Tuesday, September 26, 2023
முகப்புஉலகம்அமெரிக்காநோபல் பரிசு: கொலைகாரனுக்கு சமாதானப்புறா பட்டம்!

நோபல் பரிசு: கொலைகாரனுக்கு சமாதானப்புறா பட்டம்!

-

நோபல் பரிசு2012-ம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துக்கு டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்பட்டது. நார்வே தலைநகர் ஆஸ்லோவின் நகர மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் ஹெர்மன் வான் ரொம்புய், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜோஸ் மானுவேல் பரோசோ, ஐரோப்பிய நீதிமன்றத்தின் தலைவர் மார்டின் ஷூல்ஸ் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தமது பொருளாதார நலன்களை ஒருங்கிணைத்து ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கிய ஜெர்மனி, பிரான்ஸ் தலைவர்களை பாராட்டிய பரோசோ, “ஐரோப்பாவின் ரகசிய ஆயுதம் – ஈடு இணையற்ற முறையில் நமது நலன்களை பிணைத்துக் கொண்டதன் மூலம் போரை ஒழித்துக் கட்டியதுதான்” என்றார்.

பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்கோஸ் ஹாலண்டேவும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமது உற்சாகத்தை தெரிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மனித உரிமை பாதுகாப்பு, ஜனநாயக அறங்கள், மக்கள் நல அரசமைப்பு, போர் இல்லாத அமைதி இவற்றுக்கான சாதனைகளுக்காக அமைதிப் பரிசு கொடுக்கப்படுவதாக நோபல் குழு அறிவித்திருந்தது.

2009-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு கொடுத்த காமெடியை மிஞ்சும் காமெடியை செய்து தன்னை அசைக்க முடியாத கோமாளியாய் பறைசாற்றிக் கொண்டுள்ளது நோபல் கமிட்டி.

அம்மாவுக்கு ஈழத்தாய் பட்டம்
அண்ணா ஹசாரேவுக்கு ஊழல் ஒழிப்பு போராளி பட்டம்
தா பாண்டியனுக்கு கம்யூனிஸ்ட் பட்டம்

போன்ற நகைச்சுவைகளை விட தேர்ந்த நகைச்சுவை தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு என்பது.

இரண்டாம் உலகப் போரின் போது தொழிலாளர்கள் புரட்சியை தடுப்பதற்காக ஜெர்மனியில் ஹிட்லரையும் இத்தாலியில் முசோலினியையும் மற்ற ஐரோப்பிய நாடுகள் வளர்த்து விட்டன. தாங்கள் வளர்க்கும் கடவுளான ஹிட்லர் சோவியத் யூனியனை வீழ்த்தி, கம்யூனிஸத்தை அழிப்பான் என கனவு கண்டனர்.

ஹிட்லரின் விரிவாக்கப் போர் இங்கிலாந்தையும் பிரான்சையும் நோக்கி திரும்பிய பிறகு போரின் கடைசிக் கட்டத்தில் அமெரிக்கா தனது பண மூட்டையுடன் கலந்து கொண்டது. சோவியத் யூனியனால் ஹிட்லரின் பேரரசு கட்டமைப்பு நொறுக்கப்பட்ட பிறகு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. போருக்குப் பிந்தைய கால கட்டத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மார்ஷல் திட்டம் மூலம் பொருளாதார உதவி, நேட்டோ கூட்டமைப்பு மூலம் இராணுவ ஆதிக்கம், ஐஎம்எப், உலக வங்கி போன்ற அமைப்புகள் மூலம் பொருளாதாரச் சுரண்டல் என்று தனது வல்லாதிக்கத்தை உலகெங்கிலும் பரப்பி வரும் அமெரிக்காவுக்கு துணையாகவும் போட்டியாகவும் இயங்கும் ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியத்துக்குத்தான் நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

18, 19-ம் நூற்றாண்டுகளில் உலக நாடுகளை நேரடியாக சுரண்டிய முன்னாள் காலனி ஆதிக்க ஐரோப்பிய நாட்டு அரசுகள், இன்று உலகெங்கும் மறுகாலனியாதிக்கத்தை நடத்தி வரும் அமெரிக்காவின் வாலைப் பிடித்துக் கொண்டே தாமும் உலக நாடுகளை சுரண்டுவதற்கு ஓநாய்களைப் போல அலைகின்றன.

அமெரிக்கா ஆப்கானிஸ்தான், ஈராக் மீது நடத்தும் போர்களிலும் லிபியா, சிரியா நாடுகளில் தூண்டி விடும் உள்நாட்டுப் போர்களிலும் ஐரோப்பிய நாடுகள் பங்கேற்கின்றன.

இங்கிலாந்து காமன்வெல்த் அமைப்பின் மூலம் தனது முன்னாள் காலனிகளில் வளர்ச்சி நிதி உதவி, தொண்டு நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று பல்வேறு வடிவங்களில் சுரண்டலை நடத்திக் கொண்டிருக்கிறது. பிரான்ஸ் இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்றும், அணு உலைகளை ஏற்றுமதி செய்தும் லாபம் சம்பாதிக்கிறது.

உலகப் போருக்குப் பிந்தைய 40 ஆண்டுகளில் தொழிலாளர் இயக்கங்கள் தமது நாடுகளில் வளராமல் இருக்க சோஷலிச முகமூடி போட்டு நடத்திய நலவாழ்வு அரசுகளை இன்று மூடிவிட்ட இந்த மேற்கு ஐரோப்பிய நாடுகள் உலகளாவிய கம்யூனிச இயக்கத்தின் தற்காலிக பின்னடைவுக்குப் பிறகு சந்தைப் பொருளாதார அராஜகத்தையும் கட்டவிழ்த்து விட்டன. அதன் விளைவாக திவாலான பொருளாதாரத்தை காட்டி 2008க்குப் பிறகு மக்களுக்கு கொடுத்த சலுகைகளை பிடுங்கிக் கொண்டிருகின்றன.

மக்கள் தமது வாழ்வாதாரங்களையும் உரிமைகளையும் மீட்க ஐரோப்பிய வீதிகளில் போராடி வருகிறார்கள். ஸ்பேயின், கிரேக்கம், இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கான பொது நலத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, வேலை இழந்து, வங்கிக் கடன் கட்ட முடியாமல் வீடுகள் பறிக்கப்பட்ட மக்கள் தம் மீது தொடுக்கப்பட்டிருக்கும் பொருளாதாரப் போருக்கு எதிராக அரசுகளுக்கு வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.

ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவை செய்யும் நபர்களுக்கும் அமைப்புகளுக்கும்  கொடுக்கும் அங்கீகாரமாக அமைதிக்கான நோபல் பரிசு பயன்படுத்தப்பட்டது. கம்யூனிச எதிர்ப்புக் கலைஞர்களுக்கும், ஏகாதிபத்தியங்களை ஏற்கும் மூன்றாம் உலக அரசியல் தலைவர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் தேடித் தேடி அமைதிப் பரிசு கொடுத்த நோபல் பரிசுக் குழு இன்று ஒபாமாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பரிசு கொடுக்க நேர்ந்திருப்பது காலத்தின் கட்டாயம்.

மார்க்கெட் போன சினிமா நடிகர்கள் சொந்த காசு போட்டு சொந்தப் படம் எடுப்பது போல நோபல் கமிட்டி இப்படியான கலர் கலர் வித்தைகளை காட்ட வேண்டியுள்ளது.

வெட்கம் மானம் இல்லாமல் ஒபாமாவும், ஐரோப்பிய யூனியனும் அமைதிப் பரிசை வாங்கிக் கொள்ளலாம், நோபல் கமிட்டி வெட்கமில்லாமல் அவர்களுக்கு அமைதிப் பரிசை கொடுக்கலாம். அட! இந்த முதலாளிங்க ஒருவனை இன்னொருவன் அசிங்கமாக கிண்டலடிப்பதும், இவன் அவனை அதை விட அசிங்கமாக காறித் துப்பிக் கொள்வதும், ஒருவருக்கொருவர் முதுகு சொறிந்து பாராட்டிக் கொள்வதும் வேறு வேறு இல்லை.

 

படிக்க:

 1. அமெரிக்க அடிமை மன்மோகன்,சோனியா கும்பலூக்கும் இந்த நோபல் பரிசை கொடுங்கப்பா நாடு வெளங்கும்!

  பா.சிதம்பரத்துக்கு ரெண்டா குடுத்தா பங்சன் ரொம்ப சிறப்பா இருக்கும்!!!!

 2. ஐரொப்பாவும்,அமெரிக்காவும் தான் உலகின் முதல் தர கொலை,கொள்ளக்காரகள் அதுவே நொபல்
  பரிசு பெறுவதுக்கு முதல் தகுதி.

 3. //
  2009-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு கொடுத்த காமெடியை மிஞ்சும் காமெடியை செய்து தன்னை அசைக்க முடியாத கோமாளியாய் பறைசாற்றிக் கொண்டுள்ளது நோபல் கமிட்டி.

  அம்மாவுக்கு ஈழத்தாய் பட்டம்
  அண்ணா ஹசாரேவுக்கு ஊழல் ஒழிப்பு போராளி பட்டம்
  தா பாண்டியனுக்கு கம்யூனிஸ்ட் பட்டம்

  போன்ற நகைச்சுவைகளை விட தேர்ந்த நகைச்சுவை தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு என்பது.//

  உண்மை

  அடுத்த வருடம் இலங்கைக்கு கொடுபானுகளோ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க