privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்காவில் கஞ்சித் தொட்டி: ஒரு குடும்பத்தின் கதை!

அமெரிக்காவில் கஞ்சித் தொட்டி: ஒரு குடும்பத்தின் கதை!

-

டெய்லர்
டெய்லர்

“சில நாட்கள் நன்றாகவும் சில நாட்கள் மோசமாகவும் இருக்கும். தானியங்கள் கிடைக்கும் நாட்களில் பால் கிடைக்காது; பால் கிடைக்கும் நாட்களில் தானியங்கள் கிடைக்காது. தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி நடக்கும் போது எனக்குப் பசி கொஞ்சம் அதிகரிக்கும். அப்போதெல்லாம் நான் அந்தத் திரைக்குள் மாயமாய்ச் சென்று அந்த உணவைத் தின்னலாம் என்று இருக்கும்” பன்னிரண்டு வயது டெய்லரின் வார்த்தைகள் இவை..

டெய்லர் அமெரிக்காவின் அயோவா நகரைச் சேர்ந்தவன். டெய்லருக்கு ஒரு குட்டித் தங்கை உண்டு. அவள் பெயர் கெய்லி. கெய்லி தற்போது பள்ளிக்குச் செல்வதில்லை. டெய்லரும் தான். இவர்களின் தாய் பார்பரா வேலையிழந்தவள். பார்பராவின் கணவன் இந்தக் குடும்பத்தைக் கைவிட்டு எங்கோ சென்று விட்டிருக்கிறான். வேலையற்றவர்களுக்கு அமெரிக்க அரசு தரும் உணவுக் கூப்பன் மற்றும் உதவித் தொகையைக் கொண்டே இந்தக் குடும்பம் நடந்து வருகிறது. மாதமொன்றுக்கு அரசிடமிருந்து சுமார் 1,480 டாலர்கள் (சுமார் 81,000 ரூபாய்கள்) மதிப்பிலான உதவிகள் கிடைக்கின்றன.

இந்தியாவில் ஒரு உயர் நடுத்தர வர்க்கக் குடும்பம் ஆடம்பரமாக வாழப் போதுமான இந்தத் தொகையில் அமெரிக்கக் குடும்பங்களால் தினசரி மூன்று வேளை உணவு கூட எடுத்துக் கொள்ள முடியாது என்பதே எதார்த்தம். உணவு, மருத்துவம, கல்வி, போக்குவரத்து என்று சகலத்தின் மேலும் அரசின் மானியங்கள் குறைக்கப்பட்டு வரும் நிலையில் அநேகமான துறைகள் தனியாரிடம் தான் உள்ளன. இதன் காரணமாக அமெரிக்காவில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை இந்திய மதிப்புக்கு மாற்றினால் நம் ஐ.டி துறை நண்பர்கள் கூட அத்துக் கூலிகள் தான்.

கெய்லி
கெய்லி

கெய்லி கள்ளம் கபடமற்ற சிறுமி. அவளுக்குப் பெரியளவில் விவரம் தெரிந்திருக்காது. அயோவா நகரத்தின் ஸ்டாக்டன் பகுதியில் இருக்கும் உணவு வங்கிக்கு தாயாருடன் செல்லும் அவள், ‘அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உணவை எடுத்துச் செல்வோம்’ என்று அடம்பிடிக்கிறாள். அவளுக்கு மாட்டு இறைச்சி தின்ன ஆசை. ஆனால், அவர்கள் தங்கியிருக்கும் மோட்டலிலோ இறைச்சியை பதப்படுத்தி வைக்க குளிர்சாதனப் பெட்டி இல்லை. எனவே பார்பரா மறுக்கிறாள். சுமார் 700 டாலர்கள் (சுமார் 38,000 ரூபாய்) மாதவாடகையாக வசூலித்துக் கொள்ளும் மோட்டலில் குளிர்சாதனப் பெட்டியெல்லாம் அதிகபட்ச ஆடம்பரம்.

“காலை, மதியம், இரவு என்று எங்களால் மூன்று வேளைகளும் சாப்பிட முடியாது. எனக்கு பசிக்கும் போது ரொம்ப சோகமாகி விடுவேன்” என்கிறாள் கெய்லி. தங்களால் மூன்று வேளை சாப்பிட முடியாமல் போவதற்குக் காரணம் வருமானமில்லை என்பதை இந்தச் சிறுமி அறிந்து வைத்திருக்கிறாள். தினமும் ரயில் தண்டவாளங்கள் ஓரம் சிதறிக் கிடக்கும் காலி கேன்களை சேகரித்து விற்கிறாள். ஒவ்வொரு கேனுக்கும் இரண்டிலிருந்து ஐந்து சென்டுகள் வரை கிடைக்கலாம். டெய்லர் பக்கத்திலேயே தோட்ட வேலை செய்கிறான். அதில் நாளொன்றுக்கு பத்து டாலர்கள் கிடைக்கலாம்.

பார்பரா பெரிய ஷாப்பிங் மால்களில் பொருட்கள் வாங்குவதில்லை. இரட்சண்ய சேனையால் நடத்தப்படும் மலிவு விலைக் கடைகள் தான் கட்டுப்படியாகிறது. அங்கும் கூட 60 சென்டுகள் விலையில் விற்கும் ஆடைகள் தான் வாங்க முடிகிறது; 2 டாலர்கள் என்றால் வாங்க முடிவதில்லை. பார்பரா முன்பு ஒரு ஆலையில் வேலை பார்த்துள்ளார். பொருளாதார பெருமந்தத்திற்கு பின் வேலையிழந்துள்ள பார்பரா தற்போது ஒரு சிகையலங்காரப் பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார். அதை முடித்தாலாவது வேலை கிடைக்குமா என்பதும் நிச்சயமின்றி தான் உள்ளது.

உணவு வங்கிமெரிக்க அரசு நாடெங்கிலும் சுமார் 200 உணவு வங்கிகளை நடத்தி வருகிறது. உணவுக் கிடங்கை நமக்குப் பரிச்சயமான மொழியில் சொல்வதென்றால் கஞ்சித் தொட்டி என்று சொல்லலாம். பொருளாதாரப் பெருமந்தத்திற்குப் பின் இவ்வங்கிகளுக்கு வருவோரின் எண்ணிக்கை சுமார் 30ல் இருந்து 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நிச்சயமற்ற எதிர்காலமும், குழந்தைகளின் நிலைமையும், வறுமையும் வேலையின்மையுமாகச் சேர்ந்து பார்பராவை மனச் சிதைவுக்கு ஆளாக்கியிருக்கிறது.

“எனக்கு பள்ளிக்குச் செல்ல ஆசையாய் இருக்கிறது. நன்றாக படிக்கவில்லை என்றால் வேலை கிடைக்காது. காசு கிடைக்காது. எல்லாவற்றுக்கும் அம்மாவிடம் வந்து நிற்க வேண்டும். அப்புறம்… வாடகை பாக்கி ஏற்படும். வீட்டை விட்டு விரட்டியடித்து விடுவார்கள். வீடும் இல்லாமல் சாப்பாடும் இல்லாமல் ஆகி விடும்” கெய்லியின் ஏக்கம் மனதைப் பிசைகிறது.

இது தான் முதலாளித்துவத்தின் கருவறைக்குள் நிலவும் எதார்த்தம். பார்பராவின் குடும்பத்தைப் போன்றே சுமார் 4.7 கோடி  அமெரிக்கர்கள் உணவுக் கூப்பன்களை நம்பி வாழ்கிறார்கள். இதில் குழந்தைகள் மாத்திரம் சுமார் 1.7 கோடி. குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு காணப்படுவது அமெரிக்காவில் தற்போது அதிகரித்து வருகிறது. பொருளாதாரப் பெருமந்தத்தை அடுத்து வேலைகளை இழந்தவர்களுக்கு வேறு வேலைகள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அப்படிக் கிடைக்கும் வேலைகளுக்கும் ஊதியம் குறைவானதாகவே இருக்கிறது.

‘அமெரிக்கா என்பது ஒரு நாடல்ல – அது முதலாளித்துவத்தின் வெற்றிக் கதை’ என்று குதூகலித்தனர்; ‘சோசலிசம் தோல்வியுற்றது, முதலளித்துவமே இறுதியாக வென்றது; இது தான் வரலாற்றின் எல்லை’ என்று கொக்கரித்தனர்; ‘இதுவே இனி நிரந்தரம்’ என்பதாக எழுதிக் குவித்தனர் முதலாளித்துவ அறிஞர்கள். அந்த எழுத்தின் ஈரம் காய்வதற்குள் முதலாளித்துவத்தின் உண்மை முகம் அம்பலமாகி விட்டது. சோசலிசம் என்றாலே க்யூ வரிசை தான் என்று கேலி பேசியவர்கள் சொந்த மக்களுக்குச் சோறு போட வக்கற்று கஞ்சித் தொட்டிகளின் முன் வரிசை கட்டி நிற்க வைத்துள்ளனர். ஆனால், இந்த வரிசையில் நிற்பவர்கள் கையில் ஏதுமற்று வெறுங்கையோடும் பசியோடும் திரும்பிச் செல்கின்றனர்.

வரலாறு வஞ்சம் தீர்க்கக் காத்திருக்கிறது… முதலாளித்துவமோ சாக்குழியின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டுள்ளது!

(பி.பி.சி கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது)