privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்உண்மைச் சம்பவம் : மண்ணுள்ளிப் பாம்பிடம் மயக்கம் !

உண்மைச் சம்பவம் : மண்ணுள்ளிப் பாம்பிடம் மயக்கம் !

-

மண்ணுள்ளி-பாம்பு

கெணேசு என்கிற கணேச மூர்த்திக்கு சில லட்சியங்கள் இருந்தன. சம்பாதிக்க வேண்டும். நிறைய்ய சம்பாதிக்க  வேண்டும். கைக்கொள்ளாத ரூபாய் நோட்டுக் கட்டுகளின் மேல் விழுந்து புரள  வேண்டும். ஒரு பெரிய வீடு கட்ட வேண்டும்; அதில் ஐம்பதடிக்கு நூறடி அளவில் ஒரு நீச்சல் குளம் அமைக்க வேண்டும். பொள்ளாச்சியில் குறைந்தது நூறு ஏக்கராவுக்கு தென்னந்தோப்பு ஒன்றை அமைக்க வேண்டும். அங்கே ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டுத் தூங்க வேண்டும். கயிற்றுக் கட்டிலில் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வருமோ என்னவோ – கணேசன் நம்பினான். தூக்கம் வரும். அப்புறம், வாரம் ஒரு முறையாவது கோயமுத்தூர் ரெஸிடென்சியில் தண்ணியடித்து,  மட்டையாகி விட வேண்டும்.

ஆனால் இதையெல்லாம் தன்னுடைய மாத சம்பளமான மூவாயிரத்தில் செய்ய முடியாது என்கிற உண்மை தான் கெணேசனை செல்லாக அரித்துக் கொண்டிருந்தது. மூவாயிரத்துக்கு ரெஸிடென்சிக்காரன் வாசல் வரை கூட விட மாட்டான் என்பதை கணேசன் அறிந்திருந்தான். இந்தக் கதை நடந்த காலம் 2005. அப்போது கணேசன் கோவை நூறடி ரோட்டிலிருந்த கவிதா எலக்ட்ரானிக்ஸ் என்கிற மின்சாதனப் பொருட்கள் பழுது பார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தான்.

கணேசன் வேலையில் கெட்டிக்காரன். எந்த ரேடியோ செட்டாக இருந்தாலும் அதிகபட்சம் 30 நிமிடங்களுக்குள் பிரித்து மாட்டி விடுவான். நேஷனல் பானாசோனிக் என்றழைக்கப்படும் முகலாயர் காலத்து ரேடியோ செட்டைப் பழுது பார்க்கும் நிபுணத்துவம் அநேகமாக  கோவையிலேயே அவனுக்குத் தான் இருந்திருக்கும்.  கணேசன் அவ்வளவு கெட்டவன் இல்லை தான்; ஆனாலும் சமீப காலமாக அவன் சொந்த ஊரான வேட்டைக்காரன் புதூரைச்  சேர்ந்த பள்ளித் தோழன் ரெங்கு என்கிற ரெங்கசாமியைப் பற்றி கேள்விப்படும் கதைகள் அவனை நிறையவே மாற்றியிருந்தது. ரெங்குவின் கதைகளில் இருந்து தான் முதல் பத்தியில் விவரிக்கப்பட்டிருக்கும் கணேசனின் லட்சியங்களெல்லாம் முளைவிட்டன.

ரெங்குவின் அப்பாவுக்கும் கணேசனின் அப்பாவைப்  போலவே விவசாயம். ஒன்றரை ஏக்கர் துக்கடா நிலம். அதில் கொம்பு வண்டுகள் மொட்டையடித்த ஐம்பது தென்னைகள் பரிதாபமாக நிற்கும். கால்வாய்ப் பாசனம். தக்காளி போடுவார்கள் – விலையத்துப் போகும். வாழை  போடுவார்கள் – பேய் மழை வந்து சாய்த்து விடும். நெல்லைப்  போட்டால் – மழை வராது; கால்வாய் வறண்டு போகும்.  கரும்பு விளைந்த நேரமாகப் பார்த்து யானைகள் புகுந்து துவம்சம் செய்து விடும். நல்ல விளைச்சல் தரும் என்று சொல்லப்பட்ட வெளிநாட்டு விதைகள் வெள்ளாமைக்கே வந்து சேராது. கஷ்ட ஜீவனம்.

ஆனால் ரெங்கு தலையெடுத்தான். ரெங்குவும் கணேசனைப் போலவே ஐ.டி.ஐ படித்தவன் தான். ஆனால் என்ன வேலை பார்த்தான் – அல்லது பார்க்கிறான்; என்ன தொழில் செய்தான்  – அல்லது செய்கிறான் என்பதெல்லாம் ஊராருக்குத் தெரியாது. தெரிந்ததெல்லாம் திடீர் திடீரென்று ரெங்குவால் வாங்கப்படும் பட்டா நிலங்களும், தோப்புத் துரவுகளும், பளிச்சென்று எழுந்து நிற்கும் வீடுகளும் தான்.

மணியக்காரத் தெருவில் இருந்த ரெங்குவின் ஓட்டு வீடு பங்களாவாய் உருமாறியது. உள்ளே பெரிய நீச்சல் குளம் இருப்பதாகவும், தரைமட்டத்துக்குக் கீழே பாதாளத்தில் அறைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஊருக்குள் பேசிக் கொண்டார்கள். பொள்ளாச்சி பத்திராபீசில் ரெங்குவுக்கு நிரந்தரமாக நாற்காலியே போட்டு விட்டார்கள் என்று கூட சொன்னார்கள்.

ரெங்குவின் அசுர வளர்ச்சியால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டதோ இல்லையோ கணேசன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தான்.

“யேண்டா கெணேசா.. அந்த ரெங்கானும் ஒன்ர கூட படிச்சவந்தான.. பாரு எத்தினி காரியமா சம்பாரிக்கிறான்னு.. நீயெல்லாம் அவன்ர  மூத்தரத்த வாங்கியாச்சும் குடுச்சுப் பாரு. நெப்பு வருதான்னு பாக்கலாம்” சரியாக இரவு சாப்பாட்டுத் தட்டின் முன் உட்காரும் போது தான் கணேசனின் அம்மா லெட்சுமி திரியைப் பத்த வைப்பாள்.

“அவனெ யேண்டி அல்லைல குத்தீட்டிருக்கே.. அறிவும் ஊக்கமும் பொறப்புலயே வந்தாத்தான் ஆச்சு. நீ தின்னுடா கண்ணு” அப்பா தன்னை ஆதரிக்கிறாரா,  அவரும் சேர்ந்து வெந்த புண்ணில் மிளகாய்த் தேய்க்கிறாரா என்பதைக் கணேசனால் கடைசி வரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அப்பனும் ஆத்தாளும்தான் இப்படியென்றால் வெளியே கேட்கவே வேண்டாம்.

“கெணேசு.. ரெங்கானப் பாத்தியா? பொள்ளாச்சில ஏதோ மில்லுக்கு வெல பேசீட்டிக்குறானாமா?”

“கெணேசு.. ரெங்கானப் பாத்தியா? புதுசா காரு வாங்கீக்கறானாமா?”

“கெணேசு.. ரெங்கானப் பாத்தியா?  கழுத்துல கயிறு கெணக்கா தங்கச் செயினு போட்ருக்கானாமா?”

“கெணேசு.. இந்த ரெங்கானிருக்கானே……”

“கெணேசு.. நம்ம ரெங்கான்….”

“கெணேசு….”

இப்படியெல்லாம் அவர்களுக்குள்ளும் பேசிக் கொள்வார்களா,  இல்லை நம்மைப் பார்த்தால் மட்டும் தான் ஆரம்பிக்கிறார்களா  என்று புரியாமல் கணேசன் குழம்பினான். ஒரு சுபயோக சுபதினத்தில் கணேசனின் பொறுமை எல்லை கடந்தது. “வக்காளி ஆனதாகட்டும், போனது போகட்டும். நாமலும் ரெங்காண விட ஒரு பத்துக் காசாவது அதிகமா சம்பாரிச்சிக் காட்டீரோணும்டா” –  முடிவெடுத்து விட்டான். இதுதான்  ஒரு ‘லட்சியவாதி’ உருவானதன் வரலாறு.

முடிவு என்னவோ எடுத்து விட்டான் – ஆனால் எப்படிச் செயல்படுத்துவது? எப்படி பணக்காரன் ஆவது? என்ன தொழில் செய்வது? எப்படி வேகமாக வளர்வது? சரியாக இந்த இடத்தில் தான் கணேசன் பல சவால்களைச் சந்தித்தான். அம்பானியில் இருந்து பில்கேட்ஸ் வரை பணக்காரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களையெல்லாம் கோவை டவுண் ஹாலில் இருக்கும் விஜயா பதிப்பகத்தில் காசு கொடுத்து வாங்கிப் படித்துப் பார்த்தான். புரியவில்லை என்பது உடனடி விளைவு.  குழப்பமடைந்தான் என்பது தான் நீண்ட கால விளைவு. கடைசியில் வேறு வழியின்றி கணேசன் எடுத்த முடிவு தான் அவன் வாழ்க்கையின் மாபெரும் திருப்புமுனை.  நேரடியாக ரெங்கானிடமே கேட்டு விட வேண்டும் என்பது தான் அந்த முடிவு. என்ன இருந்தாலும் உடன் படித்த நண்பனல்லவா, உதவாமலா போய் விடுவான்?

2005ஆம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு தான் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க  சந்திப்பு நடந்தது. விஷயத்தைச் சொன்னதும் ரெங்கான் கட கடவென சிரித்தான். “நீயெல்லாம் அதுக்கு சரிப்பட மாட்டே” கழுத்துச் செயினை உருவி விட்டுக் கொண்டான். “அதெல்லாம் பெரிய ரிஸ்குடா” கைச்செயினை தடவிக் கொண்டான். கணேசன் கேட்பதாக இல்லை. கடைசியில் “போலீசு  கேசுன்னு அலைய வேண்டியிருக்கும்” என்று கூட மிரட்டிப் பார்த்தான். கணேசன் அப்போதும் உறுதியாக நிற்கவே, ஒரு மாற்று வழியைக் கூட முன்வைத்தான்.

“ஏண்டா சொல்லச் சொல்ல  கேக்க மாட்டேங்குறே?  பேசாம நானே மொதல்  போட்டு பொள்ளாச்சீல ஒரு டீ.வி ரிப்பேருக்  கடை வச்சித் தாரேன். நீயே நடத்திக்க. பிப்டி பிப்டி பார்ட்னர்சிப். இது ஓக்கேவா?”

“டே.. டீ.வி,  ரேடியோ ரிப்பேருக்கெல்லாம் இப்ப பவுசில்லீடா. இப்பல்லாம் அவனவன் கம்ப்யூட்டருங்கறான். பிளாப்பி டிஸ்க்குங்கறான்.. ஒன்னும் புரியல. ஓட்ட டீ.வி.ய நோண்டி அம்பதும் நூறும் சம்பாரிச்சி என்னிக்கு ஆளாகறது? அதெல்லாம் வேலைக்காகாது. நீ செய்யற பிசினசுல என்னையும் சேத்துக்கடா… இல்லீன்னா என்ன செய்யலாம்னு ஒரு ரூட்டு குடு. என்ன பிரச்சினைன்னாலும் சரி பாத்துக்கறேன்” கணேசன் விடாப்பிடியாக நின்றான். கணேசனின் இறைஞ்சல்கள் ‘இவன் தோதுப்படுவான்’ என்கிற நம்பிக்கையை ரெங்கசாமியிடம் ஏற்படுத்தியது

“சொன்னாக்  கேக்க மாட்டே.. சரி ஒரு ஐடியா இருக்கு. யார்ட்டயும் மூச்சு விடக் கூடாது. என்ன?”

“கழுத்தறுத்தாலும் வெளிய சொல்ல மாட்டேன். சொல்லு”

“ம்ம்ம்.. நல்லா கெவனமா கேட்டுக்க. நான் வேற வேற பிசினசு பண்ணிட்டுருக்கேன். ஆனா அதெல்லாம் ரொம்ப ரிஸ்க்கு. இப்ப ஒரு புது பிசினஸ்ல எறங்கறேன். எனக்கு இதுக்கு ஆள் வேணும். இதுல அத்தினி ரிஸ்க்கு இல்ல. ஆனா கெவருமண்டுக்குத் தெரிஞ்சா சட்னி தான்…”

“டேய் என்னடா சொல்றே.. எதுனாச்சும் கள்ளக் கடத்தலாடா?” முடிந்தவரை பீதியை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  சிரித்துக்  கொண்டே கேட்பதைப்  போல் கேட்டான்.

“இல்லீடா.. காதக் கொண்டா இங்க. அதாவது, இந்த மண்ணுளிப் பாம்பு தெரியுமா? அதான் நம்மூர்ல ரெட்டத்தலை மணியன்னு சொல்லுவாங்களே.. அதோட ஒடம்புக்குள்ளே  ஏதோ  ரேடியம் மாதிரி பச்சக் கலருல இருக்குதாமா. அதுலேர்ந்து நம்ம சிட்டுக்குருவி லேகியமாட்டா  ஏதோ மருந்து செய்யறாங்க. அதுக்கு சீனாவுல நல்ல டிமாண்டாமா. இங்கேர்ந்து கப்பல்ல சீனாவுக்கு அனுப்பறாங்க. பாலக்காட்டுல எனக்குத் தெரிஞ்ச ஒரு சேட்டன் தான் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் ஏஜெண்டு எடுத்துருக்காரு. அவரு கிட்டேருந்து நானும் ஏஜெண்ட் எடுத்துருக்கேன். தெக்க மதுரைக்கு அந்தால இருக்கற ஊருகள்ள கெடைக்கும்னு அவரு சொல்றாப்ல. அஞ்சி கிலோ அயிட்டத்துக்கு அம்பது ‘எல்’ நிக்கும். ஆளுக்குப் பாதியா பங்கிக்கலாம். என்ன?” சொல்லி முடித்து விட்டு, கணேசனின் முகத்தைக் கூர்மையாகக் கவனித்தான்.

கணேசன் திகைத்துப் போயிருந்தான். மண்ணுளிப் பாம்பை சின்ன வயதில் பார்த்திருக்கிறான். அதுக்குள் இப்படி ஒரு புதையலா?  திகைப்பெல்லாம் ஒரு சில நொடிகள் தான். உடனே தலையசைத்தான்.

“தலையாட்றதெல்லாம் இருக்கட்டும். நீ என்ன செய்யறேன்னு யாருக்கும் தெரியக் கூடாது. சரியா? அப்புறம் திருநெல்வேலில என்ர பிரெண்டு ஒருத்தான் இருக்கறான். அவனையும் தேடச் சொல்லிருக்கேன். ஆனா அவனுக்கு பங்கெல்லாம் கெடையாது. கமிஷன் தான். பத்து பர்சன்டேஜு. அவனோட நெம்பர் தர்றேன். சீக்கிரமா வேலைய ஆரம்ப்பிச்சிடு. முக்கியமா யாருக்கும் தெரியக் கூடாது. உங்க அப்பனாத்தாளுக்குமே சொல்லீறாத! சரியா?”

கணேசனின் வாழ்க்கை அன்றோடு மாறியது. முதல் காரியமாக வேலையை விட்டான். தனது லட்சியத்துக்கு அது ஒரு இடைஞ்சல் என்று கருதினான். நிறைய ஊர் சுற்ற வேண்டும். அதுவும் ரகசியமாகச் சுற்ற வேண்டும். ‘பொருள்’ கிடைத்து விட்டால் அதைப் பஸ்ஸில் கொண்டு வருவது ரிஸ்க் என்று கணக்கிட்டான் – அதற்காகவே ஒரு டீசல் புல்லட்டை கிணத்துக்கடவு மணி மெக்கானிக்கிடமிருந்து இருபத்தையாயிரம் கொடுத்து வாங்கினான். அந்த புல்லட்டை பொள்ளாச்சியில் உதைத்து ஸ்டார்ட் செய்தால் கோவையே நிலநடுக்கம் வந்தது போல் அதிரும். அதில் டீசலை நிரப்பிக் கொண்டு ஊர் ஊராய் அலையத் துவங்கினான்.

இரண்டு வருட தேடல் அது. சோறு மறந்து, தண்ணீர் மறந்து, தூக்கம் மறந்து, குடும்பம் மறந்து, நண்பர்களை மறந்து, ஊரை மறந்து ஒரு மோன நிலையில் தமிழகத்தின் தென்பகுதியைச் சுற்றி வந்தான். காசு தீரும் போது ஏதோ ஊரில் நிற்பான்; அங்கே கிடைத்த வேலையைச் செய்வான். டீசல் டாங்கை நிரப்பும் அளவுக்கும், ஓரிரு வேளை சோற்றுக்கும் காசு தேற்றியதும் திரும்பவும் தேடலைத் துவங்குவான்.

கணேசனுக்கு நல்ல களையான முகம் இருந்தது.  விளைந்த தக்காளி போல் பளபளவென்று இருப்பான் – இந்த இரண்டே வருடத்தில் வதங்கி வற்றிய கத்தரிக்காய் போலானான். மொழுக்கென்று வெளித்தள்ளி நிற்கும் கண்கள் பள்ளத்துக்குள் விழுந்தது போலானது. இரண்டு வருடத்தில் இருபது வயது கூடியவனைப் போலானான். தொடர்ச்சியாக அதிரும் புல்லட் மோட்டார் சைக்கிளில் சுற்றியதன் விளைவாக ஆசனவாயில் மூலம் வைத்திருந்தது. ஒவ்வொரு நாள் விடியலும் ஒரு நரகம். மலமே சிவப்பாய்க் கழியும். கணேசன் அத்தனை பாடுகளையும் தாங்கிக் கொண்டான். பணம்… பணம்… பணம்… அதற்காக நரகக் குழியின் ஆழத்துக்கும் கூடச் செல்லத் தயாராயிருந்தான்.

வாரம் ஒருமுறை ரெங்கானிடமிருந்து அழைப்பு வரும். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் மண்ணுளி ஏஜெண்டுகள் கட்டுக்கட்டான பணத்தோடு போலீசில் பிடிபட்ட தகவல்களைச் சொல்வான். எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுருத்துவான். அந்தந்த வாரத்திற்கான ‘சந்தை’ விலை நிலவரத்தைத் தவறாமல் தெரிவிப்பான். கடுமையாகக் கிராக்கி கூடுவதைச் சொல்வான். அவன் பேசி முடித்ததும் மொத்த சீனர்களும் ஆண்மையற்றுப் போய் விட்டார்களோ என்று கணேசன் நினைத்துக் கொள்வான். இதை அடுத்த முறை ரங்கானிடமே கேட்டு விடலாம் என்று நினைப்பான் – அந்த ‘அடுத்த முறை’ வரவேயில்லை.

நிரந்தரமாய்ச் சிவந்த கண்களையும், முன் மண்டை வழுக்கையையும் கணேசன் சம்பாதிக்கத் துவங்கிய மூன்றாம் வருடத்தின் துவக்கத்தில், காசு தீர்ந்து போன  நாளொன்றில் சிவகாசியில் இருந்தான். கைச்செலவுக்கும், பயணச் செலவுக்கும் ஏதாவது தேற்றுவதற்கு, பட்டாசுப் பெட்டிகள்  லோடு அடிக்கும் கலாஸி வேலையில் சேர்ந்திருந்த இரண்டாவது நாளில் தான் தம்புராசுவின் தொலைபேசி அழைப்பு வந்தது.

“அண்ணாச்சி எங்க இருக்கிய? சீக்கிரமா வாரும் வோய்.. இங்கன பொருள் அம்புட்டுகிடுச்சி” தம்புராசு தென் மாவட்டங்களுக்கான சப்-ஏஜெண்ட். திருநெல்வேலியை அடுத்த வள்ளியூரைச் சேர்ந்தவன்.

கணேசனின் காலுக்குக் கீழே பூமி நழுவியது. பணக்கட்டுகளின் மேல் விழுந்து புரள்வதைப் போன்றதொரு காட்சி கண்களுக்குள் ஒரு மின்னல் கீற்றைப் போல் தோன்றி மறைந்தது. அதற்கு மேல் அவன் தாமதிக்கவில்லை. அடுத்த நாளே வள்ளியூரில் இருந்தான். அதற்கடுத்த நாளே ‘பொருளோடு’ இரவோடு இரவாக பயணித்துப் பொள்ளாச்சியை அடைந்தான். பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் ரங்கசாமி புதிதாய் வாங்கியிருந்த தென்னந்தோப்பு ஒன்றில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்த் தங்கினான்.

ஐந்தடிக்கு ஐந்தடி ஒரு குழிவெட்டி அதில் சகதியை நிரப்பி உள்ளே மண்ணுளியை விட்டான். அப்படித்தான் அதைப் பாதுகாக்க வேண்டுமென ரங்கசாமி தொலைபேசியில் வழிகாட்டியிருந்தான். அடுத்து ரங்கானின் வருகைக்குக் காத்திருந்தான் – காத்திருந்த நேரத்தில் கனவுகளில் மிதந்தான். ரங்கசாமி மூன்று நாட்கள் கழித்து வந்தான். வந்தவன் கணேசனின் கற்பனைகளில் வண்ண வண்ணமாய்ப் பறந்து கொண்டிருந்த பலூன்களில் கூர்மையான ஊசியால் ஒரே குத்தாக குத்தி விட்டான்.

“கெணேசா.. அஞ்சு கிலோவுக்கு மேல எடையிருந்தாத்தான் அந்த மருந்து உள்ள உருவாயிருக்கும்னு சொன்னனேடா.. இது மூணு கிலோவு தான் இருக்கு. இது ஆகாதுடா” அமிலத்தைக் காதில் கொட்டியது போல் இருந்தது. மீண்டுமொரு முறை காலுக்குக் கீழே பூமி நழுவியது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இப்படி நழுவுகிறது. கணேசனுக்குக் கண்ணில் நீர் கோர்த்தது. பூச்சியைப் போலும், புழுவைப் போலும் உணர்ந்தான். அவனது நிலை ரெங்கனிடம் பரிதாபத்தை வரவழைத்தது.

“சரி சரி உடு.. இதுக்கேன் அழற. ஆறு மாசம் பொறுத்தா எப்படியும் இது வளந்துடும். பொறகால வித்துப் போடலாம். இது சீக்கிறம் வளர என்ன செய்யோணும்னு சேட்டங்கிட்ட கேட்டுச் சொல்றேன். அதுவரைக்கும் நீ இங்கெயே தங்கிக்க. பண்ணையத்துக்கு இருக்கற ஆளுங்களை அனுப்பிடலாம். காவலுக்கு ஒரு கோம்பை நாய் இருக்கு. மத்தபடி வேற யாருக்கும் விசயம் தெரியக் கூடாது. காதும் காதும் வச்ச மாதிரி இருக்கோணும். என்ன?” கணேசன் தளர்வாய்த் தலையசைத்தான். மேலும் நான்கு நாட்கள் கழித்து சேட்டனின் ‘யோசனைகள்’ தொலைபேசி வழி வந்து சேர்ந்தது

அது மண்ணுளிப் பாம்பின் வளர்ச்சிக்கான ஒரு விநோதமான உணவுத் திட்டம். காலையில் சூரியன் உதிக்கும் முன் நேந்திரம் பழத்தை நெய்யில் வறுத்துப் போட வேண்டும். சூரியன் உச்சிக்கு வந்ததும் சீம்பாலை நன்றாகக் கட்டியாய்க் காய்ச்சித் தூவ வேண்டும். இரவு சூரியன் மறைவதற்கு முன் நாட்டுக் கோழி முட்டைகளை முழுதாகப் போட வேண்டும். முக்கியமான நிபந்தனை – உணவைப் போட்ட பின் அந்த இடத்திலிருந்து அகன்று விட வேண்டும். நம் கண்ணெதிரே மண்ணுளி எதையும் சாப்பிடாதாம்.

இந்த வினோதமான ‘உணவுத்’ திட்டத்தின் விளைவாய் ஆறு மாதத்தில் மண்ணுளிப் பாம்பு கால் கிலோவும், அதற்குக் காவலாக இருந்த கோம்பை நாய் எட்டு கிலோவும் கூடிய நிலையில், கணேசன் பத்து கிலோ குறைந்திருந்தான். அவன் தோல்வியெனும் பாதாளத்தின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருந்த போது தினத்தந்தியில் வந்த ஒரு செய்தி மொத்தமாகக் குப்புறத் தள்ளியது.

‘ரெங்கன் மோசடிப் புகார்களின் அடிப்படையில் கைது’  என்பதுதான் செய்தி. மண்ணுளிப் பாம்பு என்பதே ஒரு மோசடி என்பதை விவரித்த அந்தச் செய்தியை வாசிக்க முடியாத அளவுக்கு கண்ணீர் கட்டிக் கொண்டது. ஆட்டம் முடிந்தது.

இரண்டு நாட்கள் கணேசன் பித்துப் பிடித்தது போல் வெறித்துக் கொண்டே அமர்ந்திருந்தான். மூடாத விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. ரெங்கனோடு கணேசன் கூட்டுச் சேர்ந்திருந்தான் என்பதை அவன் குடும்பத்தார் அரசல் புரசலாகக்  கேள்விப்பட்டிருந்தனர். பயந்து போய் ஊரெல்லாம் தேடி கடைசியில் தோப்பு வீட்டில் விட்டத்தை வெறித்தவாறே அமர்ந்திருந்த நிலையில் கண்டுபிடித்தனர். அவன் தம்பி தான் அவனைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான்.

தோப்பு வீட்டிலிருந்து தளர்வாய் நடந்து செல்லும் போது கணேசன் கடைசியாய் ஒரு முறை அந்த மண்ணுளிக் குழியைத் திரும்பிப் பார்த்தான். பரிதாபமான அந்த ஜீவன் சகதியிலிருந்து வெளியேற முயன்று கொண்டிருந்தது. குழியின் பக்கத்திலேயே அமர்ந்திருந்த கோம்பை நாய் ஏக்கத்தோடு கணேசனைப் பார்த்து வாலாட்டியது.

000

இந்தக் கதையை நாலு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னவன் கணேசனின் உடன் பிறந்த தம்பி ஆனந்தன் – என் நண்பன். கதையை எழுதி முடித்த பின்னரும், முடியாதது போலவும் ஏதோ குறைவதைப் போலவும் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து ஆனந்தனை செல்பேசியில் அழைத்தேன்.

“ஆனந்தா.. அந்த மண்ணுளிப் பாம்பு மேட்டரு சொன்னியே! அதுக்கப்புறம் உன் அண்ணன் என்னவானார்?”

“அதையேண்டா கேக்கற.. இப்ப பழையபடி புல்லட்ட தூக்கிட்டுக் கௌம்பிட்டாண்டா”

“ஐயையோ.. திரும்பவும் முதல்லேர்ந்தா?”

“இல்ல இது வேற  மேட்டரு. அதாவது தன்னோட வாழ்க்கைல யாரையுமே கடிக்காத ராஜ நாகத்தோட விஷம் கெட்டிப்பட்டு இறுகி ஒரு மாணிக்கமா மாறுமாம். அது தான் நாக மாணிக்கமாம். வயசான பின்னாடி அந்த பாம்புக்குப் பார்வை குறையும் போது இரவு நேரத்துல அந்த மாணிக்கத்தை வெளியே துப்பி வச்சிட்டு அந்த வெளிச்சத்துல தான் நடமாடுமாம். இதை அந்தப் பாம்புக்குத் தெரியாம எடுத்து வித்தா லெச்ச லெச்சமா கிடைக்கும்னு எவனோ சொன்னான்னு தேடி அலைஞ்சிட்டிருக்காண்டா”

நான் செல்பேசியை வைத்து விட்டேன். கதை முடிந்துவிட்டதா, இல்லையா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.

_____________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
______________________________________________