privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்மற்றுமொரு ஐடி காதல் கதை....

மற்றுமொரு ஐடி காதல் கதை….

-

ரட்டைகள், அக்கப்போர்கள், வேலை, சம்பள உயர்வு, மேனேஜர் பற்றிய புலம்பல்கள், கிசுகிசுக்கள் என்று பல்வேறு கதைத்தல்கள் நடக்கும் இடம், பல ஐடி நிறுவனங்கள் இயங்கும் அலுவலக வாசலில் உள்ள டீக்கடை

பிஸியாக பேசிக்கொண்டு இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அந்தச் சத்தம்

சர்ர்ர்ர்——- என்று ஒரு ஸ்கூட்டி மின்னல் வேகத்தில் வந்து நின்றது. வந்த பெண்னை நாங்கள் எங்க காம்ப்ளெக்சில் பார்த்ததே இல்லை. அதுவும் வந்த வேகமும், வண்டியை ஒழுங்கில்லாமல் அப்படியே நிருத்தி வைத்ததும் ஏதோ விவகாரம் போல என்று தோன்றச்செய்தது….

“Hey da, what a surprise” என்று சொல்லி முன் வந்த ரவியைத்தான் அவள் சந்திக்க வந்து இருக்கிறாள் என்பது புரிந்தது. சரி எதோ லவ்ஸ் மேட்டர் போலன்னு நினைத்தபடி கிளம்ப எத்தனித்த எங்களை தடுத்து நிறுத்தியது என்னடா ஹாய் என்று அவள் போட்ட சத்தம்.  சத்தம் போட்டதுதான் தாமதம் ரவியுடன் நின்ற அவன் நண்பர்களெல்லாம் நைசாக  விலக ஆரம்பித்தனர்.

அவள் கத்தியவுடன் அவன் கையை பிடிக்க அவன் வர, அவனை ஒரே தள்ளு தள்ளினாள் அவள்.

“என்னம்மா, என்னாச்சுடா Any Problem

”என்னடா இப்போ அம்மா, அம்மாங்குற, இன்னொருத்திய பை’க்லே வச்சு ஊர் சுத்தும் போது இந்த அம்மா ஞாபகம் வரலோயோ?’

”Hey Babe, I guess you have misunderstood, தப்பா புரிஞ்சுக்கிட்டேன்னு நினைக்கிறேன்”

“என்னடா guess, உன்னைப்பத்தி எனக்கு தெரியதா? எனக்கு முன்னே ஒருத்தியே லவ் பண்ணி, அவ உனக்கு அல்வா கொடுத்த, ஈவநிங்கே என்னை காஃபி ஷாப் கூப்பிட்டவன் தானேடா நீ. STOP ALL YOUR CRAPPPPP…

அலுவலக வாசலிலேயே அவமானப்படுவது வேதனையளித்தது ரவியின் முகத்திலேயே தெரிந்தது. அவன் பேசுவது  சரியாக காதில் விழவில்லை என்றாலும், அவன் அவளை கையை பிடித்து சமாதானம் செய்ய முயற்சி செய்வதும் அதை அவள் பொருட்படுத்தாமல் பேசுவதுமாக இருந்தது.

“Its over Ravi, its over, just get the #$^& out from my sight and life,  நீ ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர் கூட இல்ல After all ஒரு மிடியா டெவலப்பர், போனா போகுதுன்னு உன்னை லவ் பண்ண பாரு, you have taught me a good lesson”

”ஆபீஸ்மா, கத்தாதம்மா பிளீஸ்”

என்னாடா எனக்கே Corporate Culture சொல்லி தரியா? IT பொண்ணு ஆச்சே சும்மா விட்டுவிடுவான்னு நினைச்சியா? எனக்கு உன்னை மாதிரி low class பசங்ககிட்ட எப்படி பேசனும் நல்லா தெரியும்டா”

“பிளிஸ் பவி”

”டேய் பவி என்னடா பவி, பவித்ரான்னு சொல்லுடா என் பெயரை சுருக்க உனக்கு என்னடா ரைட்ஸ் இருக்கு”

”பிளீஸ் பவித்ரா நான் சொல்றத கேளுடா, நான் அந்த பொன்னே பஸ் ஸ்டான்டுலே தாண்டா டிராப் பண்ண போனேன்”

”முதலே என்னை வாடா போடா சொல்லுறத நிறுத்துடா, உன் ஆபிஸ் வேளச்சேரி, இங்க பஸ் ஸ்டான்டுலே டிராப் பண்ண மாட்டே டைடல் பார்க் பஸ் ஸ்டான்டுலேதான் டிராப் பண்ணுவியோ. இந்த கதையெல்லாம் எனக்கு சொல்லாதே”

”நான் உன்னை மாதிரி B.Com இல்லடா, B.E, உன்னை விட 200% சதவிதம் அதிக சம்பளம் வாங்குறேன், இப்போக்கூட USக்கு போரவங்க லிஸ்ட்’லே என் பெயர் டாப்ல இருக்கு. எதுவோ முன்னாடி Love  Failure  ஆகி இருக்கே, அந்த Experienceல என்னை நல்லா பார்த்துக்குவே, அடங்கி இருப்பேன்னு நினைச்சேன்,

“…..”

உனக்கு அப்பா, அம்மா யாரும் இல்லை, அதனாலே கல்யாணத்துக்கு அப்புறம் என் அப்பா, அம்மா என் கூட இருக்க ஒத்துகிட்டத்தையெல்லாம் யோசிச்சுதான் OK சொன்னேன். அதை மொதல்ல தெரிஞ்சுக்கோ.

“…..”

“உன் வேலை, பிசாத்து சம்பளம், உன்னோட STUPID ENGLISH, எதுவும் என்னை கவர் பண்ணலே, புரியுதா I am happy you  are out of my life! இது தான் உன்னை கடைசியா பார்த்தா இருக்கனும், do not disturb me anymore. மீறி என்ன தொல்லை பண்ணே என் செருப்பு தான் பேசும்” என்று செருப்பை எடுத்து அவன் முகத்தின் முன்னால் ஆட்டினாள்.

“இன்னும் ஒரு மாசத்தில் என் Statusக்கு ஏத்த ஆளோட உன் முன்னாடி நான் கார்ல போவேன் அப்போ தெரியுன்டா உனக்கு என் Value என்று கூறிவிட்டு வேகமாக வந்ததைப்போல் மறைந்தாள்.

————————-

ரவி சென்னை நகரத்தில் பிறந்து வளர்ந்த நாகரீக இளைஞன், வேகம், துடிப்பு, நுனிநாக்கு ஆங்கிலம், பந்தாவாக பைக், ஐ-போன், ஐ.டி நிறுவன வேலை, ஏடிம் அட்டை, நண்பர்கள், வார இறுதிக் கொண்டாட்டங்கள் என்று வாழும் சராசரி ஐடி இளைஞன். வீடு, கார், வாங்க வேண்டும், பகட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ஒரு சராசரி யப்பி இளைஞன்.

இந்த சம்பவம் குறித்து ரவியின் அலுவலகத்தில் அவனுக்கு எச்சரிக்கை கடிதம் தரப்பட்டது. ‘சொந்த விஷயங்கள் அலுவலக மதிப்பை கெடுக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், அது எல்லாருக்கும் தெரியும் வண்ணம் இருக்கக் கூடாது’ என்று வலியுறுத்தப்பட்டது. ‘இனிமேல் இதை மீறினால் அப்ரைசலுக்கு கேடு வரும்’ என்றும் அவன் மேலாளர் எச்சரித்தார். அப்ரைசல் என்ற பணி மதிப்பீடுதான் ஒவ்வொருவரும் வேலையை தக்க வைத்துக் கொள்வதையும், பதவி உயர்வு பெறுவதையும் தீர்மானிக்கும் வருடாந்திர ஏவுகணை.

இந்த விவகாரம் பற்றிய வம்பளப்புகள் முடிவதற்குள்ளாகவே ரவி, அலுவலகத்தில் வேலை பார்த்த கேரளப் பெண்ணான வினு வர்கிஸ் உடன் பழக ஆரம்பித்திருந்தான். பைக்கில் ஊர் சுற்றுவது, வெளி இடங்களுக்குப் போவது, விடுமுறை நாட்களில் வேலை இருந்தாலும் இருவரும் சேர்ந்து தான் வேலை செய்வது என்று அவர்களின் இடையே இருந்த உறவு வலுவாக வளர்ந்தது.

ஒரு சிரியன் கிருஸ்துவ பெண்ணான வினுவை காதலித்தால் கிருஸ்துவ மதத்திற்கு மாறினால் தான் திருமணம் என்பதைத் தெரிந்தும் பழகும் ரவியின் காதலை நினைத்து பலர் ஆச்சரியப்பட்டார்கள்.

ஒரு நாள், ரவியும், வினுவும் சேர்ந்தே வினுவின் திருமணப் பத்திரிகையை அலுவலகத்தில் கொடுக்க ஆரம்பித்தாள். அதில் மணமகன் ரவி இல்லை, அவள் மதத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயர் இருந்தது. ரவியும் திருமணத்துக்கு கேரளா சென்று வந்தான்.

சில மாதங்களுக்குப் பிறகு, ரவி அவன் டீமுக்கு புதிதாக வந்த சவீதாவிடம் பழக ஆரம்பித்தான். அவளும் இவனைப்போல ஒரு மீடியா டெவலப்பர், இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். நான்கு மாதம் கழித்து ஏற்கனவே மூன்று காதல் நாடகங்களில் ஹீரோவாக இருந்த ரவி, இறுதியில் சவீதாவை திருமணம் செய்து கொண்டான்.

பவித்ராவுக்கு முன் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டு, அது முடிவுக்கு வரும் அதே நாளில் பவித்ராவுக்கு ரூட் போடுகிறான் ரவி. ‘பவித்ரா ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர், நல்ல சம்பாத்தியம்’ என்ற கணக்கில் காதலில் இறங்குகிறான். முந்தைய காதல் தோல்வி அடையும் அன்றே அவளிடம் பழக முற்படும் போது கேள்விகள் எதுவும் இன்றி ‘தனக்கும் ஒரு பாய் பிரண்டு வேண்டும்’ என்ற பியர் பிரஷர்க்கு ஆட்பட்டு நட்பை வளர்த்து கொள்கிறாள் பவித்ரா. பியர் பிரஷர் எனப்படும் நட்பு வட்ட அழுத்தம்தான் ஐடி துறையில் ஆண்களையும் பெண்களையும் இயக்கிச் செல்லும் வலிமையான உந்துசக்தி.

மேலும் ‘அவன் குடும்பத்துக்கு ஏற்ற தலையாட்டியாக இருப்பான்’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உறவை முடிவு செய்கிறாள். ஆனால், அவள் படிப்பு, வேலை, சம்பளம், பொதுவிலே அவளிடம் உள்ள மேலாதிக்க குணம் ரவியை பவித்ராவிடமிருந்து தனிமைப்பட வைக்கிறது. இவளைவிட அழகாக இருக்கும் வினுவிடம் அவனுடைய ஆர்வம் திரும்புகிறது.

ரவி ஒரு பெண்ணை பைக்கில் ஏற்றி சென்றதற்காகவா அவனை வெறுத்து வேண்டாம் என்று பவித்ரா சொன்னாள்? ‘அவளுடைய தகுதிக்கு எந்தவிதத்திலும் ஏற்றவன் அவன் இல்லை’ என்று தெரிந்தும் காதலை ஏதோ பிச்சையாக போட்டதாக நினைத்த அவள், ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர், யு.எஸ் ரிடன் மாப்பிள்ளை வாய்ப்பு ஏற்பட்டதும் ரவியை தூக்கி எறிய, கிடைத்த காரணத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாள்.

பவித்ரா போட்ட சண்டை அநாகரிகமானதாக இருந்தும் அதை நிறுத்த ரவியின் நண்பர்கர் வரவில்லை, மாறாக விரும்பத்தகாத நிகழ்விலிருந்து விலகி நின்று வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

அலுவலகத்துக்கும் வேலைக்கும் தொடர்பே இல்லாத இடத்தில நடந்த சம்பவம் நிறுவன ஒழுக்கத்தையே கெடுக்கிறது என்கிறார் ரவியின் மேலாளர். ‘தவறு, குழப்பம், கள்ள உறவு, பாலியல் அத்துமீறல் எல்லாம் செய்யுங்கள் ஆனால் அவை வெளியில் வராமல் பார்த்து கொள்ளுங்கள். கள்ள உறவு இருந்தாலும் அவை ஆபீசின் நல்லொழுக்க விதிகளை கெடுக்கா வண்ணம் இருந்தால் பரவாயில்லை’ என்பதே நிறுவனக் கொள்கை. அதன் அடிப்படையில் ரவிக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்படுகிறது.

ரவியும், வினுவும் நெருக்கமாக பழகினாலும், ஒரு சிரியன் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்ணை விரும்ப முடிந்த ரவியினால், திருமணம் முடிப்பதற்கு போராடும் தைரியம் இல்லை, மதம் மாறி அவளை மணக்கும் ‘தியாக’ உணர்வும் இல்லை. வினுவும் நெருக்கமாக பழகிய பிறகும் காரியவாதியாக இருக்கிறாள், மதத்தை விட்டுக் கொடுக்கும் எண்ணமோ, போராடும் உணர்வோ அற்றவளாக இருக்கிறாள். ‘பழகற வரைக்கும் பழகுவோம். எல்லாம் ஒரு ஜாலி, நேரத்தை சந்தோஷமா செலவழிக்க ஒரு வழி, அவ்வளவே!!’

ரவியை வேண்டாம் என்று ஒதுக்கிய பவித்ராவுக்கும், தானாகவே ஒதுங்கிய வினுவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதில் யாருடைய உணர்வும் உண்மையானது இல்லை.  மாறாக தேர்ந்த சதித்தனங்களும், துரோகங்களும் விருப்பத்துடன் அரங்கேறுகின்றன.

உற்றார், வீடு, வாசல், மதம், சாதி என்று எல்லாம் துறந்து காதல்தான் பெரியது என்று நினைத்தால்தான் கலப்பு மணம் நடக்க முடியும். ஆனால் ஐடி துறை காதல் என்பது சம்பளக் காசு, படிப்பு, வெளிநாட்டு வேலை, மதம், கார், வீடு, சொத்து, ஈகோ, சாதி என்று அனைத்து போலித் தனங்களாலும் வழி நடத்தப்பட்டு உருவாக்கப்படுகிறது.

எல்லா நதிகளும் இறுதியில் கடலை சென்று கலப்பதுபோல, ரவியும் சவிதாவும் திருமணம் செய்து கொள்வது சடங்குத் தனமானதே! மாடர்ன் பெண்ணாக, அவனைப் போல அதே மீடியா வேலையில், ஒரே சாதியை சேர்ந்தவளாக சேர்த்து அமைந்ததும், இலட்சியக் கனவினை எட்டிய நிறைவில் ரவி தன் காதல் நாடகங்களுக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்து வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்குள் கால் எடுத்து வைத்திருக்கிறான்.

இந்த காதல் கதையில் எல்லா ஜோடிகளும் தங்களின் காரியவாத பாதையில் ஜெயித்துவிட்டார்கள். காதல் தோற்றுப் போவதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

____________

* உண்மைச் சம்பவம். பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

___________________________________

– ஜென்னி
___________________________________