Friday, May 2, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபேக்கரி முதலாளிக்கு ஆப்பு ! ஹூண்டாய் முதலாளிக்கு சோப்பு !!

பேக்கரி முதலாளிக்கு ஆப்பு ! ஹூண்டாய் முதலாளிக்கு சோப்பு !!

-

தொழிலாளர்களின் உரிமைக்காக அரசே நேரடியாக தலையிட்டு முதலாளிகள் மீது வழக்கு தொடுத்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா ? ஆம், வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அதிசயம் எங்கே நடந்தது என்று கேட்கிறீர்களா ? புரட்சித் தலைவி ஆட்சி செய்யும் தமிழகத்தில் இருந்து கொண்டு இது போன்ற கேள்விகளை கேட்பதே தவறு. அம்மா ஆட்சி புரியும் தமிழகத்தில் தான் முப்பது ‘முதலாளிகள்’ மீது தொழிலாளர் நலச்சட்டங்களை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது!

தொழிலாளர் நலச் சட்டப்படி குடியரசு தினத்தன்று தொழிலாளர்கள் அனைவருக்கும் விடுமுறை விட வேண்டுமாம். அப்படி விடுமுறை வழங்காமல் வேலை வாங்கிய முதலாளிகள் மீது தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. முதலாளிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் தொழிலாளர் நலத்துறையே நேரடியாக களத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே ‘குடியரசு’ தினத்தன்று தான் இன்னொரு விசயமும் சுதந்திரமாக நடந்துகொண்டிருந்தது. தமிழகத்திலுள்ள சிப்காட், சிறப்பு பொருளாதார மண்டல பகுதிகளிலும் வேறு பல இடங்களிலும் போர்ட், ஹூண்டாய், நோக்கியா, செயின்ட் கோபைன், பாக்ஸ்கான் போன்ற நூற்றுக்கணக்கான பன்னாட்டு கம்பெனிகளிலும் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளின் கம்பெனிகளிலும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வழக்கம் போல கொடூரமாக பிழிந்தெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தனர் ! அப்படியானால் தொழிலாளர் நலத்துறை எந்த முதலாளிகள் மீது நடவடிக்கை எடுத்தது ?

பேக்கரி கடை, டிபன் கடை, துணிக் கடை எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா, அந்த கடை ‘முதலாளிகள்’ மீது தான் நடவடிக்கை. இவர்கள் எல்லாம் நாட்டையும் மக்களையும் மதிக்காமல், தொழிலாளர் நலச்சட்டங்களையும் கடைபிடிக்காமல் சுதந்திர தினத்தன்று கூட கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் தொழிலாளர்களை சுரண்டிக்கொண்டிருந்ததால் தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட தொழிலாளர் நலத்துறை ஆணையர் சந்திரமோகன் உத்தரவின் பேரில் தாம்பரம் பகுதி துணை ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் உதவி ஆய்வாளர் கிளாடிஸ் ஆகியோர் தாம்பரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதிகளிலுள்ள பேக்கரி, டிபன் கடை, துணிக் கடைகளில் எல்லாம் அதிரடியாக ‘ஆய்வு’ நடத்தி, ஆய்வின் இறுதியில் முதலாளிகளில் பலரும் மேற்கூறிய குற்றத்தை செய்திருப்பதாக கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது !

திருப்பெதும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடத்தை சுற்றி நூற்றுக்கணக்கான பன்னாட்டு கம்பெனிகள் இயங்குகின்றன. இந்த பகுதிகளில் முதலாளிகளின் பயங்கரவாதத்தை எதிர்த்து தினம் தினம் பல்வேறு தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஏதாவது ஒரு போராட்டத்தை நடத்திய வண்ணம் தான் இருக்கின்றனர். ஹூண்டாயின் கொடூரமான உழைப்புச்சுரண்டலை எதிர்த்து கடந்த பத்தாண்டுகளாக ஹூண்டாய் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். பேக்கரி கடைக்கு எதிராக புகார் கொடுக்காமலே துணிகர நடவடிக்கையில் இறங்கும் தொழிலாளர் நலத்துறை ஹூண்டாய் தொழிலாளர்களை காக்க இதுவரை எந்த நடவடிக்கையிலும் இறங்கியதில்லை. அதோடு முதலாளிகளால்  கொள்ளையடிக்கப்படுகிற தொழிலாளிகள் மீதே வழக்குகளும் போடப்பட்டிருக்கின்றன.

கட்டிடத் தொழிலாளர்கள்ஹூண்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு கம்பெனிகளின் லாபவெறிக்காக, குறிப்பாக மேற்கூறிய இரு நிறுவனங்களில் மட்டும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் இயந்திரங்களில் சிக்கி இறந்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வேலை வாங்கியதாக டிபன் கடைக்காரர்களையும், பேக்கரி கடைக்காரர்களையும் கைது செய்பவர்கள் இந்திய சட்டத்தையே மதிக்காமல், அனுபவம் இல்லாத தொழிலாளிகளை எல்லாம் உற்பத்தியில் இறக்கி இயந்திரங்களுக்கு பலிகொடுக்கும் பன்னாட்டு முதலாளிகள் பக்கம் திரும்பி கூட பார்ப்பதில்லையே ஏன் ? பேக்கரி கடைக்காரர் மீது கை வைப்பதை போல நோக்கியா மீது இவர்களால் கை வைக்க முடியுமா ?

தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டிருப்பதை போல நடிக்கும் பன்னாட்டு கம்பெனிகளின் பாதந் தாங்கியாக இருக்கும் பாசிச ஜெயாவின் அரசைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்பது எவ்வளவு பெரிய தேசத்துரோகம் என்று பாதாந்தாங்கியின் பாதந்தாங்கியான நாஞ்சில் சம்பத் வெடிக்கக்கூடும். ஏனெனில் அந்நிய முதலீடு என்கிற பெயரில் பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்க பட்டுக் கம்பளம் விரித்துக்கொடுக்கும் தேசத்துரோகச் செயலை தான் இவர்கள் தேசப்பற்றாகவும், நாட்டை முன்னேற்றுவதாகவும் கருதுகிறார்கள்.

இந்த அரசுக்கு உண்மையிலேயே தொழிலாளர்கள் மீது அக்கறை இருக்குமானால் முதலில் வெளிநாட்டு நிறுவனங்களை இந்திய சட்டங்களை மதித்து நடந்து கொள்ளும்படி வலியுறுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு தொழிலாளிகளுக்கு எந்த உரிமைகளும் வழங்காமல் கொத்தடிமைகளை போல நடத்தும், அவர்களின் உயிரோடு விளையாடும் பன்னாட்டு கம்பெனி முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்துகொள்ளும் இந்த ஏகாதிபத்திய அடிமை அரசு சாதாரண வியாபாரிகள் மீது தொழிலாளர்களின் உரிமைகளை பறித்ததாக வழக்கு தொடுப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?