Tuesday, April 13, 2021
முகப்பு அரசியல் ஊடகம் 'ரேப்புக்கு' காரணம் அசைவ உணவாம் - தினமணியின் வக்கிரம்!

‘ரேப்புக்கு’ காரணம் அசைவ உணவாம் – தினமணியின் வக்கிரம்!

-

19.02.2013 தினமணியில் “அரங்கேறும் வக்கிரங்கள்” என்று பாலியல் வன்முறை குறித்து ஒரு தலையங்கம். டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்திற்குப் பிறகு ஊடகங்களின் அறச்சீற்றம் தாங்க முடியாத அளவுக்கு தலைவிரித்தாடுகிறது. அதில் தான் மட்டும் தனித்து தெரியவேண்டும் என்று நினைக்கிறார் ஆர்.எஸ்.எஸ்-ன் பிரியத்திற்குரிய வைத்தி மாமா!

முறை தவறிய உறவு, காரணமற்ற விவாகரத்து என்று மேலைநாட்டு நாகரீகத்தை எள்ளி நகையாடியது போய் இன்று அவர்கள் இந்தியாவை வக்கிர தேசம் என்று முகம் சுளிக்கும் அளவுக்கு நிலைமை இருப்பதாக துக்கப்படுகிறார் வைத்தி. கூடவே தாய்மை, பெண்மையை உயர்வாக கருதிய இந்திய நாகரீகம் போலித்தனமானது என்பதாய் சமீபத்திய சம்பவங்கள் தோலுரிப்பதாகவும் அவர் வருந்துகிறார்.

பாரதம் கற்புக்கும், விதேசிகள் விபச்சாரத்திற்கும் பெயர் போனவை என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் முடிவு. உண்மையில் கற்பின் மறுபக்கம்தான் விபச்சாரம் என்பது இவர்கள் அறியாதது அல்ல, மறைக்க விரும்பும் ஒன்று என்பதே உண்மை. சீதை, கண்ணகிகளை கற்புக்கரசிகளாய் தொழும் நாட்டில்தான் பார்ப்பன, ஷத்திரியர்களின் பொறுக்கித்தனத்திற்கு பயன்படும் விதத்தில் தேவதாசி எனும் உலகின் முதல் விபச்சார நிறுவனத்தை ஏற்படுத்தினார்கள். தேவசாதி முறையை ஒழிக்க வேண்டுமென்று திராவிட இயக்கம் போராடிய போது சத்திய மூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் வரலாறு பதிந்திருக்கிறது.

எடுத்ததெற்கெல்லாம் விவாகரத்து என்று மேலைநாடுகளை கிண்டல் செய்யும் அம்பிகள் முதலில் கணவன் என்னதான் பொறுக்கியாக இருந்தாலும் அவனை கண்கண்ட தெய்வமாக போற்ற வேண்டும் எனும் இந்து மதத்தின் கொடுமையைத்தான் போற்றுகிறார்கள். அதன்படி விவாகரத்து எனும் ஜனநாயக உரிமையைக் கூட வழங்காத பாரதம்தான் இழிவானதே ஒழிய அந்த உரிமையை அங்கீகரித்திருக்கும் மேலைநாடுகள் அல்ல. இன்று அந்த உரிமையை இந்தியா இறக்குமதி செய்திருப்பதாக ஓநாய் கண்ணீர் விடும் சங்க பரிவாரங்கள் மற்றும் அதன் ஊது குழலான தினமணி போன்றோரின் இதயத்தில் இருப்பது பச்சையான ஆணாதிக்கமே அன்றி பெண்ணுரிமை அல்ல.

” இறைநம்பிக்கை குறைந்ததுகூட, இன்றைய வக்கிரத்தனங்களுக்குக் காரணமாக இருக்கக் கூடும். தவறு செய்தால் தெய்வம் தண்டிக்கும் என்கிற அச்ச உணர்வும், சமுதாய ஏளனத்துக்கு நாம் ஆளாக நேரும் என்கிற பயமும் இல்லாமல் போய்விட்ட சூழல், தவறுகளுக்குக்  கதவுகளைத் திறந்து வைக்கிறது.” என்கிறார் தினமணியின் ஆசிரியர்.

ஒருவழியாக இறைநம்பிக்கை குறைந்து வருவதை இந்துக்களின் பிரச்சார பீரங்கி பத்திரிகையே ஒத்துக் கொண்டது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் பாலியல் வன்முறைகள் மட்டுமல்ல மற்ற வக்கிரங்களுக்கெல்லாம் காரணம் பக்தி உணர்வு குறைந்து போனதாக சொல்லுவது பச்சையான பார்ப்பனிய வெறியே அன்றி வேறல்ல. சங்கர ராமனை போட்டுத்தள்ளிய ஜெயேந்திரனோ, இல்லை பல் மருத்துவக் கல்லூரிக்காக முறைகேடுகளில் ஈடுபட்ட பங்காருவோ இல்லை வருமானவரி, விற்பனை வரி ஏய்ப்பு செய்த பாபா ராம்தேவோ, இன்ன பிற கிரிமினல் சாமியார்களெல்லாம் நாத்திகர்களா?

குஜராத்தில் 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்து அதை தெகல்கா வீடியோவிலும் ஒத்துக் கொண்ட இந்துமதவெறியர்களெல்லாம் சாட்சாத் கடவுள் நம்பிக்கை கொண்ட அதி தீவிர பக்தர்கள்தானே? இதிலிருந்து தெரியவரும் உண்மை என்னவென்றால் ஒருவரின் ஆன்மீகம் அல்லது நாத்திக உணர்வு மட்டும் ஒருவனின் சமூக ஆளுமையை உருவாக்கி விடாது. வரைமுறையற்ற அதிகாரம் கையில் இருக்கும் போதும், எளிய மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும் போதும்தான் இத்தகைய கிரிமினல்கள் அவர்கள் சாமியார்களாக இருந்தாலும் தவறு செய்கிறார்கள்.மட அதிபதிகள்

சங்கரமடத்தின் முடிவுகள் சேரி மக்களின் ஒப்புதலோடுதான் எடுக்க முடியும் என்று இருந்திருந்தால் சங்கரராமன் கொலை செய்யப்பட்டிருக்க முடியாது. இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதால்தான் போபார்ஸ் முதல் ஹெலிகாப்டர் ஊழல் வரை இறைநம்பிக்கை உடைய பெருச்சாளிகள் ஊழல் செய்கிறார்கள். அப்படி ஊழல் செய்பவர்கள்தான் தமது கருப்புப்பணத்தின் ஒரு பகுதியை திருப்பதி உண்டியலில் போடுகிறார்கள். மக்களுக்கு பதில் சொல்லக் கடமை பட்டவர்கள் எனும் நிலைமை உருவாகாத வரை இவர்கள் கடவுளுக்கே கமிஷன் கொடுத்து முறைகேடுகளை தொடர்வதுதான் நடக்கும். அவ்வகையில் இறைநம்பிக்கைதான் ஒரு மனிதனது தவறுகளுக்கு பரிகாரம், உண்டியல், சடங்கு என்று சலுகைகள் காண்பிக்கிறதே ஒழிய நாத்திகம் அல்லை.

“கற்பைவிட சுகம்தான் பெரிது என்று பெண்களும், ஒழுக்கத்தையும் கௌரவத்தையும்விட பணம் சம்பாதிப்பதுதான் முக்கியம் என்று ஆண்களும் கருதிவிட்டால் அந்தச் சமுதாயத்தைச் சீர்கேடிலிருந்து காப்பாற்றவே முடியாது.” என்ற வரிகளின் மூலம் தினமணி வைத்தி என்ன கூறவிரும்புகிறார்?

டெல்லி மாணவி பேருந்தில் சிதைக்கப்பட்ட செய்தி வெளியான போதே ‘அந்த மாணவி இரவில் ஏன் தனியாக சென்றாள், ஆண் நண்பருடன் தனியாக போக வேண்டிய காரணம் என்ன?’ என்றெல்லாம் அட்வைசு பண்ணியதன் மூலம் அந்த பொறுக்கிகளின் குற்றத்தை தணித்தவர்தான் இந்த வைத்தி. இப்போது அதே பெண்கள் கற்பை விட சுகம் பெரிது என்று கெட்டுப் போகிறார்கள் என்கிறார். அதாவது வீட்டுக்கு அடக்க ஒடுக்கமான அடிமைகளாக இல்லாமல் வெளியில் செல்லும் பெண்கள் சுகத்திற்க்காக அலைபவர்கள் என்று முத்திரை குத்துகிறார். இந்த வக்கிரம் வன்புணர்ச்சி செய்யும் குற்றவாளிகளை விட எந்த விதத்தில் குறைந்தது?

“ஓரினச் சேர்க்கை, திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது, இயற்கையை மீறிய திருமண பந்தங்கள், சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கும்கூட விவாகரத்து என்பவை எல்லாம் சமுதாயத்தில் சர்வ சாதாரணமான நிகழ்வுகளாக மாறிக் கொண்டிருப்பதை நாகரிகம் என்று இந்தியச் சமுதாயமும் ஏற்றுக்கொள்ளுமேயானால்,…”

மேலே வைத்தி மாமா பட்டியிலிட்டிருப்பவைகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் என்ன சம்பந்தம்? இவைதான் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம் என்றால் பாலியல் குற்றம் என்றால் என்ன என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை. விநோதினியின் மேல் அமிலம் ஊற்றிய சுரேஷ் யார்? ஏன் வீசினான்? மேற்கண்ட பட்டியலில் ஒன்று கூட அவனுக்குப் பொருந்தாது எனில் குற்றத்திற்கு காரணம் என்ன? அவன் காதல், பெண் குறித்தோ இல்லை ஒரு காதலை மறுப்பதற்கு ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு எனும் குறைந்த பட்ச ஜனநாயக உணர்வைக்கூட புரிந்து கொண்டிருக்கவில்லை. பெண்கள் தமது வேட்கைகளுக்கு பணிந்து கிடக்கக்கூடிய அடிமைகள் என்று பழக்கப்பட்டிருக்கும் சமூகத்தால் உருவாக்கப்பட்டவன் சுரேஷ். சுரேஷைக் கேட்டால் கூட மேலே வைத்தி மாமா பட்டியிலிட்டிருப்பதுதான் ஒழுக்கக் கேடுகளுக்கு காரணம் என்பதை ஏற்றுக் கொள்வான். அதாவது பெண்ணை கட்டுப்பட்டே ஆகவேண்டிய விலங்கு என்று கருதுபவர்கள்தான் ஓரினச் சேர்க்கை, லிவிங் டுகெதர், விவாகரத்து போன்றவற்றை எதிர்க்கிறார்கள். அந்த வகையில் வைத்தி மாமா இங்கே சொல்லியிருப்பது சேம் சைடு கோல்.

இறுதியில் விசயத்திற்கு வருகிறார் வைத்தி.

“மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் மதுபானக் கடைகளும், தெருவெங்கும் அசைவ உணவைப் பரிமாறும் துரித உணவகங்களும், கையேந்தி பவன்களும், அதிகரித்து விட்டிருக்கும் அசைவ உணவுப் பழக்கமும் உணர்ச்சிகளை அதிகரித்து, சாத்வீக குணத்தை மழுங்கடித்து விடுகின்றன என்கிற உண்மையை நாம் எப்போது உணரப் போகிறோம்? அவை மனிதனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மிருக உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பது விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டிருக்கும் உண்மை.” இதுதான் வைத்தி முத்தாய்ப்பாக சொல்ல வரும் நீதி. அல்லது காலந்தோறும் நெறி தவறாத பார்ப்பனியத்தின் வேதம்.

வைத்திமாமா கண்டுபிடிப்பின்படி படுக்கையறையை பள்ளியறையாகவும், கருவறையை காமாந்திர அறையாகவும் மாற்றிய ஜெயேந்திரன், நித்தியானந்தா, தேவநாதன் போன்றோர் ஒன்று மாட்டுக்கறியை முழுங்கி  மது குடிப்பவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் நெய், தயிர், பருப்பு வகையறாக்களை அதிகம் விழுங்குபவர்கள் காமவெறியர்களாக இருக்க வேண்டும். எது உண்மை வைத்தி அவர்களே?

சைவம் சாத்வீக உணர்ச்சி, அசைவம் அசுர உணர்ச்சி என்பது பார்ப்பன இலக்கியங்கள் தொட்டு பலரும் சொல்லும் பச்சையான பார்ப்பனியத் திமிரே அன்றி வேறல்ல. இதை விஞ்ஞானம் வேறு ஏற்றுக் கொண்டிருக்கும் உண்மை என்பதாக அடித்து விடுகிறது தினமணி. ராகு, கேது கதை மூலம் கிரகணங்களை விளக்கியதுதான் இவர்களது விஞ்ஞான யோக்கியதைக்கு சான்று.

மாட்டுக்கறி தின்னும் பஞ்சமர்கள், மற்ற கறிகளைச் சாப்பிடும் சூத்திரர்கள் என்று உணவின் மூலமும் இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தின் திமிரைத்தான் வைத்தி இங்கே பிரதிபலித்திருக்கிறார். மட்டன், சிக்கன், பீஃப் சாப்பிடுபவர்கள்தான் பாலியல் வன்கொடுமைகளை செய்கிறார்கள் என்று காட்டுவதன் மூலம் இங்கே சைவ உணவு அல்லது பார்ப்பனியத்தின் ‘கொல்லாமையை’ புனிதப்படுத்துகிறார்கள். மோடியின் குஜராத்திலோ இல்லை தாக்கரேவின் மும்பையிலோ வெட்டிக் கொல்லப்பட்ட மக்களின் ரத்தம் இன்னும் காயாத நிலையில் சைவ உணவுக்காரர்களின் கொலை வெறியை உலகமே பார்த்தது உண்மை இல்லையா?

அல்லது அமெரிக்காகாரன் அதிகம் கறி சாப்பிடுவதால்தான் ஈராக், ஆப்கானில் மக்களை கொன்று குவித்தானா? இல்லை புலால் உண்ணாமையை போதித்த புத்த மதத்தைச் சேர்ந்த ராஜபக்சேவும் சிங்கள இனவெறி இராணுவமும் அகிம்சை பிரியர்களா? உணவுக்கும் வன்முறைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதுதான் முதல் உண்மை.

சரி வைத்தியின் வாதத்தை பெண்களுக்கும் பொருத்தி பார்த்தால் என்ன வரும்? மாமிசம் சாப்பிடும் பெண்கள்தான் அதிகம் ‘கற்பழிப்பை’ விரும்பி வரவழைக்கிறார்கள் என்று கூட வியாக்கியானம் செய்யலாமே? பாலியல் வன்முறையோ இல்லை வாழ்வியல் அடக்குமுறைகளோ எதுவும் குறிப்பிட்ட  சமூக பொருளாதார அரசியல் காரணங்களில் பிறக்கின்றன. அவை உணவினால் வருகின்றன என்று சுருக்குவது முட்டாள்தனமானது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதிக்க சாதிவெறிக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் பார்ப்பனியத்தின் பச்சையான சாதிவெறியாகும்.

இந்த ஒன்றிற்காகவே வைத்தி மற்றும் தினமணி மேல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கலாம்.

தினமணி ஒரு பார்ப்பனியப் பத்திரிகை அல்லது ஆர்.எஸ்.எஸ்இன் ஊது குழல் என்று ஒவ்வொரு முறையும் நாங்கள் சொல்லும் போதும் இல்லை அது ஒரு நடுநிலைப் பத்திரிகை என்று வக்காலத்து வாங்கும் அம்பிகள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?

 1. //யார் இந்து? ஓடும் ரயிலில் பார்ப்பனர்களோடு சண்டை !//

  //‘ரேப்புக்கு’ காரணம் அசைவ உணவாம் – தினமணியின் வக்கிரம்!//

  அம்பியை இன்னும் காணோம்.

 2. அசைவம் சாப்பிட்டால் காமம் அதிகமாகும் என்பதை விட,அதிக காரம்,அதிக உப்பு,அதிக மசாலா உணவுகள் கண்டிப்பாக காமத்தை கிளறிவிடும். இதில் மீடியாவில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிற வேலை வேறு.பொருளாதார சூழ்நிலையால் திருமணம் தள்ளிப் போகிற சூழ்நிலை. ஆக இந்த மாதிரியான உணவுகளுக்கும் காமத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு.இந்த உணவுகள் அசைவம் மட்டுமே என்பது முட்டாள்தனம். சைவத்திலும் இந்த வகை உணவுகள் இப்போதெல்லாம் அதிகம் விற்கப்படுகின்றன. நாக்குக்கு ருசியா இருக்கணும் என்ற தேவையில். You are what you eat…அன்னமே எண்ணம். உணவுக்கும் குணத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பது உண்மைதான்…டப்பா உணவுகள்,பன்னாட்டு நிறுவனத்தின் நொறுக்கு தீனிகள் இவைகள் நிச்சயம் காரணங்கள்தான்…

  • “உணவுக்கும் குணத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பது உண்மைதான்…”
   என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்கள்.
   இந்த உணவு வகைகளால் காமம் கிளறிவிடப்படுகிறது என்றால், அதை அவன் தன் அம்மா, கூடப் பிறந்த சகோதரிகளிடம் ஏன் தணித்துக் கொள்வதில்லை. அவர்களும் பெண்கள் தானே? அப்போது எது தடுக்கிறது அவனை?

   • இடையில் ஒரு இணைப்பை விட்டு விட்டீர்கள் தமிழ் “….அதை சமைத்துப்போட்ட தன் அம்மா, கூடப் பிறந்த சகோதரி..” என்று எழுதியிருக்க வேண்டும்.

 3. Thamizhan

  very correct, too much salt/sugar/masala is equally a problem,non veg persay is not a problem but too much non veg and these broiler chickens are a big problem.

 4. //உங்களுக்கு ரொம்ப புடிச்ச சப்ஜெக்டா //

  ஐய்யய்யோ அப்படியெல்லாம் இல்லீங்க. 2 கட்டுரைகளிலும் பார்ப்பான் பார்ப்பான் என்று வருகிறதே எங்கடா சீறும் பாம்ப இன்னும் காணோமேன்னு கேட்டேன்.

 5. வினவிடம் ஒரு கேள்வி இலங்கை இனப்படுகொலை பற்றி அவ்வளவாக பதிவுகள் வினவு எழுதாதது ஏன்?இலங்கைக்கு சீனா உதவுவதாலா?இதை மட்டறுக்காமல் உண்மையை சொல்லுங்கள்

  • ஒருவேளை இலங்கைக்கு சீனா உதவினால், அதற்காக வினவு ஏன் இலங்கை பற்றிய பதிவுகளை குறைத்து எழுத வேண்டும்?

  • //இலங்கைக்கு சீனா உதவுவதாலா?//

   இல்லை. இலங்கையின் கெலங்கா மீனை வினவுக்காரர்கள் சாப்பிடறாகலாம்.

 6. அசைவ உணவை சாப்பிட்டால் கற்பழிக்கத் தோன்றும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்ததைப் போல் வைத்தி எழுதியது அபத்தம்..

  முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா, சூப்பர் முஸ்லி பவர் லேகியங்களை சாப்பிட்டுவிட்டு உணர்ச்சி எகிறுகிறதொ இல்லையோ, அதை சாப்பிட்டவன் வெளியே பெண்களை கற்பழிக்கக் கிளம்பினால் அடிவிழப் போவது லேகியம் விற்றவனுக்கல்ல..

 7. உணவுக்கும் உணர்வுக்கும் தொடர்பிருக்கிறதா?உணவே மருந்து, மருந்தே உணவு என்கிறது சித்த,ஆயுர்வேத மருத்துவங்கள்.ஒரு குறிப்பிட்ட வகையான உணர்வைத் தூண்டுவதற்காக/தணிப்பதற்காக சில வகையான உணவை உட்கொள்ளுவது நடைமுறையில் இருக்கிறது.ஆனால் அப்படி உண்ணும்போது அது உண்வு என்ற நிலையிலிருந்து மாறி மருந்தாகிவிடுகிறது.மருந்து என்னும்போது அளவு, காலம் போன்ற வரையறைகள் வந்துவிடுகின்றன.ஓர் உயிரை வளர்ப்பது உணவே.உயிர் என்பது எண்ணற்ற உணர்வுகளின் தொகுப்பு.வைத்தி அங்கில் கணக்குப்படி ஒரே வகையான உணவைச் சாப்பிடுகிறவர்கள் அனைவருக்கும் ஒரே உணர்வு தான் இருக்க வேண்டும்.அசைவம் சாப்பிட்டால் மூர்க்கம்.சைவம் சாப்பிட்டால் சாத்வீகம்.இரண்டும் சேர்த்து சாப்பிட்டால் மூர்வீகம் அல்லவா வர வேண்டும்.சைவமா?அசைவமா?என்று தீர்மானிக்கப்படாத உணவு வகைகள் உள்ளனவே.அதைச் சாப்பிடுகிறவர்கள் எந்த வகை? சாராயம்,கஞ்சா,அபின்,வைன் இவையெல்லாம் என்ன?சோமபானம் ,சுராபானம் ?ஆணின் வீர்யத்தை,பெண்ணின் இச்சையை அதிகரிப்பதற்குத் தரப்படுபவை எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.(பார்க்க தினமணி,கதிர் விளம்பரங்கள்)தாவரங்களை உண்ணுகின்ற விலங்கு களிடம் மூர்க்கம் இல்லையா? அசைவக் கடைகள் அதிகரிப்பதற்கும்,அக விலைக்கும் காரணம் அம்பிகள்தான். அமெரிக்க,ஐரோப்பிய அம்பிகள் என்ன சாப்பிட்டு இப்படி அடிமைகள் ஆனார்கள். சங்கராச்சாரியை எதிர்த்த சங்கரராமன் அசைவம் சாப்பிட்டிருப்பாரோ?மோடி,பால் தாக்கரே,அத்வானி,தொக்காடியா,சிங்கால்,வேதாந்தி இவர்களுடன் வைத்தி அங்கில் சேர்ந்து சாப்பிட்டிருப்பாரா.சைவம் சாப்பிட்டால் சாத்வீகம்,அசைவம் சாப்பிட்டால் மூர்க்கம் என்பது விஞ்ஞானம் அல்ல வேதாந்தம்.வேதாந்தம் எப்போதுமே ஒருபடி மேல்.பார்ப்பனக் கொழுப்பு தினமணியில் வடிகிறது.அங்கில் கொழுப்பு சைவமா,அசைவமா?சுத்த சைவமாக இருந்தால் கொழுப்பு உருவாகாதா.கொழுப்பு இல்லாமல் உயிர் வாழுமா?இப்படி எண்ணற்ற வினாக்களுக்கு நாள்தோறும் அங்கில் தலையங்கம் தீட்டட்டும்.பார்ப்பனக் கொழுப்பு அடங்குதா பார்போம்.

  • பருப்பு பொடியையும் நெய்யையும் எந்த விகிதாசாரத்தில் கலந்து உண்பது என்று கேட்டால் வைத்தி சொல்லுவார். அதை விட்டுவிட்டு இப்படிப்பட்ட கேள்வியையெல்லாம் அவரிடம் கேட்கலாமோ?
   செவத்திவீரன் – நெத்தியடி என்பது இது தான்.

 8. பாதாம் ,பிஸ்தா ,சில வகை பழங்கள் ,பாக்கியராஜின் முருங்கைகாய் ,பனங்கிழங்கு ,பசும்பாலை நன்கு வற்ற காய்ச்சு குடிப்பது எல்லாம் அசைவத்தை விஞ்சும் வயகராக்கள் என்பது வைத்திக்கு தெரியாத என்ன?
  வைத்தி வந்த பிறகு பழைய சிவராமனை விட அதிகமாக ஆதிக்க சக்தியின் ஆவேசம் வெளிப்படுகிறது .சம்பந்தம் என்பவர் ஆசிரியராக இருந்த சமயத்திலே அந்த நாளிதழ் நாடு நிலையாகவும் தமிழகத்தில் வளர்ச்சியும் கண்டது .

 9. கட்டுரையை அரைகுறையாக புரிந்து கொள்வதாலும் குற்றம் சாட்டும் வகையில் உள்ள கட்டுரையை ஆதராமாக வைத்துக் கொண்டும் தங்கள் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பலர் வலுசேர்த்துக் கொண்டுள்ளனர். இறைச்சி இயற்கையாக இன்று கிடைப்பதில்லை மாறாக ஊட்டச்சத்துகள் மற்றும் வளர்ச்சியை துாண்டும் வேதிபொருட்கள் பயன்படுத்தி விரைவாக அறுவடை செய்ய பயன்படுத்தி உற்பத்தி செய்யபடுகிறது. ஸ்டெராய்ட் போன்ற வேதிப்பொருள்கள் பெண்களை விரைவாக (குறைந்த வயதிலேயே) பருவமடைய செய்கிறது என்பது ஆய்வு செய்து நிறுபிக்க பட்ட உண்மையாகும் அதே விளைவுகள் ஆண்களுக்கும் உண்டு.

  • கட்டுரை பல விசயங்களை விவாதிக்கிறது. ஆனால் விவாதிப்பவர்கள் சாப்பாட்டிலேயே நிற்பதின் அர்த்தம் புரியவில்லை. அதை தாண்டியும் விவாதிக்கவேண்டும்.

 10. ஒரு விலங்கியல் பூங்கவிற்கு நாம் போவதாய் வைத்துக்கொள்வோம்…

  இப்போது மான்களை பார்க்கிறோம் அது மிகுந்த அழகிய தோற்றத்துடனும் மிக அமைதியாகவும் மிக நிதானமாகவும் தெரிகிறது…ஏனெனில் அது சைவம்

  இப்போது சிங்கத்தைப் பார்க்கிறோம் அது மிகுந்த சோம்பல் போலவும்..அங்கும் மிங்கும் அமைதியின்றி அழைவதும் எப்போதும் எதையாவது தாக்கும் எண்ணத்திலிருக்கிறது ஏனெனில் அது அசைவம்…

  இவ்வாறு சுவாமி விவேகானந்தர் விளக்கியதை தவறாக தன் விருப்பத்திற்கு வைத்துக்கொண்டார் வைத்தி….

  காஞ்சிபுரம் எத்தனைப் பெண்களை தன் ஆதிக்கத்தின் மூலமாக அடைந்திருக்கும்..அவர் அசைவம் சாப்பிட்டாரா..?

  பிடிதி செய்த காரியம் ஊர் அறிந்தது…

  இன்னும் மாட்டாமலிருக்கும் மடாதிபதிகளும்..பாதரிகளும்..நிறைய….

  • யானை சைவம் என்பதால் அதனிடம் உங்களால் வாலாட்ட முடியுமா?
   ஆனால் அசைவ நாய் உங்களிடம் வாலாட்ட்டுகிறதே ,மானை கூட் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள் நாயை படுக்கை அறைவரை அனுமதிக்கிறார்களே

 11. //பாதாம் ,பிஸ்தா ,சில வகை பழங்கள் ,பாக்கியராஜின் முருங்கைகாய் ,பனங்கிழங்கு ,பசும்பாலை நன்கு வற்ற காய்ச்சு குடிப்பது எல்லாம் அசைவத்தை விஞ்சும் வயகராக்கள் என்பது வைத்திக்கு தெரியாத என்ன?//

  மிக அருமையாக சொன்னீர்கள்..இப்ராகிம் ஆனால்

  அசைவம் என்கிற பெயரில் மாடு தின்பதாலும் அவ்வாறே நிகழ்கிறது…

  • மாடு தின்னுபவர்கள் ஒன்று போதாது என்றால் இரண்டோ அதுவும் போதாது என்றால் மூன்றோ நாலோ மணம் செய்து நுஹர்ந்து கொள்வார்கள் .
   ஆனால் மாட்டு பாலை வற்ற காய்ச்சி குடிப்பவர்கள் கும்பிடும் பெண்களை அல்லவா குறிவைக்கிறார்கள் .

 12. வைத்திக்கு தஞ்சாவூரில் ஒரு கோவிலில் ஒரு பார்ப்பனர் செய்த சில்மிசங்கள் தெரியாதோ .அதனால் தான் இதை தெரியாமல் பேசிவிட்டாரோ ? மாமிசம் உண்பதை இந்து மதம் அனுமதிக்கின்றதே அது அவருக்கு தெரியாதா ?
  அபஸ்தம்ப தர்ம சூத்திரமும் ,யஜூர்வேத விளக்கமான பிரஹதாரண்யா உபநிஷதமும் , மாமிசம் உண்பதை அனுமதிகின்றதே . பிரஹதாரண்யா உபநிஷத்தில் இது பற்றி குரிப்பிடபடுவதாவது :-
  எவனொருவன் தனக்குப் பிறக்கும் மகன் போற்றத்தக்க சிறந்த கல்விமானாகவும் ,சபைகளில் சிறந்த வாக்குவன்மைஉடன் அரிஉரையற்றக் கூடியவனாகவும் ,எல்லா வேதங்களையும் கற்ற வித்தகனாகவும் ,தீர்க்க ஆயுளையும் பெற்றவனாகவும் இருக்கவேண்டுமென்று விரும்புவனாகின் , அவன் அரிசியுடன் கொழுத்த ஒரு காளை அல்லது வயது முதிர்ந்த மற்றொரு எருது இவற்றின் மாமிசத்தை சேர்த்து பக்குவபடுத்தி உன்ன வேண்டும் அதுவும் அவனும் அவன் மனைவியும் மிகவும் சுத்தமான வெண்ணையுடன் சேர்த்து உண்டு வந்தார்கலாஇன் அவர்களுக்கு மேற்சொன்ன சகல குணங்களும் போருந்தியவனாகிய மகன் பிறப்பான் .
  என்று பிரஹதாரண்யா இந்து மத நூல் கூறுகிறது . இதற்க்கு வைத்தி அவர்கள் பதில் தரவேண்டும் .

 13. MrArumugam,the chemicals and salts for addicting taste and for preservation are added in pickles,chips and many other readily available snacks like kurkure,lays etc and not merely in meat.As some other friend has stated cow”s milk when it is boiled to get thicker and smaller quantity, when taken, will also increase sexual appetite.Many of our Mutt heads are consuming such milk.Mr Vaithi wanted to insult non-vegetarians.He took this opportunity to insult them.If his theory is correct,there should be chaos in the entire world day in day out.In many countries,including USA and Europe,ladies are going out alone at any time without any fear.In these counties,vegetarians are in negligible percentage.Moreover,during Vedas period,Brahmins were consuming meat and somabaanam.Asuras are called as Asuras since they were not consuming Sura ie alcohol.Tamils,who have self respect should stop buying Dinamani,Dinamalar,Kumudam group of publications,Vikatan group of publications and Tuqlak.Dinamani in its Tamilmani dated 18th March,2012 has given wrong meaning for a Naanmanikadigai song stating that Brahmins are the superior caste by virtue of birth.Actually,established authors who wrote verse by verse meaning for Naanmanikadigai said that any person, irrespective of his caste will be treated as Brahmin if only he is compassionate to all living beings in the world.That is the actual meaning of Andhanar..Mr Vaithi will not publish comments which are contrary to his stupid theories.Such of those comments telling that those editorials are masterpieces only will be published.He should remove all those self appreciating words like Nimirntha Nannadai,Nerkonda Paarvai etc from his editorial page.

  • Dude,

   You have to blame jainism and buddhism for that vegetarianism.

   Nonetheless, i dont think it is a abd change,vedic people lived near the himalayas and places of extreme cold and their knowledge of agriculture was limited,only livestock.

   Then that has progressively changed a lot,please stop finding references like that.

 14. காமத்தின் பிறப்பிடம் மூளைதான்! போஷாக்கான உணவு, மனித உடலுக்கு எற்ற உண்வு என்றால் தேவையான விகிதப்படி அவரரவர் உழைப்பிற்கு தக்கபடி வித்தியாசம் பார்க்காமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்! பார்ப்பன சரித்திரத்தில், அவர்கள் அசைவ உணவுகள் சாப்பிட்டபோது காமம் கொப்பளித்து ஆரிய வர்த்தத்தை பார்பன மயமாக்கி விடவில்லை! மாறாக சைவ உண்வு சாப்பிடும் பரம்பரை காம, குரோத குற்றஙகளின்றி சத்புத்திரராகிவிடவில்லை! உணவுக்கும் காமத்துத்துக்கும் முடிச்சு போடுவது அறியாமை ! லேகியம் விற்பவர்களின் சாமர்த்தியமான வழியை கையான்டு பாக்யராஜ கல்லா காட்டினார்! இப்பொது பார்ப்பனர்கள் ஆரம்பித்து உள்ளனர்! இந்துத்துவாவில் அலோபதிக்கு இடமில்லையாம்! எல்லாமே ஆயுர் வேதம் தானாம்! ராம்தெவ் பட்டாளம் சென்னையில் பிரச்சாரம்! இந்த ஆர் எச் எச் மக்களை எப்படி ஆட்டுவிக்கிறது பார்த்தீர்களா!

 15. பாலுணர்வு இயற்கையானது.பாலியல் தேவை இயல்பானது.ஆரோக்கியமான ஒரு மனிதன் சத்தான உணவு உட்கொள்ளும் பட்சத்தில் பாலியல் தேவை இயற்கையாகவே உண்டாகி விடும்.அது சைவ உணவாக இருந்தாலும் சரி அசைவ உணவாக இருந்தாலும் சரி.இதை புரிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய வேண்டியதில்லை.சைவ உணவு மட்டுமே அருந்தும் சாதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதில்லையா என்று கேள்வி எழுப்பி எண்ணிப் பார்த்தாலே போதும்.

  ஆனால் தினமணி என்ன சொல்கிறது.

  \\மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் மதுபானக் கடைகளும்; தெருவெங்கும் அசைவ உணவைப் பரிமாறும் துரித உணவகங்களும், கையேந்தி பவன்களும், அதிகரித்து விட்டிருக்கும் அசைவ உணவுப் பழக்கமும் உணர்ச்சிகளை அதிகரித்து, சாத்வீக குணத்தை மழுங்கடித்து விடுகின்றன என்கிற உண்மையை நாம் எப்போது உணரப் போகிறோம்? அவை மனிதனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மிருக உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பது விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டிருக்கும் உண்மை.//

  அசைவ உணவு மிருக உணர்வுகளை தூண்டிவிடும் என்றும் அது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்றும்,அதனால்தான் பாலியல் வன்முறைகள் நிகழ்வதாகவும் ஆதாரம் ஆய்வு எதையும் காட்டாமல் அடித்து விடுகிறது.கேடு கெட்ட குடிப்பழக்கத்தையும் அசைவ உணவு உண்பதையும் சமமாக காட்டி அசைவ உணவு உண்பவர்களை இழிவு படுத்துகிறது. ஏழை உழைக்கும் மக்கள் மீதான சாதீய,வர்க்க வெறுப்பு மேலோங்க கையேந்தி பவன்களை குறிப்பிட்டு இழிவு படுத்துகிறது.

  என்ன ஒரு திமிர்,ஆணவம்.இந்த நாட்டின் 90 விழுக்காட்டிற்கும் மேலான ஆகப் பெரும்பான்மையான மக்கள் அசைவம் உண்பவர்கள்.அவர்களை இதை விட கேவலமாக அவமதிக்க முடியுமா.ஊடக வலு கையில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் எழுதலாம்.நம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற ஆணவம் தலை விரித்தாட பெரும்பான்மையான மக்களுக்கு எதிராக நஞ்சு கக்கியுள்ளது தினமணி.

  மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்றார் பெரியார்.அந்த வகையில் தமிழினம் பார்ப்பனிய நஞ்சு கக்கும் தினமணி உள்ளிட்ட ஏடுகளை முற்று முழுதாக புறக்கணிக்க வேண்டும்.

  தினமணி வைத்தியநாதனுக்கு சில கேள்விகள்.

  பற்கள் கொட்டிப் போய் தள்ளாத வயதை அடைந்திருந்த,விட்டால் இன்னும் சிறிது காலத்தில் தானாகவே செத்துப் போயிருக்க கூடிய காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சே என்ற பார்ப்பனன் சைவ உணவு உண்பவனாக இருந்தும் அவனுக்கு எப்படி அந்த மிருக உணர்வு வந்தது.

  கொலைப்பழி முசுலிம்கள் மீது விழ வேண்டும்.அதை வைத்து நாடெங்கும் முசுலிம்களை வேட்டையாட வேண்டும் என்ற கபட நோக்கத்தில் காந்தியாரை கொல்ல போகுமுன் தன கையில் இசுமாயில் என பச்சை குத்திக் கொண்டான் கோட்சே.இந்த கேடு கெட்ட வஞ்சக எண்ணம் அவன் மனதில் தோன்ற காரணம் அவனது சைவ உணவு பழக்கமே என்று சொல்லலாமா.

  சைவ உணவு பழக்கம் கொண்ட காஞ்சி சங்கராச்சாரியார் சங்கரராமனை கொலை செய்யும் அளவுக்கு மிருக உணர்வு கொண்டது எப்படி.

  சைவ உணவு பழக்கம் கொண்ட காஞ்சி சங்கராச்சாரியார் எழுத்தாளர் அனுராதா ரமணனை படுக்கைக்கு கூப்பிட்டது மிருக உணர்வு இல்லையா.

  சைவ உணவு பழக்கம் கொண்ட பார்ப்பன குடும்பத்தில் பிறந்த தேவநாதன் கருவறைக்கு உள்ளேயே ”கசமுசா” பண்ணியபோது அவனிடம் வெளிப்பட்டது தெய்வீக உணர்வா,மிருக உணர்வா.

  தள்ளாத வயதிலும் அடுக்கடுக்கான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட என்.டி.திவாரி என்ற சைவ உணவு பழக்கம் கொண்ட சரயுபரீன் பார்ப்பனர் மிருக உணர்வு கொண்டது எப்படி.

  RSS இயக்கம் சாத்வீகமானது என்று இந்த நாட்டில் வளரும் குழந்தை கூட சொல்லாது.அந்த இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தும் சித்பவன் பார்ப்பனர்கள் சைவ உணவு உண்பவர்கள்தானே.ஆனாலும் அவர்கள் கொலைவெறி கொண்டது எப்படி.

 16. When Vaithi writes stupid editorial what is wrong in quoting references to Vedic period Mr Harikumar?Not only during Vedic period,but throughout the history,Aryans have no mastery over agriculture or town building.They were good in livestock rearing only.You have also not denied the fact of meat eating by Aryans during Vedic period.

  • Obviously,

   I dont agree with Mr.vaithi here.why do you think,I do?

   People used to eat non veg for centuries,but rapes are happening more and more now only.

   So obviously non veg food is not the main factor.

 17. காமெடியை விட அதிர்ச்சியே எற்படுகிறது…
  //“ இறைநம்பிக்கை குறைந்ததுகூட, இன்றைய வக்கிரத்தனங்களுக்குக் காரணமாக இருக்கக் கூடும். தவறு செய்தால் தெய்வம் தண்டிக்கும் என்கிற அச்ச உணர்வும், சமுதாய ஏளனத்துக்கு நாம் ஆளாக நேரும் என்கிற பயமும் இல்லாமல் போய்விட்ட சூழல், தவறுகளுக்குக் கதவுகளைத் திறந்து வைக்கிறது.” என்கிறார் தினமணியின் ஆசிரியர்.//

  இறைநம்பிக்கை இல்லாமல் தனி மனித ஒழுக்கம் சாத்தியம் இல்லை என்பது போல் எழுதுகிறார்…
  பெண்களை போகப்பொருளாகவும், தாழ்வாகவும் நோக்கும் போக்கும், சக மனிதாராக மதிக்கும் புரிதலும் இருந்தால் போதும்…
  இதற்கு சொர்கத்தில் உள்ள கடவுள்கள் எல்லாம் ஒன்னும்நமக்காக பஞ்சாயத்து பன்ன வேண்டாம்…

  • மன்னிக்கவும்…திருத்தம்…

   //பெண்களை போகப்பொருளாகவும், தாழ்வாகவும் நோக்கும் போக்கும், சக மனிதாராக மதிக்கும் புரிதலும் இருந்தால் போதும்…//

   பெண்களை போகப்பொருளாகவும், தாழ்வாகவும் நோக்கும் போக்கும் “நீங்கி”,சக மனிதாராக மதிக்கும் புரிதலும் இருந்தால் போதும்

 18. இந்தியா முழுவதும் உள்ள சில கோடிகனக்கான சைவ உணவாளர்களில் சிலரை மட்டுமே உங்களால் குறை சொல்ல முடிகிறது ஆக இதர அனைத்து குற்ற்மும் செய்பவர்கள் அசைவ உணவு தின்பவர்கள் என்று அல்லவா நீங்கள் கூறுவதாக படுகிறது உங்கள் கருத்தை கண்ணியமாக வெளிப்படுத்துங்கள்

  • The point is, there is no link between ones food habit and crimes. It can’t be concluded in either way against veg or non-veg eating people. But the problem comes when veg people try to vilify non-veg eating people.

   • மிருகங்களை உணவாக்கி கொல்லுதல் பாவம் கொடூரம் மனிதநாகரீகதிற்கு எதிரான சவால்

    உணவுக்காக கொல்லப்பட்ட மிருகங்களின் உடலில் உள்ள விஷம் அசைவ உணவு பிரியர்களை மேலும் கடும் நடத்தை கொள்ள வைக்கிறது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க