privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பிராபகர் கைரே: 500 கோடி ரூபாய்த் திருடன்!

பிராபகர் கைரே: 500 கோடி ரூபாய்த் திருடன்!

-

பிரபாகர் கைரே
பிரபாகர் கைரே

தினோறாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த நாக்பூரின் பிரபாகர் கைரே தற்போது ரூ.500 கோடிக்கு அதிபதி. அவரிடம் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சம். ஸ்டாக் குரு இந்தியா என்ற பெயரில் டெல்லியில் இவர்கள் துவங்கிய கம்பெனியில் ரூ.10 ஆயிரம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் நீங்கள் போட்ட முதலில் 20 சதவீதம் திரும்ப வரும். 7 வது மாதத்தில் முழுத் தொகையையும் தந்து விடுவார்கள். இதனால் கவரப்பட்ட நடுத்தர வர்க்க சாதாரண மக்கள் பலரும் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். போதுமான பணம் திரண்டவுடன் கம்பி நீட்டிய இத்தம்பதியினரை டெல்லி காவல்துறையின் நிதி மோசடியை விசாரிக்கும் குழு மராட்டிய மாநிலம் ரத்னகிரி பகுதியில் கைது செய்துள்ளது. ரூ.63 கோடி ரூபாய் வரையிலான பணம், சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன•

பாடிகாட், செல்ஃபோன், விலை உயர்ந்த கார்கள், நுனி நாக்கு ஆங்கிலம் என வலம் வந்த பிரபாகர் கைரே நாக்பூரை சேர்ந்தவர். படிப்பை பாதியில் விட்ட இவர் நண்பருடன் சேர்ந்து கட்டுமானத் தொழிலில் இறங்குகிறார். அங்கு மோசடியில் ஈடுபடவே வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படுகிறார். 2004 இல் நாக்பூரை விட்டு இதற்காக வெளியேறிய அவர் அதன் பிறகு அங்கே திரும்பிப் போகவேயில்லை. புனே சென்று அங்கு கால் சென்டரில் ஓராண்டு பணியாற்றி விட்டு பெங்களூரு வருகிறார். அங்கு ஒரு நிதி நிறுவனத்தில் வேலைக்கு சேருகிறார். மைசூரிலிருந்து வந்து அங்கே வேலை பார்த்த ரக்சா அர்ஸை திருமணம் செய்து கொள்கிறார்.

இத்தம்பதியினர் லக்னோவுக்கு ரோகித் கத்ரி, கஞ்சன் கத்ரி என்ற பெயரில் குடிபெயர்கின்றனர். 2006 இல் அகமதாபாத்துக்கு டாக்டர் ராஜ் சவேரி, ப்ரியா சவேரி என்ற பெயரில் செல்லும் அவர்கள் பின்னர் புவனேஸ்வர், ராய்ப்பூர் என இடம் மாற்றிக் கொண்டே இருந்தனர். இப்படி மாறும் ஊர்களில் எல்லாம் எதாவது ஒரு மோசடியை நடத்திக் கொண்டே சென்றனர். இதில் போலிப் பெயரில் வாங்கப்பட்ட கிரடிட் கார்டுகளும் அடக்கம். கிரடிட் கார்டில் இருக்கும் பணத்திற்கு பொருளை வாங்கிய பிறகு அந்த ஊரைக் காலி செய்து விடுவர்.

இடையில் 2009 இல் டெஹ்ராடூனுக்கு வந்த இவர்கள் அங்கு பிசியோதெராபி கல்லூரி ஒன்றையும் நிறுவினர். டாக்டர் ராகேஷ் குமார் மகேஷ்வரி மற்றும் பிராச்சி மகேஷ்வரி என்ற பெயரிலிருந்த அவர்களே மாணவர்களுக்கு பயிற்சியும் அளித்தனர். ஏராளமாக பீஸ் வாங்கியதோடு மட்டுமின்றி டெலிபோன் பில், ப்ளஸ் டூ மார்க் சீட் எல்லாம் கொடுக்க சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தினார் பிரபாகர் கைரே. அதில் ஒரு மாணவரான லோகேஷ்வர் தேவின் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் ஒன்றையும் பெற்றுள்ளார். அம்மாணவரது பெயரால்தான் ஸ்டாக் குரு இந்தியா கம்பெனியினை பதிவுசெய்து நடத்தியிருக்கிறார்.

லோகேஷ்வர் தேவ் மற்றும் ப்ரியங்கா சரஸ்வத் தேவ் என்ற பெயரில் டெல்லி மோதி நகரில் டிசம்பர் 2009 இல் அலுவலகத்தை துவங்குகிறார்கள். முதலில் செய்தித் தாள்களில் பங்கு வர்த்தகம் பற்றிய ஆலோசனை தருவதாக விளம்பரம் செய்ய ஆரம்பித்த இவர்கள் படிப்படியாக ஸ்டாக் குரு இந்தியாவின் ஸ்கீமை அறிவித்து மக்களை மொட்டையடித்து விட்டார்கள்.

இவர்களை கைது செய்த போது 15 ஆடம்பர கார்கள் கைப்பற்றப்பட்டன• டெல்லி, கோவா, ராஜஸ்தான், மொராதாபாத், நாக்பூர், ரத்னகிரி ஆகிய இடங்களிலுள்ள சொத்துக்கள் மற்றும் வங்கி அக்கவுண்டுகளை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். சுமார் 7 நிதி நிறுவனங்களை நடத்தி வந்துள்ள இவர்கள் மீது 25 வழக்குகள் நாடு முழுதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் தங்களது கல்வித் தகுதி மற்றும் படித்த நிறுவனங்களைப் பற்றி பக்காவாக உயர்த்தி சொல்லி வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

நாட்டின் 20 வங்கிகளில் 94 அக்கவுண்டுகளை துவங்கியுள்ள இருவரும் அதற்காக ஒரே புகைப்படத்தையே தந்து விட்டு, விபரங்களை மாத்திரம் மாற்றி பதிவுசெய்துள்ளனர். தற்போது இவர்கள் கைது செய்யப்பட்ட பிறகும் இவர்களுக்கு உடந்தையாக ஏதேனும் வங்கி அலுவலர்கள் இருந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. முன்னர் சென்னையில் கால் டாக்சி வாங்கி விட்டால் மாதம் பதினைந்தாயிரம் வருமானம் என்ற பெயரில் ஒரு மோசடி நடந்தது. மாதச் சம்பள காரர்களைக் குறிவைத்து நடந்த இந்த மோசடி போலவே இந்தியா முழுக்க ஏழு மாதத்தில் இரட்டிப்பு பணம் என்பதற்காக நடுத்தர சாதாரண மக்கள் ஏமாந்துள்ளனர். இந்த ஆவலை சரியாக பயன்படுத்தி உள்ளார் பிரபாகர் கைரே.

மாத வருமானத்தின் சேமிப்பை இப்படி அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு தனியார் மோசடி நிறுவனங்களில் இழப்பது நாடெங்கும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஈமு கோழியாக இருப்பது வடக்கே டபுள் வட்டி என்பதாக மாறியிருக்கிறது. இத்தகைய மோசடி பேர்வழிகள் வங்கி, போலீஸ், ஏனைய அதிகார வர்க்கத்தின் ஆசியுடனே தமது திருட்டுத் தொழிலை நடத்துகின்றனர். சினிமா நட்சத்திரங்களின் விளம்பரங்களை வைத்தும் மக்களை ஏமாற்றுவது நடக்கிறது. இப்படியாக இந்த மோசடித் தொழில் வலைப்பின்னலில் பலரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அதனாலேயே பரபரப்பான பத்திரிகை செய்தியினைத் தாண்டி இக்குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதோடு பறிகொடுத்த பணமும் மக்களுக்கு திரும்பக் கிடைப்பதில்லை.