privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்2ஜி ஏலம் : காங்கிரசு - கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் களவாணித்தனம் !

2ஜி ஏலம் : காங்கிரசு – கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் களவாணித்தனம் !

-

ஸ்பெக்ட்ரம்-ஊழல்-1

ச்ச நீதிமன்றம் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவால் ஜனவரி, 2008-இல் ஒதுக்கீடு செயப்பட்ட 122 அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்ததோடு, அந்த உரிமங்களை ஏலமுறையில் மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மைய அரசிற்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ரத்து செயப்பட்ட அந்த உரிமங்களின் ஒரு பகுதியை மீண்டும் ஒதுக்கீடு செய்வதற்கு நடத்தப்பட்ட ஏலம் ‘எதிர்பார்த்த’ பலன்களை அளிக்காமல் தோல்வியில் முடிந்துவிட்டதாகக் கூறி, அதனைக் கொண்டாடியும் வருகிறது, காங்கிரசு.

நாடெங்கிலுமுள்ள 22 தொலைபேசி வட்டங்களுக்கும் நடந்த இந்த ஏலத்தில், அதிக வருவாயை ஈட்டித் தரத்தக்க டெல்லி, மும்ப, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய வட்டங்களை ஏலத்தில் எடுக்க எந்தவொரு நிறுவனமும் முன்வரவில்லை. மீதமுள்ள 18 வட்டங்களிலும் பெருத்த போட்டியின்றி, மொத்தமே 20 உரிமங்கள்தான் விற்பனையாகியிருக்கின்றன. இந்த 18 வட்டங்களிலும், கைபேசி சேவை வளர்ச்சி குறைவாக உள்ள ஒரு சில வட்டங்களைத் தவிர, பெரும்பாலான வட்டங்களில் அரசு நிர்ணயித்த அடிப்படை விலையைவிடக் குறைவாகவே ஏல விற்பனை நடந்திருக்கிறது. சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருந்த அலைக்கற்றைகளில் ஒரு சதவீதம்கூட ஏலத்தில் விற்பனையாகவில்லை. ஏலத்தில் கலந்துகொண்ட எந்தவொரு நிறுவனமும் அகில இந்திய உரிமம் கேட்கவில்லை. குறிப்பாக, இந்த ஏலத்தின் மூலம் அதிகபட்சம் 40,000 கோடி ரூபாய் அளவிற்கு அரசிற்கு வருமானம் கிடைக்குமென மைய அரசு கூறிவந்தது. ஆனால், அலைக்கற்றைகள் மிகக் குறைவாக 9,407 கோடி ரூபாய்க்குத்தான் ஏலத்தில் விற்பனையாகியுள்ளன.

முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா அலைக்கற்றைகளை முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற முறையில், மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்ததால் அரசிற்கு 1,76,000 கோடி ரூபாய் அளவிற்கு உத்தேச வருமான இழப்பு ஏற்பட்டதாகத் தலைமைத் தணிக்கைத் துறை குற்றஞ் சுமத்தியிருந்தது. தற்பொழுது நடந்துள்ள ஏலம் அரசிற்கு அதிக வருமானம் ஈட்டித் தரத் தவறிவிட்டதைக் காட்டி, தலைமைத் தணிக்கைத் துறையின் குற்றச்சாட்டு பொய்யாகிவிட்டது என வாதாடி வருகிறது, காங்கிரசு. நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஏலத்தின் மூலம் ஏன் எடுக்க முடியாமல் போனது என்பதற்கு விளக்கமளிப்பதைவிட, திருவாளர் தலைமைத் தணிக்கை அதிகாரியே, 1.76 இலட்சம் கோடி ரூபாய் எங்கே?”, தலைமைத் தணிக்கைத் துறை தனது கணக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றெல்லாம் கூறி, மைய அமைச்சர்கள் மணீஷ் திவாரி, ப.சிதம்பரம், கபில் சிபல் ஆகியோர் தலைமைத் தணிக்கைத் துறையைக் கிண்டல் செய்து வருகிறார்கள். மேலும், இந்த ஏல விற்பனை, தலைமைத் தணிக்கைத் துறை குற்றஞ்சுமத்தியபடி அலைக்கற்றை ஒதுக்கீடு விற்பனையிலோ, நிலக்கரி ஒதுக்கீடிலோ எந்தவிதமான முறைகேடும் நடக்கவில்லையெனக் காட்டுவதாகவும்” அடித்துப் பேசி வருகின்றனர்.

‘‘2008-ஆம் ஆண்டில் இந்தியாவில் 23 கோடி பேரிடம்தான் கைபேசி இருந்தது; 80 கோடி பேருக்கு கைபேசி சேவை அளிக்க வேண்டிய அளவிற்கு சந்தை வாப்புகள் இருந்தன. 2012-லோ ஏறத்தாழ 90 கோடி பேர் கைபேசி சேவை வட்டத்திற்குள் வந்துவிட்டனர். அதாவது, சந்தை ஏறக்குறைய நிரம்பிவிட்டது. இதுமட்டுமின்றி, கைபேசி நிறுவனங்களுக்கு உபயோகிப்பாளர்களிடமிருந்து கிடைக்கும் வருவாயும் குறைந்துவிட்டது. இந்தச் சந்தை நிலவரத்தைப் புரிந்து கொள்ளாமல் அரசு அடிப்படை விலையை அதிகமாக நிர்ணயித்துவிட்டதால்தான் ஏலம் தோல்வியடைந்துவிட்டதாக”ப் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்தக் காரணத்தை முதலாளித்துவப் பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும்கூடச் சுட்டிக் காட்டினாலும், ஏலத்தின் தோல்வியைக் காட்டி, 2ஜி ஒதுக்கீடு குறித்த தலைமைத் தணிக்கைத் துறையின் கணக்கீடு தவறு என காங்கிரசு பிரச்சாரம் செய்துவருவதை இவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். 2008-இல் சந்தை சூடாக இருந்தபொழுது அலைக்கற்றைக்குக் குறைந்த விலையை நிர்ணயம் செய்ததன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது; இப்பொழுது சந்தை நிரம்பிவழியும் நிலையில் அடிப்படை விலையை அதிகமாக நிர்ணயம் செய்ததன் மூலம் ஏலத்தின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது” என எதிர்க்கட்சிகள் காங்கிரசின் மீது குற்றஞ்சுமத்துகின்றன.

இந்தியாவில் 90 கோடி பேரிடம் செல்போன் இருப்பதாக ஒருபுறம் கூறிவிட்டு, மறுபுறம் இவ்வளவு பெரிய சந்தைக்கு சேவை அளித்து வரும் செல்போன் கம்பெனிகளின் வியாபாரம் சரிந்து வருகிறது; வருமானமும் இலாபமும் படுத்துவிட்டது எனக் கூறுவது அபத்தமாகத் தெரிகிறது. ஒரு வாதத்திற்கு செல்போன் கம்பெனிகளின் வியாபாரம் படுத்துப் போவிட்டது என இவர்கள் கூறுவதை உண்மையென்று வைத்துக் கொள்வோம். பொருளாதாரப் புலிகளாகக் கருதப்படும் மன்மோகன் சிங்கும், அலுவாலியாவும், ப.சிதம்பரமும் அந்த நிலையைப் புரிந்து கொள்ளாமலா, அடிப்படை விலையைக் கூடுதலாக நிர்ணயம் செய்திருப்பார்கள்?  அலைக்கற்றை உள்ளிட்ட இயற்கை வளங்களை அடிமாட்டு விலையில் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் படையல் போட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் மன்மோகன் சிங் கும்பல், அரசிற்கு அதிக வருமானம் தேடித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் அடிப்படை விலையை அதிகமாக நிர்ணயம் செய்திருக்க முடியாது. அப்படியொரு நல்ல நோக்கம் மன்மோகன் சிங்கிற்கு இருந்திருந்தால், 2008-ஆம் ஆண்டிலேயே அலைக்கற்றைகளை அதிக விலைக்கு ஒதுக்கீடு செய்து அரசின் கஜானாவை நிரப்பியிருக்கலாம்.

''நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில்தான், சி.ஏ.ஜி. 2ஜி ஒதுக்கீட்டில் 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை தயாரித்தது'' எனக் குற்றஞ் சுமத்தியுள்ள சி.ஏ.ஜி.யின் முன்னாள் இயக்குநர் ஆர்.பி.சிங்.
”நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில்தான், சி.ஏ.ஜி. 2ஜி ஒதுக்கீட்டில் 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை தயாரித்தது” எனக் குற்றஞ் சுமத்தியுள்ள சி.ஏ.ஜி.யின் முன்னாள் இயக்குநர் ஆர்.பி.சிங்.

உண்மை என்னவென்றால், பொருளாதார நிபுணர்கள் கூறுவதற்கு மாறாக, மன்மோகன் சிங் கும்பல் அடிப்படை விலையை ஓரளவு குறைத்துதான் நிர்ணயித்தது. அலைக்கற்றைகளை அகில இந்திய அளவில் உரிமம் பெறுவதற்கு அடிப்படை விலை 18,000 கோடி ரூபா என நிர்ணயம் செய்தது, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம். அதனை, 14,000 கோடி ரூபாயாகக் குறைத்தது, மன்மோகன் சிங் அரசு. ஆனாலும், இதனை இன்னும் பாதியாக, 7,000 கோடி ரூபாயாகக் குறைக்க வேண்டும் என சவுண்டு கொடுத்தன செல்போன் கம்பெனிகள். ஆனாலும், காங்கிரசு தன்னை நியாயவானாகக் காட்டிக்கொள்வதற்காகவே, செல்போன் கம்பெனிகள் கோரியபடி அடிப்படை விலையைக் குறைக்காமல் ஏலத்தை நடத்தியது. அடிப்படை விலை குறைக்கப்படாததைக் காட்டி டாடா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏலத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.

அலைக்கற்றைகளை ஏலத்தில் விட்டிருந்தால் அதிக வருமானம் ஈட்டியிருக்க முடியும்” எனக் கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம்; முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றை களை ஒதுக்கி யதால் அரசுக்கு 1.76 இலட்சம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது” எனக் கூறிவரும் தலைமைத் தணிக்கைத் துறை ஆகிய வற்றின் முகங்களில் கரியைப் பூசவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் காங்கிரசு இந்த ஏலத்தைத் திட்டமிட்டு நடத்தியது.

செல்போன்  நிறுவனங்களுக்கோ இந்த ஏலம் போணியாகாமல் முடிவது வேறொரு காரணத்திற்காக அவசியமாக இருந்தது. பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பழைய செல்போன் நிறுவனங்களுக்கு 20 ஆண்டு களுக்கு முன்பு ஒதுக்கப் பட்ட அலைக்கற்றைகளின் உரிமம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. தற்பொழுது நடந்துள்ள இந்த ஏலத்தின் விற்பனையைப் பொருத்தே, அடுத்த ஆண்டு முடிவடையும் அலைக்கற்றைகளின் உரிமத்தைப் புதுப்பிக்கும் அடிப்படைத் தொகை நிர்ணயிக்கப்படும் எனத் தொலைத்தொடர்புத் துறை அறிவித்திருந்ததால்” இந்த ஏலம் மண்ணைக் கவ்வுவதை அந்நிறுவனங்களும் விரும்பின. இப்படியாக அதிக வருமானம் ஈட்டிவிடாதபடி இந்த ஏலத்தை நடத்தி முடிப்பதில் காங்கிரசும் செல்போன் நிறுவனங்களும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டுள்ளனர்.

2008-இல் சந்தை சூடாக இருந்ததால், கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து அலைக்கற்றைகளை வாங்க போட்டி போட்டிருப்பார்கள் எனப் பொருளாதார நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் கூறிவருவதும்கூட, ஒருவிதமான அனுமானம், கற்பிதம்தான். ஏனென்றால், கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்பொழுதுமே தமது நலனுக்கு ஏற்ற வகையில் சந்தையை வளைக்கவும், நிமிர்த்தவும், கூட்டணி கட்டிக்கொண்டு விலையை வீழ்த்தவும் தயங்கியதே கிடையாது.

இது மட்டுமின்றி, 2008-இல் அலைக்கற்றைகளுக்கு அதிக விலை நிர்ணயித்து விற்பனை செய்திருந்தால் அரசிற்கு 1.76 இலட்சம் கோடி ரூபா வருமானம் கிடைத்திருக்கும் என்பதுகூடச் சர்ச்சைக்குரியதுதான். தலைமைத் தணிக்கைத் துறை அரசுக்கு ஏற்பட்டுள்ள உத்தேச வருமான இழப்பு 1.76 கோடி ரூபா என்கிறது. ஆ.ராசா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுத்துள்ள மையப் புலனாவுத் துறை, தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள உத்தேச வருமான இழப்பு 30,984.55 கோடி ரூபாதான். பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரான அருண் ஷோரிகூட வருமான இழப்பு 30,000 கோடி ரூபாதான் இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.

இந்த மதிப்பீடுகள் ஒருபுறமிருக்க, தலைமைத் தணிக்கைத் துறையில் தபால் மற்றும் தொலைத்தொடர்புத் துறைத் தணிக்கை பிரிவுக்கான முன்னாள் இயக்குநர் ஆர்.பி. சிங், 2ஜி அலைக்கற்றை பற்றிய வரைவு அறிக்கை மே,2010-இல் தயாரானபொழுது உத்தேச வருமான இழப்பு 2,645 கோடி ரூபா என்றுதான் கணக்கிடப்பட்டது; பின்னர் பொது கணக்குக் குழு ஆலோசனைப்படி உத்தேச இழப்பு 1.76 இலட்சம் கோடி ரூபாயாக மாற்றப்பட்டது” என்று இப்பொழுது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இவற்றுள் யார் சொல்வதை நம்புவது?

ஊழலைப் பிரம்மாண்டமானதாகக் காட்டுவதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில்தான் பா.ஜ.க., ஜெயா, சு.சாமி, முதலாளித்துவப் பத்திரிகைகள் 1.76 இலட்சம் கோடி ரூபா என்ற கணக்கீட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். தலைமைத் தணிக்கைத் துறை அலைக்கற்றை ஒதுக்கீடில் அரசிற்கு 1.76 இலட்சம் கோடி ரூபா அளவிற்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றுதான் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது. ஆனால், எதிர்த்தரப்போ ஏதோ 1.76 இலட்சம் கோடி ரூபா அளவிற்கு இந்த ஒதுக்கீடில் ஊழல் நடந்து, அப்பணம் முழுவதையும் ராசாவும், தி.மு.க.வும் பங்கு போட்டுக் கொண்டதைப் போலப் புளுகி வருகிறார்கள்.

அலைக்கற்றை ஒதுக்கீடில் அரசிற்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் வருமான இழப்பு பற்றி பல்வேறு மாறுபட்ட மதிப்பீடுகள் இருக்கும் அதேசமயம், அவை அனைத்தும் உத்தேசமானதுதான். அவற்றை உண்மையாகவே ஏற்பட்டுள்ள வருமான இழப்பாகக் கருதி விடவும் முடியாது. ஆ.ராசா ஒதுக்கீடு செய்த அலைக்கற்றைகளை ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ள முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எஸ். கபாடியாகூட, இலாபம் என்பது கருதுகோள்தான்” என விளக்கமளிக்கிறார். அதேசமயம், 2ஜி ஊழல் போலன்றி, உண்மையாகவே அரசிற்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள, 2ஜி ஊழலைவிடப் பலமடங்கு பிரம்மாண்டமான ஊழல்கள் பற்றி – உ.பி.யில் நடந்த 2 இலட்சம் கோடி ரூபா பெறுமான ரேஷன் அரிசி கடத்தல் ஊழல், அரசிற்குப் பல இலட்சம் கோடி ரூபா வருமான இழப்பை, நட்டத்தை ஏற்படுத்தி வரும் கிருஷ்ணா-கோதாவரி எண்ணெ வயல் ஊழல் பற்றி எதிர்த்தரப்பு வாயே திறக்க மறுக்கிறது.

மற்ற ஊழல்களைவிட 2ஜி ஊழல் விவகாரம் இந்தளவிற்குப் பரபரப்பாகப் பேசப்படுவதற்கு அரசியல் உள்நோக்கங்களும், கோஷ்டி சண்டைகளும்தான் காரணமேயொழிய, ஊழலை அறவே ஒழித்துவிட வேண்டும் என்ற அறம் சார்ந்த அடிப்படை எதுவும் கிடையாது. 2 ஜி ஒதுக்கீடில் நடந்துள்ள முறைகேடுகளைத் தலைமை தணிக்கைத் துறை அம்பலப்படுத்துவதற்கு முன்பாகவே, மாறன் – கருணாநிதி குடும்பத்துக்கு இடையே நடந்த சண்டை காரணமாக, மாறன் சகோதரர்கள் அம்முறைகேடுகளைக் கசியவிட்டனர். கருணாநிதி-மாறன் குடும்பங்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்ட பின்னர், இந்த விவகாரம் அப்படியே அமுக்கப்பட்டது. இதன் பின்னர் அலைக்கற்றை ஒதுக்கீடில் ஆதாயமடைந்த முதலாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, நீரா ராடியே டேப் அம்பலப்படுத்தப்பட்டது. அதிலும் தரகு முதலாளிகளான டாடா, அனில் அம்பானி; பத்திரிகையாளர்களான வீர் சங்வி, பர்கா தத் என சம்பந்தப்பட்ட பலர் விலக்கப்பட்டு, ராசா, கனிமொழி மட்டும் பத்திரிகைகளாலும் எதிர்க்கட்சிகளாலும் குறிவைக்கப்பட்டனர்.

2ஜி ஏலம் 'ஊத்திக் கொண்டதை'க் காடித் தலைமைத் தணிக்கைத் துறைக்குச் சவால் விட்டு விரும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தொலைத் தொடர்ப்புத்துறை அமைச்சர் கபில் சிபல்
2ஜி ஏலம் ‘ஊத்திக் கொண்டதை’க் காடித் தலைமைத் தணிக்கைத் துறைக்குச் சவால் விட்டு விரும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தொலைத் தொடர்ப்புத்துறை அமைச்சர் கபில் சிபல்

‘‘ஆ.ராசா கைபேசி சேவை சந்தையில் உப்புமா கம்பெனிகளுக்கு இடங்கொடுத்து ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கிவிட்டதாகவும், அதனால்தான் பல நிறுவனங்கள் இத்துறையில் புதிதாக மூலதனமிடத் தயங்குவதாகவும்” முதலாளிகள் குற்றஞ்சுமத்துகிறார்கள். ஒரு சில நிறுவனங்களின் பிடியில் இருந்த கைபேசி சேவையை உடைத்து, கைபேசி கட்டணத்தைக் குறைக்க வழி ஏற்படுத்தியதைப் பொறுக்காமல்தான் தன் மீது பழம் பெருச்சாளிகள் பாவதாக’’ப் பதிலடி கொடுக்கிறார், ஆ.ராசா.

இது மட்டுமின்றி, தனக்கு முன்பு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்களாயிருந்த தயாநிதி மாறன், அருண் ஷோரி ஆகியோரும் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்தான் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்திருக்கும்பொழுது, தான் மட்டும் எப்படிக் குற்றவாளியாக முடியும்? எனக் கேள்வி எழுப்பி வருகிறார்.

ஆ.ராசா 2008-இல் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்த அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அதற்கு முன்னர் இதே அடிப்படையில் ஒதுக்கீடு செயப்பட்ட உரிமங்களை ஏன் ரத்து செய்யவில்லை என்ற கேள்விக்கு, அந்த ஒதுக்கீடுகள் குறித்து யாரும் வழக்குத் தொடுக்கவில்லை என்று கூறித் தப்பித்துக் கொள்கிறது.

பா.ஜ.க. ஆட்சியில் செல்போன் கம்பெனிகளுக்குச் சாதகமாகக் கொண்டுவரப்பட்ட புதிய தொலைத்தொடர்புக் கொள்கையின் விளைவாக அரசிற்கு 50,000 கோடி ரூபாய் வரை வருமானம் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றஞ்சுமத்தி, பா.ஜ.க.வைச் சந்திக்கு இழுத்தது, காங்கிரசு. பா.ஜ.க.வோ, தனது ஆட்சியின்பொழுது இருந்த சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப, தான் செல்போன் கம்பெனிகளுக்குச் சலுகை அளித்ததாகவும், இதில் முறைகேடு எதுவுமில்லை என்று வாதிடுகிறது.

அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், ஒதுக்கீடு பெற்ற மறுநிமிடமே தமது பங்குகளைச் சந்தையில் விற்றுக் கொள்ளலாம் என்ற சட்டத் திருத்தம் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. டாடா டெலி சர்வீசஸ், ஸ்வான், யுனிடெக் ஆகிய நிறுவனங்கள் ஆ.ராசா ஒதுக்கிய அலைக்கற்றைகளைப் பெற்ற கையோடு, தமது பங்குகளைச் சந்தையில் விற்று 22,000 கோடி ரூபா அளவிற்கு இலாபமடைந்ததற்கு பா.ஜ.க. கொண்டு வந்த இந்தச் சட்டத் திருத்தம்தான் உதவியிருக்கிறது.

ஆ.ராசா அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகளோ, ஊழலோ நடைபெறவில்லை என்பதல்ல நமது வாதம். மாறாக, 2ஜி ஊழல் விவகாரம், ஓட்டுக்கட்சிகள் உள்ளிட்டு இன்றுள்ள அரசியல்-பொருளாதார-நிர்வாகக் கட்டமைப்பே ஊழலும் மோசடிகளும் முறைகேடுகளும் நிறைந்தது; கார்ப்பரேட் பகற்கொள்ளைக்குச் சாதகமானது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருப்பதைத்தான் முதன்மையாக கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கோருகிறோம்.

ஆனால், தனியார்மயம்-தாராளமயம் என்ற மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையைவிட, அதிகாரத் தாழ்வாரங்களில் நடந்துவரும் ஊழலும் அதிகாரமுறைகேடுகளும்தான் நாட்டைப் பிடித்திருக்கும் அபாயம் என்பதாக நடுத்தர வர்க்கம் நம்பிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் பல இலட்சம் கோடி ரூபா பெறுமான வரிச்சலுகைகளும், கார்ப்பரேட் நிறுவனங்களோடு போட்டுக் கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இன்ன பிற சலுகைகளும் 2ஜி ஊழலைவிட மிகப்பெரிய ஊழல்-பகற்கொள்ளை என்பதை நடுத்தர வர்க்கம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. உச்ச நீதிமன்றம், தலைமை தணிக்கைத் துறை உள்ளிட்ட அரசியல் சாசன அமைப்புகளும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் காட்டப்படும் இச்சலுகைகளை நாட்டை உய்விக்க வந்த கொள்கைகளாகத்தான் கருதுகின்றன.

2ஜி விவகாரத்தை எடுத்துக் கொண்டால், விலைமதிப்பற்ற இயற்கை வளமான அலைக்கற்றைகளைத் தனியார் முதலாளிகளுக்குப் படையல் போட்டுக் கொடுக்கும் கொள்கையை, நாட்டின் நலனுக்கு எதிரானதாக உச்ச நீதிமன்றம் கருதவில்லை. அதனை எப்படிப் படையல் போட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்பதில்தான் ஆளுங் காங்கிரசுக் கட்சி, எதிர்க்கட்சிகள், உச்ச நீதிமன்றம் ஆகியவை பிரிந்துநின்று மோதிக் கொள்கிறார்கள். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழலுக்கும் தனியார்மயத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது; அவ்வூழல் என்பது ராசாவும் சில அதிகாரிகளும் முதலாளிகளும் கூட்டாகச் சேர்ந்து நடத்திவிட்ட சதியாக, நெறியற்ற செ யலாகக் காட்டிவிடத்தான்” உச்ச நீதிமன்றம் முயலுகிறது. இப்படிபட்ட முறைகேடுகளும், சந்தையில் திடீர்திடீரென ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அராஜகம், நிச்சயமற்றதன்மை ஆகியவை இல்லாமலும் தனியார்மயத்தை நடைமுறைப்படுத்திவிட முடியும்; அதன் மூலம் நாட்டின் வளர்ச்சியைச் சாதித்துவிட முடியும் என்ற நம்பிக்கையைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த முயலுகிறது. அப்படியே அதில் ஊழல் நடந்தாலும், ஊழல் பேர்வழிகளை இந்த அரசியல் அமைப்பின் மூலம் தண்டித்துவிட முடியும் என்ற நம்பிக்கையைப் பொது மக்கள் மத்தியில் மீண்டும் விதைக்கும் நோக்கிலும்தான் 2ஜி ஊழல் விவகாரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கையாண்டு வருகிறார்கள்.

____________________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
__________________________________________________