Sunday, April 11, 2021
முகப்பு உலகம் ஐரோப்பா தேவனின் திருச்சபை! மாபியாக்களின் கருப்பை!!

தேவனின் திருச்சபை! மாபியாக்களின் கருப்பை!!

-

ஏசுநாதர்மூடப்பட்ட அந்தக் கழிவறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரலும், அதனுடன் ஒரு பெண்ணின் விசும்பலும் கேட்டது. நாங்கள் அந்த அறையின் கதவை உடைத்துத் திறந்த போது கண்ட காட்சி இதயத்தை நொறுக்குவதாய் இருந்தது. ஒரு கன்னியாஸ்திரி தனக்கு அப்போது தான் பிறந்திருந்த பச்சைக் குழந்தையை கழிவறையின் பீங்கான் கோப்பைக்குள்ளே திணித்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் கால்களிரண்டும் கோப்பையின் வெளியே துடித்துக் கொண்டிருந்தன. அந்த அறையின் தரையெங்கும் இரத்தத் துளிகள் …”

– கேரளத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரியான சகோதரி மேரி சாண்டியின் சுயசரிதையான “நன்ம நிறஞ்சவளே ஸ்வஸ்தி” எனும் நூலில் இருந்து…

67 வயதான மேரி சாண்டி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே தனது கன்னியாஸ்திரி வாழ்க்கையைத் துறந்து விட்டவர். சுமார் நாற்பதாண்டுகள் கத்தோலிக்கத் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்துள்ளார். அவரது 13வது வயதிலிருந்து துவங்கிய நெடும் பயணம் அது. நாற்பதாண்டு கால ‘இறைப்பணியில்’ தான் சந்தித்த அருவெறுப்பான தருணங்களை இப்போது தனது சுயசரிதையின் ஊடாக முன்வைத்துள்ளார்.

மேரியின் நூல் கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் மலிந்து விட்ட பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. பாதிரிமார்களால் வல்லுறவுக்குக் கட்டாயப்படுத்தப்படும் அப்பாவிக் கன்னியாஸ்திரிகளின் கதைகள் நம்மைத் திகைப்புக்குள்ளாக்குகின்றன என்றால், பாலியல் ரீதியிலான முறைகேடான உறவுகள், நிதி முறைகேடுகள் போன்றவற்றைப் பொது நியதியாக ஏற்றுக்கொண்ட பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பற்றிய விவரணைகள் சாமானிய வாசகர்களுக்கு நிச்சயம் ஆச்சர்யமூட்டும்.

கேரளத்துக்கு வெளியிலிருக்கும் பொது வாசகர்களுக்கு வேண்டுமானால் இந்தக் கதைகளை அதிசயமாய்த் தோன்றலாம் – ஆனால், கேரளம் இவற்றையெல்லாம் பலமுறை கேட்டுப்  பழகிவிட்டது. இதற்கு முன்பே சகோதரி ஜெஸ்மியின் “ஆமென் – ஒரு கன்னியாஸ்திரியின் வாழ்க்கை வரலாறு” என்கிற நூலும், பாதிரியார் ஷிபு கலம்பரம்பிலின் “ஒரு வைதிகண்டே ஹ்ருதயாத்மா” என்கிற நூலும் இதே போன்ற விஷயங்களைக் கையாண்டுள்ளன.

இதில் ஜெஸ்மியின் “ஆமென் – ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு” இன்றளவும் திருச்சபையால் செரிக்க முடியாத கடப்பாறையாய் உருத்திக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து சில வரிகள் –

“நெருக்கியபடி என்னருகே உட்கார்ந்து கொண்ட அருட்தந்தை, மூச்சடைக்க வைப்பது போல என்னைப் பலமாகக் கட்டிப் பிடித்தார். அவரது பிடியிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள  நான் முயற்சி செய்வதற்கிடையே என் மார்பகங்களைப் பற்றியபடி அவற்றைக் காட்டித் தரும்படிக் கேட்டார். என்னைப் பலவந்தமாகப் பிடித்து உட்கார வைத்து விட்டுக் கேட்டார்: ‘உன்னுடைய வாழ்க்கையில் இதுவரை நீ ஏதாவதொரு ஆண்மகனைப் பார்த்திருக்கிறாயா?’ இல்லையென்று தலையசைத்தேன். உடனே தன்னுடைய ஆடைகளைக் களைந்தார்” – பக்கம் 103.

ஜெஸ்மியின் நூல் வெளியான சமயத்தில் அது உண்டாக்கிய அதிர்வலைகள்  கேரளத்தில் மட்டுமல்ல, நாடெங்குமுள்ள கத்தோலிக்கர்களிடையேயும் எதிரொலித்தன.  கத்தோலிக்கத் திருச்சபை மலக்குட்டையில் மூழ்கித் திளைக்கும் ஆபாசக் காட்சிகள் ஜெஸ்மியின் நூலெங்கும் விரவிக் கிடந்தன. முகத்தில் வழிந்த மலத்தைத் துடைத்துக் கொண்ட திருச்சபை, ஜெஸ்மியை பைத்தியகாரி  என்றும், சூனியக்காரி என்றும் சாத்தானால் வழி நடத்தப்படுகிறாரென்றும் கதைகளைப் புனைந்து பார்த்தது. ஆயினும், இன்றளவும் அதில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளின்  மேல் எந்த விசாரணையும் நடத்தவில்லை; அப்படியொன்றைச் செய்ய வேண்டும் என்கிற முனைப்பு கூட இல்லாத திமிர்த்தனத்தையே  திருச்சபை வெளிப்படுத்தியது.

ஜெஸ்மி மற்றும் மேரியின் நூல்களில் வருகின்ற மதகுருமார்கள் பலரும் எந்த தடுமாற்றமோ குற்றவுணர்வோ இன்றி பாலியல் முறைகேடுகளிலும், நிதி முறைகேடுகளிலும் ஈடுபடுவதும், அது கேள்விக்குள்ளாகும் போது அதிகார வர்க்கத் திமிருடன் கையாள்வதும் ‘நம்பிக்கை உள்ள’ கிருஸ்தவர்களிடையே கடும் அதிர்ச்சியைத்  தோற்றுவித்துள்ளன.

திருச்சபை எனும் மாபெரும் இயந்திரத்தினுள் மக்களுக்குச் சேவை செய்வது, இயேசுவின் சுவிசேஷத்தை பிரசங்கிப்பது என்கிற ‘தூய’ நோக்கங்களுக்காக நுழையும் ஜெஸ்மி, மேரி,  கலம்பரம்பில் போன்ற அப்பாவி ஆட்டுக்குட்டிகள் ஒரு கட்டத்தில் சகிக்க முடியாமல் வெளியேறியாக  வேண்டும் அல்லது அனைத்தையும் இயேசுவின் திருநாமத்தினாலே சகித்துக் கொண்டு இதயமற்ற அந்த இயந்திரத்தின் நட்டு போல்டுகளாய்ச் சுருங்கி விட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்- வேறு வாய்ப்புகள் ஏதும் இவர்களுக்கில்லை.

திருச்சபை எனும் இந்த இயந்திரத்துக்கு அதிகளவில் உதிரிபாகங்களை சப்ளை செய்யும் பின்நிலமான கேரளத்திலிருந்து இது போன்ற நூல்கள் அதிகம் வெளியாவது புரிந்து கொள்ளத்தக்கதே. கேரளத்திலிருந்து மட்டும் சுமார் 1,85,000 பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் உருவாகியுள்ளனர். இதில் சுமார் 1,35,000 பேர் கேரளத்துக்கு வெளியே ‘தேவ காரியத்தில்’ ஈடுபட்டு வருகிறார்கள். கத்தோலிக்க திருச்சபை ஊழியர்களில் மட்டும் சுமார் 15 சதவீதம் மலையாளிகள் என்கிறது அவுட்லுக் பத்திரிகை அளிக்கும் புள்ளிவிவரம்.

சகோதரி மேரி சாண்டி
“பாவமன்னிப்பிற்காக பாதிரியிடம் போகாதீர்கள்” – சகோதரி மேரி சாண்டி

உலகளவில் நிறுவனமயப்பட்ட மதம் எனும் வகையில் கிருஸ்தவம் ஒரு பிரம்மாண்டமான இயந்திரமாய் இருக்கிறது. கத்தோலிக்கர்கள் மெத்தடிஸ்டுகள், லுத்தரன்கள் மற்றும் பெந்தெகொஸ்தே சபையினர் என்று சகல கிருஸ்தவ நிறுவனங்களையும் சேர்த்துக்  கணக்கிட்டால் இவர்களின் வருடாந்திர பட்ஜெட் சுமார் ரூ. 7.5 லட்சம்  கோடிகள். சுமார் 40 லட்சம் முழுநேர ஊழியர்களையும், 13,000 நூலகங்களையும், 22,000 பத்திரிகைகளையும், சுமார் 1800 தொலைக்காட்சி சேனல்களையும், 1500 பல்கலைக்கழகங்களையும், 930 ஆராய்ச்சி நிறுவனங்களையும் இவர்கள் நடத்துகிறார்கள். ஆண்டு தோறும் சுமார் 400  கோடி துண்டுப் பிரசுரங்களையும், நூல்களையும் வெளியிடுகிறார்கள்.

மக்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லாத வரம்பற்ற அதிகாரமும், ஆளும் வர்க்கங்களுடனான நெருங்கிய ஐக்கியமும் காரணமாக இவர்கள் தங்களை இயேசுவுக்கும் மேலாக நிறுவிக் கொண்டுள்னர். தம் வாழ்நாளை ரோம சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரான கலகங்களோடும், தொழுநோயாளிகளோடும் கழித்து, யூதர்களிடையே சமூக சீர்திருத்தங்கள் கோரி, இறுதியாக சிலுவையில் மரித்துப் போன வெகுளித்தனமும், வெள்ளந்தித்தனமும் நிரம்பிய ஏசு எனும் வரலாற்று மனிதன் என்றோ ஒரு நாள் தனது பெயரால் இப்படியொரு மிருகத்தனமான நிறுவனம் எழுந்து நிற்கும் என்று கற்பனை செய்திருப்பானா?

ஐசுவரியவானை மறுத்து லாசருவுக்காகவும் – அதிகாரத்தை எதிர்த்து சாமானியர்களுக்காகவும் – வலுத்தவர்களைப் புறக்கணித்து எளியவர்களுக்காகவும் நின்ற ஒரு எளிய மனிதனான இயேசுவின் நாமத்தோடு பிற்காலத்தில் ‘கிறிஸ்து’ என்கிற வால் ஒட்டிக்கொண்டதைத் தொடர்ந்த ஈராயிரம் ஆண்டுகளின் வளர்ச்சி இது.

மூன்றாம் உலக நாடுகளில் கிருஸ்தவர்களின் சமூக வாழ்க்கை கிருஸ்தவ மத நிறுவனங்களோடு தவிர்க்கவியலாதபடி பின்னிப் பிணைந்துள்ளது. அவர்களின் பிறப்பு, வாழ்வு, திருமணம், இறப்பு என்று சகலத்திலும் திருச்சபை நேரடியாகத் தலையிடுகிறது.

பதினான்காண்டுகளுக்கு முன்பே திருச்சபையிலிருந்து விலகும் மேரி சாண்டி, சொந்தமாய் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தை நடத்த முற்படுகிறார். திருச்சபை தொடர்ச்சியாக அவருக்கு இடைஞ்சல்களை உருவாக்குகிறது.  அவருக்கு கிருஸ்தவர்கள் எவரும் வீடு அளிக்க முடியாதபடி செய்கிறது. ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை ஆதரவற்ற அந்தக் குழந்தைகளோடு இடம் விட்டு இடம் மாறவேண்டிய சூழலை உருவாக்குகிறது. ஜெஸ்மியையும், ஷிபு கலம்பரம்பிலையும் அவர்களது குடும்பத்தாரே புறக்கணிக்கும்படி செய்துள்ளது. திருச்சபையின் வழிகாட்டுதல்களை மீறும் எவருக்கும் புதைக்கச் சுடுகாடு கூட கிடைக்காது என்பதால், அந்தத் தடிக்கம்பின் அதிகாரத்திலிருந்து விசுவாசிகளை எப்பேர்ப்பட்ட தேவனாலும் காப்பாற்றமுடிவதில்லை.

கத்தோலிக்கத் திருச்சபை போன்ற கார்ப்பரேட் பாணியில் மையப்படுத்தப்பட்ட நிறுவனமாக இல்லாமல், குடிசைத் தொழில்  போன்று ஆங்காங்கே பரவியுள்ள பெந்தெகொஸ்தே சபைகளிலும்  இவாஞ்சலிக்கல் ஊழியங்களில் ஈடுபடும் கிருஸ்தவ நிறுவனங்களிலும் அதிகார பீடங்களில் இருப்பவர்களின்  மீதான குற்றச்சாட்டுகள் இதே போலத்தான் கையாளப்படுகின்றன.

வின்சென்ட  செல்வகுமார் தமிழ்நாட்டின் பெந்தெகொஸ்தே வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்ட ஊழியக்காரர். அவர் கிருஸ்தவ ஊழியத் தொழிலைத் துவங்கிய காலத்திலிருந்து அவருடன் உடனிருந்த சொந்தக்காரர்களே சமீபத்தில் அவரிடமிருந்து விலகி வந்ததோடு, அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். அவரது சொந்த வளர்ப்பு மகனே முன்னின்று குற்றம் சாட்டியிருந்தார். தனது ஆதரவாளர்களிடையே கையும் மெய்யுமாகப் பிடிபட்ட நிலையிலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை எளிதில் புறம் தள்ளிய வின்சென்ட், ஏஞ்செல் தொலைக்காட்சியில் தோன்றி அதற்கு சப்பைக்கட்டுகளை முன்வைத்துப் பேசியுள்ளார்.

இது இந்தியாவுக்கு மட்டுமேயான பிரத்யேகமான அணுகுமுறை இல்லை – உலகெங்கும் இதே போன்ற அணுகுமுறைகளைத் தான் திருச்சபைகள் பின்பற்றி வருகின்றன.

கிருஸ்தவ மதம் ஆளும் வர்க்க நிறுவனமாக மாறியது தொட்டு,  நாளது வரையிலான நீண்ட வரலாற்றுக்கு இணையாக அந்த நிறுவனங்களுக்கு உள்ளே நடந்த முறைகேடுகளின் வரலாறும் உள்ளது. கள்ளக் காதலில் இருந்து நிதிமுறைகேடுகள் வரை நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சுமந்து கொண்டே பரமண்டலத்திற்குள் நுழைந்த போப்பாண்டவர்களின் பட்டியல் மிக நீண்டது. இந்தப் பட்டியலில் சமீபத்திய  சேர்க்கை வாத்திகன் அரச வங்கியில் போப்பின் நேரடிப் பார்வையின் கீழ் நடந்த மாபெரும் நிதி மோசடி.

ஐரோப்பா மற்றும் உலகமெங்கும் இயங்கும் கிரிமினல் கும்பல்களுக்கும், நிழலுலக மாஃபியா கும்பல்களுக்கும் பணப்பரிவர்த்தனை மையமாக வாத்திகன் வங்கி திகழ்ந்துள்ளது. தற்போது நிழல் உலகத் தொடர்பு மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பண சுழற்சிக்கு எதிரான அமைப்பு (Financial action Task force on Money laundering) வாத்திகன் வங்கியைக் கருப்புப் பட்டியலில் வைத்துள்ளது. மாஃபியாக்களின் வங்கி என்றே அறியப்படும் வாத்திகன் வங்கியின் பெயர் – “மத நடவடிக்கைகளுக்கான நிறுவனம்” (The institue for the works of the religion)

சுமார் 6 பில்லியன் நிதிக் கையிருப்பைக் கொண்டுள்ள இந்த வங்கி, 2010ஆம் ஆண்டு மட்டும் சுமார் 55 மில்லியன் யூரோக்களை போப்புக்கு இலாபமாக ஈட்டிக் கொடுத்துள்ளது.  கடந்த மார்ச் மாதம் வாத்திகன் அரசாங்கத்தின் இரகசியமான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு ஜியான்லுகி நுஸ்ஸி என்பவர் “பதினாறாம் பெனடிக்டின் இரகசிய ஆவணங்கள்” எனும் தலைப்பில் விரிவான நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது மேற்குலகில் போப்பின் திருட்டுத்தனங்களும் சூடான தலைப்புகளில் ஒன்றாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

விவகாரம் இந்தளவுக்கு முற்றி முடைநாற்றமெடுக்கத் துவங்கிய பின்னும் கூட, நிதி மோசடியின் மூலகர்த்தாவான  போப்பிடமோ அவருக்கு அடுத்த நிலையிலிருப்பவர்களிடமோ எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. மாறாக, நுஸ்ஸியிடம் அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களைக் கொடுத்தது யார் என்கிற கோணத்தில் விசாரித்து வரும் வாத்திகன் போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் போப்பின் சமையல்காரரைக் கைது செய்துள்ளனர்.  மதம்  நேரடியாக ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்தால் காட்சிகள் எப்படியிருக்கும் என்பதற்கு வாத்திகனே சாட்சி – இங்கே போப்பாண்டவரே முகமூடியணிந்த திருடனாகவும், சீருடையணிந்த போலீசாகவும், அங்கியணிந்த நீதிபதியாகவும், ஒளிவட்டம் பொருத்திய மீட்பராகவும் சகல பாத்திரங்களிலும் களமிறங்கிக் கலக்குகிறார்.

பாதிரியார் ஷிபு கலம்பரம்பில்
12 வருடங்களுக்குப் பிறகு திருச்சபையிலிருந்து விலகுகிறார் பாதிரியார் ஷிபு கலம்பரம்பில்.

நிறுவனத்தின் பிரமாண்டமும், அந்த பிரமாண்டம் அளிக்கும் மமதையும், ஆளும் வர்க்கத்தோடான நெருக்கமும், அந்த நெருக்கம் அளிக்கும் அதிகாரமும், கேள்வி முறையின்றிப் பின்பற்ற கையறு நிலையிலிருக்கும் மக்கள் கூட்டமும் மத பீடங்களைத் தரையிலிருந்து ஒரு சில அடிகளுக்கு மேல் மிதக்க வைக்கிறது.

சகல திசைகளிலும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளால் தாக்கப்படும் மக்கள் ஜனநாயக உணர்வற்ற விசுவாசிகளாய், அநீதியை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, தேவ விசுவாசத்தின் ஊடாய் சகலத்தையும் சகித்துக் கொண்டு செல்பவர்களாய் பயிற்றுவிக்கப் படுகிறார்கள். தொட்டறியத்தக்க பொருளாதாயக் காரணிகளை முன்னிட்டு ஏற்படும் பாடுகளைச் சகித்துக்கொண்டு,  தேவ சமூகத்தில் கண்ணீர் மல்க பிரார்த்திப்பதே மேன்மை என்பதாக கற்றுத் தரப்படுகிறார்கள். அதுவே  தியாகம் என்பதாகப் புரியவைக்கப் படுகிறார்கள். கையறு நிலையில் நிர்க்கதியாய் நிற்கும் மக்களின் அறியாமையே மத நிறுவனங்களின் திமிருக்கு விளைநிலமாய் இருக்கிறது.

இது ஒரு விநோதமான உலகம். இங்கே கொலைகாரனே ஜீவகாருண்யவாதி. திருடனே மீட்பன். கொள்ளைக்காரனே வள்ளல். நாலாந்தர பொறுக்கி தான் முதல்தர ‘போதகர்’. இந்த உலகத்துக்குள் இயேசுவின் ‘அழைப்பை’ ஏற்று நுழையும் மேரி சாண்டி, ஜெஸ்மி போன்றவர்கள் எதார்த்தத்தை பிரத்யட்சமாய்த் தரிசிக்கும் அந்தத் தருணங்கள் எப்படியிருந்திருக்கும்? இது தான் அறம் என்று அவர்கள் நம்பிய விழுமியங்கள் சில்லுச் சில்லாக நொறுங்கித் தகர்ந்து விழும்போது எப்படி உணர்ந்திருப்பார்கள்? அதை அவர்களது வாழ்க்கை வரலாற்று நூல் விரிவாகச் சொல்கிறது.

அவுட்லுக் பத்திரிகைக்கு பேட்டியளிக்கும் மேரி, அதன் இறுதியில் இவ்வாறு சொல்கிறார் –

“பல  நல்ல பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் – அதே நேரத்தில் தவறானவர்களும் இருக்கிறார்கள். நான் சர்ச்சுக்குச் செல்லும் இளம் கத்தோலிக்கப் பெண்களுக்குச் சொல்லிக் கொள்வது இது தான், உங்கள் பாவ மன்னிப்பை எந்தப் பாதிரியிடமும் அறிக்கையிடாதிருங்கள்..”

தனது சொந்த அனுபவத்தின் காரணமாக, இளம் பெண்கள் கத்தோலிக்கத் திருச்சபையை நம்பவேண்டாம் என்கிறார் மேரி. சாதி ஆதிக்கம் நிறைந்திருக்கும் திருச்சபையை தலித்துகள் நம்பவேண்டாம் என்று தமது சொந்த அனுபவத்திலிருந்து ஒரு தலித் பாதிரியார் கூறக்கூடும். கருப்பின மக்கள் வெள்ளையினப் பாதிரியை நம்பவேண்டாம் என்று கருப்பினப் பாதிரி சொல்லுவார். திருச்சபைக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் நிர்வாகத்திலிருக்கும் பாதிரிகளை நம்பவேண்டாம் என்று எச்சரிக்கை செய்வார்கள்.

இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். மேரி அல்லது ஜெஸ்மியைப் பொருத்தவரை பாலியல் முறைகேடுகளில் ஈடுபடாமல், துறவு நிலை பேணும் பாதிரிகளும் கன்னியாஸ்திரீகளும் நல்லவர்களே. ஒழுக்கம், அறம் என்பனவற்றை பாலியல் ஒழுக்கம், நிதிக் கையாடல் செய்யாமை போன்ற குறிப்பிட்ட சில பண்புகளோடு மட்டுமே தொடர்பு படுத்திப் பார்ப்பதும், திருச்சபை உள்ளிட்ட ஒரு நிறுவனத்தின் யோக்கியதையை, அந்நிறுவனத்தில் இருக்கும் குறிப்பிட்ட சில நபர்களின் குணநலன்களை மட்டுமே வைத்து மதிப்பிடுவதும்தான் இதில் மையமான பிரச்சினை.

ஒழுக்கம், அறம் குறித்த கோட்பாடுகளின் சமூகப் பாத்திரத்தை விலக்கி விட்டு, அதாவது அவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் வர்க்க நலனை மறைத்துக் கொண்டு, முடிந்தவரை அவற்றைப் பூடகமாக்குவதன் மூலம், வர்க்க சுரண்டலுக்கு நியாயம் கற்பிப்பதுதான் மத நிறுவனங்கள் ஆற்றிவரும் பாத்திரம்.

தமது கோடானு கோடி விசுவாசிகள் பஞ்சப்பராரிகளாய், பன்றிகள் மேயும் குடிசைகளுக்குள் உழலும் போது, அவர்களுக்காய் தேவ சமூகத்தில் கண்ணீர் மல்க மன்றாடுவதாய்ச் சொல்லிக் கொள்ளும் திருச்சபைப் பாதிரிகள் வாழும் வாழ்க்கை எத்தகையது? ஒரு சாதாரண சி.எஸ்.ஐ பாதிரியின் துவக்க சம்பளமே சுமார் முப்பதாயிரம். தங்குமிடம் இலவசம், உண்ணும் உணவு இலவசம். மனைவிக்கு வேலை, பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை இலவசம், மருத்துவச் செலவுகளை விசுவாசிகள் கவனித்துக் கொள்வார்கள் – இதற்கும் மேல் வரும்படியாகத் தனிப்பட்ட ஜெபக் கூட்டங்களில் வசூலாகும் தொகையும் இவர்களுக்கே. கத்தோலிக்கப் பாதிரியார்களின் வாழ்க்கை வசதிகளைப் பற்றிச்  சொல்லவே வேண்டியதில்லை.

இவர்களுக்குப் படியளக்கும் மக்கள் வறுமையிலும், துன்பத்திலும் உழன்று கொண்டிருக்கும் போது பாதிரிமார்கள் உல்லாச வாழ்க்கை வாழ்வது தீயொழுக்கம் என்று கூறி எந்த யாரும் திருச்சபைகளில் இருந்து வெளியேறியதில்லை. ஏனென்றால் அந்த உல்லாச வாழ்க்கையை அறம் கொன்ற செயலென்று அவர்கள் யாரும் கருதியதில்லை, அவ்வாறு கற்பிக்கப் பட்டதுமில்லை.

போப்பாண்டவரின் வங்கி மோசடியைப் பற்றியும், அவர்கள் கடந்த காலங்களில் கள்ளக்காதல்களில் ஈடுபட்ட கிசுகிசுக்களையும் எழுதி மாயும் ஐரோப்பிய ஊடகங்கள், இரண்டாம் உலகப் போரின்போது பாசிசத்தை திருச்சபை ஆதரித்து நின்றதும், பற்றியும், இன்று அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களை மவுனமாக அங்கீகரிப்பதும் அறம் கொன்ற செயல் என்று சாடுவதில்லை.

இன்றைய உலகமே போராட்டங்களின் உலகமாய் இருக்கிறது. அமெரிக்காவின் வால் வீதியில் துவங்கி ஸ்பெயினின் தெருக்களிலும், கிரீஸின் நகரங்களிலும் மக்கள் தங்களைச் சூறையாடும் உலக முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். இந்தியாவில் அந்நிய முதலீட்டை எதிர்த்து வணிகர்கள், கல்வி தனியார்மயத்தை எதிர்த்து மாணவர்கள், விளைச்சலுக்கு விலை கேட்டு விவசாயிகள், வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து பழங்குடியினர், அணுவுலையை எதிர்த்து மீனவர்கள் என்று திரும்பிய திசைகளிலெல்லாம்  போராட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது.

இந்தப் புவிப்பரப்பே மக்களின் வாழ்க்கைக்கான போராட்டங்களினால் கொதிநிலையிலிருக்கும் போது திருச்சபைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? யார் பக்கம் நிற்கின்றன? தங்களது சொத்துகளையும் சுகபோக வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, அவற்றைத் தமக்கு அருளிய ஆளும் வர்க்கங்களின் அயோக்கியத்தனங்களை நியாயப்படுத்துகின்றன அல்லது மறைக்கின்றன தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்கா பரலோகம் மட்டும்தான் என்பது போலவும், இகலோகப் பிரச்சினைகளில் தங்களுக்குத் தொடர்பில்லாதது போலவும் பம்மாத்து செய்கின்றனர்.

ஒழுக்கம் என்பதை தனிநபர் விவகாரமாகச் சுருக்கி, அந்த ஒழுக்கத்தின் வாழ்விடத்தையும் தொடையிடுக்குகளுக்குள் சுருக்கி, துறவு என்ற ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கி, அந்தத் துறவுக்கு, கண்கள் கூசுமளவுக்கு ஓர் ஒளிவட்டத்தை உருவாக்கிக் காட்டுவதன் நோக்கமே, மத நிறுவனங்களின் இருண்ட பக்கத்தை மறைப்பதுதான். இந்த இருட்டுக்குள்ளே தான் மேரி குறிப்பிடும் ‘நல்லவர்கள்’ உலவுகிறார்கள். இது கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுல்ல, எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

படங்கள் நன்றி: அவுட்லுக்

________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
_____________________________________________

 1. ஒழுக்கம், அறம் குறித்த கோட்பாடுகளின் சமூகப் பாத்திரத்தை விலக்கி விட்டு, அதாவது அவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் வர்க்க நலனை மறைத்துக் கொண்டு, முடிந்தவரை அவற்றைப் பூடகமாக்குவதன் மூலம், வர்க்க சுரண்டலுக்கு நியாயம் கற்பிப்பதுதான் மத நிறுவனங்கள் ஆற்றிவரும் பாத்திரம்.

  சற்று எளிமைபடுத்தியிருக்கலாம்.

  தனி மனித ஒழுக்கம் என்பதை ஏதோவொன்றுடன் சம்மந்தப்படுத்திக்கொண்டு இருப்பதால் தான் மதம் என்பது இன்று வரையிலும் வளர்ந்து கொண்டேயிருகிகிறது. மனநோய் போலவே இன்றைய ஆன்மீகம் மனிதர்களால் பார்க்கப்படுகின்றது. சென்று வந்தேன். மனம் அமைதியடைந்தது என்பது போன்ற வார்த்தைகள் வருவதும் அது கடத்தப்படுவதும் கடைசியில் பாதிக்கப்பட்டவர்களின் குரல் வெளியே தெரியாமல் போவதும் இதன் பலன்.

  எல்லா மதங்களும் சொன்ன தத்துவம் ஒன்றே. தினந்தோறும் உழை. முடிந்தவரைக்கும் உண்மையாக உழை. ஒருநாள் பலன் உண்டு. ஆனால் பலன் என்னவோ நீங்கள் சொன்ன வர்க்க சுரண்டலின் பரிணாமாகவே மாறிப் போய்க் கொண்டேயிருக்கிறது.

 2. There is nothing to condemn Christianity for these frauds. I accept that Catholics/pope are responsible for all these things and also protestants and those pastors are responsible for these type of evils. I wholeheartedly condemn this with Vinavu.

  But I want to differ that Jesus nor his followers did these type of things and New Testament never allowed/encouraged these type of evil behaviors. When you compare Jesus with mohammad or ram, Jesus lived a better life and taught more good things. Only person we can compare to Jesus is Buddha.

 3. muhammad married many women and had sex-slaves and killed many for not accepting his religion. Compare this to Jesus or Buddha! Why Vinavu is silent about mohammad? Can your tooanyutham draw some cartoons of muhammad?

 4. என்னடா இது பார்ப்பனீயம் என்ற சொல்லே இராத பதிவாயிருக்கிறதே இது என்று நான் பொங்குவதாக ஒரு குர்றச்சாட்டைக் கூறுகிறார் அம்பி. உண்மையிலேயே பார்ப்பனீயம் என்ற வார்த்தைதான் அவரைப் பொங்க வைக்கிறது. பார்ப்பனீயத்தை பார்ப்பனீயம் என்ற சொல்லால் குறிக்கக்கூடாது என்பது கூட பார்ப்பனீயமோ:))

  • இந்தப் பின்னூட்டத்தை அங்கே போடாமல் இங்கே போடுவதன் நோக்கம் என்னவோ..?!!!

   • இரண்டு பதிவிலும் சாதி பற்றி இருக்கிறது ஆனால் பார்ப்பனீயம் என்ற சொல் இல்லைதானே. எங்கு போட்டால்தான் என்ன?

  • சொன்னா கேளுங்க.. இது திருச்சபை ஏரியா.. வினவு புகுந்து கலவரம் பண்ணி வெச்சுருக்காரு.. என்ன ஆவப்போவுதோ… சத்தமில்லாம வேற ஏதாவது பதிவுக்குப் போய் சாவகாசமா பார்ப்பனீயத்தைப் பத்தி பேசலாம்..

   • வினவு, உன்னால எவ்வளோ confusion பாரு. பார்ப்பனீயத்தை பத்தி இங்க பேசிக்கிட்டிருக்காங்க. அதுக்கு தான் சொல்றேன். தலைப்போடு சேர்த்து, யாரை/எதை திட்டறேன்னு தெளிவா சொல்லிடு. முதலாளித்துவம், பார்ப்பனீயம், இந்து மதம், தேவர், வன்னியர், கத்தோலிக்கம், கிறிஸ்தவம், இஸ்லாம், ஆன்மிகம், மதம், தமிழ் தேசியம், குறிப்பிட கட்சி, குறிப்பிட்ட இயக்கம் etc. தெளிவா சொல்லிட்டா குறிப்பிட்ட ஆளுங்க மட்டும் வந்து கருத்து சொல்வாங்கல்ல?

 5. ஏசு எனும் வரலாற்று மனிதன், How can you say like this?

  I ask a simple question, give reply Mr. Vinau?

  If jesus is a man, How wonders happen in christian meetings?

  eg. A blind get sight, deaf can hear.. How is possible?

  before Write an Essay after analyse these things..

 6. //If jesus is a man, How wonders happen in christian meetings?

  eg. A blind get sight, deaf can hear.. How is possible?

  before Write an Essay after analyse these things..//

  can you give any scientifically verified proof or medically examined proof? Don’t compare these childrais with Jesus

   • பைபிள் இறைவனால் கொடுக்கப்பட்டதல்ல, மக்களை ஏயத்துப் பிழைக்க சில மனிதர்கள் எழுதப்பட்டது என்று நிரூபிக்கிறேன்,
    விவாதத்தை இங்கு வைத்துக்கொள்வோமா?
    நீங்கள் தயாரா?

     • அட நீங்கவேர, பைபிளை பொய்யென்று நிறுபித்தாலே போதும் குரானும் பொய்யாகிவிடும். ஏனென்றால் பைபிளை காப்பியடித்துதானே குரானை எழுதானுங்க.

      இவர்களும் யேசுவை அற்புத சக்திபடைத்த இறைதூதராகதானே நினைக்கிறார்கள், அவரை சாதாரண மனிதனாக நிரூபித்தால்.

      போதும் நான் சொல்லுவது சரிதானே?

      • போதும். நிறுத்திக்குவோம். 66A அப்படின்னு சொல்லி பயமுறுத்தறாங்க. பாத்து நடந்துக்குங்க 🙂

     • ஆதியாகமத்திலிருந்து தொடங்குவோம்….

      //3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

      5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று
      பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.//

      முதலாம் நாள் வெளிசத்தை உண்டாக்கினார் சரி, நான்காம் நாள் தான் சுடர்களை
      உண்டாக்குகிறார் என்று உள்ளது…

      //16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய
      இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
      19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.//

      அப்படியென்றால், சூரியன் (சுடர்) உருவாகும் முன் எப்படி வெளிச்சம் வந்தது?

      Question 2:
      //6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது
      என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
      7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற
      ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும்
      பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.//

      ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு என்றால், மேகம் மழைத்தருவதால் அதையும்
      ஜலம் என்றும், ”மேகத்திற்கு கீழ்தான் வானம் இருக்கிறது”, மேகத்தை
      தாண்டி ஒன்றுமேயில்லை என்று சொல்கிறார்கள்…

      ஆதாரம்:

      //18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும்
      வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் -அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே
      வைத்தார்;- தேவன் அது நல்லது என்று கண்டார்.//

      அதாவது மேகத்துக்கும் பூமிக்கும் இடையில் தான் சூரியன், நிலா,
      நட்சத்திரமெல்லாம் இருக்கிறதாம்…..

      Question 3:
      //21. தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள்
      ஜாதியின்படியேதிரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும்
      ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியானசகலவிதப் பட்சிகளையும்
      சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
      24. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய
      நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும்
      ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.//

      இதையெல்லாம் படைத்த இறைவன், உலகில் அதிகமாக வாழும், நம்மையாட்டி
      படைக்கும் நுன் உயிர்களை (Microorganisms) பற்றி ஏன் சொல்லவில்லை?

      ஒருவேளை இறைவனிடம் Microscope இல்லாததாலோ?

      (நல்லவேளை கிபி, 16 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு பைபிளை எழுதியிருந்தால்,
      ”மனிதனை தண்டிக்க,அவனது கண்ணுக்கு புலப்படாத உயிரினத்தைஉண்டாக்கினார்.
      அதன் மூலம் நோயை உண்டாக்குகிறார்!” என்று எழுதி வைத்திருப்பார்கள். )

      Question 4:
      //18. பின்பு தேவனாகிய கர்த்தர் : மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல,
      ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.//

      ஆணை படைத்தப்பிறகுதான் இறைவனுக்கு பெண்ணை படைக்க வேண்டிய எண்ணமே வந்திருக்கிறது, அப்படியென்றால் ஆதாம் படைக்கும் போது ஆதாமுக்கு ஆண் இனப்பெருக்க உறுப்பே இருந்திருக்காது அப்படிதானே?

      (ஆதாம் வேறு இறைவனின் சாயல்.
      ம்… நாம் எதுக்கு ஆழமாக போக வேண்டும், பிறகு தேவதூசனம் ஆகிவிடும்…)

      Question 5:
      //21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை
      வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில்
      ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.//

      ஆணை உருவாக்கிய இறைவனுக்கு பெண்ணை உருவாக்க முடியாதா?
      அவளை ஆணிலிருந்து தான் படைக்க வேண்டுமா?
      அப்படியென்ன இறைவனுக்கு
      நிர்பந்தம் வந்தது?

      (அதாவது ஆணிலிருந்து பெண் படைக்கப்பட்டதால் பெண் ஆணுக்கு அடிமை என அடிமைபடுத்தவா?
      நிச்சயம் மத நூல்களை எழுதியவர்கள் ஆண்களாகத்தான் இருந்திருப்பார்கள்)

      Question 6:
      சரி இறைவன் எல்லாவற்றையும் காரணத்தோடுதான் படைத்தார் என்றால்,
      பெண்களுக்கு மார்பகங்களை ஏன் படைத்தார்?
      ஏன் படைத்தார் என்றால், குழந்தைக்கு பால் கொடுபதற்கு.
      சரி, ஆணிக்கு மார்பகங்கள் ஏன் இருக்கிறது??

      ஆணை, முழு வளர்ச்சியில்லா மார்பகத்துடன் (nipples) படைக்க இறைவன் என்ன லூசா?

      (பரிணாமத்தின்படு பயன்படுத்தாத உறுப்பு மறைந்து போய்விடும்)

      Question 7:
      //16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை
      மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன்
      புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.//

      சரி, ஏவாள் சாபம் பெற்றதால் குழந்தை பெறும்போது வலி வருகிறது. மற்ற
      விலங்குகள் கன்று ஈனும் போது ஏன் வலியை உணர்கின்றன?

      (சில விலங்குகள்
      கன்று ஈனும்போது இறந்துகூட போகின்றன)

      அவை எந்த கனியை தின்றது?
      எந்த சாபத்தைப் பெற்றது?

      -அக்கால மனிதர்களின் அறிவியல் அறிவு இவ்வளவுதான், அறிவியல் வளர்ச்சி
      பெற்ற இக்காலத்தில் வாழும் நான் அவர்களை ஏளனம் செய்வது அறிவுடைமையாகாது,
      ஆனால் அவர்களின மக்களை ஏய்த்துபிழைக்கும் நோக்கம் காரி உமிழ வேண்டியது.

      எனது நோக்கம் உங்களை நாத்திகனாக மாற்றுவதல்ல, சிந்திக்க வைப்பது.
      இல்லை பைபிளை நம்புவேன் என்றால், மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலளிங்கள் பின் எனது கேள்விகளை தொடர்கிறேன்……

 7. மிகவும் அதிர்ச்சி யாக உள்ளது.இந்த விஷயத்தில் எல்லா மதமும் சம்மதம் .

 8. கர்த்தரே..! இந்த பாவிகளை..இல்ல..இல்ல கன்னியாஸ்த்ரீகள், பாதிரியார்களை இல்லை கர்த்தரே..!வினவு.கொம் பாவிகளை மன்னிப்பீராக….பீராக இல்ல கர்த்தரே மன்னிப்பீராக…

 9. //“பல நல்ல பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் – அதே நேரத்தில் தவறானவர்களும் இருக்கிறார்கள். நான் சர்ச்சுக்குச் செல்லும் இளம் கத்தோலிக்கப் பெண்களுக்குச் சொல்லிக் கொள்வது இது தான், உங்கள் பாவ மன்னிப்பை எந்தப் பாதிரியிடமும் அறிக்கையிடாதிருங்கள்..”//

  இது எல்லா இடத்திலயும் உள்ள பிரச்சினை தானே. பத்திரிக்கையாளர்களிடமும் ஆன்லைன் (முகமூடியிட்ட) எழுத்தாளர்களிடமும், நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் – அதே நேரத்தில் தவறானவர்களும் இருக்கிறார்கள். வினவைப்போன்ற மதக்காழ்ப்புடன் எழுதும் யோக்கிய சிகாமணிகள் பொதுவாக சுவாரசியமாக எழுத எதையும் எழுதுவார்கள்.

  கெட்டவன் எங்கய்யா இல்லை?

 10. ம்ம் என்னத்தை சொல்ல இப்படி தவறு செய்யும் பாதிரி பாதர் கள் பற்றி கிறிஸ்தவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் இவர்கள் ஜேசுவின் இடத்தில் இருந்து ஜெபிக்கிறார்கள் இவர்களை ஜெசுவாகவே பார்க்கவேண்டும் அதனால் குற்றங்களை காண முடியாது என்றும் இவர்கள் செய்யும் குற்றங்களுக்கு ஆண்டவரே தண்டனை கொடுக்கட்டும் என்கிறார்கள்

 11. போலிக் கிறிஸ்தவ சபைகளை ஆராயும் நீங்கள் உலகெங்கும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள “உண்மைக் கிறிஸ்தவ சபை” என ஒருமித்துத் தங்களைக் கூறிக்கொள்ளும் சமாதான மக்கள் நிறைந்த “யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகளை”ப் பற்றி (JEHOVAH’S CHRISTIAN WITNESSES) ஏன் ஆராயக் கூடாது?
  நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எந்த வம்பு தும்புக்கும் போகாத நல்ல மக்களாகவே இன்றுவரை காண்கிறேன்.
  கிறிஸ்தவ கொள்கைகளை தங்கள் வாழ்வில் கடைப் பிடிக்கும் இவர்கள் அமைதியாக ஒரு பெரும் புரட்சியையே செய்து வருகின்றனர்.

 12. //தம் வாழ்நாளை ரோம சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரான கலகங்களோடும், தொழுநோயாளிகளோடும் கழித்து, யூதர்களிடையே சமூக சீர்திருத்தங்கள் கோரி, இறுதியாக சிலுவையில் மரித்துப் போன வெகுளித்தனமும், வெள்ளந்தித்தனமும் நிரம்பிய ஏசு எனும் வரலாற்று மனிதன் என்றோ ஒரு நாள் தனது பெயரால் இப்படியொரு மிருகத்தனமான நிறுவனம் எழுந்து நிற்கும் என்று கற்பனை செய்திருப்பானா?// மிகவும் சிறப்பான் உண்மை யேசுவின் போதனை என்ன அவர் அமைக்க இருந்த அரசு என்ன என்பதை எந்த கிறிஸ்துவர்களும் புரிந்து கொள்ள வில்லை யேசு தெளிவாகவே சொல்லுகிறார் விவிலியத்தில் நான் அமைக்க இருக்கும் ராஜ்ஜியத்தில் பணக்காரனுக்கோ இல்லை முதலாளித்துவத்துக்கோ இடம் இல்லை “ஊசியின் காதிலே ஒட்டகம் நுழைவது எளிது ஆனால் பணக்காரன் நான் அமைக்கும் கடவுள் அரசில் நுழைவது கடினம் என்று ‘நான் ஏசு சொன்ன அரசு கம்மூனிச அரசு என்றே நம்புகொறென்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க