privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஆப்பிரிக்காவில் அமெரிக்க மேலாதிக்கம்!

ஆப்பிரிக்காவில் அமெரிக்க மேலாதிக்கம்!

-

2013-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவி செய்வதற்காக அமெரிக்க ராணுவ வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

லைபீரியாவில் அமெரிக்கப் படையினர்
லைபீரியாவின் மான்ரோவியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திற்கு கருவிகளுடன் வந்து இறங்கும் அமெரிக்கப் படையினர்

“முதலில் ஆப்பிரிக்க நாடான மாலிக்கு செல்லும் அமெரிக்க ராணுவ வீர்ர்கள் அங்கு மாலி ராணுவ வீரர்களுக்கு இசுலாமிய தீவிரவாத்த்தையும் அல்கொய்தாவையும் எப்படி எதிர்கொள்வது என பயிற்சி அளிப்பார்கள்” என்று அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.

“நாங்கள் எங்கள் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுவதற்கு அந்த நாடுகளுக்குச் செல்லவில்லை. மாறாக அவர்களின் அமைப்பை சிறப்பாக மாற்றவே செல்லுகிறோம். தேவைப்பட்டால் ஒழிய எந்த வித ராணுவ நடவடிக்கைகளிலும் இறங்கமாட்டோம்,” எனச் சுற்றி வளைத்து தங்கள் திட்ட்த்தை விளக்குகிறார் அமெரிக்க ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் டேவிட் ரோட்ரிகுவஸ்.

மாலி ஒரு தொடக்கம் தான். அதன் பின் லிபியா, சூடான், அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கு அல்கொய்தாவை ஒழிக்கவும், கென்யா, சோமாலியா நாடுகளுக்கு அல்-ஷபாப் போராளிகளை எதிர்க்கவும் மொத்தம் 35 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அந்தந்த நாட்டு ராணுவ வீரர்களை பயிற்றுவிக்க அமெரிக்க ராணுவம் செல்லவிருக்கிறது.

மார்ச் 2013 முதல் கான்சாஸ் மாநிலத்தின் ரைலி கோட்டையில் இருக்கும் 2வது பிரிகேடின் முதல் படைப்பிரிவு இந்த சிறப்புத் திட்டத்துக்கான பயிற்சியில் ஈடுபடுத்தப்படும். ஒரு முழு பிரிகேடில் 4,500 படையினர் இருப்பார்கள். ஒரு பெட்டாலியனில் சுமார் 800 படையினர் அனுப்பப்படலாம்.

ஈராக்கில் ஆக்கிரமிப்பு பணிக்கு அனுப்பபட்டிருந்த இந்த ‘குத்துக் கத்தி படைப்பிரிவு’ சென்ற ஆண்டு கன்சாஸூக்குத் திரும்பி வந்தது. ஆப்பிரிக்காவில் செயல்படுவதற்கு தேவையான சிறப்பு பயிற்சிகளை படைப்பிரிவு ஆணையர் ஜெப் பிராட்வாட்டர் தயாரித்திருக்கிறார்.

அமெரிக்க ராணுவம் ஏன் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்ல வேண்டும்?

9/11 தாக்குதலுக்கு பின் அல் கொய்தாவை பூதாகரமாக்கி உலகின் பல நாடுகளில் தனது ராணுவத் தளங்களை தந்திரமாக நிறுவியது அமெரிக்கா. கடைசியாக இன்று ஆப்பிரிக்காவின் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறது.

அமெரிக்கா தனது பொருளாதார, அரசியல் ஏகாதிபத்திய விரிவாக்கலுக்கு உலக நாடுகளை ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சிப்பது உலகறிந்த நடைமுறை. ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கை வளங்களை கைப்பற்றி அவற்றின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்த அங்கே ஆதிக்கம் செலுத்த வேண்டியது அமெரிக்காவின் நோக்கம். பொருளாதாரத் தளத்தில், ஆப்பிரிக்க இயற்கை வளங்களை தமது கட்டுப்பாட்டில் வைப்பதற்கு அமெரிக்க நிதி நிறுவனங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் ஏராளமான பணத்தை முதலீடு செய்துள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் பல உதிரி போராளி குழுக்களுக்கு உதவி செய்வதன் மூலம் தனது பொருளாதார ஆதாயங்களை உறுதி செய்து கொண்டு வந்து அமெரிக்க அரசு இப்போது நேரடியாக களத்தில் இறங்கி ராணுவத் தளங்களை அமைப்பதற்கான முன் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறது.

அமெரிக்காவின் ஆப்பிரிக்க படைகளுக்கான தலைமைத் தளபதி ஜெனரல் கார்ட்டர் ஹேம்
அமெரிக்காவின் ஆப்பிரிக்க படைகளுக்கான தலைமைத் தளபதி ஜெனரல் கார்ட்டர் ஹேம்

தனது வல்லாதிக்கத்தை மேலும் உறுதி செய்யவும், நாடுகளின் வளங்களை சுரண்டவும், முதலீடுகளை பாதுகாக்கவும் போர் நடவடிக்கைகள் தேவைப்படலாம். அதற்கு அந்த நாடுகளின் பூகோள அமைப்பில் பழகிய ராணுவப் பிரிவுகள் தேவை. அதனால் முதல் கட்டமாக பயிற்சியாளர்கள் என்ற போர்வையில் ராணுவ வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள்.

கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவில் இருக்கும் பாதி நாடுகளுக்கு படைகளை அனுப்பவிருக்கும் அமெரிக்க அரசு, தனது திட்டத்தை அடக்கி வாசிக்கிறது.  அமெரிக்காவின் ஆப்பிரிக்காவுக்கான ராணுவ மையம் 2007-ல் உருவாக்கப்பட்ட போது அந்த கண்டத்தில் அமைக்கப்படாமல் ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

‘எங்கள் ராணுவ வீரர்கள் போர் புரியச் செல்லவில்லை’ என்று சொல்லும் அதே நேரம் ராணுவ வீர்ர்களுக்கு 100க்கும் அதிகமான விசேஷ போர் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.

ஜெனரல் டேவிட் “தேவைப்பட்டால் நட்புறவை மேம்படுத்துவதற்கு நேரடி ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்” என்கிறார். தேவை என்று அவர் சொல்ல வருவது என்ன? அந்த நாட்டு வளங்களை சுரண்டுவதற்கு எதிர்ப்பாக மக்கள் எழுச்சி வந்தால் அதை அடக்கும் தேவையை நிறைவு செய்ய ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதா?

ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகச் சொன்ன அமெரிக்கா அதற்காக பல பில்லியன் டாலர்கள் செலவில் ராணுவப் படைகளை அனுப்பி, ஈராக் குழந்தைகளைக் கொன்று, பல பெண்களை விதவைகளாக்கி, தாம் கொன்று குவித்த மக்களின் பிணங்கள் மீது சிறுநீர் கழித்தது போன்ற காட்டுமிராண்டித்தனங்களை செய்த பிறகும் கூட கடைசி வரை பேரழிவு ஆயுதம் ஏதும் கிடைக்கவில்லை.

இப்போது ஆப்பிரிக்காவினுள் தனது ராணுவ விரிவாக்கத்தை நியாயப்படுத்த “பேரழிவு ஆயுதங்கள்” என்ற கதைக்குப் பதிலாக இசுலாமிய தீவிரவாதம் என்ற பல்லவியை பாடுகிறது.

அமெரிக்க ராணுவம் இசுலாமிய தீவிரவாதத்தை ஆப்பிரிக்காவில்  ஒழிப்பதற்குள் அமெரிக்க தீவிரவாதிகளான முதலாளிகள், உலகம் முழுவதும் உணவில் செயற்கைத் தட்டுப்பாடை ஏற்படுத்தி மக்களை பஞ்சத்தில் தள்ளியிருப்பார்கள் என்பது மட்டும்தான் நிச்சயம்.

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க