privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்நிதின் கட்காரி: திருடர்களில் நம்பர் 1

நிதின் கட்காரி: திருடர்களில் நம்பர் 1

-

நிதின் கட்காரிமகாமூடனும் மகாஞானியும்தான் வாயைப் பொத்திக் கொண்டு பேசாமலிருப்பார்கள் என்று பொதுவாகச் சொல்வார்கள். அது உண்மையோ பொய்யோ நமக்குத் தெரியாது. ஆனால் நிதின் கட்காரியைப் பொருத்தளவில் அவரது வாயில் ஆர்.எஸ்.எஸ் டவுசர்களால் பிரத்யேகமாக வடிவமைத்து அடித்து சொருகப்பட்டிருந்த ஆப்பு தற்போது லேசாக ஆடத் துவங்கியிருப்பதால் சில உண்மைகள் தவிர்க்கவியலாமல் அம்பலமாகியுள்ளது.

நிதின் கட்காரியால் ஆரம்பிக்கப்பட்ட பூர்த்தி பவர் மற்றும் சர்க்கரை ஆலை, ஐடியல் ரோடு பில்டர் எனும் நிறுவனத்திடம் இருந்து முறைகேடான வழிமுறைகளில் நிதி பெற்றுள்ள விவகாரம் அம்பலமானது. நிதின் கட்காரி மகாராஷ்டிர மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் போது ஐடியல் நிறுவனத்திற்கு பல்வேறு உட்கட்டமைப்பு வேலைகளை நிறைவேற்றித் தரும் காண்டிராக்டுகளை வாரி வழங்கியிருந்ததும், அதற்குக் கைமாறாக ஐடியல் நிறுவனம் கடன் என்கிற பெயரில் இவருக்கு லஞ்சம் வழங்கியிருந்ததன் விவரங்களும் ஒவ்வொன்றாக வெளியாகத் துவங்கியது.

அதைத் தொடர்ந்து பூர்த்தி நிறுவனத்தில், பங்குதாரர்கள் என்று சுட்டப்பட்ட முகவரிகள் டுபாக்கூர் என்பதும் அந்நிறுவனத்தில் கட்காரியின் கூட்டுப்பங்காளியாக அவரது கார் ஓட்டுனரே இருப்பதும் வெளியானது. இந்நிலையில்,  இதற்கெல்லாம் விளக்கமளிக்க நிதின் என்.டி.டி.வி தொலைக்காட்சியின் அரங்கத்தில் எழுந்தருளினார்.

அங்கே நிதின் கட்கரியைத் தண்ணி தெளித்து தெளிய வைத்து தெளிய வைத்து கும்மிய கண்கொள்ளாக் காட்சியை நீங்கள் இந்த இணைப்பில் பார்க்கலாம் – http://www.ndtv.com/video/player/truth-vs-hype/nothing-wrong-in-getting-investments-from-contractors-nitin-gadkari-to-ndtv/251487

ஏற்கனவே டி. ஆர்.பி குறைந்து போன சோகத்திலிருந்த கட்டதுரையிடம் கைப்புள்ளை வாண்டடாக மாட்டிக்கொண்டால் நிலைமை எப்படியிருக்கும்? ஒன்றும் சொல்வதற்கில்லை. பார்த்து விட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

முடிவில் கட்காரி சொன்னதன் சாராம்சம் இதுதான்

  • ஒப்பந்ததாரர்களிடமிருந்து ‘முதலீடு’ பெறுவது சட்டப்படி குற்றமில்லை. “அதெல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்?” என்கிறார்.
  • இவரது கார் டிரைவரே சக பங்குதாரர்களில் ஒருவராகவும் இதர பங்குதாரர்கள் முகவரியற்றவர்களாயும் இருப்பதால் ‘எந்த வகையான விசாரணைக்கும் தயார்’ என்கிறார்.
  • முந்நூறு கோடி மதிப்புள்ள பூர்த்தியின் சொத்துக்கள் மற்றும் பங்குகள் பல்வேறு உடலற்ற பெயர்களின் மேலும் கட்டிடங்கள் அற்ற முகவரிகளின் மேலும் இருப்பதால் தனது சொத்து மதிப்பு வெறும் 12 கோடிகள்தான் என்று அப்பாவியாய் மூஞ்சியை வைத்துக் கொண்டே சொல்கிறார்.

நிதின் கட்காரி வெறும் காமெடியன் என்று மட்டும் முடிவு செய்து விடாதீர்கள். இந்தத் திரைக்கதையைப் பொருத்தமட்டில் காமெடியனான கட்காரியே வில்லன் வேடத்தையும் சேர்த்துப் போடுகிறார்.

மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் கடனில் வீழ்ந்து, அதன் காரணமாக விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இதற்காக நிவாரணத் தொகையாக ஒதுக்கப்பட்ட நிதியிலும் திருடித் தின்றுள்ளார். பல்வேறு பாசனத் திட்டங்கள் மற்றும் விவசாய கட்டமைப்பு வசதிகளுக்காக அறிவிக்கப்பட திட்டங்களுக்கான செலவினத்தை காண்டிராக்டு எடுத்த நிறுவனங்கள் பலமடங்காக உயர்த்தி இழவு வீட்டிலும் கறிவிருந்து தின்றுள்ளனர்.

இதில் ஒப்பந்தங்கள் பெற்ற நிறுவனங்களில் ஒன்று கட்காரியின் கூட்டாளியான அஜய் சஞ்செட்டியின் நிறுவனமாகும். தற்போது இதில் நடந்துள்ள ஒட்டு மொத்த ஊழல் விவகாரங்களும் வெளியாக நாறிக் கொண்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை 30-ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பி.கெ. பன்சாலுக்கு கட்காரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளதும் வெளியாகியிருக்கிறது. மேற்படி நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக பைசல் செய்து வைக்க அக்கடிதத்தில் கட்காரி கோரியுள்ளார்.

கடித விவகாரங்கள் வெளியானதையடுத்து பேசியுள்ள கட்கரி, ‘விவசாயிகளின் நலன்களுக்காக இது போல் எத்தனை கடிதம் வேண்டுமானாலும் எழுதுவேன்’ என்று திருவாய் மலர்ந்துள்ளார். கூடிய சீக்கிரத்தில் விதர்பா வட்டாரத்தில் ஒரு விவசாயி கூட பாக்கியில்லாமல் ஒழித்துக்கட்டிவிட முடியும் என்கிற நம்பிக்கையிலிருந்தும், அப்படி நடந்து முடிந்து விட்டால் இதைக் கேட்பாரும் எவரும் இருக்க மாட்டார்கள் என்கிற தைரியத்திலிருந்தும்தான் இவ்வாறு பேசியிருக்க முடியும்.

ஒருவழியாக சோக எபிசோடுகள் முடிந்து விட்டதாக ஆர்.எஸ்.எஸ் தாத்தாக்கள் கூட்டம் நெற்றி வியர்வையை வழித்துப் போட்டு நிமிர்ந்தால் அடுத்த குண்டைப் போடுகிறார் கட்கரி.

“சுவாமி விவேகானந்தருக்கும் தாவூத் இப்ராஹீமுக்கும் ஒரே அளவுக்குத்தான் அறிவுக் கூர்மை இருக்க வேண்டும்” என்று ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இந்த வசனத்துக்குப் பொழிப்புரையாக சொன்ன விளக்கத்தை வெட்டியெறிந்த காங்கிரசு, நிதின் கட்காரியைப் போட்டுத் தாளித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் பள்ளிக் கூடத்தின் சகல பாடங்களிலும் கோட் அடித்த இந்தாளையா உங்கள் தலைவர் என்கிறீர்கள் என்கிற ரேஞ்சுக்கு போட்டு ரேக்கியதில் இப்போது மன்னிப்புக் கேட்பதாக இறங்கி வந்துள்ளார்.

இதற்கிடையே கட்கரியின் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி துவக்கத்தில் கருத்துத் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் ஆண்டி மடத்தினர், அது பாரதிய ஜனதாவின் உட்கட்சி விவகாரம் என்றும் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல என்றும் சொல்லி கைகழுவிவிடப் பார்த்தனர். ஆனால், ஊடகங்களில் ஓரளவிற்கு நாற்றமெடுக்கத் துவங்கியதால் குருமூர்த்தியை விட்டு ஒரு ‘விசாரணையை’ நடத்தச் செய்தது.  எதிர்பார்த்தது போலவே ‘இந்தப் பச்சைக்குழந்தைக்கு வாயில் விரல் வைத்தால் கூடக் கடிக்கத் தெரியாது’ என்று குருமூர்த்தி தீர்ப்பெழுதி இருக்கிறார்.

மற்றவர்கள் மேல் ஊழல் குற்றச்சாட்டு என்றால் சி.பி.ஐ விசாரணை, சி.ஐ.ஏ விசாரணை, இண்டர் போல் விசாரணை என்றெல்லாம் தாவிக் குதிக்கும் பாரதிய ஜனதா, தனது கட்சித் தலைவர் என்று வந்து விட்டால் கம்பேனி ஆர்டிஸ்ட் குருமூர்த்தியின் பஞ்சாயத்தே போதும் என்கிறது. காவிகளின் உள்ளங் கவர் கள்வரான விவேகானந்தர் என்றால் மன்னிப்புக் கேட்க இறங்கும் கட்கரி, விவசாயிகள் என்றால் திமிராகப் பேசுகிறார். உழைக்கும் மக்கள் என்றால் கேட்க நாதியற்றவர்களென்கிற திமிர்தான் இது போன்ற பாசிசஸ்ட்டு காமெடியன்களை அரசியல் வட்டாரத்தில் உலவவிட்டுள்ளது.

இவை வெறும் நகைச்சுவை சமாச்சாரங்களில்லை. இந்த தேசத்தின் பிரதான எதிர்கட்சி என்று சொல்லிக் கொள்ளும் கட்சியின் யோக்கியதைகள் இவை. பாசிசம் ஆரம்பத்தில் கேட்பதற்கு நகைச்சுவை போலத்தான் இருக்கும் என்பதால் இப்போதே விழித்துக் கொள்ளா விட்டால் பின்காலத்துக்கும் வருந்த வேண்டியிருக்கும்.

காங்கிரசுக்கும் காவிகளுக்கும் கலரைத் தவிர வேறு வித்தியாசங்கள் ஏதுமில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வரும் நிலையில் இவர்களிருவரையும் ஒழித்துக் கட்டுவதில்தான் மக்களுக்கு விடுதலை என்பதில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா?