதன் பலனும் முதலாளிக்கே. ஏனெனில், இயந்திரம் முதலாளிக்கு சொந்தம்.

கூட்டுறவு சங்கத்தில் இந்த நடைமுறைகள் வித்தியாசப்படும். ஆனால் நெசவாளர்கள் அனைவரும் அதில் உறுப்பினர்களாக முடியாது.  அதையும் இதே முதலாளிகள்தான் இயக்குகிறார்கள் பினாமி பெயரில்.

தறிக்காரர் வாழ்க்கை

தறிக்குழியில் கால் எட்டும் வரைதான் ஆண்குழந்தைகளுக்கு படிப்பு. பெண் குழந்தைகளுக்கு அதுவும் இல்லை.  இருட்டும் வரை தறியில் இருக்கும் நெசவாளிகள்  டீ குடிக்க காசு தேடுவார்கள். கடைசியில் அன்றைய தினம் விழுந்த ஜரிகை துக்கு, சேட்டுக் கடையில் ரூ.5, 10 ஆக மாறும். அதுதான் டீ,  செலவுக்கு. குழந்தைகளும் அதற்கு காத்திருக்கும்.

தின கூலிக்கு செல்லும் போது பல கஷ்டங்கள். தறியுடன் வீட்டு வேலைகளையும் செய்யணும்.  குழைந்தைகளை ரூபாய்.முண்ணூறு, ஐநூறு மாத சம்பளத்துக்கு விட்டு அதிகபட்சம் ரூபாய் ஐயாயிரம் அட்வானஸ் வாங்குவார்கள்.  சம்பளத்துக்கு போய்ட்டா அடிமைதான். எஜமானர் வீட்டில் வேலையில்லையென்றால், மற்ற வீட்டுக்கு கூலிக்கு சென்று கூலியை பெற்று எஜமானர்களுக்கு கொடுத்து, வீட்டு வேலைகளை முடித்துவிட்டுதான் வரவேண்டும். வேலை காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை. மாதம் அமாவாசை ஒருநாள் மட்டும் தான் லீவு.  சேலை முடியும் தருவாயில் இருந்தால் அதுவும் போச்சு. பொங்கல் பண்டிக்கைக்கு  ஒரு செட்டு துணி உண்டு. இதற்கு மார்கழி முதல் நாளிலிருந்து தை  வரை  அதிகாலை 3.30 லிருந்து இரவு 10.30 மணிவரை நிமிராத வேலை. ஆயுத பூஜையில், தறி சாமானை கழுவி சுத்தமாக்கி பட்டை அடிக்க வேண்டும். கொஞ்சம் பொரியும் துட்டும் இனாமாக கிடைக்கும்.

வயசுக்கு வந்த பெண்களின் நிலைமையோ கொடுமை. வீட்டு குடிகார ஆண்களால் பல தொந்தரவுகள். ஆண்கள், வீட்டில் வேலைக்கு வரும் பெண்கள்  சுறுசுறுப்பா வேலை செய்தால், அவளை இரண்டாவது கல்யாணம் செய்துக் கொள்வதுண்டு. பெண்கள் தங்கள் வீடுகளிலேயே வேலை செய்தால் தப்பித்தார்கள். வயசு பெண்கள் தறி நெய்துதான் கல்யாணத்துக்கு சேர்க்க வேண்டும். கல்யாணமாகிச் சென்றால் அங்கும் தறிதான்.  வீட்டுக்காரன் தன்னை விட்டு ஓடிவிட்டாலும், இறந்துவிட்டாலும்  சொந்த காலில் நிற்பார்கள்.  குழந்தைகள் படிப்பு கனவுதான்.  பெண்கள் நரம்பு புடைப்பு, மூலம்,  மூட்டுவலி, ஆண்கள் விரைவீக்கம் என்று நோயுறுவார்கள். தறிக்குழியில்  கொசு கடித்து யானைக்கால் வந்தாலும்,  அதைப் பெரிசா எடுத்துக்காம நெய்யும் புடவையில் கொசு கரை படிஞ்சா பதறி போயிடுவாங்க.  தறி நெய்ய முடியாத வயதான காலத்திலும் பட்டு, கோறா, கூலிக்கு  இழைப்பது,  சேலைகளுக்கு  தைக்கும் பார்டர் நெய்வது என வாழ்க்கையையே  தறியுடன் முடிப்பார்கள்.

நெசவாளிகளுக்கு மழைகாலம் வேதனைக்காலம்.  குளிரில் குழந்தை அழுதாலும் கவனிக்காமல், தறியின் மீது ஈரக் காற்று படாமலிருக்க  துணிகளையெல்லாம் அதன் மீது போர்த்துவார்கள். மழைப் பெய்த்தால், தறி அச்சுமரம் நகராது. பேட்டு டிசைனும் விழாது, தறி அசையாது. சோறு ஒருவேளை மட்டும்தான்.  நிறைய வீடுகளில் அடுப்பெரிக்கக்கூட விறகு இருக்காது. முடிச்ச சேலையை அறுக்க முடியாது.  சேலை நமுத்து ஒடிஞ்சி போயிடும். விறைப்பா இருக்காது. வெயில் வந்தாதான் சேலையை அறுக்க முடியும்.

ஆயிரம் கஷ்டப்பட்டாலும், தொழில் இருந்தது.  காஞ்சிபுரம் பட்டு என்றாலே  குழந்தைக்கும் தெரியும். காரணம் தலைமுறை தாண்டியும் மின்னும் ஜரிகையின் தரம்.  பலமுறை அணிந்தாலும் கசங்காத, எடைநிறைந்த  பட்டு.   அன்னம், மயில், கலசம், இன்னும் மயக்கும் உருவங்கள். அரக்கு, புவனா, அஜந்தா என்ற கண்ணை பறிக்கும் வண்ணங்கள். புடவையின் ஆயுள்வரை வசிகரிக்கும்.

இப்போது பட்டு தொழில், பட்டு போய்விட்டது. தொழில் பாழாய் போனதற்கு பல காரணம் அதில் ஒரு காரணம்.  பாதிக்கு பாதி இலாபம்  கொழுத்த முதலாளிகள் – புது பணக்கார பொறுக்கிகள் – பட்டு ஜரிகையில் போலியை புகுத்தி பெரும் கொள்ளையடித்தார்கள்.  காஞ்சிபுரம் பட்டு என்றால் கேள்விக்கிடமின்றி,  வாங்கும் நிலை மாறி, போலியால் பட்டு தொழிலே கேலியாகிப் போனது. தரமில்லாத பட்டை மெஷினில் உற்பத்தி செய்து  கொழுத்தனர் முதலாளிகள். இதனால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் நெசவாளிகள். நெசவையொட்டியிருந்த தொழில்களான, வண்ணம் தோய்ப்பது, அச்சு கட்டுதல், பரூட்டம், நாடா சரிபார்ப்பது, பட்டு, கோறா இழைப்பது,  பட்டு, ஜரிகை துக்கு கடைகள், தறிசாமான்கள் செய்யும் ஆசாரிகள், என்று கண்ணுக்கு தெரியாத பல குடும்பங்களும் குலைந்துவிட்டது. 10 ஆண்டுக்களுக்குமுன் 1,00,000 பட்டுதறிகள். இன்று 10,000 க்கும் கீழ் குறைந்து விட்டது.

நெசவாளியின் குடும்பத்தின் வியர்வையால் கொழுத்த முதலாளிகள் ஏ.சி கார்களில் ரியல் எஸ்டேட், டிம்பர் லாரி, வட்டிக் கடை எனப் புதுப்புது தொழிலில் இறங்கிவிட்டனர். ஆனால், நெசவாளிகளோ அந்த சொகுசு கார்களை தயாரிக்கும் பன்னாட்டு கம்பெனிகளில், மெஷின் துடைப்பவர்களாவும், பெருக்குபவர்களாவும்,  காவல்காரர்களாவும் இன்னும் கோரமென்னவென்றால், காஞ்சிபுரத்தில் தறிக் கொட்டகைகள் சாராயபாட்டில்கள் கழுவும் ‘கம்பெனிகளாக’   மாறிவிட்டது. அங்கு பாட்டில் கழுவ பெண்கள் செல்கிறார்கள். ஆண்கள் குடியில், பெண்கள் சாராய பாட்டில் கழுவி குடும்பத்தை காக்கின்றனர்.  தன் குடும்பத்துக்கு கௌரவத்துடன் சோறுப் போட்ட பட்டு தறி, இப்போது அடுப்பெரிக்க பயன்படும் அவலம்.

முன்பெல்லாம் காலையில் குளித்து மஞ்சள் பூசி மங்களகரமாக தொழில், குடும்பம் என்று வீட்டோடு இருந்தவர்கள், இன்று பன்னாட்டு கம்பெனிகளுக்கு  பெருக்கும் வேலைக்கு இரவுபகலாக ஓடுகிறாரகள். 70,100 கி.மி சென்று நடுஇரவு 12 க்கு வீடு திரும்புகிறார்கள். கோலுக்கு ஆடும் குரங்கினைப் போல், தன்  ரூபத்தை மாற்றி தலைமுடிக்கு டை அடித்து சென்றாலும் 35 வயதிற்க்கு மேல் வேலை இல்லை.  துரத்தும் நிலை. பெருக்கி கூட்டும் வேலையும் கனவாகி போன அவலம்.நெசவாளிகள் இடிந்துப் போன நிலையில் இருக்கிறார்கள்.

அரசோ, ஜவுளி பூங்கா என்ற பெயரில் பரம்பரிய காஞ்சிப் பட்டை, பன்னாட்டு  கம்பெனிக்கு  முந்தானை விரிக்கிறது.  பட்டு புடவைகளுக்கு பண்டிகைக் கால தள்ளுப்படியாக அரசு  தரும் மான்யம், சுருங்கிப் போனது.  மலை அளவு விலையால், பட்டு புடவையின் விற்பனையும் தேங்கியது. கையிலே கலைவண்ணம் கண்டவர்கள், ஓட்டுக் கட்சிகளின் பல வண்ணப் பித்தாலாட்டத்தை, பிரித்து அறியமுடியாமல் தவிக்கிறார்கள். படிப்பறிவற்ற பட்டு நெசவாளர்கள் மனக் கணக்கில் வல்லவர்கள். பட்டுபுடவையின்  எடையை  இழை, குளிகை, தார் கணக்கில் நொடியில் சொல்லுவார்கள். இதுபோலவே,  தங்கள் தொழிலை சுறையாடிய எதிரியின் கணக்கை விரைவில் கச்சிதமாக முடிப்பார்கள்.

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

____________________________________________

-வீரலட்சுமி.
__________________________________________________