Friday, May 2, 2025
முகப்புஉலகம்அமெரிக்காமாலியை ஆக்கிரமிக்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம்!

மாலியை ஆக்கிரமிக்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம்!

-

மாலி வரைபடம்மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி மீது பிரான்ஸ் இராணுவத் தாக்குதலை தொடுத்திருக்கிறது.

மாலியின் வடபகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இசுலாமிய தீவிரவாதிகள் தென்பகுதிகளை நோக்கி நகர ஆரம்பித்த போது அவர்கள் மீது பிரான்ஸ் வான் வழித்தாக்குதல்களை நடத்தியது.

250 கிலோ எடையிலான குண்டுகளை வீசி கடநத 5 நாட்களாக தாக்கிய பிறகும் இஸ்லாமிய போராளிகளின் முன்னேற்றத்தை பிரான்சால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மாலியின் மத்தியப் பகுதியில் உள்ள 35,000 பேர் வசிக்கும் டயாபலி என்ற இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரையும் இராணுவ முகாமையும் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். மத்திய மாலியின் முக்கிய நகரமான செகவ் நகரத்தில் வசிக்கும் 60 பிரெஞ்சு நாட்டினரை பிரான்ஸ் பாதுகாப்பாக வெளியேற்றியிருக்கிறது.

இந்தச் சூழலில் மாலிக்கு அனுப்பப்படும் தரைப்படையினரின் எண்ணிக்கையை மூன்று மடங்காக்கி 2,500 ஆக உயர்த்தப் போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. ஐவரி கோஸ்டில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு படைகள் தரை வழியாக மாலிக்குள் கொண்டு வரப்படுகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வடக்கு ஆப்பிரிக்காவில் லிபியா, சிரியா, ஐவரி கோஸ்ட், மாலி என்ற நான்கு நாடுகளின் மீது போர் தொடுத்து பிரான்ஸ் தனது முன்னாள் காலனிகளின் மீது நவீன காலனியாதிக்கத்தை செலுத்தியிருக்கிறது.

2011ல் லிபியாவில் கடாபியின் அதிகாரத்தை ஒழித்துக் கட்டிய பிறகு மேற்கத்திய நிறுவனங்கள் பல லடசம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் வளங்களை கைப்பற்றியிருக்கின்றன. கடாபியின் ஒருங்கிணைப்பில் செயல்பட்ட ஆப்பிரிக்க நாடுகளின் பிராந்திய கூட்டமைப்புகள் கலைக்கப்பட்டு அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்கா முழுவதும் இராணுவத் தளங்களை அமைக்க ஆரம்பித்திருக்கின்றன.

மாலியில் பிரெஞ்சு படைகள்
மாலியை ஆக்கிரமிக்கும் பிரெஞ்சு படைகள்

2011ல் பிரான்ஸ் ஐவரி கோஸ்டின் உள்நாட்டு போரில் தலையிட்டு தனது கைப்பாவையான அலசானே அவுத்தாரா என்பவரை அதிபராக்கியது.  செனகலில் அமெரிக்க, பிரெஞ்சு ஆதரவுடன் நடந்த எதிர்க் கட்சி போராட்டங்களின் மூலம் மேக்கி சால் என்பவர் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அல்ஜீரிய அரசுடன் பிரான்ஸ் பல ஆயிரம் கோடி யூரோ மதிப்பிலான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறாக தனது ஆதிக்க வளையத்தை உருவாக்கியுள்ள பிரான்ஸ் அடுத்த கட்டமாக மாலியின் மீது தனது இராணுவ ஆதிக்கத்தை செலுத்துகிறது.

கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய போராளிகள் லிபிய இராணுவத்தில் பணி புரிந்த துவாரக் இன வீரர்களும் சேர்ந்து கொண்டு மாலியின் வடபகுதியை கைப்பற்றினர்.  மாலியில் கலகத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்த இராணுவ தளபதிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களும் இவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.

இவர்களுக்கு எதிராகத்தான் பிரான்ஸ் இப்போது இராணுவ நடவடிக்கை எடுக்கிறது. அதன் காலனிய கைப்பாவை அரசுகளான ஐவரி கோஸ்ட், நைஜர், செனகல், நைஜீரியா போன்ற நாடுகள் பிரான்சுடன் இணைந்து கொள்ள ஆயிரக்கணக்கான படையினரை அனுப்ப திட்டமிட்டுள்ளன. அல்ஜீரியா பிரான்சின் வான் வழித்தாக்குதல்களுக்கு வசதியாக தனது தளங்களை திறந்து விட்டிருக்கிறது.

தமது உலகளாவிய ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் நீட்சியாக அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்க நாடுகளின் மீது இராணுவ ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.  ஏகாதிபத்திய படைகள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் கோரிக்கை.

மேலும் படிக்க