privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?

அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?

-

திருமா ராமதாசை கௌரவிக்கிறார்
குச்சு கொளுத்தி இராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கும் திருமாவளவன் (கோப்பு படம்)

மிழ்க்குடிதாங்கி”, “அம்பேத்கர் சுடர்” என்று விடுதலைச் சிறுத்தைகளால் கொண்டாடப்பட்ட ராமதாசு, தமிழகத்தின் ஆதிக்க சாதிவெறியர்கள் அனைவருக்கும் தலைவராக அவதரித்திருக்கிறார். “அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை” என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதி மறுப்புத் திருமணத்தையும், வன்கொடுமை தடைச் சட்டத்தையும் எதிர்த்து ராமதாசு சண்டமாருதம் செய்கிறார். திருமாவளவனோ, “ராமதாசு என்னைச் சட்டையைப் பிடித்து இழுத்தாலும் நான் சண்டைக்குப் போக மாட்டேன்” என்கிறார்.

ராமதாசும், காடுவெட்டி குருவும் தூண்டி விட்ட சாதிவெறி ஆங்காங்கே தாழ்த்தப்பட்ட மக்களைக் காவு வாங்குகிறது. சேத்தியாதோப்பு பகுதியில், வன்னியர் சாதிப் பெண்ணைக் காதலித்த கோபாலகிருஷ்ணன் என்ற மாணவனைக் கழுத்தை அறுத்தே கொலை செய்து, குட்டைக்குள் வீசியிருக்கிறார்கள் வன்னிய சாதிவெறியர்கள். ஒரு வாரத்திற்குப் பின்னர், அழுகி நாறிய நிலையில் அந்த இளைஞனின் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சாதி மறுப்புக் காதலுக்குப் பழிவாங்குவதற்காக, காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற தாழ்த்தப்பட்ட பெண் வன்னிய சாதிவெறியர்களால் கொல்லப்பட்டிருக்கிறாள்.

திருமாவளவன் மட்டும் ராமதாசுடன் சமரசத்தை நாடுகிறார். “இப்போது அமைதி காப்பதுதான் வீரம்” என்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நவம்பர்-24 அன்று திருமா அளித்திருக்கும் பேட்டி, அவர் சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கி முத்தெடுத்தவர் என்று காட்டுகிறது.

தருமபுரி தாக்குதல் ராமதாசுக்குத் தெரியாமல் நடந்திருக்கும் என்றுதான் அவர் முதலில் நினைத்தாராம். இலண்டனிலிருந்து கோ.க. மணியுடனும், டாக்டர் செந்திலுடனும் தொலைபேசியில் பேசியபோது, ‘இந்தத் தாக்குதலில் பா.ம.க.வுக்குச் சம்மந்தமே இல்லை’ என்று அவர்கள் சொன்னார்களாம்; இவரும் நம்பி விட்டாராம். என்ன நடந்தது என்று ஒருமுறை கூட அவர் தன் சொந்தக் கட்சிக்காரர்களிடம் கேட்கவில்லை போலும். நம்புவோம்.

“சாதி மறுப்புத் திருமணம் செய்தால் வெட்டுவேன் என்று மாமல்லபுரத்திலேயே காடுவெட்டி குரு ஏற்கெனவே பேசியிருக்கிறாரே, உங்களுக்குத் தெரியாதா?” என்று பேட்டியாளர் ஜென்ராம் கேட்கிறார். “அது பற்றி கோ.க. மணியிடம் கேட்டேன். குருவை டாக்டரய்யா கண்டித்ததாகச் சொன்னார். நம்பினேன்” என்கிறார்.

கடைசியாக ராமதாசு தனது சொந்த வாயால் ஊடகங்களில் பேசிய பின்னர்தான், ‘இது மேலிருந்தே திட்டமிட்டு நடத்தப்படுகிறது’ என்ற உண்மை திருமாவுக்குப் புரிந்ததாம். அதாவது, விடுதலைச் சிறுத்தைகளை ராமதாசு தாக்குகிறார் என்பதை உலகமே பார்த்து விட்டதால், இனிமேலும் வலிக்காத மாதிரி நடிக்க முடியாது என்பது திருமாவுக்குப் புரிந்து விட்டது!

அதன் பிறகும் அவருக்குக் கோபம் வரவில்லை. திருப்பி அடிப்பதெல்லாம் இருக்கட்டும். “ராமதாசு அம்பேத்கர் சுடர் அல்ல, வன்னிய தீவட்டி” என்று சாடியிருக்கலாம். ராமதாசையும் குருவையும் வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்யக் கோரிப் போராடியிருக்கலாம். செய்யவில்லை. “வன்னியப் பெண்கள் வயிற்றில் தலித் கரு வளர வேண்டும் என்று நான் பேசியதாக பொப்பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு இடத்திலாவது நான் அப்படிப் பேசியதாக நிரூபித்தால், தூக்கில் தொங்கத் தயார்” என்று தருமபுரி ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக தன்னிலை விளக்கம் அளிக்கிறார் திருமா.

ஆனால், தனது கட்சியினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டை ஆவேசமாக மறுக்க அவர் முயலவில்லை. ‘காதல் திருமணங்களைப் பிரித்து காசு பறிப்பதாகச் சொல்கிறீர்களே, அப்படி ஒரேயொரு ஆதாரமாவது காட்ட முடியுமா?’ என்று கேள்வி எழுப்பவில்லை. ‘எங்கள் கட்சிக்காரர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவோ, வன்கொடுமைச் சட்டத்தை வைத்துப் பணம் பறித்ததாகவோ ஒரு ஆதாரம் கொடுங்கள், அரசியலை விட்டே விலகுகிறேன்’ என்று சவால் விடவில்லை.

மாறாக, சமரசத்திற்கு இப்போதும் தயாராக இருப்பதாக அந்தப் பேட்டியின் முடிவில் பிரகடனம் செய்கிறார். “தம்பி, தேர்தல் அரசியல் வேண்டாம்; வா, நாம் இரு சமூக மக்களின் நல்லிணக்கத்துக்காக, உழைக்கும் மக்கள் ஒற்றுமைக்காகப் பாடுபடுவோம் என்று டாக்டரய்யா என்னை அழைத்தால், இந்த நிமிடமே கட்சியை விட்டுவிட்டு வரத் தயார். நாடாளுமன்ற அரசியல் எனக்குத் தேவையில்லை” என்கிறார். ஆனந்த விகடன் பேட்டியில் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது கொடுத்ததை நியாயப்படுத்துகிறார். “எதிர்காலத்தில் தலித்துகளுக்கு ஆதரவாக ராமதாசு நடந்து கொண்டால், மீண்டும் அவருக்கு விருது கொடுப்போம்” என்கிறார்.

சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்காகவும், தமிழர் ஒற்றுமைக்காகவுமே தான் அமைதி காப்பதாகவும், பொறுப்புடன் நடந்து கொள்வதாகவும் தனது அணுகுமுறைக்கு விளக்கம் சொல்கிறார் திருமாவளவன். ஆனால், விடுதலைச் சிறுத்தைகளின் டிஜிட்டல் பானர் முழக்கங்களையும், மேடைப் பேச்சுகளையும் பார்த்து, திருமாவைப் போர்க்குணத்தின் உருவமாக எண்ணிக் கொண்டிருந்த இளைஞர்கள் திகைக்கிறார்கள். இப்படியொரு சரணடைவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ராமதாசிடம் திருமா சரணடைவது ஏன்?

அனைத்து சாதி கூட்டம்
ராமதாசு தலைமையில் அணி திரண்டுள்ள ஆதிக்கசாதி வெறியர்களின் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய கூட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தன்னைத்தானே சித்தரித்துக் கொள்வதைப் போலவோ, அல்லது முற்போக்காளர்கள் எனப்படுவோர் சிலர் நம்பிக் கொண்டிருப்பதைப் போலவோ, தலித் விடுதலைக்கான அமைப்பு அல்ல. மற்றெல்லா ஓட்டுக்கட்சிகளையும் போலவே, அது ஒரு சாதிய பிழைப்புவாதக் கட்சி. வன்னிய மக்களின் பெயரைச் சொல்லி பா.ம.க. என்ற பிழைப்புவாதக் கட்சியை ராமதாசு நடத்துவதைப் போலவே, தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினருடைய பிரதிநிதியாகத் தன்னைக் கூறிக்கொண்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அரசியல் பிழைப்பு நடத்துகிறது.

பா.ம.க.வால் ஏமாற்றப்படும் வன்னிய மக்கள் ஆதிக்க சாதி; சிறுத்தைகளால் ஏமாற்றப்படும் மக்கள் ஒடுக்கப்பட்ட சாதி என்பதுதான் வேறுபாடு. பா.ம.க.வுக்கும் சிறுத்தைகளுக்கும் வேறெந்த வேறுபாடும் இல்லை. 2001 தேர்தலில் தி.மு.க.வும் பா.ம.க.வும் கூட்டணி அமைத்திருந்தபோது, திருமாவளவன் போட்டியிட்ட தொகுதியில் பல ஊர்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் கொளுத்தப்பட்டன; நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்குதலில் காயம்பட்டனர். அப்போது, “இந்தச் சாம்பல் மேட்டின்மீது நின்று சொல்கிறேன். கொளுத்தியவர்களுடன் இனி கூட்டணி கிடையாது” என்று திருமா அறிவித்தார்.

அன்று அப்படிச் சொல்லி விட்டு மறுபடியும் பா.ம.க., தி.மு.க.-வுடன் கூட்டுச் சேர்ந்த சந்தர்ப்பவாதம் பற்றிக் கேட்டால், “அம்பேத்கர் ஆயுதப் போராட்டம் நடத்தச் சொல்லவில்லை. இருக்கின்ற அரசமைப்பில் பங்கேற்று அரசதிகாரத்தைப் பெறுமாறுதான் கூறியிருக்கிறார்” என்று கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறார். ‘தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தலித்துகளை மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காகத்தான் வலியச் சென்று கைகுலுக்க வேண்டியிருப்பதாக’ நியாயப்படுத்துகிறார்.

தனிக்குடியிருப்பு, தனிக்கிணறு, தனிக்குவளை, தனிச்சுடுகாடு என்று தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை ஊரின் மைய நீரோட்டத்தில் சேர்த்துக் கொள்வதாக எந்தக் கட்சியாவது வாக்குறுதி கொடுத்ததா, அல்லது கூட்டணிக்கான முன்நிபந்தனையாக அப்படி ஏதேனும் ஒன்றை திருமா முன்வைத்திருக்கிறாரா? எதுவும் கிடையாது.

சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்போதே, அரசியலில் தலித் பிழைப்புவாதிகளை காங்கிரசு, பா.ஜ.க., உள்ளிட்ட ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைவரும் மைய நீரோட்டத்தில் இணைத்துதான் வைத்திருக்கிறார்கள். ‘இப்படிப் பல்வேறு கட்சிகளிலும் தலித் வாக்குகள் சிதறடிக்கப்படுவதனால்தான் தலித்துகள் அரசியலதிகாரம் பெற முடியவில்லை’ என்று கூறித் தொடங்கப்பட்டவைதான் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் கட்சிகள்.

வன்னியர்களிடம் இதே வாதங்களைச் சொல்லித்தான் ராமதாசும் தனிக்கட்சி தொடங்கினார்.

பல்வேறு கட்சிகளிலும் உள்ள வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரித்துத் தனியாக ஒரு சாதிய வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டு, தி.மு.க., அ.தி.மு.க. போன்றோருடன் பேரம் பேசுவதுதான் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எல்லா சாதிக் கட்சிகளின் நோக்கமும். தங்கள் சாதி வாக்காளர்களிடம் எந்த அளவுக்குச் சாதி உணர்வைத் தூண்ட முடிகிறதோ, அந்த அளவுக்கு இவர்கள் தமது சந்தர்ப்பவாதத்தை மறைத்துக் கொள்ள முடியும். தமது சாதி வாக்குகளை உறுதி செய்து கொள்ள முடியும்.

நீயும் நானும் ஒண்ணு, மக்கள் வாயில் மண்ணு!

இருப்பினும், திருமாவுக்கு என்ன காரணத்துக்காகவோ ராமதாசுடன் ஒரு நல்லிணக்கம் அவசரமாகத் தேவைப்படுகிறது. அதற்காகக் கொளுத்தப்பட்ட மக்களுக்கும் கொளுத்திய கிரிமினல்களுக்கும் நல்லிணக்கம் பேசுகிறார். ராமதாசோ, “நான் இருப்பதனால்தான் வட தமிழகம் அமைதியாக இருக்கிறது” என்று வெளிப்படையாகவே மிரட்டுகிறார்.

திருமா – ராமதாசு கூட்டணி, வன்னியர் – தாழ்த்தப்பட்டோரிடையேயான சமூக உறவில் எந்த சமத்துவத்தையும் கொண்டுவந்து விடவில்லை. வசூல் வேட்டை நடத்தவும், போலீசுக்குப் புரோக்கர் வேலை பார்க்கவும், கட்டப் பஞ்சாயத்து செய்யவும், காண்டிராக்ட் எடுக்கவும் மற்றெல்லா ஓட்டுப் பொறுக்கிகளும் பெற்றிருக்கும் ‘ஜனநாயக உரிமை’யை விடுதலை சிறுத்தைக் கட்சியின் ‘தளபதிகளுக்கு’த் தான் பெற்றுத் தந்தது. தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதையும் பெற்றுத் தரவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை தனிக்குடியிருப்பும், தனிச்சுடுகாடும் அப்படியேதான் இருந்தன. அவ்வாறிருக்கும்போதே தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றுவதற்குத்தான் அம்பேத்கர் சிலை திறப்பு, தலித்துக்கு மந்திரி பதவி போன்ற ராமதாசின் தந்திரங்கள். பதிலுக்கு வன்னியர்களை தாஜா செய்வதற்குத்தான் ராமதாசுக்கு திருமா வழங்கிய தமிழ்க் குடிதாங்கி, அம்பேத்கர் சுடர் பட்டங்கள்.

‘குச்சு கொளுத்தி’ என்று தாழ்த்தப்பட்ட மக்களால் வெறுப்புடன் ஏசப்பட்ட ராமதாசுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களையே ஓட்டுப்போட வைத்ததும், இப்போது நத்தம் காலனியைக் கொளுத்திய பின்னரும், தமிழர் ஒற்றுமை என்று கூறிக் கொண்டு ராமதாசுக்கு நல்லிணக்கத் தூது விடுவதும்தான் திருமாவின் சாதனை என்று சொல்ல வேண்டும்.

மறுகாலனியாக்கம் பெற்றெடுத்த புதிய புல்லுருவிகள்!

திருமா காடுவெட்டி குருவுக்கு மரியாதை செய்கிறார்
வன்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டிய காடு வெட்டி குருவுக்கு பொன்னாடை (கோப்பு படம்)

நத்தம் தாக்குதலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் படைப்பாளிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்து கொண்டு பேசினர். நெருப்பு, கொள்ளை, துயரம், கண்ணீர் போன்ற சொற்கள் ஒலிபெருக்கியிலிருந்து தெறித்த வண்ணம் இருந்தன. ஆர்ப்பாட்டத்திற்கு ‘அண்ணன் திருமா’வுடன் வந்திறங்கி இருபுறமும் அணிவகுத்து நின்ற குவாலிஸ், இன்னோவா, சுமோ போன்ற வெள்ளை வண்டிகளில் சாய்ந்தபடி மினிஸ்டர் ஒயிட்டும், கழுத்தில் தங்கத் தாம்புக்கயிறு, கையில் பிரேஸ்லெட்டும் அணிந்த சிறுத்தைகள் பலர் நின்றிருந்தனர். அவர்கள் வாயிலிருந்து ‘லட்சம், கிரவுண்டு, அப்ரூவ்டு, எம்.எல்.ஏ’ போன்ற சொற்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. இந்த வர்க்கத்தினரை அதிகாரத்துக்கு அழைத்துச் செல்வதைத்தான் தலித்துகளை அதிகாரத்துக்கு அழைத்துச் செல்வது என்கிறார் திருமா.

ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை, லேபர் காண்டிராக்ட், உரிமங்கள் பெற்றுத் தருதல், தண்ணீர்வியாபாரம், செக்யூரிட்டி ஏஜென்சி, மெட்ரிக் பள்ளி, சுயநிதிக் கல்லூரி, வாடகைக்கார் தொழில், நிலம் சார்ந்த கட்டப் பஞ்சாயத்துகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கான துணைத் தொழில்கள், கருங்காலி தொழிற்சங்கங்கள் போன்று பொறுக்கித் தின்னவும், கொள்ளையடிக்கவுமான பல வாயப்புகளை மறுகாலனியாக்க கொள்கைகள் திறந்து விட்டிருக்கின்றன. இத்தகைய தொழில்களில் ஈடுபடுபவர்கள்தான் வி.சி. கட்சியின் தூண்கள். இவர்கள்தான் டிஜிடல் பானர் வைப்பவர்கள், தங்கக் காசு கொடுப்பவர்கள், கூட்டத்துக்கு ஆள் திரட்டுபவர்கள், அண்ணன் வந்தால் முன்னும் பின்னும் 50 வண்டிகளில் புழுதி கிளப்பிக் கொண்டு செல்பவர்கள்.

இதே வகையான தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பா.ம.க. உள்ளிட்ட பிற கட்சிகளின் உள்ளூர்த் தலைவர்களோடு இவர்கள் தொழில் கூட்டாளிகளாக, நண்பர்களாக, அன்றாடம் போலீசு ஸ்டேசன் முதல் கலெக்டர் ஆபீஸ் வரையில் பல இடங்களில் பழகுபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் வர்க்க நலனும் ஒன்றுதான். தொழில் தேவைக்காக வெவ்வேறு கட்சிகளில் இருக்கிறார்களேயன்றி, வேறு எந்தக் கொள்கையாலும் இவர்கள் பிரிந்து நிற்கவில்லை.

ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ, பொதுப்பணித்துறையிலோ இலஞ்சத் தொகை கீழிருந்து மேல் வரை தீர்மானிக்கப்பட்ட விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சுமுகமாகப் பிரித்துக் கொள்ளப்படுவதைப் போல, தனியார்மய- தாராளமயக் கொள்கைகள் வழங்கியுள்ள வாப்புகளைப் பயன்படுத்தி அடிக்கின்ற கொள்ளையை இவர்கள் தமக்குள் சுமுகமாகப் பிரித்துக் கொள்கிறார்கள். தேர்தல் அரசியல் கூட்டணி மாறுவதால், சில நேரம் இந்த அணியிலும், சில நேரம் அந்த அணியிலும் இருக்க நேர்ந்தாலும், இவர்களுடைய உறவின் சமநிலை அநேகமாகக் கெடுவதில்லை.

சென்ற மே மாதம் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வியைத் தொடர்ந்து, ஜுலை மாதத்திலேயே திராவிடக் கட்சிகள் அல்லாத மூன்றாவது அணி அமைக்கப் போவதாக அறிவித்தார் ராமதாசு. உடனே அதை வழிமொழிந்தார் திருமாவளவன். தன்னை திடீரென்று ராமதாசு கழற்றிவிடுவார் என்பதைத்தான் திருமாவளவன் எதிர்பார்க்கவில்லை போலும். உழைத்துக் கஞ்சி குடிக்கின்ற தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் ராமதாசுடன் சமரசத்தைக் கோரவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் அரசியல் இம்மக்களுடைய நலனுக்கானதும் அல்ல.

சாதிய பிழைப்புவாதத்தைப் புனிதப்படுத்திய அடையாள அரசியல்!

அ மார்க்ஸ்
அ மார்க்ஸ்

வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய இந்தச் சாதி அரசியலின் இரண்டாவது சுற்று, 90-களின் தொடக்கத்தில் ஆரவாரமாகத் தமிழகத்தில் தலையெடுத்தது. வன்னியர் வாக்குவங்கியை மையமாக வைத்துப் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கிய ராமதாசு, அம்பேத்கர் – பெரியார் – மார்க்ஸ் ஆகியோரது படங்களை உறுப்பினர் அட்டையில் போட்டுக் கொண்டதன் மூலம் சாதி-தீண்டாமை ஒழிப்பு, தமிழ்த்தேசிய விடுதலை, வர்க்க விடுதலை போன்ற எல்லா சரக்குகளும் கிடைக்கின்ற பல்பொருள் அங்காடியாக பா.ம.க.வைச் சந்தைப்படுத்தினார். அப்பட்டமான சாதிக் கட்சி என்று தெரிந்தபோதும், சமூக மாற்றத்துக்குக் குறுக்குவழி தேடிக் கொண்டிருந்த சில முன்னாள் புரட்சியாளர்களும், பின் நவீனத்துவ அறிவுத்துறையினரும், நரிக்கு சாயம் பூசிப் பரியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின் நவீனத்துவத்தின் நுண் அரசியலானது, சாதி, உட்சாதி, இனக்குழு, பாலினம் போன்ற அடையாளங்களை முதன்மைப்படுத்தி, வர்க்கப் போராட்டம் என்ற கருத்தாக்கத்தையும் கம்யூனிசத்தையும் தூற்றியது.

ஏகாதிபத்தியத்தால் உலகம் முழுவதும் ஸ்பான்சர் செய்யப்பட்டு, தன்னார்வக் குழுக்களால் கடைவிரிக்கப்பட்ட இந்த அடையாள அரசியலை, தலித்தியம், தலித் அரசியல் என்ற பெயர்களில் பின் நவீனத்துவ அறிஞர்கள் இங்கே முழங்கினர்.

பேரா.கல்விமணி
பேரா.கல்விமணி

‘கம்யூனிஸ்டு கட்சிகளும், நக்சல்பாரிக் கட்சியும் தலித்துகளை காலாட்படையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அக்கட்சிகளிலிருந்தெல்லாம் தலித்துகள் வெளியேறித் தமக்கென தனிக்கட்சி தொடங்கவேண்டும். தலித்துகளின் உணர்வுகளைத் தலித் அல்லாதவர்கள் ஒருக்காலும் உணர முடியாது. தீண்டாமைக்கு எதிராகத் தலித்துகளைத் தவிர, வேறு யாரும் போராடுவார்கள் என்று நம்ப முடியாது. வர்க்கம் என்ற பேரடையாளத்துக்குள் சாதியை அடக்குவதால் கம்யூனிசம் சாதியை ஒழிக்காது. கம்யூனிஸ்டுகள் அதற்காகப் போராடியதுமில்லை. எனவே, தலித்துகள் சிதறிக் கிடக்காமல் தனியொரு வாக்குவங்கியாகத் திரள வேண்டும். போலி ஜனநாயகம் என்று கூறி இந்தத் தேர்தலை புறக்கணிப்பது தவறு. தேர்தல் அரசியல் மூலம் கைப்பற்றும் அதிகாரத்தின் மூலமும், கல்வி – இட ஒதுக்கீடு முதலான வழிகளில் பொருளாதார முன்னேற்றம் அடைவதன் மூலமாகவும்தான் தலித்துகள் விடுதலை பெற முடியும்’ – இவையெல்லாம் அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரங்கள்.

நாய்க்கன் கொட்டாய் பகுதியில் நக்சல்பாரிகளின் செல்வாக்கு இருந்தவரை சாதி அரசியல் தலையெடுக்க முடியவில்லை. அவர்கள் இல்லாத காரணத்தினால்தான் இன்று இத்தாக்குதல் நடந்திருக்கிறது” என இன்றைக்கு நத்தம் காலனி மக்கள் கூறுவதை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும்.

சாதி அமைப்பு என்பது ஒரு ஜனநாயக விரோத நிறுவனம். சாதி ஆதிக்கமும் தீண்டாமையும் தவறு என்று ஆதிக்க சாதி உழைக்கும் மக்களை உணர வைத்து, சாதிக்கு எதிராக அவர்களைப் போராட வைப்பதுதான் ஜனநாயகப் புரட்சியின் கடமை. ஆனால், அடையாள அரசியலோ, ‘மற்றதன் இருப்பை அங்கீகரிப்பது’ என்று கூறிக்கொண்டு எல்லா சாதியினரும் தத்தம் அடையாளத்தைப் பேணிக்கொள்வதை ஒரு ஜனநாயக உரிமையாகக் கௌரவப்படுத்தியது.

ரவிகுமார்
ரவிகுமார்

அதே நேரத்தில், ‘சாதி அடையாளத்தைத் துறந்து பணியாற்றும் கம்யூனிஸ்டுகளை நம்பாதே’ என்று தலித் மக்களுக்கு அறிவுறுத்தியது. ‘மாயாவதி, பஸ்வான் உள்ளிட்ட அப்பட்டமான தலித் பிழைப்புவாதிகளைக்கூட யாரும் விமர்சிக்கக் கூடாது. விமர்சிப்பவர்கள் ஆதிக்க சாதிக்காரர்களாகவோ, அவர்களது எடுபிடிகளாகவோதான் இருக்க முடியும். தீண்டாமைக்குரிய தீர்வை ஒரு தலித்தைத் தவிர வேறுயாரும் கூறமுடியாது. தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலித்தைத் தவிர வேறு யாரும் தலைமை தாங்க முடியாது, கூடாது’ என்றெல்லாம் பேசி, மற்ற சாதிகளில் பிறந்த ஜனநாயக சக்திகளை எதிர்நிலைக்குத் தள்ளியது தலித் அரசியல். பெரியாரைத் தலித் விரோதியாகச் சித்தரித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்.

இவ்வாறு, ஒரு மனிதன் கொண்டிருக்கும் கொள்கை, அவனது நடைமுறை ஆகியவற்றைப் புறந்தள்ளி விட்டு, ‘அவனுடைய பிறப்பை முதன்மைப்படுத்தியதன் மூலம்’, அடையாள அரசியல் பார்ப்பனியத்தை அப்படியே வழிமொழிந்தது. உழைக்கும் வர்க்கத்தைச் சாதிரீதியாகக் கூறுபோடுவது, கம்யூனிஸ்டு மற்றும் புரட்சிகர இயக்கங்களின் மீது தலித் இளைஞர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்துவது என்ற ஆளும் வர்க்கத் திட்டத்தை நிறைவேற்றுவதே இதன் நோக்கமாக இருந்தது. ‘நம்ம சாதிக்காரனுக்கு ஓட்டுப் போடு’ என்று பச்சையாகக் கேட்கும் ஓட்டுப் பொறுக்கிகளின் சாதி அரசியலையே, பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் பம்மாத்து மொழியில், தன்னார்வக் குழுக்களின் தத்துவ விசார தோரணையில் முன்வைத்தது அடையாள அரசியல். மார்க்சிய – லெனினிய புரட்சிகர அரசியலிலிருந்து வெளியேறிய எஸ்.என்.நாகராசன், எஸ்.வி.இராஜதுரை, ஞானி, நிறப்பிரிகை குழுவினர் முதலானோரெல்லாம் அடையாள அரசியலில்தான் தஞ்சம் புகுந்தனர்.

சாதி சமத்துவம் என்பது சாத்தியமா?

இதன்படி, சாதியைக் கூறிக்கொள்வது நேர்மையான நடவடிக்கையாக போற்றப்பட்டது. “நான் வன்னியன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று அறிவித்தார் கவிஞர் பழமலய் (இன்றைக்கு அவர் ராமதாசின் கூற்றை அப்படியே வழிமொழிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது). பின் நவீனத்துவ அறிஞர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மருத்துவர் ஐயாவோ, ‘காலையில் வன்னியராக இருந்து அக்கினி சட்டி கொடி ஏற்றுவது, மாலையில் தலித் விடுதலைக்காக அம்பேத்கர் சிலை திறப்பது’ என்று பொளந்து கட்டினார்.

திருமா - ராமதாஸ் சமரசம்
வாழும் பெரியார் திருமாவை அன்று பாராட்டிய ராமதாசுக்கு இன்று நன்றி தெரிவிக்கும் விடுதலைச் சிறுத்தைகள்: “அடங்க மறு” என்பவர்கள் அடக்கி வாசிப்பது ஏன்?

அடையாள அரசியல், சாதியை மட்டுமின்றி, உட்சாதி அடையாளங்களையும் போற்றிக் கொண்டாடியது. சாதி அடையாளங்களைப் பேணிக்கொண்டே, சாதி சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதுதான் ஜனநாயகம் என்று வியாக்கியானம் செய்தது. மொத்தத்தில் ‘சுயநலம், சுயசாதி அபிமானம், பிழைப்புவாதம், ஆளும் வர்க்க நிறுவனங்களை நத்திப் பிழைப்பது, கட்சி தாவுவது, பொறுக்கித்தனங்கள்’ போன்ற நடவடிக்கைகள்தான் உண்மையான கலகங்கள் என்றும், ‘புரட்சி, தியாகம், சாதி ஒழிப்பு, வர்க்கப் போராட்டம்’ போன்ற கருத்துகள் தலித் மக்களை ஏமாற்றுவதற்கு, கம்யூனிசப் புரட்சியாளர்கள் கடைவிரிக்கும் ‘பெருங்கதையாடல்கள்’ என்றும் பிரச்சாரம் செய்தது. எனவே, இத்தகைய அமைப்புகளிலிருந்து ‘தப்பித்து’ வெளியே வருமாறு தலித்துகளை அறைகூவியது.

தலித் மக்களை இப்படித் தப்பிக்கச் சொல்லி அறிவுறுத்தியவர்களில் ஒருவர்தான் பின்னாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் எம்.எல்.ஏ. பதவியைக் கைப்பற்றியவரும், சமீபத்தில் தனது மகன் திருமணத்தை மருத்துவர் ஐயா தலைமையில் நடத்தியவரும், இப்பொழுதும் நத்தம் தாக்குதலுக்கு நக்சல்பாரிகளைக் குற்றம் சாட்டி அவதூறு செய்து கொண்டிருப்பவருமான இரவிக்குமார். அவர் ‘தப்பி’ விட்டார், அவருடன் சேர்ந்து இவற்றையெல்லாம் பிரச்சாரம் செய்த நிறப்பிரிகை அறிஞர்களும் ‘தப்பி’ விட்டார்கள். அடையாள அரசியல் வைத்த நெருப்பிலிருந்து நத்தம் மக்கள்தான் தப்ப முடியவில்லை.

சாதி என்ற அடையாளத்தின் சாரமே ஏற்றத்தாழ்வுதான். படிக்கட்டில் எத்தனாவது படி என்பதுதான் சாதி என்ற அடையாளத்தின் சாரம். சமமான படி இருக்க முடியாது. சாதி சமத்துவமும் இருக்க முடியாது. இதனால்தான் பட்டியல் இன மக்களைக் குறிப்பதற்கு ‘தலித்’ என்ற சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்திக் கொண்டாலும், ‘தலித் ஒற்றுமை’ என்பது கானல் நீராகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளர், பறையர், அருந்ததியர் என்ற மூன்று முக்கியப் பிரிவினரைக் கூட ‘தலித்’ என்ற பெயரில் ஒன்றுபடுத்த முயலவில்லை. ‘நாங்கள் தலித் அல்ல, தேவேந்திர குலம்’ என்கிறார்கள் பள்ளர் சமூகத்தினர். அருந்ததியர் சமூகத்துப் பையனைக் காதலித்த பறையர் சமூகத்துப் பெண் சொந்த சாதிக்காரர்களாலேயே கொல்லப்படுகிறாள். திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றோர் தங்கள் கட்சியினரின் உட்சாதி மேட்டிமைத்தனத்துக்குத் துணையாகத்தான் நின்று வருகின்றனர். இதனை ஒழிக்க முயன்றால் இவர்களது கட்சியே ஒழிந்துவிடும் என்பதே உண்மை.

மங்கும் சாதியை புதுப்பிக்கும் சாதிய பிழைப்புவாதம்!

திருமாவுக்கு தங்கம்
புதுச்சேரியில் நடந்த போராளி தலைவனுக்கு பொன் வழங்கும் விழா (கோப்பு படம்)

மொத்தத்தில், சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் பண்பாட்டுரீதியாக மெல்ல மங்குகின்ற சாதி உணர்வை, சாதிய பிழைப்புவாத வாக்கு வங்கி அரசியல் புளி போட்டு விளக்கிப் புதுப்பித்திருக்கிறது. அடையாள அரசியல், சாதி மற்றும் உட்சாதி உணர்வுகளுக்குக் கௌரவமும் அந்தஸ்தும் தேடித்தந்திருக்கிறது. இதன் தொடர்விளைவாக, ஒவ்வொரு சாதியிலும் உட்சாதியிலும் உள்ள படித்த நடுத்தர வர்க்கமும் மேட்டுக்குடி வர்க்கமும் முடிந்தவரை பார்ப்பனப் பண்பாட்டைத் தழுவுவதன் மூலம் தன்னை மேல்சாதியாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. இராசராசன் மள்ளர், நந்தன் அரசன் போன்ற வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. வருங்கால முதல்வர் ஆக விரும்புகின்ற சாதியினர் அனைவரும் தாங்கள் நேற்றைய முதல்வர் பரம்பரை என்று கூறிக்கொள்ளவே விரும்புகிறார்கள். சாதிப்பெருமிதம் கெட்டிப்படுகிறது.

விவசாயம் அழிந்து, மறுகாலனியாக்கத்தால் சிதறடிக்கப்பட்டு, முறுக்கு போடவும் மூட்டை தூக்கவும் தோட்டவேலை செய்யவும் மாநிலம் மாநிலமாக ஓடிக்கொண்டிருக்கும் கள்ளருக்கும், முத்தரையருக்கும், வன்னியருக்கும், பள்ளருக்கும் ஒரு மயக்கத்தைக் கொடுக்கும் போலிப் பெருமித அடையாளமாக இப்போது சாதி புதுப்பிக்கப்படுகிறது. தேவர் ஜெயந்தி, மகாபலிபுரம் விழா போன்றவையெல்லாம் ஆண்டுதோறும் அவர்களுக்கு ஏற்றப்படும் மயக்க ஊசிகள். தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் காரணமாகத் தோன்றியிருக்கும் புதிய தரகு வர்க்கங்கள்தான் இன்று சாதிச் சங்கங்களுக்கும் சாதிக்கட்சிகளுக்கும் புரவலர்கள்.

நத்தம் தாக்குதல் மற்றும் கௌரவக் கொலைகள் என்று அழைக்கப்படும் சாதிவெறிக் கொலைகள் எதைக் காட்டுகின்றன? நகரமயமாக்கம், பெண் கல்வி ஆகியவற்றின் காரணமாக ஒரே இடத்தில் படிக்கின்ற ஆண்களும் பெண்களும் சாதிய எல்லை கடந்து அறிமுகமாகிறார்கள். பழைய சாதிய இறுக்கங்களும் மனத்தடைகளும் தகர்ந்து காதலிக்கிறார்கள். அவர்களுடைய எதார்த்த வாழ்க்கைக்கும் விருப்பத்துக்கும் சாதி பொருத்தமற்றதாக, அவர்களது சுதந்திரத்துக்குத் தடையாக இருக்கிறது. சாதி நிராகரிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த இளைஞர்களைக் காதல் மணம் புரிந்துள்ள பிற சாதிகளைச் சேர்ந்த பெண்கள் நக்கீரன் இதழுக்கு அளித்துள்ள பேட்டிகளில், அவர்களிடம் சாதி மறுப்பு ஜனநாயகக் கருத்துகள் இயல்பாக அரும்பியிருப்பதை காணமுடியும்.

ஒருபுறம் சாதியின் அடித்தளம் பலவீனப்பட்டு வந்த போதிலும், சாதி ஆதிக்க விழுமியங்கள் அழிந்து விடவில்லை. சாதி கடந்த திருமணங்களில், தொடக்கத்தில் பெற்றோர்கள் முரண்படுவது, பின்னர் மெல்ல ஏற்றுக் கொள்வது என்பதுதான் பெரும்பாலும் நடந்து வருகிறது. திவ்யாவின் தந்தை நாகராஜ் விசயத்திலும் அதுதான் நடந்திருக்கும். அவ்வாறு நடக்க விடாமல் அங்கே சாதிவெறியைத் தூண்டி, இத்தகைய கொடூரமானதொரு தாக்குதலை நடத்தக் காரணமாக இருந்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சி எனும் சாதிக்கட்சி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டி, அக்குற்றச்சாட்டுகளுக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் பொறுப்பாக்கி, இதன் அடிப்படையில் ஆதிக்கசாதி சங்கங்கள் அனைத்தையும் திரட்டி நிறுத்தியிருக்கிறார் ராமதாசு. சாதி கடந்த திருமணத்தை எதிர்ப்பது என்று தொடங்கி வன்கொடுமைச் சட்டத்தையே முடக்குவது, சாதி- தீண்டாமையைத் தங்கள் பிறப்புரிமையாக அறிவிப்பது என்ற எல்லைக்குச் செல்கின்றனர் சாதிவெறியர்கள்.

சாதியைப் பாதுகாக்கும் அரசு, தீண்டாமையை ஒழிக்குமா?

சாதியை ஒழித்து சமத்துவத்தைக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளாகச் சிபாரிசு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டால் பதவியும் அதிகாரமும் பெற்ற ஆதிக்க சாதியினரின் சங்கங்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டு நிற்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் தீண்டாமைக் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. பதிவு செய்யப்படும் வழக்குகளும் குற்றவாளிகளுக்கு விடுதலை பெற்றுத்தரும் விதத்திலேயே சோடிக்கப்படுவதால் 3 சதவீதம் பேர் கூட தண்டனை பெறுவதில்லை. இன்று வன்கொடுமைச் சட்டத்தை முடக்க இதுவே ஆதாரமாக காட்டப்படுகிறது.

கீழிருந்து மேல் வரை தலித் போலீசு அதிகாரிகள் இருந்தபோதிலும், அவர்களே கயர்லாஞ்சி வழக்கை எப்படி முடக்கினர் என்று அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்டும்டெ. இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது தனிநபர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமேயன்றி, சாதி எனும் சமூகக் கொடுமையை ஒழிக்க உதவாது என்பதுடன், அதுவே சாதிய பிழைப்புவாத, வாக்கு வங்கி அரசியலுக்கும் வழிதிறந்து விடுகிறது என்பதையே அனுபவங்கள் காட்டுகின்றன.

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் ஊடாகப் பிறந்ததோ, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியின் மூலம் நிலைநாட்டப்பட்டதோ அல்ல. இது விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கும், பிரித்தாளுவதற்கும், நிறுவனமயப்படுத்துவதற்கும் பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டு மேலிருந்து திணித்த, கறை படிந்த ஜனநாயக அரசு வடிவம்.

“போலீசும் உளவுத்துறையும் சரியாகத் தம் கடமையைச் செய்திருந்தால் நத்தம் தாக்குதலை தடுத்திருக்க முடியும்; வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கத் தமிழக அரசு தவறிவிட்டது” என்ற வகையில் கூறப்படும் விமர்சனங்கள், தெரிந்தோ தெரியாமலோ இந்த அரசு குறித்த பிரமையை உருவாக்குகின்றன. ஆனால், சட்டங்கள் மூலம் சமுதாயத்தை மேலிருந்து ஜனநாயகப்படுத்தும் நோக்கத்தில் இந்த அரசு உருவாக்கப்படவில்லை. சாதி முதலான பிற்போக்கு விழுமியங்களை ஒழித்து இந்திய சமூகத்தை ஜனநாயகப்படுத்தக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.

ஜனநாயகப் புரட்சியின்றி சாதி – தீண்டாமை ஒழிப்பு இல்லை!

சாதி, தீண்டாமை, ஆணாதிக்கம் உள்ளிட்ட ஜனநாயக விரோத விழுமியங்களை மக்கள் மனங்களிலிருந்து அகற்ற வேண்டுமானால், சாதி – மத வேறுபாடுகளை நிராகரிக்கின்ற ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தில் மக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வை தாழ்த்தப்பட்ட மக்களிடம் யாரும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதி ஆதிக்கம் கூடாது என்ற உணர்வுக்கு ஒரு சாதி இந்துவைக் கொண்டு வருவது எப்படி என்பதுதான் கேள்வி.

திவ்யா போன்ற பெண்கள் இத்தகைய உணர்வுக்கு வருவதற்கு காதல் ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால், ஆதிக்க சாதி மக்களை ஒட்டுமொத்தமாக இந்த உணர்வுக்கு கொண்டு வருவது எப்படி என்பதே நம்முன் இருக்கும் கேள்வி. நக்சல்பாரி அமைப்புகள் அப்பகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் சாதி உணர்வு தலையெடுக்கவில்லை என்று கூறப்படுவதன் பொருள், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அனைவரும் தண்டனை குறித்த அச்சத்தினால் ஒடுங்கியிருந்தனர் என்பதல்ல; சாதி பாராட்டுவது கூடாது என்று கருதும் ஜனநாயகப் பண்பும் மனநிலையும் உழைக்கும் மக்களிடம் உருவாக்கப்பட்டிருந்தது என்பதுதான் அதன் பொருள்.

பார்ப்பனிய சாதியப் படிநிலை அமைப்பின் ஆகத்தாழ்ந்த படிகளில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளாக இருந்தாலும் சரி, ஆதிக்க சாதியாக இருந்தாலும் சரி, சாதியின் பெயரால் நடத்தப்படும் அரசியல் ஒருக்காலும் சாதியை ஒழிக்காது. அது சாதி அமைப்புகளையும், சாதியப் பிழைப்புவாதக் கட்சிகளையும் மேலும் வலுப்படுத்தவே பயன்படும். ஒரு புதிய ஜனநாயகப் புரட்சிக்காக மக்களைத் திரட்டும் போக்கில்தான், சாதி தம் வர்க்க நலனுக்கு எதிரானது என்பதையும், அது ஒரு தீயொழுக்கம் என்பதையும் ஆதிக்க சாதி மக்களுக்கேகூட உணர்த்த முடியும்.
_________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
__________________________________________________