Tuesday, October 20, 2020
முகப்பு வாழ்க்கை அனுபவம் மண்ணிற் சிறந்த மலர்கள்!

மண்ணிற் சிறந்த மலர்கள்!

-

பு.மா.இ.மு. வின் போராட்டப் பெண்கள்!
அனுபவமும் – அரசியலும்!!

மச்சீர் கல்விக்கான போராட்டத்தின் வழி ஜெயாவின் ஆணவத்திற்கு பு.மா.இ.மு.(புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி) வைத்த ஆப்பு, தொடர்ந்து தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளையை எதிர்த்த போராட்டங்கள், கல்லூரி மாணவர் போராட்டங்கள், சென்னை கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற மறியல் என அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்களால், சென்னை மாநகர போலீசின் ரத்தம் கொதிநிலைக்கு சென்றிருந்தது.

இத்தகைய சூழலில், மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் நடந்த ஒரு கொலையில் தவறாக கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை விடுவிக்குமாறு நியாயம் கேட்டு போலீசு ஸ்டேசனுக்குப் போன தோழர்கள் மற்றும் பகுதி மக்கள் மீது, இரண்டு லோடு அதிரடிப்படையை இறக்கி தாக்குதல் நடத்தியது. பு.மா.இ.மு. வின் பறையிசைக் கலைஞன் தோழர் கிருஷ்ணாவைக் குறிவைத்துத் தாக்கி, அவரையும் தோழர் விவேக்கையும் கை, கால் எலும்புகளை முறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கிடத்திய போலீசு, எதிர்ப் படுக்கையிலேயே படுத்துக் கொண்டு பழைய எக்ஸ்ரே பிலிம்களை பொறுக்கி வந்து தாங்களும் தாக்கப்பட்டு விட்டதாக பிலிம் காட்டியது. அடிபட்ட பிற 64 தோழர்கள் போலீசை ‘பணி’ செய்ய விடாமல் தடுத்ததற்காக சிறை வைக்கப்பட்டனர்.

தாக்குதலுக்குள்ளாகி சிறை சென்ற பு.மா.இ.மு வின் மாணவிகள் மற்றும் இளம் பெண்களைச் சந்தித்தபோது, அவர்கள் போலீசு கொட்டடியில் பெற்ற அனுபவங்களை இயல்பாக விவரித்தனர். தெருவில் தாக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட நிமிடம் தொடங்கி, சிறைக்கு அனுப்பப்படும் வரையிலும் அவர்கள் போலீசுடன் பெற்ற அனுபவம், அத்தோழர்களின் வலிமைக்கு சான்று கூறுவது மட்டுமின்றி, போலீசுடைய பலவீனத்தின் எல்லாப் பரிமாணங்களையும் நமக்கு காட்டுகிறது. பாருங்கள்.

000

rsyf-women-cardes-1! ஊன்னா… சிவப்பு கொடிய பிடிச்சிட்டு வந்துர்றீங்க…! ஒழுங்கா அவனவன் பேசாம போவல!  ஊரக் கெடுக்கறதே நீங்கதாண்டி. பேசாம வூட்ல அடங்கிக் கிடக்காம எதுக்குடி ரோட்டுக்கு வர்றீங்க.. என்று சொல்லிச் சொல்லி அடிச்சாங்க” என்பது அஜிதா எனும் பெண் தோழரின் அனுபவம். தன்னைப் போல அடிமையாக இருப்பதே இயல்பு என்று எண்ணும் போலீசுக்கு பு.மா.இ.மு வின் பெண்கள் மேல் கோபம் வந்தது இயல்புதான். ஆனால் ‘பேசாம போகிறவர்கள்’ மீது போலீசு கொண்டிருப்பது மதிப்பா அவமதிப்பா என்பதை அத்தகையவர்கள்தான் யோசித்துப் பார்க்கவேண்டும்.

“ஏ.சி. சீனிவாசன், எஸ்.ஐ. கோபிநாத் ரெண்டுபேரும் எங்கள வேனில் தள்ளியபடியே கை நசுங்கும்படி கதைவைச் சாத்தி, ‘தேவடியா முண்டைங்களா சாவுங்கடி’ என்று திட்டியபடியே இருந்தார்கள்” என்பது இன்னொரு மாணவியின் அனுபவம். போராடினாலே போலீசுக்குப் பிடிக்காது; அதுவும் பெண்கள் போராடினால் ஆணாதிக்கத் திமிரும், வக்கிரமும் சேர்ந்து கொள்கிறது. கைது செய்யத்தான் சட்டமிருக்கிறது; போராடும் பெண்களைக் காலித்தனமாகப் பேச போலீசுக்கு யார் உரிமை கொடுத்தது? சட்டமெல்லாம் இளிச்சவாய் குடிமக்களுக்குத்தான். போலீசுக்கு அது கெட்டவார்த்தை என்பதுதான் ஏ.சி. முதல் ஏட்டு வரை நமக்கு கற்றுத்தரும் பாடம்.

அடிப்பது மட்டுமல்ல, வசவுகளால் பெண்களைக் கூச வைப்பதும் போலீசின் தாக்குதலில் ஒன்று. “ஏண்டி போராட வர்றீங்க? ரோட்டுக்கு வந்து போராடுற நீங்கள்லாம் நல்ல குடும்பத்த சேர்ந்தவங்களா?” இது இன்னொரு போலீசின் வசனம் என்கிறார் தோழர் வினிதா. விலைவாசி உயர்வும், கடுமையான பொருளாதார நெருக்கடியும் வீட்டிலிருக்கும் பெண்களை வேலைக்காக ரோட்டில் தள்ளிக் கொண்டிருக்கும் சூழலில், உரிமைகளுக்காகப் பெண் ரோட்டுக்கு வந்தால் மட்டும் ‘குடும்பமே’ சந்தேகத்துக்குரியதாம்! இதை ரோடு மேயும் போலீசு சொல்வதுதான் நகைச்சுவை.

“நான் அமைப்புக்குப் புதுசு.. போலீசு துணியப் புடிச்சு இழுத்து, கேவலமா திட்டி அடிச்சப்பவும்,  நாம என்ன தப்பு செஞ்சோம், நியாயத்துக்காகத்தானே போராடுறோம்னுதான் தோணிச்சி. போலீச திருப்பியும் அடிச்சேன்…” இது 17 வயதான பிரியங்கா எனும் பெண் தோழரின் நியாயம். இது மட்டுமல்ல, தோழர்களோட சேர்ந்து ஜெயில்ல இருக்கணும்னு  தன் வயதை 22 என்று  கூட்டிச் சொல்லியிருக்கிறார்.  கம்யூனிசப் பண்பு எந்த அளவுக்கு தன்னலத்தை மறக்க வைக்கிறது என்பது பிரியங்காவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. இந்த உயரிய மனிதப் பண்பை நான்கு சுவருக்குள் தானுண்டு தன் குடும்பமுண்டு என்று ஒழுக்கமாக வாழும் குடும்ப அமைப்பிலிருந்து கற்றுக்கொள்ள வழியுண்டா?

அடிவாங்கிய தோழர்களுக்கு தாங்கள் ஏன் தாக்கப்பட்டோம் என்பது தெளிவாகத் தெரியும். ஆனால் அவர்களை அடித்த போலீசின் நிலையைப் பாருங்கள். “ஒரு பொம்பள போலீசு எங்கள விடாம அடிச்சிட்டு,  கடைசில நாங்க ஆஸ்பத்திரியில இருக்குறப்ப, “ஆமா, நீங்க எதுக்கு போராடுனீங்க?” ன்னு கேட்டாங்க. எனக்கு கோபத்துக்கு பதில் சிரிப்புதான் வந்துச்சு” என்றார் ஒரு பெண். எதுக்கு அடிக்கிறோம் என்று தெரிந்து கொள்ளாமலேயே, மக்களை அடித்துத் துவைக்கும் இவர்களின் பெயர் சட்டம் ஒழுங்கின் காவலர்களாம்.  இப்பேர்ப்பட்ட ‘சட்டம் – ஒழுங்கை’ சீர்குலைக்காமல், பேர் வைத்து தாலாட்டவா முடியும்?

“என்னங்கடி! நீங்கள்லாம் ஸ்டூடண்டா! ரோட்ல அடிச்சாதான பார்ப்பாங்க! உள்ளாற ஸ்டேசன்ல ட்ரஸ்ஸெல்லாம் அவுத்துட்டு உன் ‘மாமன்’ விசாரிப்பான் உள்ளாற போங்கடி!” என்று ஒரு பெண் போலீசு, தங்களை ஸ்டேசனுக்குள் இழுத்துத் தள்ளியதாகச் சொல்கிறார் தோழர் கயல்விழி.  “ஏய் என்னடா? இவ்ளோ நேரம் அரஸ்ட் பண்றீங்க; தொடுற எடத்துல தொட்டா தானா ஏறுறாளுவ!” என்று மார்பைத் தொடுவது, இடுப்பைத் தொடுவது, ஷூ காலால் மிதிப்பது ஆண் போலீசின் அணுகுமுறை. போலீசுக்கேது ஆண்பால், பெண்பால்? அது ஒரு அரசு எந்திரம் என்று கோட்பாடாய் சொல்வது, நடைமுறையிலும்  நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

தடிக் கம்பினால் தோழர்களைத் தாக்கிய போலீசை வார்த்தைகளால் எதிர்கொண்ட பெண் தோழர்களின் துணிச்சல் கற்றுக்கொள்ளத் தக்கது. “நாலஞ்சு பெண் போலீசு, தொடர்ந்து திட்டியபடி  அடித்துக் கொண்டே இருந்தாங்க. அடிக்கும் போலீசின் சட்டையில் உள்ள பெயரைப் பார்த்து, “ஏய்! உன் பேரு மாரீஸ்வரிதான! உன்ன இன்னும் ரெண்டு நாள்ல நாங்க என்ன செய்யுறோம் பாரு! சட்டப்படியே உன்ன சந்திக்கு இழுக்கிறோம்” என்று பெண் தோழர்கள் எச்சரித்திருக்கின்றனர்.  உடனே எல்லா போலீசும் தத்தம் பேட்ஜை கழட்டி பாக்கெட்டில் போட்டவர்கள்தான்.  எல்லோரும் வெளியில் போகும்வரை யாரும் பாட்ஜைகுத்தவில்லை” பேட்ஜை கழட்டினால் என்ன, மாணவிகள் மனப்பாடமாக விலங்கியல் பெயர் போல ஒப்பிக்கிறார்கள். மாரீஸ்வரி, கல்பனா, தேவி, சுசீலா.. என்று.

“மரியாதையா பேசு! நாங்க மாணவிகள். வாடி போடின்னு பேசுன, வாங்கிக் கட்டிக்குவ. இதுக்குப் பயந்தெல்லாம் நாங்க போராட்டத்த விட மாட்டோம். நாங்க என்ன ஜெயலலிதா போல கொள்ள அடிச்சோமா?” பதிலுக்குப் பதில் அதிகார வர்க்கத்தின் மென்னியைப் பிடித்துக் கேள்வி கேட்டுள்ளார் தோழர் துர்கா. நியாயத்தின் உறுதிபட்டு லத்திக்கம்பு வெலவெலத்திருக்கிறது.

“உங்க மேல எப்.ஐ.ஆர் போட்டாச்சு, இனி படிப்பே போச்சு. ஃபாரின்லாம் நீங்க போக முடியாது!” என்று ஏட்டு சுசீலா உளற, தோழர் அஜிதாவோ, “நாங்க படிச்சு ஃபாரின் போறது இருக்கட்டும். மொதல்ல நாங்க யூரின் போகணும். அதுக்கு விடுங்க!” என்று கேலி செய்திருக்கிறார்.

இன்னொரு போலீசு “ஏம்மா! படிச்ச, நல்ல குடும்பத்து பொண்ணுங்களா தெரியுறீங்க! போராடி இப்படி அடி வாங்குறீங்களே…” என புத்தி சார்ஜ் செய்ய, “ஏன், இது லத்தி சார்ஜ் பண்றப்ப உங்களுக்கு தெரியாதா? உங்களுக்கும் சேர்த்து தான் போராடுறோம். லட்சம் லட்சமா கொடுத்து உங்க புள்ளகள தனியார் கல்லூரில படிக்க வைக்க முடியுமா? ஐ.ஜி யோட புள்ளை படிக்குற படிப்ப ஏட்டு புள்ளை படிக்குமா?” என்று பெண் தோழர்கள் பதில் சொல்ல, உடனே ஏட்டு சுசீலா, “ஏய்! நான் விஜயசாந்தி படம் பார்த்து ப்ளஸ் டூ முடிச்சு காலேஜே போகாம போலீசு வேலைக்கு  வந்தேன்! உங்கள மாதிரி படிப்ப கெடுத்துக்கல! இங்க வந்தா… உங்களோட கழுத்தறுவுது, தலவலி” என்று புலம்பியுள்ளார். விஜயசாந்தி படத்துக்கு விசிலடித்த ஏட்டக்காவுக்கு பு.மா.இ.மு. தலைவலி ஆனதில் வியப்பில்லை.

என்னதான் தோழர்களைப் போட்டு அடித்தாலும், மேலதிகாரியிடம் முறையிட  முடியாத தனது பிரச்சினையை பெண் தோழர்களிடமே  முறையிட்டார் பெண் போலீசு ஜோதி லட்சுமி.  ”நின்னு, நின்னு காலு வீங்கி, உட்காந்து மோசன் கூட போக முடியல”. வேனில் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும்போது, வேலைப் பிரச்சினை, லீவுப் பிரச்சினை என பெண் போலீசார்  வழிநெடுக  தங்கள் சொந்தப் பிரச்சினைகளையே புலம்பிக் கொண்டு வந்திருக்கின்றனர்.

இவர்களிம் அடி வாங்கிய பெண் தோழர்களோ ஒரு இடத்தில் கூட தனது காயத்தைச் சொல்லிப் புலம்பவில்லை. கழுத்துப் பகுதியில் சதை பிய்ந்து போகும்வரை தாக்கப்பட்ட தோழர் வாணிஸ்ரீ “எங்கள அடிச்சபோது கூட எங்களுக்கு பெரிசா வலிக்கல. தோழர் மணி, கிருஷ்ணா, மருது தோழர்களை அடிச்சு ரத்தமா ஓடுறத பாத்து எங்களால கோபத்த அடக்கவே முடியல. போலீசை எதிர்த்து திட்டி கையால தள்ள ஆரம்பிச்சோம்” என்றார். மிகவும் இயல்பாக அவர்கள் வெளிப்படுத்திய அந்த உன்னதப் பண்புக்கு எதனை ஈடு சொல்ல முடியும்?

கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகளின் நியாயத்தை உணர்ந்தவர்களாலும் கூட போராட்டத் தெம்போடு எழ முடிகிறது என்பதற்கு ஒரு சாட்சி குமரேசன் என்ற தோழரின் தாய். வாணிஸ்ரீ யின் ஆடையைக்  கிழித்த போலீசின் மீது அவர் பாய்ந்து அறைந்துள்ளார். போலீசு அந்தத் தாயைக் கன்னத்தில் அறைந்து சாய்க்க, வலியைப் பொருட்படுத்தாத அந்தத் தாய், “ஏய்! உங்ககிட்ட துப்பாக்கி, கம்பு இருக்குறதுனாலதான இந்த ஆட்டம் போடுறீங்க. அந்தப் புள்ளைங்களும் இத எடுத்து வந்தா, எதிரே நிப்பீங்களாடா?” என ஆவேசத்தோடு எதிர்த்துப் பேசியுள்ளார்.  புரட்சியின் வழிமுறையைத் தம் அனுபவம் மூலமாகவே மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே, இத்தனை போராட்டங்கள்!

கைது செய்து மண்டபத்தில் அடைத்த பிறகு “ஏய்! நாம எவ்வளவோ ட்ரெயினிங் எடுத்து வந்துருக்கோம். ஆள பாத்தா எலும்பும், தோலுமா இருக்காளுவ. ஒருத்திய கூட நம்மளால தூக்கி ஏத்த முடியல!” என்று இரண்டு ஆண் போலீசார் புலம்பியுள்ளனர்.  கூலிப்படையால் கொள்கைப் படையை தூக்க முடியாதென்பது உண்மைதானே!

இன்னோரு போலீசு “ஏய்! ஆம்பளங்களை கூட ஈசியா வண்டில ஏத்திட்டோம். இந்த பொம்பளங்கள ஏத்தவே முடியல” என்று புலம்பியிருக்கிறது. போராடும் பெண்ணுக்கு தான் சமூகத்தில் ‘வெயிட்’ அதிகம் என்று போலீசுக்குப் புரிந்திருக்கும்  இந்த உண்மை வீட்டில் முடங்கிக் கிடப்பவர்களுக்கு விளங்கினால் நல்லது.

போலீசின் அடியை விடவும், அறிவைப் பார்த்து தான் அஞ்ச வேண்டியிருக்கிறது, இளைஞர் திவாகரை கோயம்பேடு ஸ்டேசனில் வைத்து அடித்த ஒரு போலீசுக்காரன் “டேய்! நான் பாக்சிங்டா, பாக்சிங்டா!” என்று ஆக்சன் காட்டியிருக்கிறான். பாக்சிங் தெரிந்தால் போய் ஒலிம்பிக்கில் விளையாடி இந்தியாவுக்கு பதக்கம் வாங்குவதை விட்டுவிட்டு, கைதானவரிடம் ஒண்டிக்கு ஒண்டி வர்றியா” எனும் அறிவை என்னவென்பது!

போராட்டத்தின்போது போலீஸ்காரர்கள் தனது நான்கு வயது மகனை கையிலிருந்து பறித்துக் கொண்டு ஓட, அந்த சிறுவனோ போலீசு பிடிக்குள்ளிருந்து “போலீசு அராஜகம் ஒழிக!” என்று முழக்கமிட்டதை ஈன்ற பொழுதினும் பெரிதுவந்து சொல்கிறார் தோழர் அபிராமி. தாக்குதல் நடந்த போலீசு நிலையத்தின் வாசலில்,  போலீசு பிடுங்கிப் போட்ட அமைப்புப் பதாகைகளையும், கொடிகளையும், இறைந்து கிடக்கும் தோழர்களது செருப்புகளையும் எடுத்துவர துணிச்சலுடனும், பொறுப்புடனும் சென்றிருக்கின்றனர் தோழர் அபிராமியும் உமாவும். ஸ்டேசனிலிருந்து போலீசு… “ இதெல்லாம் கேசுல இருக்கு. எடுக்க கூடாது” என்று நக்கலடிக்க, அபிராமியோ…” இதெல்லாம், எங்க தோழர்கள் உழச்சி சம்பாதிச்சு வாங்கினது, உன்னைப் போல ஓ.சி.ல உடம்பு வளர்க்குல,” என்று பதில் கொடுத்திருக்கிறார்.

“ஏய்! அதிகம் பேசாத, வாங்குனது பத்தாதா?” என்றவாறு அந்த போலீசுக்காரன் செருப்பைத் தள்ளிவிட “ச்சீ! எங்க தோழர்கள இத்தன அடி, அடிச்சீங்களே, ஒருத்தராவது ஓடுனோமா! பாத்தீல்ல.  சீ தள்ளு! எங்க தோழர்கள் செருப்ப தொடக்கூட உனக்கு யோக்கியதை இல்ல!” என்று சீறியிருக்கிறார்கள் அந்தத் தோழர்கள்.

அவர்களின் கைபட்டு செருப்புத் தோல் சிலிர்த்தது. போலீசின் தோலோ உணர்ச்சியற்று மரத்துக் கிடந்தது.

__________________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
__________________________________________________________

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. போரட்டம் எல்லாம் சரி…
  ஆனால் பச்சிளம் குழந்தைகளை அங்கு எடுத்துச்செல்ல வேண்டுமா?
  அவர்களாக வளர்ந்து முடிவு செய்யட்டுமே..போராடலாம வேண்டாமா என்று…

  • நீங்கள் சொல்வது சரிதான்….

   ஆனால் அன்றாடும் உணவுக்காக, உடைக்காக, கல்விக்காக, சுகாதாரத்திற்காக மொத்தத்தில் வாழ்வதற்காகவே கோடான கோடி குழந்தைகள் தினம் தினம் நம் கண்முன்னாடியே போராடிக்கொண்டிருப்பது தெரியாதா?

   அவர்களுக்கும் சேர்த்துத்தான் இந்த குழந்தைகள் போராடுகிறார்கள்.

   பெரியவர்கள் எல்லோரும் போராட வந்தால் குழந்தைகள் ஏன் போராடப் போகிறார்கள்?

   படித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பார்கள் தானே?

 2. திரு.வீரன் அவர்களே…
  4 மணி நேரமானாலும் குழந்தைகளை கடவுளை தரிசிக்க வேண்டி வரிசையில் நிற்க வைப்பதில்லையா? சுதந்திரதின கொடியேற்றத்திற்கு அரை நாட்கள் வெய்யிலில் அவர்களை காய வைப்பதில்லையா? வெறும் நம்பிக்கை என்பதற்காகவும் பொய்யான சுதந்திரதினத்திற்காகவும் குழந்தைகளை பாடாய்படுத்தும் போது ஒரு உண்மையை நிலைநாட்டும் போராட்டத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தி அவர்களை அநீதியை தட்டிக் கேட்கும் போராட்டத்திற்கு இப்போதே பழக்கப்படுத்துவதில் என்ன தவறு.

  • ஆசாத் அவர்களே,நீங்கள் சொன்ன அனைத்தும் தவறே….அதேபோல் இதுவும் தவறே…

  • //4 மணி நேரமானாலும் குழந்தைகளை கடவுளை தரிசிக்க வேண்டி வரிசையில் நிற்க வைப்பதில்லையா? சுதந்திரதின கொடியேற்றத்திற்கு அரை நாட்கள் வெய்யிலில் அவர்களை காய வைப்பதில்லையா?//

   இப்படி நானே சிறு வயதில் அவதிப்பட்டுள்ளேன்..ஒரு மத்திய மந்திரி வருகைக்கு தேசியக்கொடி காட்ட பல மனி நேரம் (மதியம் ஆரம்பித்து இரவு வரை)நின்றிருக்கிறேன்…
   ஒரு முறை எதொ ஒரு பிரமுகர் பள்ளி விழாவிற்க்கு வந்தபோது (பிரமுகர்கள் லேட்டாகத்தான் வருவார்கள்) வெயில் தாளாமல் மயக்கம் போட்டு விழுந்த்திருக்கிறேன்…அதுக்கு பொராட்டம் பரவாஇல்லை..
   ஆனாலும் என்னவோ பச்சிளம் குழந்தைகள் போராடுவதுநெருடுகிறது…ஏனோ தெரியவில்லை…

 3. How many women comrades are in Communist china and also in Lenin Russia .at least tell me how many women’s are in our own
  Tamilnadu. You guys use women’s for just show the mass , u guys never gave any leadership position to womens

 4. வினவு,
  வாழ்வுரிமைக்காக தெருவில் இறங்கி போராட தான் வேண்டும்.இந்த ஒரு வரி கோட்பாடு உங்கள் கொள்கையாக மாற்றுங்கள்.அதற்காக முதலில் முனையுங்கள்.சாதாரண கல்வியும், ஒழுக்கமும் ,சரியான புரிந்துகொள்ளல்- கலப்படமற்ற நிலையில் ஒருவருக்கு கொடுத்தாலே,இயல்பான தமிழ் உணர்வாளன் தெருவில் இறங்குவான் போராட.உங்களோடு இணைய விருப்பம்.(WITH MANY BUTS AND IF S ). பொருளுதவி, அக,புற உழைப்புக்கும் இணைவாக உள்ளேன்.சக மனிதன் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும்.இது என் வாழ்க்கை அனுபவத்தில் ஞாயமான , முதன்மையான தெரிவு.வேற எந்த CONCEPT லயும் நம்பிக்கை இல்லை.(தொடர்பு-8980858323)

 5. We salute the girls ! They are not selfish. Police is a force created by Bristish colonial rulers to keep the people slaves. Even now the IPS officers are learning the sam syllabus that the British Colonial rulers made. The education system was also created by the British. That is why Tamilnadu kids are learning ‘Rain Rain Go away’ and “Jack & Jill went up the Hill”

 6. அடுத்தவனை சுரன்டி வாழ்பவ்ர்கலுக்கு போராட்டத்தை பற்றி புரிந்துகொள்ள முடியாது. தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

 7. அவர்களின் கைபட்டு செருப்புத் தோல் சிலிர்த்தது. போலீசின் தோலோ உணர்ச்சியற்று மரத்துக் கிடந்தது. … … … புரச்சிகர வாழ்த்துக்கல்!

Leave a Reply to suresh babu பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க