Saturday, April 17, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

-

பிப்ரவரி 20, 21ம் தேதிகளில் இடதுசாரி மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது.

 • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
 • வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
 • சில்லறை விற்பனை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக்கூடாது.
 • தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை மாதம் ரூ 10,000 ஆக உயர்த்த வேண்டும்.
 • தொழிற்சாலைகளில் 12 மணி நேரம் வரை உயர்ந்து விட்ட வேலை நாளை 8 மணி நேர வேலை நாளாக மறுபடியும் மாற்ற வேண்டும்.
 • ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும்.
 • அமைப்பு சாரா துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
 • பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
 • வங்கிகளை நிதிச் சந்தையில் செயல்பட அனுமதிக்கக் கூடாது.
 • தனியார் நிறுவனங்களை வங்கிகள் ஆரம்பிக்க அனுமதிக்கக் கூடாது.
 • பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

என்ற கோரிக்கைகளுடன் இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது.

10 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட 26 பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளன. இரண்டு நாட்களில் வங்கிப் பணிகள், பொதுப் போக்குவரத்து, தபால் துறை, தொலை தொடர்பு துறை, துறைமுகப் பணிகள், தொழிற்சாலைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாடு பாதிக்கப்படும்.

வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.ஆன்டனி, விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார், தொழிலாளர் அமைச்சர் மல்லிகார்ஜூனா கார்கே அடங்கிய மத்திய அமைச்சர்கள் குழு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. ‘வேலை நிறுத்தத்தை தள்ளிப் போடுமாறும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பின்னர் விவாதிக்கலாம் என்றும்’ அவர்கள் பேரம் பேசியிருக்கின்றனர். பேரம் படியாது என்றதும் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர் மீது நடவடிக்கை எடுப்போம் என மத்திய அரசு மிரட்டியிருக்கிறது.

maruti-1‘நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் அவர்களது எஜமானர்களான பன்னாட்டு முதலீட்டாளர்கள் மனம் கோணி விடுவார்கள்’ என்ற அக்கறை மட்டும்தான் இந்த அடிவருடிகளுக்கு இருக்கிறது. ஹெலிகாப்டர் ஊழலில் ரூ 360 கோடி தாரை வார்த்த பாதுகாப்பு அமைச்சருக்கும், லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை மேற்பார்வையிட்டு வரும் சரத்பவாருக்கும் மக்கள் மீது எந்த அக்கறையும் இருக்கப் போவதில்லை. மக்கள் விரோதக் கொள்கைகளை கைவிடுமாறு கோரும் கோரிக்கைகள் எதையும் பரிசீலிப்பதாகச் சொல்லக் கூட அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

 • தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது.
 • தொழிற்சங்க உரிமைக்காக போராடிய மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீது அரசு போலீஸ் பயங்கரவாதத்தை அவிழ்த்து விடுகிறது.
 • 8 மணி நேர வேலை நேரம் குறித்த சட்டங்களை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் 12 மணி நேரம் வரை வேலை வாங்குகின்றனர் முதலாளிகள்.
 • மருத்துவ வசதி, ஓய்வூதிய வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் அனைத்தும் மறுக்கப்படும் ஒப்பந்த தொழிலாளர்களின் பயன்பாடு தனியார் துறையில் மட்டுமின்றி பொதுத் துறை நிறுவனங்களிலும் அதிகரித்திருக்கிறது.

நம் நாட்டின் வளங்களை சுரண்டி சேர்த்த சொத்துக்களை கொண்டு டாடா,அம்பானி, பிர்லா, மிட்டல் போன்றவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றனர். நம் நாட்டை சுரண்டுவதற்கு வேதாந்தா குழுமமும், வால்மார்ட்டுகளும் அணிவகுத்து நிற்கின்றனர்.

இந்தச் சூழலில் உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த சுரண்டல் அமைப்பை தூக்கி எறிய போராட வேண்டும். அந்த ஐக்கியத்துக்கும் நீண்ட போராட்டத்துக்கும் ஒரு பகுதிதான் இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம்.

வேலை நிறுத்தத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தினமணி புலம்பியிருக்கிறது. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வருவதைப் பற்றி பேசாத தினமணி, ‘வங்கியில் பணம் எடுக்க முடியாமல் போய் விடும்’, ‘அரசு பேருந்து ஓடாமல் தனியார் பேருந்தில் போக நேரிடும்’, ‘குழந்தைகளை பள்ளியில் கொண்டு விட போக வேண்டி வரும்’ என்று நடுத்தர வர்க்க கவலைகளைப் பற்றி புலம்பியிருக்கிறது. ‘ஆசிரியர்கள் எப்போது தொழிற்சங்கங்களில் சேர்ந்தார்கள் எனபது புரியவில்லை’ என்றும் உளறியிருக்கிறது.

இது உழைக்கும் மக்களுக்கும் – அவர்கள் உடலுழைப்பாளர்களானாலும் சரி, மூளையால் உழைப்பவர்களானாலும் சரி – அவர்களை சுரண்டும் ஆளும் வர்க்கங்களுக்கும் இடையேயான போர். பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இழப்பதற்கு எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது, ஓரளவு அடிப்படை வசதிகளை வைத்திருக்கும் நடுத்தர வர்க்கமும் படிப்படியாக அதே நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதலாளிகளின் மீது வரி விதிப்பை தவிர்ப்பதற்காக டீசல், பெட்ரோல், சமையல் வாயு விலை உயர்வு, முதலாளிகளின் ஆதாயத்துக்காக பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, அன்னிய நிறுவனங்கள் நாட்டின் வளங்களை சுரண்ட அனுமதிப்பது என்று நாட்டு மக்களுக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன மத்திய அரசும் மாநில அரசுகளும்.

இந்த வேலை நிறுத்தத்தை நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டும்.

மேலும் படிக்க
Govt trade unions talks fail
Autorickshaw bangalore transport corporation to strike
தினமணி கட்டுரை

 1. னல்லா அரசு சம்பளாத்த வாங்கிக்கிட்டு வேலைநிற்த்தமா??அரசு ஊழியர் வேலைநிறுத்தம் செய்தால் வேலையை விட்டு அனுப்பி விட வேண்டும்…

  • திரு பையா,மக்களின் வரிப்பணம்தான் அரசு ஊழியர் வாங்குகிற சம்பளம்.அரசு ஊழியர்கள் மக்களுக்காகவே போராடுகிறார்கள்.

   //அரசு ஊழியர் வேலைநிறுத்தம் செய்தால் வேலையை விட்டு அனுப்பி விட வேண்டும்…//

   பாசிசம் ஒழிக!

 2. //உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த சுரண்டல் அமைப்பை தூக்கி எறிய போராட வேண்டும். அந்த ஐக்கியத்துக்கும் நீண்ட போராட்டத்துக்கும் ஒரு பகுதிதான் இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம்.//

  யாரு பேங்க் ஊழியர்களா உழைக்கும் மக்கள், பொதுவா நீர் அடித்தட்டு உழைக்கும் மக்களைத்தானே, உழைக்கும் மக்கள் எநக்கூறுவீர், இப்போ பேங்க் ஸ்டாப்ஸ் எல்லாம் உழைக்கும் மக்கள் ஆகிவிட்டார்களா?

 3. விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும் ; வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டும். சரியான கோரிக்கை தான். ஆனால் அதற்க்கு என்ன வழி ? பழைய படி மூடிய பொருளாதார கொள்கைகள், மிக அதிக வரி விகிதங்கள், அன்னிய முதலீடுகளுக்கு தடை, தனியார்கள் மீது லைசென்ஸ் கட்டுபாடுகள், MRTP Act 1969 ? இவை தான் தீர்வா ? அல்லது தாரளமயமாக்களை விரிவு படுத்துவதா ?

  இந்த போராட்டம் உண்மையில் ஏழை தொழிலாளர்களால் நடத்தப்படவில்லை. மாறாக அமைப்பு சார் தொழிலாளர்களின் சங்கங்கள், அதுவும் அரசு ஊழியர்கள் தான் நடத்த இருக்கின்றனர். அவர்களை பற்றி தினக்கூலி தொழிலாளர்கள் கவலைபடுவதில்லை. இந்திய அரசின் நிர்வாக மற்றும் ராணுவ செலவுகளை மிக குறைத்தாலே விலைவாசி உயர்வை தவிர்க இயலும். ஆனால் வால்மார்ட் வந்தால் தீமை ஒன்றும் உருவாகிவிடாது…”

  “அமைப்பு சார் தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் தினக்கூலி தொழிலாளர்களை பற்றி கண்டு கொள்வதில்லை. தங்களில் உரிமைகளை பற்றி மட்டும் கவலை படும் அளவு தங்கள் கடமைகளை செய்ய முனைவதில்லை. ஃபாசிச கூறுகள் பல நேரங்களில் உருவாகி வருவதற்க்கான ஒரு உதாரணம் : http://www.thehindu.com/news/cities/chennai/senior-station-manager-assaulted-office-ransacked/article4253607.ece

  “ரயில்வே தொழிற் சங்கமான இவர்களுக்கு எப்படி வந்தது இத்தனை ராஜக மனொபாவம் ? இவர்கள் உண்மையில் பாட்டாளிவர்கமா என்ன ?

  • Mr. KR. Athiyaman,

   இப்பொழுது பொருளாதாரத்தில் இந்தியா நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் கொள்கை மூடியதா? மூடாததா?

 4. ஆறு மாசமா பந்த் வைக்காம தூக்கமே இல்லை தோழரே. இன்னிக்கு நல்லா தூக்கம் வரும்.

 5. Mr.Santhanam, I liked many of your comments. But here, you comment looks not correct (for me). You answer to the link which Athiyaman provided. If it is wrong in the union side who will correct it? he rightly pointed out this kind of incidence only will engourage PASISAM (like vinavu pointed that how PJ talks will enocourage people to join RSS, in the same way)

  If you want to be a right side you should have condemn that and then asked for your clarification about current economy, i know you have asked this question sarcasticcally as Athiyaman is supporter of current one. You so your aggression on this. But same time answer to the problem he pointed out.

 6. வழக்கம்போல் தனது அரசின் அடிவருடி மொக்கையை திரு அதியமான் அள்ளி தெளித்திருக்கிறார். வால்மார்ட் வந்தால் எதுவும் தீங்கு நடந்துவிடப்போவதில்லை என்ற அன்னாரது ஒரு கருத்து போதும் இவர் அடித்தட்டு மக்கள் பற்றி கவலைப் படுவது நீலிக்கண்ணீர் எனபதை உணர்த்த
  வேலைநிறுத்தப்போராட்டம் வெல்லட்டும் அதன் போக்கில் .

  • தோழர் பாவல்,

   நீலிகண்ணீர் யார் விடுகிறார்கள் என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டுமே.

   வால்மார்ட் பற்றிய பயமெல்லாம் மிகைபடுத்தப்பட்டவை. ஆறு வருடங்களுக்கு முன்பு
   ரிலையன்ஸ் ஃப்ரெஸ் பற்றி இதே போல் தான் வீண் பயம், கடும் எதிர்ப்புகள், கல் வீச்சுகள், etc, etc,

   ம.க.இ.க பெரும் போராட்டம் நடத்தியதை நினைவு கூர்க. இன்றும் ரிலையன்ஸ் ஃப்ரெஸ் மற்றும் இதர பெரும் நிறுவன கடைகள் உள்ளன. சிறு வணிகர்களும் உள்ளனர். அன்று போராடியது அர்த்தமற்றதாகிவிட்டது. வீண் வேலை என்று இன்று உணர்ந்து கொண்டீர்கள் அல்லவா. அதே போல் தான் எதிர்காலத்தில் வால்மார்ட் பற்றியும். 1991இல் உற்பத்தி துறையில் அன்னிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கப்பட்ட போதும் இதே போல் தான் கடும் எதிர்ப்பு. இன்று யாரும் அதை பற்றி பேசுவதே இல்லை…

 7. இந்திய விடுதலைப் போராட்டத்தில் கூட யாராரோ அவரவர் நோக்கத்தோடு போராடினார்கள் அவர்களில் சிலபேரிடம் இருந்த குறைகளுக்காக இந்திய சுதந்திரப்போராட்டத்தை கொச்சைப்படுத்திவிட முடியுமா?. போராட்டத்தில் கோரிக்கைகளின் நியாயங்களைப் பாருங்கள். முதலாளிகளின் சுரண்டல்களுக்கு முட்டுக் கொடுக்காதீர்கள் Mr S. Balaji

  • தோழர் பாவல்,

   சுரண்டல் என்ற கருத்தாக்கமே தவறு. பொய்பிக்கப்பட்ட hypothesis தான். உபரி மதிப்பை உருவாக்குவபவர்கள் தொழில்முனைவோர்கள் தாம். தொழிலாளர்களுக்குரிய சம்பளம் முழுமையாக அளிக்கப்பட்ட பின் தான் லாபம் அல்லது நஸ்டம் பற்றி பேச்சே. சம்பள்ம் இங்கு குறைவு. ஆனால் வளர்ந்த நாடுகளில் கடந்த 150 ஆண்டுகளில் தொழிலாளர்கள் நிலை படிப்படியாக உயர்ந்தே உள்ளது. இது டாஸ் கேபிடலில் மார்க்ஸ் விவரித்தற்க்கு நேர் எதிர் நிலை. டாஸ் கேபிடலின் கருத்தாக்கத்தில் பல அடிப்படை பிழைகள் உள்ளன. இதை பற்றி எனது பழைய பதிவு இது :

   http://www.tamilpaper.net/?p=4350
   லாபம் என்றால் சுரண்டலா?

   இந்த கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களின் விவாதம் இன்னும் விரிவுபடுதியிருக்கிறேன். பார்க்கவும்..

 8. டீசல் இரட்டை விலை உயர்வு அறிவித்தபின் தினமணி 28 ஜனவரி தலையங்கம்

  இது தொடர்பாக, நியாயமாக கோபத்தை வெளிப்படுத்த வேண்டியவர்கள் போக்குவரத்து தொழிற்சங்கங்கள்தான். எதற்கெல்லாமோ வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கும் இவர்கள், இதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.

  இந்தப் பிரச்னை அரசியல் பிரச்னை அல்ல. தமிழக அரசு அல்லது போக்குவரத்துக்கழகம் என்பதையும் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவின் சாமானிய மக்களின் பிரச்னை. இதற்காக அனைத்துக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் களத்தில் இறங்க வேண்டும். வேறு வழியில்லை என்றால், பொதுப் போக்குவரத்துதான் தலைவிதி என்றாகிவிட்ட பொதுமக்களும்!

 9. வேலைநிறுத்தப் போராட்டம் சரியானது தான்,அவசியமானது தான்.ஆனால் கோரிக்கைகள் மேலோட்டமானவையாக உள்ளன.அவர்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துத் தீமைகளுக்கும் அடிப்படைக் காரணமான உலக வர்த்தகக் கழகத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டுமென்ற கோரிக்கை இல்லையே.தொழிலாளர்கள்,அரசு மற்றும் பிற துறை ஊழியர்கள்,வணிகர்கள்,விவசாயிகள் அனைவரும் இந்தப் புரிதலுக்கு வரவேண்டும்.பிறகு நடக்கும் வேலைநிறுத்தங்கள்,போராட்டங்கள் வீர்யத்துடனும் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவதாகவும் இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க