privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விநமக்கும் வேண்டும் நவம்பர் - 7

நமக்கும் வேண்டும் நவம்பர் – 7

-

காத்திருந்த காற்றின் சுகம்
சொல் ஒன்றால் விளங்கிடுமா?
கூட்டுழைப்பின் விளைசுகம்தான்-பிறர்
கூறக் கேட்டு உணர்ந்திடுமா!
தானே ஒருவன் அனுபவிக்காமல்
மனம் புரட்சியைத்தான் துய்த்திடுமா!
நவம்பர் ஏழின் பயனுணர
நடைமுறையில்… நீ வேண்டும்!

ரசியப் புரட்சி,
பாட்டாளி வர்க்கத்தின் பன்முகத் திரட்சி…
அது
காய்ந்த வயிற்றில் முளைத்த பசி
மங்கிய விழிகளில் பொங்கிய கனவு
மாற்றம் வாராதா? வாராதா? என
துளைத்த சலிப்பின் துளைகளில்
துலங்கிய இசை!
தருணம் நழுவாமல் பெய்த மழை
தன் வாழ்வின் நாட்களை அரித்தரித்து
பிறர் வாழ வழங்கிய பண்பின் அலை
விடுதலைத் தவிர வேறெந்த உணர்ச்சியும்,
வீண்சுமை என்று தெளிந்த ஞானம்.
பற்றிய நம்பிக்கை விலகிய போதும்,
வளைந்து, நெளிந்து படர்ந்த உயிர்ப்பு.
நெற்றியில் வானம் இடிந்த போதும்,
நிலைகுலையாமல் மலையென நிமிர்ந்த அறிவின் துணிபு.
பக்கம் பார்த்து வாழ்வது இழிவு
வர்க்கப்போரே வாழ்வின் பொலிவென
நடத்திக்காட்டிய தத்துவத் தெளிவு!

சும்மா வரவில்லை ரசியப் புரட்சி!
அது  சுமந்த உணர்வுகள்
வர்க்கப்போரின் வரலாற்று நீட்சி…
இன்று,
நம் கண்ணெதிரே கார்ப்பரேட் ஜார்கள்…
கவரி வீசும் மன்மோகன், அலுவாலியா, சிதம்பரங்கள்
ரஷ்புடீனை மலைக்க வைக்கும் நரேந்திரமோடிகள்…
ரொட்டி ‘இல்லையெனில் கேக்’ சாப்பிடச் சொல்லும்
மட்டி மகாராணி ஜெயலலிதாக்கள்…
இடிந்து விழப்போகும் மாரிக்கால அரண்மணைகளில்
‘இச்சு’ கொட்டி திசைதிருப்பும் இடது, வலது பல்லிகள்
ஆக்கிரமிக்கும் அமெரிக்க வெண்படைக்கு
நாட்டை காட்டிக்கொடுக்கும்
கரைவேட்டி கறுப்பு நூற்றொருவர்கள்…

போதுமான காரணங்களைப் பார்க்கையில்
இந்நேரம் நடந்திருக்க வேண்டும்
இங்கொரு புரட்சி…
தடைபடக் காரணம்
நம்மிடம் உள்ளதோ?
யார் மூலமாவது புரட்சி நடக்காது
சம்பந்தப்பட்டவர்களாலேயே
அது சாத்தியம்…

உனக்கும் புரட்சி வேண்டுமா…
வாழ்த்திக் காட்டினால் போதாது
புரட்சியை வாழ்ந்து காட்டு!

________________________________

–  துரை. சண்முகம்

________________________________

வாசகர்கள், தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!

-வினவு