Wednesday, May 7, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மாருதி தொழிலாளர்களுக்காக நாடு தழுவிய போராட்டம்!

மாருதி தொழிலாளர்களுக்காக நாடு தழுவிய போராட்டம்!

-

மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் தற்காலிக அமைப்புக் கமிட்டி பிப்ரவரி 5ம் தேதியை ‘நாடு தழுவிய ஒருமைப்பாடு தினமாக’ அறிவித்துள்ளது. 19 மாநிலங்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுளனர். டெல்லியில் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது.

சென்னையில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நாளை மாலை 4.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

மாருதி தொழிலாளர்கள்
மாருதி மானேசர் தொழிலாளர்கள் (கோப்பு படம்)

இந்திய மக்களின் நிலங்களை கைப்பற்றி, இந்திய மக்களின் சேமிப்புகளை வங்கிக்கடன்கள் என்ற பெயரில் சுருட்டிக் கொண்டு, இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி தொழில் நடத்தும் சுசுகி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தமது லாபத்தை பெருக்கிக் கொள்வதற்காக தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றன.

பன்னாட்டு நிறுவனங்கள் தமது வருமானத்தை பெருக்கிக் கொள்ளவும், லாபம் சம்பாதிக்கவும், பங்குச் சந்தை சூதாட்டத்தில் பணம் திரட்டவும் வசதி செய்து கொடுப்பதையே தமது பொருளாதார கொள்கையாக செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கங்களுக்கு இடையூறாக வரும் மக்களையும் தொழிலாளர்களையும் கொடுமையாக ஒடுக்குகின்றன.

மாருதி சுசுகி நிர்வாகம் அதன் கைப்பாவையான ‘மாருதி உத்யோக் தொழிலாளர் சங்கத்தையே அனைத்துத் தொழிலாளர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று சட்ட விரோதமாக மிரட்டி வந்தது. அதை எதிர்த்த மாருதி மானேசர் தொழிற்சாலை தொழிலாளர்கள், நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு 2011ம் ஆண்டு மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கம் என்ற சங்கத்திற்கான அங்கீகாரத்தை பெற்றார்கள்.

மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கம் தொழிலாளர்களுக்கு எதிரான பணிச் சூழல், சம்பள உயர்வு மறுப்பு, வேலைப்பளு அதிகரிப்பு இவற்றை எதிர்த்து தொடர்ந்து போராடி வந்தது. புதிய தொழிற்சங்கத்தை முடக்குவதற்காக மாருதி சுசுகி நிர்வாகம் கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி வெளியிலிருந்து தருவிக்கப்பட்ட ரவுடி கும்பலின் துணையுடன் தொழிற்சாலைக்குள் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது.

அதைத் தொடர்ந்து ஜூலை 18ம் தேதி இரவு, போலீஸ் 99 தொழிலாளர்களை கைது செய்தது. மாருதி முதலாளிகள் ஒரே நேரத்தில் 546 நிரந்தர தொழிலாளர்கள் உள்ளிட்ட 1,500 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கினர். மாநில அரசு நிர்வாகத்தின் துணையுடன் 211 தொழிலாளர்கள் மீது கொலை, வன்முறை, கலவரம் போன்ற பிரிவுகளில் பொய் வழக்குகளை சுமத்தினர். மாருதி சுசுகி தொழிலாளர் யூனியனின் தலைவர்கள் உட்பட 149 தொழிலாளர்கள் ஆறு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் தொடர்ந்து போலீஸ் அடக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர்.

ஜூலை 18ம் தேதி சம்பவங்களைப் பற்றி விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு ‘சுசுகி நிர்வாகத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையேயான யூனியன் தொடர்பான பிரச்சனையே வன்முறை நிகழ்வுகளுக்கு காரணம்’ என்று முடிவு செய்தது. தமது உரிமைகளுக்காக சங்கமாக திரள முயற்சிக்கும் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காக நிர்வாகம் அவிழ்த்து விட்ட ஒடுக்குமுறைதான் வன்முறையாக வெடித்திருக்கிறது.

தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்ட சுசுகி நிர்வாகம் ஆகஸ்ட் 21ம் தேதி தொழிற்சாலையை மீண்டும் இயக்க ஆரம்பித்தது. கடுமையான பணி அழுத்தம், போதுமான ஊதியம் கொடுக்காமல் வேலை வாங்குவது, பணி நிரந்தரம் செய்ய மறுப்பது, சங்கம் கட்டும் உரிமையை நசுக்குவது என்று நிர்வாகம் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை பறித்து வருகிறது. அரசு எந்திரத்தையும் சட்டங்களையும் தனக்கு சாதகமாக வளைத்துக் கொண்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட மற்றும் வேலை செய்யும் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி லாபத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது.

மாருதி சுசுகி தொழிலாளர் யூனியனைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் சிறைப்படுத்தப்பட்ட நிலையில் மற்ற தொழிலாளர்கள் தற்காலிக அமைப்பு கமிட்டி ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

மாருதி சுசுகி நிர்வாகத்தின் கையாட்களாக செயல்படும் போலீசும் ஹரியானா மாநில நிர்வாகமும் கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீது சட்ட விரோதமான சித்திரவதை, அடி உதை போன்றவற்றை அவிழ்த்து விட்டுள்ளன. இந்த சட்ட விரோத செயல்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்கில், ‘கைது செய்யப்பட்ட யூனியன் தலைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் இது வரை நடக்கவில்லை.

ஜனவரி 24ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்த தற்காலிக கமிட்டி உறுப்பினர் இமான் கான் என்பவரை போலீஸ் கைது செய்தது. இமான் கானுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என்பதோடு ஜூலை 18ம் தேதி நிகழ்வோடு அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருக்கும் போது போலீசின் கைது நடவடிக்கை அரசு நிர்வாகம் யாருக்காக செயல்படுகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

இந்த உதவிகளுடன் மாருதி சுசுகி 2012-13 நிதி ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் மொத்த விற்பனை மதிப்பை 45.6 சதவீதம் உயர்த்தி ரூ 10,956 கோடியையும், லாபத்தை 143.79 சதவீதம் அதிகரித்து ரூ 501 கோடியையும் தொட்டிருக்கிறது. இந்தச் செய்தியை பங்குச் சந்தை சூதாடிகளும், மன்மோகன் சிங்-சிதம்பரம் கும்பலும் கொண்டாடி வருகின்றனர்.

மாருதி சுசுகி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டைச் சுரண்டுவதற்கு முற்றுப் புள்ளி வைக்கும்படி தொழிலாளர்கள் போராடுகின்றனர்.

மேலும் படிக்க

__________________________________________________________________________________________________

மாருதி தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்! முதலாளித்துவ பயங்கரவாதம் வீழட்டும்!!

என்ற தலைப்பில் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கண்டன ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 5ம் தேதி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது.

தொழிலாளர்களே!

  • தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும், ஒப்பந்தத்
    தொழிலாளர் முறையைத் திணிக்கும்
    மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!
  • புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் அணிதிரள்வோம்!

அரியானா மாநில அரசே!

  • உரிமை கேட்டுப் போராடியதற்காக
    பொய் வழக்கில் 6 மாதமாக சிறையில்
    உள்ள 1500 மாருதி தொழிலாளர்களை
    விடுதலை செய்! மீண்டும் வேலை கொடு!
  • தொழில் அமைதிக்கும் தொழிற்சங்க
    நியதிக்கும் புறம்பாக செயல்படும் மாருதி
    நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடு!

கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : பிப்ரவரி 5, 2013
நேரம் : மாலை 4.30 மணி
இடம் : மெமொரியல் ஹால்அருகில், சென்னை

தலைமை :
தோழர் அ.முகுந்தன்,
மாநிலத் தலைவர், பு.ஜ.தொ.மு.

கண்டன உரை :
தோழர் ம.சி.சுதேஷ்குமார்
மாநில இணைச்செயலாளர், பு.ஜ.தொ.மு

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க