privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மக்களின் சேமிப்புக்கு வந்தது ஆபத்து!

மக்களின் சேமிப்புக்கு வந்தது ஆபத்து!

-

  பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற பெயரால், பல பிராண்டுகளை விற்பனை செயும் சில்லறை வர்த்தகத்தில்  51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் அந்நிய முதலீட்டுக்குத் தாராள அனுமதி, ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டின் அளவை உயர்த்துவது, சமையல் எரிவாயு விற்பனையில் கட்டுப்பாடு, அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது முதலான நாட்டையும் மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் நடவடிக்கைகளை எடுத்தது,  மன்மோகன்-மாண்டேக்சிங்-சிதம்பரம் கும்பல்.

இதுவும் போதாதென்று, இரண்டாவது கட்டமாக இப்போது காப்பீடு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்துவது, ஓய்வூதிய நிதித்துறையில் 26 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்குக் கதவை அகலத் திறந்துவிடுவது, வருடத்திற்கு ஆறு எரிவாயு உருளைகள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் எனக் கட்டுப்பாடு விதிப்பது, ஊக பேரச் சந்தையைக் கட்டுப்படுத்தும் முன்பேரச் சந்தைகளின் கமிசனுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம்  முதலான மக்கள் விரோத முடிவுகளை அறிவித்துள்ளது, இக்கும்பல். நாட்டின் நிதித்துறையில் இருந்து வரும் பெயரளவிலான தற்சார்பை முறிப்பதோடு, நடுத்தர மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் சேமிப்புகளை அந்நிய ஏகாதிபத்திய முதலாளிகள் சூறையாடுவதற்கும் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது, இந்த ஏகாதிபத்தியக் கூலிப்படை.

ஒரு துறை சீர்கெட்டிருந்தால் அதைச் சீர்திருத்தலாம். ஆனால், காப்பீடு துறை எந்த வகையிலும் சீர்கெட்டிருக்கவில்லை. காப்பீடு துறை நாட்டுடமையாக்கப்படுவதற்கு முன்புதான் சீர்கெட்டுக் கிடந்தது. இப்போது நடக்கும் ஈமு கோழிப்பண்ணை மோசடிகள் போன்று 1950-களில் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களின் மோசடிகள் புழுத்துப் பெருகியதால்தான் காப்பீடு துறையை அரசே தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. ஆனால், இப்போது மோசடிகளையே மூலதனமாகக் கொண்டுள்ள தனியார் முதலாளிகளிடம் அத்துறையைத் தாரைவார்க்கிறது மன்மோகன் அரசு.

1956-இல் ஆயுள் காப்பீடுத் துறையும் 1971-இல் பொதுக்காப்பீடும் அரசுடமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியக் காப்பீடு சந்தை முழுவதும் அரசுத்துறை நிறுவனங்களிடமே இருந்தன. பொதுச்சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் நோக்கத்துடன் காப்பீடு துறை சீர்திருத்தத்துக்காக 1993-இல் மல்ஹோத்ரா குழுவை அரசு உருவாக்கியது. அந்தக் குழுவோ, காப்பீடு துறையின் 74 சதவீதப் பங்குகளைத் தனியார் முதலாளிகளுக்கு விற்க வேண்டுமெனப் பரிந்துரைத்தது. இதற்கெதிராக பொதுக்கருத்து வலுவாக இருந்ததால், பங்குகள் விற்பனை தற்காலிகமாகத் தடுக்கப்பட்டது. பின்னர் 1999-இல் பா.ஜ.க. அரசு காப்பீடு துறையைத் திறந்துவிடுவதற்காக ஐ.ஆர்.டி.ஏ. சட்டத்தை நிறைவேற்றியது. அதன் தொடர்ச்சியாக இன்று 24 தனியார் காப்பீடு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த 13 ஆண்டுகளில் எந்தவொரு தனியார் காப்பீடு நிறுவனமும் தொடர்ச்சியாக இலாபத்துடன் இயங்கவில்லை. மாறாக, பலவகையான முறைகேடுகளைத்தான் செதுள்ளன. மும்பையில் ஓ.பி.தீட்சித் என்பவர் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தால் மோசடி செயப்பட்ட வழக்கு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, மார்ச் 10,2011)

ஓய்வூதியம் என்பது உழைக்கும் மக்களின் சமூகப் பாதுகாப்புத் திட்டம். அரசுத்துறை ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஒருசில தனியார்துறை ஊழியர்களைத் தவிர, கோடிக்கணக்கான இந்திய உழைக்கும் மக்கள் தங்களின் முதுமைக் காலத்தில் எவ்வித சமூகப் பாதுகாப்பும் இல்லாத அவலநிலையிலேயே உள்ளனர். இருப்பினும்,ஓய்வூதியம் பெற்றுவரும் அரசு ஊழியர்களிடமிருந்து அந்த உரிமையையும்  2003-ஆம் ஆண்டில் பா.ஜ.க. கூட்டணி அரசு  பறித்தது. 2004-க்குப் பிறகு மைய அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது; அதற்குப் பதிலாக அந்த ஊழியரின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் 10 சதவீதத் தொகையோடு, அதற்கிணையான தொகையை தனது பங்காகச் சேர்த்து அவர்களின் வருங்கால வைப்பு நிநிக் கணக்கில் மைய அரசு செலுத்தும் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது. மைய அரசைப் பின்பற்றி மாநில அரசுகளும் 2004-க்குப் பிறகு அரசுப் பணியில் சேருவோருக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று அறிவித்தன. ஓய்வூதியத் திட்டம் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய நிதியைக் கையாள்வதிலும் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதுவரை தொழிலாளிகளிடமிருந்து மாதந்தோறும் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வாரியம் என்ற மைய அரசு நிறுவனத்திடமும், அந்த நிதியை முதலீடு செயும் பொறுப்பு இந்திய அரசு வங்கியிடமும் இருந்து வந்தது. ஆனால், இந்த அமைப்புகள் இந்த நிதியைத் திறம்பட முதலீடு செயும் ஆற்றல் கொண்டதல்ல என்று காரணம் காட்டி, வருங்கால வைப்பு நிதியை முதலீடு செயும் பொறுப்பில் ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மகிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேப்பிடல், ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய தனியார் நிதி நிறுவனங்களையும் நுழைய அனுமதித்தது பா.ஜ.க. கூட்டணி அரசு.

பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரசு கூட்டணி அரசு, அமைப்புசாரா துறைகளில் பணியாற்றிவரும் கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் ஓய்வூதியத் திட்டத்தில் இழுத்துப் போடும் தேசிய ஓவூதியத் திட்டத்தை அறிவித்தது. மைய-மாநில அரசு ஊழியர்கள் இத்தேசிய ஓவூதியத் திட்டத்தில் இணைவது கட்டாயமென்றும், மற்ற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமது விருப்பப்படி இதில் இணையலாம் என்றும் அறிவித்தது.

இதனையடுத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசின் கடன் பத்திரங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் மட்டும்தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்புநிதியை அரசு பத்திரங்களில் மட்டுமின்றி, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களிலும் பங்குச் சந்தையிலும் முதலீடு செயலாம் என்ற தாராளமயம் புகுத்தப்பட்டது. நாடெங்கும் கடும் எதிர்ப்பின் காரணமாக, கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் சில்லறை வணிகம் மற்றும் தொழிலாளர்களின் ஓவூதிய நிதியைக் கையாள்வதில் அந்நிய நிறுவனங்களை அனுமதிக்கும் முடிவுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, இப்போது மூர்க்கமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதன் விளைவாக, ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அறிவிக்கும் திட்டங்களில் ஏதாவதொன்றை தொழிலாளி தீர்மானித்துக் கொள்ள வேண்டும், அல்லது அத்தொழிலாளியின் சார்பில் முதலீட்டு நிறுவனங்களே  முதலீடு செய்து கொள்ளும். சுருக்கமாகச் சொன்னால், தனது ஓய்வூதிய நிதியைக் கொள்ளையிடும் உரிமையை எந்தத் தனியார் முதலாளியிடம் கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தொழிலாளிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளையிலிருந்து விலகிவிடும் உரிமையோ, வேறுவிதமாகப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையோ தொழிலாளிக்குக் கிடையாது. ஓவூதியத் திட்டங்களில் வசூலாகும் பணத்தை   தனியார் நிறுவனங்கள்  எதில், எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்ற விசயத்தில் அரசு தலையிடாது. இதனால் அந்த நிறுவனங்கள் திவாலாகிப் போனால் முழுத்தொகையும் தொழிலாளர்களுக்குக் கிடைக்காது.

தற்போது இந்தியத் தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் செயல்படாத கணக்கு’’களில் ரூ.22,636 கோடி உள்ளது. அதாவது, வேலையிழப்பினால், ஆலை மூடலினால் தொழிலாளர்கள் தங்களது மாதச் சந்தாவைத் தொடர்ந்து  செலுத்த இயலாத நிலையில், அவர்களது கணக்கில் வைக்கப்பட்டுள்ள நிதிதான் இது. இத்தொழிலாளர்கள் வேறிடத்தில் புதிய வேலை கிடைத்த பிறகு தங்கள் கணக்கைத் தொடர்ந்தால் இது செயல்படும் கணக்காக” மாறும். இது தவிர, கேட்பாரில்லாத நிதியாக ரூ. 4,000 கோடி இந்த அலுவலகத்தில் உள்ளது. 58 வயது நிறைவடைந்து பணி ஓய்வு பெற்றவர்கள் தங்களது ஓய்வூதியத் தொகையைக் கேட்டுப் பெறாததால் அல்லது கேட்கத் தவறிவிட்டதால் கேட்பு இல்லாமல் உள்ள பணம் இது. இந்தப் பணத்துக்கும் இந்த அலுவலகம் வட்டி போட்டு வைத்துள்ளது.

இவ்வாறான செயல்படா கணக்குகளும் கேட்பு இல்லாக் கணக்குகளும் அரசிடம் உள்ளவரை பாதுகாப்புடன் இருக்கும். இனி இந்தத் தொகை தனியார் ஓய்வூதிய நிறுவனங்களுக்குக் கிடைக்கப் போகிறது. அந்நிறுவனங்கள் குறிப்பிட்ட  சில ஆண்டுகளுக்குப் பின்னர் செயல்படாத கணக்குகளையும் கேட்பு இல்லாக் கணக்குகளையும் ரத்து செய்வதாக அறிவித்து, கோடிக்கணக்கிலான அத்தொகையை விழுங்கினால் இனி யாரும் கேள்வி கேட்க முடியாது.

மறுபுறம், இந்தியக் காப்பீட்டுச் சந்தையில் நுழையும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களோ, தங்கள் நாடுகளில் காப்பீடு துறையில் புகுந்து மொட்டையடித்து பொருளாதாரத்தையே திவாலாக்கியவர்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காப்பீடு நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டதும், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் ஒருகோடியே ஐம்பது லட்சம் கோடி ரூபா பெறுமானமுள்ள ஓய்வூதிய நிதி, பங்குச் சந்தையில் சூறையாடப்பட்டு மாயமாகிவிட்டது. அமெரிக்காவின் ஏகபோக காப்பீடு நிறுவனமான ஏ.ஐ.ஜி. திவாலாகிப் போனது. மேலும், முதலாளித்துவப் பொருளாதாரம் அடுத்தடுத்து சரிந்து வீழ்வதும், பல நிதி நிறுவனங்கள் திவாலானதாக அறிவித்துக் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டுவதும் வழக்கமாக உள்ளன.

இருப்பினும்,  இத்தகைய மலைமுழுங்கிகளால் காப்பீடு துறையும் இந்தியப் பொருளாதாரமும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறப் போகிறது என்று குறி சோல்கிறார்கள் மன்மோகனும் சிதம்பரமும். இந்த ஏகாதிபத்திய கூலிப்படையினரால் வங்கி, காப்பீடு முதலான உயிராதாரமான துறைகள் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்டு, அரசின் கண்காணிப்பும் கட்டுப்பாடும் இல்லாததாக இந்திய நிதிச் சந்தை மாற்றப்பட்டுள்ளதையும் இந்தியா இன்னுமொரு வாழைப்பழக் குடியரசாகிவிட்டதையுமே  இச்சீர்திருத்த நடவடிக்கைகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன.

_________________________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012

__________________________________________________________________