Wednesday, May 7, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

-

பிப்ரவரி 20, 21ம் தேதிகளில் இடதுசாரி மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது.

  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
  • வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
  • சில்லறை விற்பனை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது.
  • தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை மாதம் ரூ 10,000 ஆக உயர்த்த வேண்டும்.
  • தொழிற்சாலைகளில் 12 மணி நேரம் வரை உயர்ந்து விட்ட வேலை நாளை 8 மணி நேர வேலை நாளாக மறுபடியும் மாற்ற வேண்டும்.
  • ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும்.
  • அமைப்பு சாரா துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
  • பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
  • வங்கிகளை நிதிச் சந்தையில் செயல்பட அனுமதிக்கக் கூடாது.
  • தனியார் நிறுவனங்களை வங்கிகள் ஆரம்பிக்க அனுமதிக்கக் கூடாது.
  • பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

என்ற கோரிக்கைகளுடன் இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது.

10 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட 26 பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளன. இரண்டு நாட்களில் வங்கிப் பணிகள், பொதுப் போக்குவரத்து, தபால் துறை, தொலை தொடர்பு துறை, துறைமுகப் பணிகள், தொழிற்சாலைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாடு பாதிக்கப்படும்.

வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆன்டனி, விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார், தொழிலாளர் அமைச்சர் மல்லிகார்ஜூனா கார்கே அடங்கிய மத்திய அமைச்சர்கள் குழு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. ‘வேலை நிறுத்தத்தை தள்ளிப் போடுமாறும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பின்னர் விவாதிக்கலாம் என்றும்’ அவர்கள் பேரம் பேசியிருக்கின்றனர். பேரம் படியாது என்றதும் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர் மீது நடவடிக்கை எடுப்போம் என மத்திய அரசு மிரட்டியிருக்கிறது.

maruti-1‘நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் அவர்களது எஜமானர்களான பன்னாட்டு முதலீட்டாளர்கள் மனம் கோணி விடுவார்கள்’ என்ற அக்கறை மட்டும்தான் இந்த அடிவருடிகளுக்கு இருக்கிறது. ஹெலிகாப்டர் ஊழலில் ரூ 360 கோடி தாரை வார்த்த பாதுகாப்பு அமைச்சருக்கும், லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை மேற்பார்வையிட்டு வரும் சரத்பவாருக்கும் மக்கள் மீது எந்த அக்கறையும் இருக்கப் போவதில்லை. மக்கள் விரோதக் கொள்கைகளை கைவிடுமாறு கோரும் கோரிக்கைகள் எதையும் பரிசீலிப்பதாகச் சொல்லக் கூட அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

  • தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது.
  • தொழிற்சங்க உரிமைக்காக போராடிய மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீது அரசு போலீஸ் பயங்கரவாதத்தை அவிழ்த்து விடுகிறது.
  • 8 மணி நேர வேலை நேரம் குறித்த சட்டங்களை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் 12 மணி நேரம் வரை வேலை வாங்குகின்றனர் முதலாளிகள்.
  • மருத்துவ வசதி, ஓய்வூதிய வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் அனைத்தும் மறுக்கப்படும் ஒப்பந்த தொழிலாளர்களின் பயன்பாடு தனியார் துறையில் மட்டுமின்றி பொதுத் துறை நிறுவனங்களிலும் அதிகரித்திருக்கிறது.

நம் நாட்டின் வளங்களை சுரண்டி சேர்த்த சொத்துக்களை கொண்டு டாடா,அம்பானி, பிர்லா, மிட்டல் போன்றவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றனர். நம் நாட்டை சுரண்டுவதற்கு வேதாந்தா குழுமமும், வால்மார்ட்டுகளும் அணிவகுத்து நிற்கின்றனர்.

இந்தச் சூழலில் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த சுரண்டல் அமைப்பை தூக்கி எறிய போராட வேண்டும். அந்த ஐக்கியத்துக்கும் நீண்ட போராட்டத்துக்கும் ஒரு பகுதிதான் இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம்.

வேலை நிறுத்தத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தினமணி புலம்பியிருக்கிறது. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வருவதைப் பற்றி பேசாத தினமணி, ‘வங்கியில் பணம் எடுக்க முடியாமல் போய் விடும்’, ‘அரசு பேருந்து ஓடாமல் தனியார் பேருந்தில் போக நேரிடும்’, ‘குழந்தைகளை பள்ளியில் கொண்டு விட போக வேண்டி வரும்’ என்று நடுத்தர வர்க்க கவலைகளைப் பற்றி புலம்பியிருக்கிறது. ‘ஆசிரியர்கள் எப்போது தொழிற்சங்கங்களில் சேர்ந்தார்கள் எனபது புரியவில்லை’ என்றும் உளறியிருக்கிறது.

இது உழைக்கும் மக்களுக்கும் – அவர்கள் உடலுழைப்பாளர்களானாலும் சரி, மூளையால் உழைப்பவர்களானாலும் சரி – அவர்களை சுரண்டும் ஆளும் வர்க்கங்களுக்கும் இடையேயான போர். பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இழப்பதற்கு எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது, ஓரளவு அடிப்படை வசதிகளை வைத்திருக்கும் நடுத்தர வர்க்கமும் படிப்படியாக அதே நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதலாளிகளின் மீது வரி விதிப்பை தவிர்ப்பதற்காக டீசல், பெட்ரோல், சமையல் வாயு விலை உயர்வு, முதலாளிகளின் ஆதாயத்துக்காக பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, அன்னிய நிறுவனங்கள் நாட்டின் வளங்களை சுரண்ட அனுமதிப்பது என்று நாட்டு மக்களுக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன மத்திய அரசும் மாநில அரசுகளும்.

இந்த வேலை நிறுத்தத்தை நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டும்.

மேலும் படிக்க
Govt trade unions talks fail
Autorickshaw bangalore transport corporation to strike
தினமணி கட்டுரை