privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்வைத்தீஸ்வரன் கோயில் நாடி சோதிடர் மீது மோசடி வழக்கு!

வைத்தீஸ்வரன் கோயில் நாடி சோதிடர் மீது மோசடி வழக்கு!

-

மறைந்த பெரியாரியக்கத் தொண்டர் நாத்திகம் ராமசாமி அவர்களின் நினைவாக அவர் எழுதிய கட்டுரையை வெளியிடுகிறோம்.

– வினவு

__________________________

சோதிடம், ஜாதகம், ராசி பலன், பெயர் ராசி, எண் கணிதம், வாஸ்து, கைரேகை, மச்ச பலன், அங்க லட்சணம், யோனி பொருத்தம், நாடி சோதிடம்…. என்று ஒரு நூறு மடத்தனங்களும் ஆரியக் கலாச்சாரத்திலிருந்து வந்த, இந்து மத மூடத்தடனங்களாகும்.

இந்த முட்டாள்தனங்களை ”ஐதீகம்” என்று சொல்லி நீண்ட காலமாகப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புத் தொழிலாகச் செய்து கொண்டிருந்தார்கள். மூலதனம் தேவையில்லாத இந்த மோசடித் தொழிலுக்கு மூடர்களே வாடிக்கையாளர்களாக இருந்தார்கள்.

ஆனால், அந்த மோசடித் தொழில் இன்றைக்குத் தமிழர்களிடமும் வேகமாகப் பரவி விட்டது. பத்திரிகைகள், புத்தகங்கள், தொலைக்காட்சிகள் என்று மொத்த ஊடகங்களிலும், முற்றிலும் உண்மை போல் பிரச்சாரம் செய்யப்பட்டு, இன்றைய சமூகத்தில், முதன்மை பெற்ற பெரிய தொழிலாக இந்தச் சமூக விரோத மோசடி உச்சாணிக்குப் போயிருக்கிறது.

தினசரி ரூ. 5000-10000 வாடகை கொடுத்து, நட்சத்திர ஓட்டல்களில் தங்கி, சோதிடம் – வாஸ்து என்று சொல்லி விளம்பரம் போட்டு மிகப்பெரிய மோசடியைப் பகிரங்கமாகச் செய்யும் அளவுக்கு இந்தத் ”தொழில்” நடக்கிறது!

விபச்சாரம்; கள்ள நோட்டு, கரன்சி இரட்டிப்பு, லஞ்சம் போன்ற சமூக விரோதக் கேடுகளைத் தேடிப் பிடிக்கும் காவல்துறையால், எல்லாவற்றுக்கும் மேலான இந்த ஏமாற்று – மோசடிக்காரர்களைத் தடுக்க முடியவில்லை! காரணம் அதற்கான சட்டங்கள் நம் நாட்டில் இல்லை என்பதுதான்!

”இந்த ஆட்சி பெரியார் ஆட்சி; நான் பெரியார் குருகுல மாணவன்” என்று கொல்லிக் கொள்பவர்கள் ”மந்திரத்தில்” வந்த மோதிரத்தை மாட்டிக் கொண்டு படு மண்டூகங்களாகத் திரிகிறார்கள்! ”பகுத்தறிவு ஆட்சி” என்று சொல்லிக் கொண்டவர்களே இப்படி அரைஞாண் கயிற்றில் தாயத்து கட்டிக் கொண்டிருப்பர்களாகி விட்டதால், தந்தை பெரியார் சொன்ன ”மானமும் அறிவும்” இல்லாத தமிழர்களே பல்கிப் பெருகி வருகிறார்கள்! இதன் காரணமாகத்தான் பார்ப்பான்களின் ஆதிக்கத் தொழிலான சோதிடம்; வாஸ்து என்கிற பச்சை ஏமாற்று மோசடியும் வானளாவ வளர்ந்து கொண்டிருக்கிறது!

2 ஆண்டு 3 ஆண்டுகளென்று தண்டனை பெற்று, சிறைச்சாலையில் இருக்க வேண்டியவனெல்லாம் ”சோதிடக் கலாநிதி,” ”வாஸ்து பூஷணம்” என்ற பட்டப் பெயர்களோடு, புலிநகம் மைனர் செயின் போட்டு, சந்தனம் – ஜவ்வாது பூசிக் கொண்டு மோசடித் தொழிலைப் பட்டப்பகல் கன்னக்கோல் கொள்ளையாக, ஒரு பயமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்! ”சுயநலம்” ஒன்றைத் தவிர, மற்ற எதுவும் தங்கள் வேலையல்ல என்று நடந்து வரும் ஆட்சியாளர் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வைத்தீஸ்வரன் கோயில் என்பது இன்றைய நாகை மாவட்டத்திலுள்ள புகழ் பெற்ற ஒரு கோயில் ஊராகும்.

முற்காலத்தில் இது தேவதாசிகள் நிறைந்த ஊராக இருந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் தேவதாசிகள் முறையை ஒழித்த பொட்டறுப்புச் சட்டம் வந்த பிறகு, இங்கே தேவதாசிகள் இல்லை!

ஆனாலும் கோயில் உள்ள ஊர்களில் மாட வீதிகளைச் சுற்றி நடக்கும் எல்லா வகையான சமூகக் குற்றங்களும் இந்த ஊரிலும் இன்று வரையில் நடந்து கொண்டுதானிருக்கிறது.

இந்த ஊரிலுள்ள ஈஸ்வரன் கோயிலைத் தரிசனம் செய்தால், தீராத வியாதியெல்லாம் தீரும் என்பது பார்ப்பனர்களின் தொழில் பிரச்சாரமாகும். ஆனாலும் இந்த ஊரிலும் ஏராளமான நோயாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்!

இந்த ஊருக்குப் போனால் எல்லா சுகபோகங்களையும் அனுபவிக்கலாம் என்ற நிலை இருப்பதால், பக்தி வேஷம் போட்டுக் கொண்டு இங்கே ஏராளமானவர்கள் வந்து குவிகிறார்கள்!

வார விடுமுறை நாட்களிலும், மற்ற அரசு விடுமுறைக் காலங்களிலும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், சினிமாக்காரர்கள் என்று மேல் தட்டிலுள்ள ஏராளமான பேர் இங்கே வந்து தங்குகிறார்கள்!

இந்த பக்தி – பகல் வேஷ – சமூகக் குற்றவாளிகளை சுலபத்தில் ஏமாற்றலாம் என்று உணர்ந்த சிலர், சில காலமாக ”நாடி சோதிடம்” என்று ஒரு மோசடித் தொழிலை இங்கே ஆரம்பித்தார்கள்! ”நாடி சோதிடம்” என்றால் முக்காலப் பலனும் சொல்லும் சோதிடமாம்! அதாவது கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் ஆகிய மூன்று காலப் பலன்களையும் ஓலைச் சுவடியில் அறிந்து சொல்லுவார்களாம்!

இந்த நாட்டிலுள்ள 120 கோடி மக்களின் முக்காலப் பலாபலன்களையும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே, பிரும்ம தேவன் ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்து விட்டார் என்றும்; இப்போது ஒரு ஆள் தனது பெயர், கைரேகை, அங்க – மச்ச அடையாளங்களை நாடி சோதிடரிடம் சொன்னால், அவர் தம்மிடமுள்ள அந்த ஓலைச் சுவடிகளில் அந்த ஆளுடைய சுவடியை எடுத்து வந்து படிப்பாரம்! அதிலே அந்த ஆளின் முக்காலப் பலன்களும் இருக்குமாம்!

இந்த ஓலைச் சுவடி படிக்கும் நாடி சோதிடனுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் உண்டு! கட்டணத்தை முதலிலேயே கட்டினால்தான், ஓலைச் சுவடியையே எடுத்து வருவார்கள்!

இந்த மாபெரும் மோசடியை நம்பி வெளியூர்களிலிருந்து வரும் பேராசைக்காரர்கள் ஆயிரக்கணக்கானோர் பல ஆயிரங்களை இழந்து போகிறார்கள். நாடி சோதிடம் பொய் என்பதை அவர்கள் உணர்ந்த போதும், தவறான காரியத்துக்காக வந்த இடத்தில், தப்பான சோதிடக்காரனிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்த உண்மையை வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, ஊமையாகிப் போய்விடுவது நடைமுறை!

இந்த நிலையில் சீர்காழி, நாடாளன் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற வாலிபர் வைத்தீஸ்வரன் கோயில் நாடி சோதிடம் பார்க்க விரும்பினார். இவர் பெரியார் இயக்க வாதியோ, மதநம்பிக்கையற்றவரோ அல்ல – சராசரி விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த, ”இந்து” என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் தமிழர்!

வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போன சீர்காழி – கோபாலகிருஷ்ணன், அங்கே மில்லடித் தெருவில் சிவகாமி என்பவரால் நடத்தப்படும் ”அகஸ்தியமகா சிவ நாடி சோதிய நிலையம்” என்ற பிரபலமான நாடி சோதிடக்காரரிடம் போயிருக்கிறார்.

நாடி சோதிடர் முன் கூட்டியே ரூ.2000 வாங்கிக்கொண்டு, கோபாலகிருஷ்ணன் கட்டை விரல்ரேகை, அப்பா பெயர், அங்க மச்ச அடையாளம், சொந்த ஊர் என்று எல்லா விவரங்களையும் கேட்டுக் எழுதிக் கொண்டு, அதன்படி உள்ளே போய் ஒரு ஓலைச்சுவடியை எடுத்து வந்து, ”இது தான் பிரும்ம தேவனால் உமக்கு எழுதி வைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடி” என்று படித்துக் காட்டியிருக்கிறார்!

அதில், முழுக்கமுழுக்கப் பொய் – புளுகாகக் காலபலன்களைப் படித்திருக்கிறார்!

”கோபாலகிருஷ்ணன் திருமணம் ஆனவர் என்றும்; மனைவி ஸ்ரீதேவி போன்றவள் என்றும், பட்டப்படிப்புப் படித்து, மின்சாரத் துறையில் பொறியாளர் வேலை பார்ப்பவர் என்றும், கார் மற்றும் மோட்டார் வாகனங்கள் உள்ளவர் என்றும், எதிர்காலத்தில் தலைமைப் பொறியாளர் ஆவார் என்றும், அவரது தாயார் இளம் வயதிலேயே இறந்து விட்டார் என்றும் இஷ்டத்துக்கு ஏராளமாகப் புளுகியிருக்கிறார், மோசக்கார நாடி சோதிடர்!

நாடி சோதிடர் சொன்னதில் ஒரு வார்த்தை கூட உண்மையில்லை – எல்லாமே பொய் என்பதை அறிந்த கோபாலகிருஷ்ணன், பதட்டப்படாமல் சோதிடர் சொன்னவைகள் அத்தனையையும் ஒரு காகிதத்தில் எழுதி வாங்கிக் கொண்டதோடு, ஒலி நாடாவிலும் பதிவு செய்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் கோபாலகிருஷ்ணன் பட்டதாரியல்ல ஒரு விவசாயி, திருமணம் ஆகாதவர். அவரிடம் காரோ, வேறு வாகனங்களோ இல்லை; அவரது தாயார் நல்ல திடகாத்திரமாக உயிருடன் இருக்கிறார்!

இந்த நிலையில் தன்னிடம் பச்சைப் பொய்யைச் சொல்லி ரூ.2000 ம் மோசடியாகப் பறித்துக் கொண்ட நாடி சோதிடரின் சுயரூபத்தை அறிய கோபாலகிருஷ்ணன் மேலும் ஒரு ஆதாரத்தைத் தேடினார்.

2003-ஆம் ஆண்டிலேயே, இளம் வயதில் அகால மரணமடைந்த தனது நண்பர் செங்குட்டுவன் என்பவரின் கைரேகையை எடுத்து வந்து, இதற்கும் முக்காலப் பலன் சொல்லும்படி நாடி சோதிடரைக் கேட்டிருக்கிறார்.

நாடி சோதிடரும் வழக்கம் போல் எல்லா விவரங்களையும் கேட்டறிந்து, நண்பரின் ஓலைச்சுவடியை எடுத்து வந்து படித்துக் காட்டியிருக்கிறார்.

ஜாதகர் – செங்குட்டுவன் தீர்க்காயுளாக 75 வயதுக்கு மேல் நீடுவாழ்வார் என்றும், ஏராளமான குழந்தைச் செல்வமும், ஏனைய செல்வ வளமும் கொண்டு நிறை வாழ்வு வாழ்வார் என்றும், பிரும்ம தேவனின் ஓலைச்சுவடி சொல்லுகிறது என்றும் நாடி சோதிடர் சொல்லியிருக்கிறார்!

கோபாலகிருஷ்ணன் அதையே ஒரு காகிதத்தில் எழுதித்தரும்படி வாங்கிக் கொண்டு, ஓலைச்சுவடியையும் சிறிய கேமராவில் படம் பிடித்துக் கொண்டு, நாடி சோதிடரிடம் கூச்சல் போட்டிருக்கிறார்!

”நீர் சொன்ன சோதிடம் எதுவுமே உண்மையாக இல்லை; வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்; நாடி சோதிடம் – ஓலைச் சுவடி – பிரும்மா எழுதியது என்பது எல்லாமே பொய்…… மோசடி” என்று கூச்சல் போட, சோதிடர் சிவசாமி கோபாலகிருஷ்ணனையே மிரட்டியிருக்கிறார்!

”நான் யார் தெரியுமா? காலம் காலமாக சோதிடம் பார்ப்பவன்; அரசாங்க மேலிடமே எங்கள் உறவுக்காரர்கள்தான்! என்னை எதுவும் செய்ய முடியாது! மரியாதையாக நீர் போகா விட்டால் போலீசைக் கூப்பிட்டு உம்மை ஒப்படைப்பேன்” – என்று பணத்திமிர் ஆணவத்தோடு மிரட்டிப் பேசியிருக்கிறார்! உடனே கோபாலகிருஷ்ணன் போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் கூறியிருக்கிறார். அவர்களோ –

”….விவரம் தெரியாத ஆளாக இருக்கிறீரே! அவர்கள் மேலிட செல்வாக்கு உள்ளவர்கள்! பேசாமல் ஊர் போய் சேரும். இல்லா விட்டால் அவர்களிடம் கலாட்டா செய்ததாக உம்மைப் பிடித்து உள்ளே போடச் சொல்லுவார்கள்; நாங்களும் அவர்கள் சொன்னபடியே உம்மைப் பிடிக்க வேண்டியது வரும் – அதற்குள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊருக்குப் போய்விடும்” என்று எச்சரித்திருக்கிறார்கள்!

சோதிடக்காரரால் ஏமாற்றி மோசடி செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன், தன்னைப் போல் பலரும் ஏமாற்றப்படக் கூடாது – அதைத் தடுக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் நேராக வழக்கறிஞரைத் தேடிப் போயிருக்கிறார்.

பெரியார் இயக்கச் சிந்தனையாளர்களான வழக்கறிஞர்கள் வேலு குபேந்திரன், சீர்காழி சோமசுந்தரம் உள்ளிட்ட 5 வழக்கறிஞர்கள் இந்த வழக்கை எடுத்து நடத்த முன் வந்துள்ளார்கள்.

கோபாலகிருஷ்ணன் நாடிசோதிடர் மீது வழக்குப் போட்டிருக்கிறார் என்ற செய்தி, வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மோசடி சோதிடர்களைப் பதட்டமடையச் செய்துள்ளது.

மோசடியில் சம்பாதித்த ஏராளமான பணமும், ஆட்சி மேலிட ஆதரவும், அடியாட்கள் பலமும் இருப்பதால் அவர்கள் கோபாலகிருஷ்ணனையும், வழக்கறிஞர்களையும் நேரடியாகவே மிரட்டியிருக்கிறார்கள்; இது பற்றிய புகார் சீர்காழி காவல்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட போது, அவர்கள் முழுப்பாதுகாப்புத் தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.

நாகை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ள இந்த நாடி சோதிடம் மீதான வழக்கில் பெரியார் இயக்க – முற்போக்குச் சிந்தனையுள்ள மொத்தப் பொதுநலத் தொண்டர்களும் கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாகத் திரண்டு, வழக்கைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோபால கிருஷ்ணனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மனுவில் –

”புராதன காலத்தில் எழுதப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் என்று பொய் சொல்லி, போலியாக இவர்களால் தயாரிக்கப்பட்ட பனை ஓலையில் எழுதப்பட்ட சுவடிகளைக் காட்டி, எனக்கு நாடி ஜோதிடம் பார்த்துச் சொல்லுவதாக பொய்யையும், புளுகையும் சொல்லி, பரிகாரம் தேடாவிட்டால் பல சங்கடங்கள் வரும் என்று என்னை மிரட்டி பல ஆயிரம் பணத்தைப் பறித்துக் கொண்டார்கள்.”

எனவே உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்டிரேட் – நீலாவதி, நாடி சோதிடர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.

நாடி சோதிடர்களின் இந்த ஓலைச் சுவடிக்கு மூலாதாரம், தெலுங்கு நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு, தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் தெலுங்கு மொழி ஓலைச்சுவடி தான் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்!

மற்றபடி இந்தச் சோதிட மோசடிகளை ஒழிக்க இப்போதைய அரசாங்கம் சட்டம் போடும் என்று நம்புவதற்கில்லை! எனவே சீர்காழி கோபால கிருஷ்ணனைப் போல, தமிழ்நாட்டில் பரவலாக 100 இடங்களிலாவது, சமூக விரோத மோசடி சோதிடர்கள் மீது, சில கிரிமினல் வழக்குகளைத் தொடுத்தாக வேண்டும். வாய்ப்புள்ளவர்கள் திரு. கோபாலகிருஷ்ணனைப் போல துணிந்து முன்வந்து, இந்த சமூக சேவையைச் செய்ய வேண்டும். அவர்களுக்குப் பெரியார் இயக்க உண்மைத் தோழர்களும், முற்போக்குச் சிந்தையுள்ள பொதுவுடைமைக் கருத்தாளர்களும் நிச்சயம் துணை நிற்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

சோதிடப் புரட்டை – பொய்யை உணர்வுப்பூர்வமாக உணர்ந்து, அதனை அழித்தொழிக்க அரிமா நோக்குடன் ஆர்த்தெழுந்துள்ள சீர்காழி கோபால கிருஷ்ணனை வாழ்த்திப் பாராட்டுகிறோம்; வெல்லுக, அவரது சுயமரியாதை ஆவேசம்!

________________________________________________________

– நாத்திகம் இராமசாமி, நாத்திகம் – 30.03.2007 இதழில்

__________________________________________________

  1. வினவு, உண்மையான பகுத்தறிவுவாதிகளால் மட்டும் மாற்றம் கொண்டுவரமுடியாது..
    இத்தகைய கட்டுரையைப்படிக்கும் ஒவ்வொருவரும் சோதிட எதிர்ப்பை சமூகக்கடமையாகச்செய்ய வேண்டும்…
    நாம்நிரூபிக்க ஆரம்பித்தால் நம்மை சுற்றியுள்ளவர் தாமாக விழித்துக்கொள்வர்…

    உதா:
    1) சோதிடர்கள் நான் முதுநிலைப்பட்டப்படிப்பு படிக்க இயலாது என்று சிறு வயதில் கூறியதற்காகவே முதுநிலைப்பட்டப்படிப்பு படிக்கும் ஆசை வந்து படித்தேன்…
    2)நல்லநாள் பாக்காமல் ராகு காலத்தில் பலநல்ல காரியங்களைச்செய்தேன்
    3) சோதிடர் சொன்ன ஒரு பரிகாரமும் செய்யவில்லை
    4) சோதிடர் இன்ஜினியர் ஆவான் என்று சொன்னதற்க்காகவே என் நண்பன் கடினாமகப்பயின்று டாக்டரானான்…

    இத்தகைய செயல்களுக்குப்பின் என் தாய் சோதிடத்தைநம்புவதைநிறுத்தினார்..

  2. வினவு,
    எல்லா இயற்கையை அடிப்படையாக கொண்ட பகுதிகளிலும் இது போனற சோதிட முறை உண்டு. இதை பற்றி விக்கியில் தேடினாலே கிடைக்கும்.
    19 ஆம் நூற்றாண்டில் இருப்பது போல் முட்டாள் தனமாக ஹிந்து எதிர்ப்பாளன் என்று உளறி கொட்டும் பதிவுகளை எல்லாம் பதிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

  3. நான் கூடத்தான் பார்த்தேன். என்னதான் சொல்கிறார்கள் என்று. ஏதோ உளரினார்கள். 150 ரூபாய்தான். கிளி ஜோசியர்களை கூடத்தான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பார்க்கிறேன் (இந்தியாவுக்கு வந்தால்). இதிலெல்லாம் அறவே நம்பிக்கை இல்லாவிட்டாலும் இது இருப்பதை தவரென்று தோனவில்லை. அவர்கள் பிழைப்புக்காக செய்கிறார்கள், பிடித்தவர்கள் பார்க்கலாம் இல்லையென்றால் தாண்டி போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். இந்த கட்டுரை பெரிய பில்டப்பு. ஒரேடியாக வில்லனைப் போல் சித்தரிக்கிறார்கள். இதெயெல்லாம் நம்ப வேண்டியதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

  4. நாடி ஜோதிடத்தில், நீங்கள் ஜோதிடர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல வேண்டும். அவரிடம் உள்ள ஓலைகளில் உங்களுடைய விபரங்களுக்குப் பொருத்தமான ஓலையைத் தேர்வு செய்தவுடன் அதிலிருந்து பலன் சொல்லத் தொடங்குகிறார்.ஒருவர் வேண்டுமென்றே தவறான தகவல்களைத் தந்து அவரைத் திசை திருப்பி விட்ட பிறகு அவர் மீது வழக்குப் போடுவதில் ஒன்றும் சாமர்த்தியம் இல்லை.

    மனிதர்களின் நம்பிக்கை சம்மந்தப் பட்ட விஷயங்களில் மற்றவர்கள் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நல்லது.ஒருவன் எதையும் தீர்க்கமாக நம்பினால் அதை அவனால் சாதிக்க முடியும் என்கிறது விஞ்ஞனம். ஜோசியர் சொன்னதை முறியடிப்பதற்காக மருத்துவம் படித்தவர் அந்த எண்ணத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்தார்.அதனால் அவரால் அதை அடைய முடிந்தது.அது போல் ஜோசியர் சொல்வதில் நம்பிக்கை வைப்பவர்கள் அதை முனைந்து அடைகிறார்கள்.எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் நோயாளிகளின் நம்பிக்கையை அதிகரிக்க சாதாரணமான வைட்டமின் மாத்திரையை ரொம்ப உயர்ந்த மாத்திரையாகக் கொடுப்பார். அதில் குணம் அடைந்ததாக பலர் வந்து அவருக்கு நன்றி தெரிவித்துப் போயிருக்கிறார்கள்.

    தானாகவே எதிலும் ஒரு குறிக்கோளை,நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியாதவர்களுக்குத் துணை செய்வதுதான் கடவுளும் ஜோசியமும். இதில் நமது புத்திசாலித்தனத்தை காண்பிப்பதில் ஒரு வீரமும் இல்லை.

    உலகெங்கிலும் கம்யூனிசத்தையும் அதைச் சார்ந்த கொள்கைகளையும் புதைத்து சமாதி கட்டிய பிறகு மக இக போன்ற அமைப்புகள் அவற்றை இன்னும் இங்கே வியாபாரம் செய்ய வில்லையா? அதுவும் ஒரு மூட நம்பிக்கைதானே?

  5. ஒட்டு மொத்தமாக எல்லா சுவடி ஜோதிடமும் பொய் என்று சொல்வது தவறு வினவு. ஒரு நண்பர் சினிமாத்துறையில் ஆர்வமுள்ளவர். அவருக்கு சோதிடம் பார்த்தவர் நீ சினிமாத்துறையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்று கூறினார். சரி சினிமாவுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் என்ன வார்த்தை சொல்லியிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு வந்த சுவடியை பார்த்து சொன்ன வார்த்தையில் நண்பர் ஆடிப்போனார். அவர் சொன்ன வார்த்தை “பிம்பக்கலை” இதற்கு என்ன சொல்கிறீர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் சரியான சுவடியை எடுத்து பலன்களை சொல்கின்றனர். பலர் கத்துக்குட்டிகள் மற்றும் பிராடுகள்.

  6. இந்தக் கட்டுரையில் உள்ளது அத்தனையும் உண்மை. நாடி சாத்திரம் விடயத்தில் என்னுடைய அனுபவமும் சீர்காழி கோபால கிருஷ்ணனைப் போன்றது தான். ஐந்து வருடங்களுக்கு முன்பு, நானும் நாடி சாத்திரம் பார்க்க வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் போயிருந்தேன். நான் வெளியே வந்தவுடன், என்னை வாசல் வரை வந்து வழியனுப்பிய சோதிருக்கு முன்னாலேயே ஒலிநாடாவை அப்படியே இழுத்தெடுத்து, அவர் முன்னாலேயே அதிலிருந்த குப்பைக்குள் போட்டு விட்டு, சிரித்துக் கொண்டே காரில் ஏறி வந்து விட்டேன். முன்பே நான் முழுநம்பிக்கையுடன் செல்லாததால், அது எனக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தரவில்லை.

    நானும் நாடி சாத்திரம் பற்றிப் பலரும் பீற்றிக் கொண்டதையும் கேட்டு, பெரிதாக நினைத்துக் கொண்டு தான் போனேன். அதுவும் வேறு இடங்களிலும் (சென்னையிலும்) பார்க்கலாம் என்றாலும் கூட, வைத்தீஸ்வரன் கோயிலில்தான் உண்மையான ஓலைச்சுவடிகள் இருக்குமென்பதால் அங்கு போய், அதில் உண்மையுள்ளதா என்று பார்க்கப் போயிருந்தேன். கோயிலில் காரை விட்டு இறங்கு முன்னரே, கோயிலும் முன்னால் ஒரு தரகரின் கண்ணில் பட்டு விட்டோம் போல் தெரிகிறது, அவர்கள் உள்ளுர், வெளியூர்க்காரர்களை உடனடியாக அடையாளம் கண்டு பிடித்து விடுகிறார்கள். அவர் என்னை அங்குள்ள பெரிய சோதிட நிலையங்களில் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அந்த வீடும் பழைய கால வீடு. சிறிது நேரத்தில் ஒருவர் வந்து பிறந்த நேரம், நட்சத்திரம் அல்லது பெயரின் முதலெழுத்தைத் தந்து விட்டு, கோயிலுக்குப் போய் விட்டு வருமாறும், அதற்கிடையில் அவர் எனது ஓலைச்சுவடியைத் தேடி எடுத்து வைப்பதாகக் கூறினார். ஆனால் அந்த தரகர் எங்களுடனேயே கோயிலுக்குள்ளே வந்தார். அவர் தனக்கும் சோதிடருக்கும் எந்த தொடர்புமில்லை, தன்னுடைய கடை கோயிலுக்குள் இருக்கிறதென்றும், அங்கேயே அர்ச்சனை சாமான்களை வாங்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் என்னைப்பற்றிய விவரங்களை, எங்கிருந்து வருகிறேன், தொழில், பூர்வீகம் எல்லாவற்றையும் கேட்டார். அதைப் பற்றி சந்தேகப்படாததால், நானும் , நண்பர்களும் அவருடன் சும்மா பேசிக் கொண்டே, என்னைப்பற்றி உளறிவிட்டேன். நானும் கோயிலுக்குப் போய் விட்டு, அங்கு போனதும், என்னுடன் சென்ற நண்பர்களை காரில் காத்திருக்க சொல்லி விட்டு, நானும் அந்த சோதிடரும் அறைக்குள் போனவுடன், அவர் என்னுடைய பெயரைக் கேட்டார் அவரையே பெயரைக் கூறுமாறு நான் கூறியதும், ஒவ்வொரு எழுத்தாக, இதுவா, இதுவா என்று என்னிடமிருந்தே எழுத்துக்களைக் கேட்டார். சோதிட மொழியில் அவர் அந்த ஓலையிலிருந்து (அந்த ஒலையும் கூட புத்தம் புதிதாக இருந்தது) வாசிப்பதாக நடித்துக் கொண்டே கூறியது என்னவென்றால், எனக்குத் திருமணமாகி விட்டது, இரண்டு குழந்தைகள் உண்டு. எனது மனைவி மேலைநாட்டுப் பெண், மற்றும் என்னுடைய முற்பிறப்பில் இலங்கையில் கதிர்காமத்தில் (கதிர்காமம் என்ற பெயரை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்பார் போலிருக்கிறது) அரசனாக இருந்த போது நான் பாவம் செய்ததால் எனக்கு ஏதோ தோசமிருக்கிறதாம் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டுமாம், அதையும் அவரே செய்து தருவாராம், சும்மா கோயில்களுக்குப் போவதால் பலனில்லையாம், என்று கூறினார். அவர் கூறியதில் எதுவுமே உண்மையில்லை. ஆனால் என்னிடம் 2000 ரூபாயைக் கறந்து விட்டார், முன்பே ஒப்புக் கொண்டு விட்டதால், நானும் பணத்தைக் கொடுத்து விட்டு, அவர் தந்த ஒலிநாடாவையும் அங்கேயே எறிந்து விட்டு வந்து விட்டேன். அன்றிலிருந்து எனக்கு சோதிடத்தில் நம்பிக்கையுமில்லை. என்னுடைய அனுபவத்தில் நாடி சாத்திரம் என்பது வெறும் பொய்யும் சுத்துமாத்தும் தான்.

  7. இந்த அண்டப்புளுகு‌‌ ப‌ொய்யர்களின் அட்டகாசம் இந்த அளவுக்கு வளர உதவிவரும் ‌ப‌ெரியார் ‌ ப‌ெயரால் ஆட்சி நடத்தி நாட்‌ட‌ையும் தமிழ் மக்க‌ள‌ையும்‌ ஏமாற்றிய அரசியல் வாதிகளுக்கு யார் என்ன தண்டன‌ை க‌ொடுப்பது ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க