Wednesday, September 18, 2024
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்பேஸ்புக் : பாலியல் வன்முறையின் புதிய ஆயுதம் !

பேஸ்புக் : பாலியல் வன்முறையின் புதிய ஆயுதம் !

-

ஃபேஸ்புக் பாலியல் குற்றம்டிசம்பர் 31-ம் தேதி டெல்லியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, ஐடி துறையில் பணி புரியும் இரண்டு 24 வயது இளைஞர்கள் திட்டமிட்டு தன்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக போலீசில் புகார் செய்துள்ளாள். அந்த புகாரின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த மாணவி டெல்லி பப்ளிக் ஸ்கூலில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறாள். ‘பேஸ்புக்கில் செயல்படா விட்டால் வாழ்க்கையே இல்லை’ என்ற சூழலில் படிக்கும் அந்த மாணவி தன் சக மாணவர்களைப் போல பல பேஸ்புக் நட்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாள்.

அதில் ஒருவர் தான் நவீன் சிங் கேத்வால் என்ற 24 வயதான கணினி என்ஜினியர். செப்டம்பர் 2011-ல் இவர்களது பேஸ்புக் நட்பு ஆரம்பித்திருக்கிறது. நவீன் சிங் தன்னுடைய உறவினரான ஐடி நிறுவனம் ஒன்றின் மனித வளத் துறையில் பணி புரியும் ராஜேஷ் சிங்குக்கும் இப்பெண்ணை அறிமுகம் செய்துள்ளான்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் ராஜேஷ் இப்பெண்ணுடன் நெருங்கி விட்டிருக்கிறான். தொலைபேசியில் பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது, பேஸ்புக் அரட்டை, எப்போதாவது வெளியில் சந்திப்பு என்று உறவை வளர்த்திருக்கிறான். நவீனுடன் போட்டிருந்த திட்டத்தின் அடிப்படையில் மார்ச் 2012-ல் அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்திருக்கிறான்.

இதனால் மனமுடைந்த அப்பெண், மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளாள். அந்த நேரத்தில், அவளை தேற்றும் விதமாக அவளுடன் பழக ஆரம்பிக்கிறான் நவீன் சிங். அவளுடன் லோதி கார்டன், லஜ்பத் நகர், கன்னாட் பிளேஸ் போன்ற இடங்களுக்கு தனது பைக்கில் ஊர் சுற்றியிருக்கிறான். ஜூலை மாதம் 24-ம் தேதி அவளை சப்தர்ஜங் என்க்ளேவில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளான்.

அடுத்த சில வாரங்களில் தனது நட்பு உறவாடலை குறைத்துக் கொண்டு செப்டம்பர் 7-ம் தேதி வேலையை விட்டு விட்டு உத்தர்காண்டுக்கு திரும்பிப் போவதாக சொல்லி உறவை துண்டித்திருக்கிறான். இந்த முறை ஆறுதல் சொல்லும் பாத்திரத்தில் ராஜேஷ் இறங்கியிருக்கிறான். அடுத்த நாளே அவனது நண்பனின் அறையில் அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறான்.

இதைத் தொடர்ந்து நவீனும் ராஜேஷூம் இந்தப் பெண்ணுடைய தொலைபேசி எண்களை பிற நண்பர்களிடம் சுற்றுக்கு விட்டிருக்கின்றனர். அவளுக்கு ஆபாச தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த உளவியல் கொடுமையை தாங்க முடியாமல் லைசால் என்ற சுத்திகரிக்கும் திரவத்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறாள்.

நவீன், ராஜேஷ் இருவரும் இணைந்து, திட்டம் போட்டு, ஒருவரோடு ஒருவர் பேசி வைத்துக் கொண்டு அவளிடம் நட்பு ஏற்படுத்துவதாக சொல்லி உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். இந்த உண்மையை நவீனின் உறவினர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்ட பிறகு அந்தப் பெண் போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறாள்.

மேலோட்டமான நட்பு, நுகர்வு கலாச்சார வாழ்க்கை, விட்டேத்தியான தனிநபர் வாதம் போன்றவற்றில் மூழ்கியிருக்கும் அந்த மாணவியை இக்கயவர்கள் சுலபமாக பிடித்திருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய சூழலில் பொறுக்கிகள் பலரும் மெனக்கெடமால் தமது வக்கிரத்தை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய வாய்ப்புகளைத் தராமல் வாழ்வை உறுதியாகவும், பயன்தரத்தக்க முறையில் கழிக்கவும் மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்க இளையோர் முயல்வதில்லை. விளைவு இம்மாணவிக்கு நேர்ந்தது போல நடக்கிறது.

‘நண்பர்கள் வட்டத்தை பெருக்குகிறோம், எங்களுடன் எல்.கே.ஜி முதல் கல்லூரியில் படித்த அனைவரையும் இணைக்கிறோம்’ என்று நோக்கத்துடன் பேஸ்புக்கில் சேருபவர்கள் பின்னர் போலியான அடையாளங்களுடன் தமது நோக்கங்களை நிறைவேற்ற முனைகின்றனர். பதின்ம வயதினர் மட்டும் இன்றி, 13 வயதுக்கு குறைவான குழந்தைகள் கூட பெற்றோரின் துணையுடன், பொய்யான வயதைக் குறிப்பிட்டு பேஸ்புக்கில் தங்களை இணைத்துக்கொண்டு வாழ்க்கையில் இதைச்செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் வாழ்கின்றனர். எது நல்லது, கேட்டது என்று அறியாத பதின்ம வயதினருக்கு ‘எப்படியாவது 100க்கும் அதிகமான நண்பர்களை தங்கள் வட்டத்தில் சேர்க்க வேண்டும்’ என்ற பிற பள்ளி நண்பர்களிடையே ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக, முன் பின் தெரியாத பலரின், நட்பு விண்ணப்பத்தை ஏற்று அவர்களின் ‘நட்பு’ வட்டத்தை 100-200க்கும் மேலும் பெரிதாக்குகின்றனர். விளைவு, கயவர்களின் ஜாலப் பேச்சுக்கும், பிற தொல்லைகளுக்கும், தவறுகளுக்கும் துணைபோகவோ, ஆட்படவோ நேரிடும்  சூழலில் தள்ளப்படுகிறார்கள்.

சிறுவயது முதற்கொண்டே குழந்தைகளை அடிமைப்படுத்தும் கணினி,  வீடியோ விளையாட்டுகள், சமூக வலைத்தளங்கள் அவர்களை வெளி உலக எதார்த்தங்களிலிருந்து அன்னியப்படுத்துகின்றன. மனிதர்களிடம் பழகுவது, அவர்கள் உணர்வுகளை பற்றின புரிதல் என்னவென்று அறிந்து கொள்ளும் திறமை குறைந்து போகின்றன. நண்பன் யார் பகைவன் யார் என்று தெரியாத வயதில் இவ்வாறான சூழல் அவர்களை மேலும் பிரச்சனைக்குள் தள்ளும் நிலைதான் வலுக்கிறது.

இங்கிலாந்து நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி பேஸ்புக் தொடர்பான  குற்றச்செயல்கள் மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. 40 நிமிடங்களுக்கு ஒரு முறை பேஸ்புக் தொடர்பான குற்றம் ஒன்று போலீசிடம் பதிவாகிறது. சென்ற ஆண்டு மட்டும் 12,300 குற்றங்கள் பதிவாகி உள்ளன. கொலை, பாலியல் வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், தாக்குதல், கடத்தல், கொலை மிரட்டல், சாட்சியங்களை மிரட்டல், மோசடி போன்ற குற்றங்கள் மீதான விசாரணைகளில் பேஸ்புக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நட்புகளின் எண்ணிக்கையை சமூக அந்தஸ்தாக அளவிடும் மாணவர்களையும் இளைஞர்களையும் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பேஸ்புக் புதிது புதிதான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. பல்வேறு உத்திகளில் தனது வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் பேஸ்புக் 13 வயதுக்கு கீழுள்ள  குழந்தைகளும், பேஸ்புக்கில் சேர வாய்ப்பை ஏற்படுத்தப் போவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. குழந்தைகள் பெற்றோரின் கடன் அட்டைகளை பயன்படுத்தி தாம் விளையாடும் இணைய விளையாட்டுகளுக்கு கட்டணம் செலுத்த வைப்பதற்கான உத்திகளையும் யோசித்து வருகிறது.

பதின்மவயதினரை போல அவர்கள் பெற்றோர்களும் பேஸ்புக்க்கு  அடிமையாகி இருக்கும் போது, தமது சந்தைப்படுத்தும் லாப வேட்டைக்கு பயன்படுத்தும் நோக்கில் வணிக நிறுவனங்கள் அந்த அடிமைத்தனத்தை மேலும் மேலும் உறுதியாக்கும் சூழலில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சட்டங்களும் காவல் துறையும் என்ன பாதுகாப்பு அளிக்க முடியும்? அயோக்கியர்களையும் நண்பர்கள் என்று காண்பிப்பதுதான் முகம் தெரியாத பேஸ்புக்கின் அடிப்படை செயல் முறை. அதிலிருந்து அறுவடை ஆகும் வருமானத்தை வங்கியில் குவித்துக் கொள்ளும் பேஸ்புக் அதன் விளைவாக பலியாகும் குழந்தைகளின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்கப் போவதில்லை.

இந்த சம்பவத்தில் ராஜேஷ், நவீன், என்று இருவரை மட்டும் காவல் துறை கைது செய்திருக்கிறது. தவறான நபர்களை அறிமுகம் செய்து குற்றங்கள் நிகழும் சூழலை உருவாக்கியுள்ள பேஸ்புக் மற்றும் நகரத்து மேட்டுக்குடி கலாச்சார நிறுவன முதலாளிகளை தண்டிப்பது யார்?

படிக்க

______________________________________
– ஜென்னி
______________________________________

  1. முகநூலில் ஒவ்வொருவரும் தங்களைப்பற்றிய பெருமைகளையும் புகைப்படங்களையும் விதவிதமாக பகிர்ந்து கொள்கின்றனர். இத்தகையப் பகிர்வுகளைப்பார்த்து பெண்களாக இருந்தால் “ரொம்ப கியூட்டா இருக்கீங்க மேடம்” எனவும், ஆண்களாக இருந்தால் “ஹாண்ட்சம் எனவும்” ‘கமென்ட்ஸ்’ களைப் போட்டு சிலாகித்துக்கொள்கிறார்கள். இத்தகையப் போக்கில் தங்களை அறியாமலேயே ஒருவித பாலியல் ஈர்ப்புக்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற முகநூல் கதையாடல்கள் இறுதியில் சீரழிவிற்குத்தான் இட்டுச் செல்லும்.மாறாக சமூகப்பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமே முகநூலைப் பயன்படுத்த வேண்டும் என்பது எனது கருத்து.

  2. பேஸ்புக்கில் அமர்ந்து நேரம் கழிவதுகூட தெரியாமல் கணிணியில் மூழ்கி தமது படிப்பு மற்றும் வாழ்க்கையை இழப்பவர்கள் பெருகிக்கொண்டுள்ளனர். அது ஒரு பைத்தியம்போல் உருவாகியுள்ளது.

  3. மேட்டுக்குடி கலாச்சார கும்பலின் மற்றும் ஒரு புதிய சீரழிவுநடவடிக்கை. பேஸ்புக்கை பலநல்ல நடவடிக்கைகலுக்காக பயென்படுத்த பலநல்ல வாய்ப்பு இருந்த்தும் 90% மோசமாக பயன்படுகின்றது. பேஸ்புக் உருவாக்கியுள்ள மோசமான கலச்சாராம் மாகா ஆபத்தானது..நாடுநல்லா இருஇந்தா இந்தப்பயகலுக்கு பிடிக்கதே.

  4. இது முகநூலை பயன்படுத்துபவர்களின் கையிலுள்ளது. 20 வயதிற்க்கு கீழ் உள்ளவராயின் அக்குழந்தைகளின் பெற்றோர்கள் கண்காணிப்பது அவசியம்

    அது சரி இப்ப்டி பிலாக்கணம் படிக்கும் நீர் ஏன் வதனபுத்தகத்தில் இருக்கின்றீர் வெளியே வாருமெ பார்ப்போம்

  5. ஒரு நண்பர் சொன்னார், அவர் மனைவியுடன், குழந்தையுடன் உள்ள பொழுதும் FB status என்ன போடுவது என்பது தான் சிந்தனை என்று….

  6. பகத்சிங் மற்றும் தோழர் ஜீவா போன்றோர் புகழின் உச்சியை தொட்ட வயதில், நமது இளைஞர்கள் பாலியல் சார்ந்து சிதைந்து போய் இருபது மிக பெரிய சமுக அவலம்.

  7. முகநூல் எப்போதுமே நட்பை விருத்தி செய்து கொள்ள ஒரு நல்ல இடமாக இருக்காது. இதில் உலவுபவர்கள் பலரும் போலியான முகத்திரையுடன்தான் உலாத்துகிறார்கள். அதிலும் அப்பாவி பெண்களை ஏமாற்றி தங்களது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள ஒரு கருவியாகவே முகநூலை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.சமீபத்தில் ஒரு எழுத்தாளர் என்று அறியப்படுபவரே ஒரு பெண்ணுக்கு முகநூலில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததை கலகக்குரல் தோளுரித்திருந்தது. எனவே முகநூலில் அறிய நட்புகளை தவிர்த்து விடுவது நல்லது. முடிந்தால் முகநூலையே தவிர்த்து விடுவது நல்லது.

  8. தனிமையும், யாரும்நம்மை பார்த்துவிட முடியாது என்ற அறியாமையுமே முகனூல் குற்றங்கள் பெருகிவரக்காரணம்! ஊடகங்கள் பரப்பும், பெண்களைப்பற்றிய வக்கிற வர்ணனைகளூமே இளம் பருவத்தின்ரை பாதிக்கிறது! பெற்றோர் அல்லது விவரம் அறிந்த நட்பு துணை அவசியம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க