Friday, May 9, 2025
முகப்புசெய்திபிரேசில் கேளிக்கை விடுதி தீ விபத்து !

பிரேசில் கேளிக்கை விடுதி தீ விபத்து !

-

பிரேசில் தீவிபத்துபிரேசிலில் உள்ள சான்டா மரியா எனும் ஊரில் உள்ள ‘கிஸ்’ இரவு விடுதியில் ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 27, 2012) அதிகாலை நடந்த தீ விபத்தில் 230க்கும் அதிகமான பேர் மரணமடைந்தார்கள்; 169 பேர் காயமடைந்தார்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். காயமடைந்தவர்களில் பலரும் அபாய கட்டத்திலேயே இருக்கிறார்கள்.

சான்டா மரியா மத்திய பல்கலைக் கழகம் மற்றும் பல தனியார் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் நிறைந்த நகரம் சான்டா மரியா.  கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மத்திய பல்கலைக் கழகத்தின் விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவத் துறை மாணவர்கள்.

ஞாயிறு அன்று மாணவர்கள் பங்கேற்ற இரவு நடனம் நடந்து கொண்டிருந்த போது, வண்ண ஒளியை உமிழும் வெடிகளை கொளுத்தியதால் திடீரென நடன மேடை தீப் பிடித்தது. விடுதியில் அளவுக்கு அதிகமான பேர் கூடியிருந்ததாலும், வெளியேறும் வழி குறுகியதாக இருந்ததாலும், அவசரகால வழியே இல்லை என்பதாலும் பலர் நெரிசலிலும், புகை மூட்டத்தில் சிக்கியும் மரணமடைந்தனர். மேலும் மது அருந்துபவர்கள் கட்டணம் செலுத்தாமல் வெளியே சென்றுவிடக்கூடாது என்று பாதுகாவலர்கள் அனைத்து கதவுகளையும் மூடி வைத்திருந்ததும் ஒரு முக்கிய காரணமாகும். இத்துயர சம்பவத்தால் பிரேசில் நாடே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

பிரேசிலின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகள் இந்தியாவுடன் ஒப்பிடக் கூடியவை. பெரும்பான்மை மக்கள் விவசாய பின்னணி உடையவர்களாகவும், சிறிய அளவு தொழிற்சாலைகளும் கொண்ட பிரேசில் மிக மோசமான அரசியல்வாதிகளுக்கு நம்நாட்டைப் போலவே பெயர்போனது.

1990களுக்குப் பிறகான உலகமயமாக்கல் கால கட்டம், தகவல் தொழில் நுட்பத் துறையில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், டீ காப்பி தோட்டங்களில் குறைந்த கூலிக்கு உழைக்கும் விவசாயிகள் என குறைந்த கூலியில் நிறைய சுரண்டலை அறிமுகப்படுத்தியது. மறுபுறம் உலகமயமாக்கத்தால் ஆதாயமடையும் மேல்தட்டு நடுத்தர வர்க்கமும் வளர்ச்சி பெற்றது.

மேல் தட்டு நடுத்தரவர்க்க குடும்பங்கள் தம்மிடம் திடீரென்று குவிய ஆரம்பித்த பணத்தை விதவிதமான நுகர்வுகளில் செலவிட வேண்டியதுதான் அவர்களின் சமூகப்பணி. அத்தகைய நுகர்வு கலாச்சாரம் இரவு விடுதிகளையும், வெளிநாட்டு மது வகைகளையும், கேளிக்கை நிகழ்ச்சிகளையும் கொண்டு வந்தது.

பிரேசில் கிளப்மகிழ்ச்சி என்றால் போதை, வித விதமான உணவுகள், கேளிக்கைகள், இவற்றுக்காக அலைவது என்றாகிவிட்ட பின், அத்தகைய சேவைகளை வழங்கும் முதலாளிகள் லாபம் ஒன்றே குறியாக, குறைந்த செலவில் அதிக வருமானம் ஈட்ட முயற்சிக்கிறார்கள். அரசு எந்திரத்தில் நிலவும்  மோசமான ஊழல் அவர்களுக்கு உதவுகிறது. எந்தவித பாதுகாப்புமின்றி இந்த கேளிக்கை விடுதிகள் அங்கே பிரபலம். பிரேசில் நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் இத்தகைய கேளிக்கை விடுதிகள் இரண்டறக் கலந்திருக்கிறது.

இத்தகைய விபத்துக்களும் உயிரிழப்புகளும் நமக்கு அந்நியமானதல்ல, கேரளாவில் நடக்கும் படகு விபத்துகள், கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்து என தனியார் முதலாளிகளின் லாப வெறியாலும், அதற்கு பலியான ஊழல் அதிகாரிகளின் அலட்சியத்தாலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை எல்லாம் தட்டிக் கேட்டு போராடாமல் இருக்க மக்கள் மதுக்கடைகளில் மூழ்கடிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் மக்கள் போராட்ட உணர்வையும், குடும்பங்களின் பொருளாதாரத்தையும் டாஸ்மாக் மூழகவைப்பது போல பிரேசிலில் மதுவும், நடன விடுதிகளும் செய்கின்றன.

பிரேசிலில் விபத்து நடந்தவுடன், அந்நாட்டு அரசு துக்கம் அனுசரித்தது; செய்தி சானல்கள் கண்ணீர்விடுகின்றன; சில நாட்கள் இது விவாதிக்கப்படலாம். ஆனால் இத்தகைய இரவு விடுதிகளை முடக்குவது பற்றியோ, நடன அரங்கில் போதையில் நடந்த அத்துமீறல்கள் பற்றியோ, நடன அரங்கம் சட்ட விதிகளை பின்பற்றாதது பற்றியோ நாட்டின் அதிபர் இது வரை வாய் திறக்கவில்லை.

மக்களை போதையில் வைத்திருப்பது என்பதை பொறுத்தவரை பிரேசிலானாலும், தமிழ் நாடானாலும் ஒரே விதி தான்…

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க