Friday, May 2, 2025
முகப்புஉலகம்ஐரோப்பாஸ்பெயின் : உடல் நலன் விற்பனைக்கு இல்லை !

ஸ்பெயின் : உடல் நலன் விற்பனைக்கு இல்லை !

-

பொது மக்களுக்கான மருத்துவ வசதிகளை வெட்டும் அரசின் திட்டத்தை எதிர்த்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், செவிலியரும், பொது மக்களும் டிசம்பர் 9-ம் தேதி நடத்தினர்.

வெள்ளை கோட்டும், நீல நிற அங்கியும் அணிந்த மருத்துவத் துறை ஊழியர்கள், “உடல் நலன் விற்பனைக்கு இல்லை”, “ஆரோக்கியம் 100 சதவீதம் பொதுத்துறையில், தனியார் மயத்துக்கு அனுமதி இல்லை” என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

சுமார் 25,000 பேர் கலந்து கொண்ட இந்த பேரணியில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மருத்துவமனைகளை கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் விடுவதை எதிர்த்தும் பதாகைகள் பிடிக்கப்பட்டிருந்தன.

ஸ்பெயின் நாட்டில் மருத்துவத் துறை 17 வட்டாரங்களில் சுயசார்புள்ள அரசு அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றது. மாட்ரிட் பகுதியில் பிரதம மந்திரி மரியானோ ரஜோயின் பாப்புலர் கட்சி ஆட்சியில் உள்ளது.

மரியானோ ரஜோயின் மத்திய அரசு திவாலாகும் வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் பாதுகாப்பதற்காக பொது மக்களுக்கான அரசு சேவைகளை ஒழித்து வருகிறது. மருத்துவத்துக்கான ஆண்டு ஒதுக்கீட்டில் 7 பில்லியன் யூரோ (சுமார் ரூ 45,000 கோடி) குறைக்கப்பட்டிருக்கிறது.  பொதுச் சேவைகளை தொடர்ந்து குறைப்பதன் மூலம் 2014க்குள் 102 பில்லியன் யூரோ மிச்சம் பிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளது அரசு.

மாட்ரிட் பகுதியில் 6 மருத்துவமனைகளையும், 27 கிளினிக்குகளையும் தனியார் கையில் விடுவதாக அக்டோபர் மாதம் அரசு முடிவெடுத்தது. நோயாளிகளிடமிருந்து 1 யூரோ (சுமார் ரூ 60) கட்டணமாக வசூலிக்கவும் பரிந்துரைத்திருந்தது.

இதை எதிர்த்து மாட்ரிட் பகுதியில் பணி புரியும் 75,000 மருத்துவர்களும் செவிலியர்களும் பிற மருத்துவத் துறை ஊழியர்களும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் தேவைப்பட்டால் வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்தனர்.

“அரசின் உண்மையான நோக்கம் நாட்டின் மருத்துவ அமைப்பை உடைத்து முற்றிலும் மாற்றி அமைப்பதுதான்” என்கிறார் போராட்டக் குழுவின் பத்திரிகைத் தொடர்பாளர் பாத்திமா பிரனாஸ்.

‘வெள்ளை அலை’ என்று அழைக்கப்படும் இந்தப் பேரணி சுகாதாரத் துறை பிரச்சனைகள் தொடர்பாக ஸ்பெயினில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது பெரிய போராட்டமாகும்.

மேலும் புகைப்படங்களுக்கு:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க