privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகூகிளின் வரி ஏய்ப்பு - இதுதாண்டா முதலாளித்துவம்!

கூகிளின் வரி ஏய்ப்பு – இதுதாண்டா முதலாளித்துவம்!

-

 எரிக் ஷ்மிட்த்.
எரிக் ஷ்மிட்த்.

பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் வந்தால் வேலை வாய்ப்பு பெருகும், அவர்கள் கட்டும் வரி மூலம் அரசுக்கு வருமானம் பெருகும். அதனால் நல வாழ்வுத் திட்டங்கள் பெருகும், அதனால் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்’ அதாவது ஔவையார் ‘வரப்புயர நீர் உயரும், நீருயர பயிர் உயரும், பயிருயர குடி உயரும், குடி உயர கோன் உயர்வான்’ என்று பாடியது போல பாடுகிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள்.

ஆனால், தமது லாப வேட்டைக்காக ஊழியர்களை ஈவு இரக்கம் இல்லாமல் வீட்டுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் உண்மை முகத்தைக் காட்டும் பன்னாட்டு பெருநிறுவனங்களின் இன்னொரு முகத்திரையையும் விலக்கிக் காட்டியிருக்கிறார் கூகுள் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஷ்மிட்த்.

‘ஆமா, நாங்க வரி ஏய்ப்பு செஞ்சோம். அதை நினைத்து பெருமைப் படுகிறோம். அதுதான் முதலாளித்துவம்’ என்று போட்டு உடைத்திருக்கிறார்.

2011-ம் ஆண்டு தனது வருமானத்தில் $9.8 பில்லியனை (சுமார் ரூ 54,000 கோடி) பெர்மூடா நாட்டில் பதிவு செய்தது மூலம் $2 பில்லியன் (சுமார் ரூ 11,000 கோடி) வரி ஏய்ப்பு செய்திருக்கிறது கூகுள். இது மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய வரி ஏய்ப்புத் தொகையை விட இரண்டு மடங்காகும்.

வெளிநாட்டுக் கிளை நிறுவனங்களின் வருமானத்தை, வருமான வரி விதிக்காத பெர்முடா நாடு வழியாக பெறுவதன் மூலம் கூகுள் தனது ஒட்டு மொத்த வரி விகிதத்தை பாதியாக குறைத்திருக்கிறது. பெர்முடாவுக்கு செலுத்தப்பட்டத் தொகை 2011-ல் கூகுளின் மொத்த லாபத்தில் 80 சதவீதம் ஆகும்.

இந்தத் தகவல் கூகுளின் நெதர்லாந்து கிளை நிறுவனம் நவம்பர் 21-ம் தேதி பதிவு செய்த அறிக்கையில் வெளியாகியிருக்கிறது.

கூகுள் சென்ற ஆண்டு தனது மொத்த வெளிநாட்டு லாபத்தில் வெறும் 3.2 சதவீதம் மட்டுமே வரியாக செலுத்தியது. அதன் வெளிநாட்டு விற்பனையில் பெரும்பகுதி 26 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை வருமான வரி செலுத்த வேண்டிய ஐரோப்பிய நாடுகளிலிருந்துதான் வருகிறது.

கூகுள் தனது வருமானத்தில் சுமார் 11 சதவீதத்தை ($4.1 பில்லியன் – ரூ 22,000 கோடி) இங்கிலாந்து நாட்டில் சம்பாதிக்கிறது. ஆனால், சென்ற ஆண்டு அங்கு $9.6 மில்லியன் (சுமார் ரூ 52 கோடி) மட்டுமே வரி செலுத்தியிருக்கிறது. டபுள் ஐரிஷ் மற்றும் டச் சாண்ட்விச் என்ற அமெரிக்கச் சட்டம் அனுமதிக்கும் இரண்டு முறைகளை ஒருங்கிணைத்து கூகுள் இந்த வரி ஏய்ப்பைச் செய்திருக்கிறது.

யுகேவிலும், பிரான்சிலும் வெளியாகும் விளம்பரங்களுக்கான கட்டணத்தை கூகுளின் அயர்லாந்து துணை நிறுவனம் ஒன்று பெற்றுக் கொள்கிறது. அந்த நிறுவனம் பெர்முடாவில் பதிவு செய்யப்பட்ட கூகுளின் இன்னொரு அயர்லாந்து துணை நிறுவனத்துக்கு உரிமத் தொகை செலுத்துகிறது. இரண்டு அயர்லாந்து நாட்டு நிறுவனங்கள் பயன்படுவதால் இரட்டை ஐரிஷ் (டபுள் ஐரிஷ்) முறை என்று இந்த உத்திக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் வரி பிடிக்கப்படுவதைத் தவிர்க்க, உரிமத் தொகையை நெதர்லாந்தில் (டச்) இருக்கும் துணை நிறுவனம் வழியாக பெர்முடாவுக்கு அனுப்புகிறது. இதனால் டச் சேண்ட்விச் என்ற பெயரும் இந்த முறைக்கு கிடைக்கிறது.  நெதர்லாந்து துணை நிறுவனத்தில் ஊழியர்கள் யாரும் கிடையாது.

கூகுளின் நெதர்லாந்து துணை நிறுவனம் பெர்முடா துணை நிறுவனத்துக்கு சென்ற ஆண்டு அனுப்பிய தொகை 2008-ம் ஆண்டை விட 81 சதவீதம் அதிகரித்து $9.8 பில்லியனை எட்டியது.

பிரான்சின் வரி அதிகாரிகள் இந்த ஆண்டு கூகுளின் வருமான வரியை $1.3 பில்லியன் ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். அவர்கள் ஜூன் 2011-ல் கூகுளின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தி கம்ப்யூட்டர் கோப்புகளை எடுத்துச் சென்றிருந்தனர்.

இத்தாலியில் வரித்துறை காவலர்கள் கூகுளின் மிலான் அலுவலகத்தில் சென்ற மாதம் தேடுதல் வேட்டை நடத்தினர்.

‘நான் ஒரு பாப்பாத்தி’ என்று சட்ட சபையில் அறிவித்த ஜெயலலிதாவைப் போல இப்போது கூகுளின் எரிக் ஷ்மிட்டும் ‘இதுதான் முதலாளித்துவம்’ என்று போட்டு உடைத்திருக்கிறார். ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று பட்டம் சூட்டி, பார்ப்பனியத்திற்கு பல்லக்குத் தூக்கிய வீரமணியைப் போல கூகுளின் முதலாளித்துவ இலக்கணத்துக்கு பொழிப்புரை எழுதப் போகிறவர்கள் யார்?

படிக்க: