Friday, August 12, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா ஈழம் : தேவை முற்றிலும் புதியதொரு கொள்கை - நடைமுறை!

ஈழம் : தேவை முற்றிலும் புதியதொரு கொள்கை – நடைமுறை!

-

ழப்போரின் இறுதிக் கட்டத்தில் (2009-ஆம் ஆண்டு மே மாதம்) இலங்கையின் இனவெறி பாசிச, பயங்கரவாத அரசும் இராணுவமும் நடத்திய ஈழத் தமிழின அழிப்புப் படுகொலைகள் மிகக் கொடூரமாகவும் வக்கிரமாகவும், மனிதத் தன்மைகள் சிறிதுமற்றதாக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள்தாம் என்பதை நிரூபிக்கும் ஏராளமான ஆதாரங்கள் ஏற்கெனவே தொடர்ந்து வெளிவந்துள்ளன.

இந்த போர்க் குற்றங்களை நடத்திய இலங்கை அரச பயங்கரவாதிகள் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை, கடும் தண்டனை என்பதற்கு பதிலாக “மனித உரிமை மீறல்கள்” என்ற நீர்த்துப்போன பெயர் சூட்டி குற்றவாளிகளே விசாரித்து, நிவாரணம் தேடிக் கொள்ளச் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பு நிறைவேற்றி ஓராண்டாகப் போகிறது. அதன் மீதான பரிசீலனை இம்மாதம் அவ்வமைப்பில் வரவிருக்கும் சூழலில் சேனல்-4 என்ற ஆங்கிலத் தொலைக்காட்சி “நிகழாத அமைதி மண்டலம் – இலங்கையின் படுகொலைக் களம்” என்ற ஆவணப் படத்தை அவ்வமைப்பின் ஜெனிவா மாநாட்டில் முன்வைக்கப் போகிறது.

அந்த ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு படங்கள் இப்போது வெளியாகியுள்ளன. அவை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது இளைய மகன் பாலச்சந்திரன், தனது ஐந்து மெய்க் காப்பாளர்களோடு இலங்கையின் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, பல மணி நேரம் இராணுவ முகாமில் காவலில் வைத்திருந்து, கொடூரமாகவும் வக்கிரமாகவும் கொல்லப்பட்டான் என்பதை சேனல்-4 தெலைக்காட்சி நிரூபிக்கும் காட்சிப் படங்கள். “பிரபாகரனின் மகன் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் ஊடே சிக்கிக் குண்டு பாய்ந்து இறந்து போனான்” என்று இலங்கை அரசு சொல்லிவருவது அப்பட்டமான பொய்தான் என்பதை அப்படங்கள் நிரூபிப்பதாக உள்ளன. இலங்கை இராணுவத்தின் வன்கொடுமைப் பிரிவான 53-வது பட்டாளத்திடம் பாலச்சந்திரனும் அவனது ஐந்து மெய்க்காப்பாளர்களும் சரணடைந்தனர். அதிபர் ராஜபக்சேவின் தம்பியும் இராணுவச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே உத்திரவிட்டதன் பேரில் சரணடைந்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அப்படங்கள், சிங்கள இனவெறிப் பாசிச -அரச பயங்கரவாதப் போர்க் குற்றவாளிகள் மற்றும் இந்திய ஆட்சியாளர்கள் போன்ற அவர்களின் சர்வதேசப் பங்காளிகள் தவிர உலக மக்கள் அனைவரின் நெஞ்சங்களையும் பதைபதைக்கச் செய்துவிட்டன. ஆனால், இனஅழிப்புக் குற்றவாளிகள் மற்றும் அவர்களின் பங்காளிகளுக்கு இவை ஒன்றும் புதிதானவை அல்ல. இனஅழிப்புப் போரில் தாம் புரிந்த குற்றங்களை எல்லாம் வெளியில் அடியோடு மறுத்து வந்தாலும், அந்தக் குற்றங்களைத் தமது வீரதீரச் சாதனைகளாக – வெற்றிப் பதக்கங்களாகப் பதிவு செய்து வைத்துக் கொண்டுள்ளார்கள்.

பாலச்சந்திரன்
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, இராணுவக் காவலில் வைக்கப்பட்டு, அதன் பிறகே சுட்டுக்கொல்லப்பட்டான் என்பதை நிரூபிக்கும் சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள படங்கள்.

ஆகவே, ராஜபக்சேக்கள் தலைமையிலான சிங்கள இனவெறி பாசிச, பயங்கரவாதிகளின் போர்க்குற்றச் சாதனை ஆவணங்களின் பட்டியலில் உள்ளவைதாம் தவணை முறையில் அவ்வப்போது வெளிவருகின்றன. அப்போர்க் குற்றங்களின் உண்மை விவரங்கள் முழுமையும் இப்போது அவர்களுக்கு மட்டுமே தெரிந்தவை அல்ல. ராஜபக்சேக்களே கூறியதைப் போல, இந்தியாவுக்காக அவர்கள் நடத்திய ஈழப் போரின் குற்றங்கள் இந்தியாவின் “ரா” உளவுப் படை மற்றும் இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் நடந்தவைதாம். இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான சிவசங்கரமேனன், எம்.கே. நாராயணன் போன்ற அதிகாரிகள் வழிகாட்டி நடந்தவைதாம். அமெரிக்க உளவுப்படை சி.ஐ.ஏ. மற்றும் ஐ.நா. பேரவை அதிகாரிகள் கண்முன்பாக நடந்தவைதாம்.

அமெரிக்க ஏகாதிபத்திய வல்லரசானது, உலகமெங்கும் எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் ஒரே வகையான செயல்தந்திரங்களை மேற்கொள்வதில்லை. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிய நகரங்கள் மீது அணுகுண்டுகள் வீசி பேரழிவு நடத்தியது, தற்போது ஆஃப்கான், ஈராக் மீது பகிரங்கமான ஆக்கிரமிப்புப் பேரழிவுப் போரை நடத்தியது; – இவை ஒருவகை. உலகின் பல ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் சி.ஐ.ஏ. உளவுப் படைகளை – கூலிப் படைகளை ஏவி ஆட்சியாளர்களைப் படுகொலை செய்து ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்தியது; தெற்கு வியத்நாம், காங்கோ, சிலியில் அரங்கேற்றிய -இவை மற்றொரு வகை. மேலும் ஒரு வகைதான், விடுதலை இயக்கங்களுக்குள் ஊடுருவி, சதிவேலைகள் புரிந்து, தனது முகமையாளர்கள் மூலம் இயக்கங்களைச் சீர்குலைத்து அவற்றின் இலட்சியங்களைச் சீரழிப்பது; இதற்கு மிக அண்மைக்கால எடுத்துக் காட்டு அரபு நாடுகளில் வெடித்த அரபு மக்கள் எழுச்சிகளுக்குள் புகுந்து, உள்ளிருந்து அவற்றை வீழ்த்தியது. நார்வே நாட்டு எரிக்சோல்ஹைம், ஐக்கிய நாடுகள் அவையின் விஜய் நம்பியார் போன்ற தனது கைக்கூலிகள் மூலம் போர் நிறுத்தம், சமாதான முன்னெடுப்பு என்ற பெயரில் இலங்கை – ஈழப்போரில் நுழைந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், அதன் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைமையிடம் போர் நிறுத்தம், மீட்புக் கப்பல் வருகை, சரணடைவு ஏற்பாடு ஆகிய சதித் திட்டங்களை முன்வைத்து நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டது. இந்த வகையில் ஈழத்தில் நடந்தேறிய போர்க் குற்றங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிந்தே நடந்தேறின.

அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தின் கீழ் உள்ள இன்றைய உலகின் வெனிசுலா, கியூபா, வடகொரியா, ஈரான் போன்ற பகை முரண்பாடு கொண்ட நாடுகளைத் தவிர, அமெரிக்க சி.ஐ.ஏ. உட்பட உளவுப் படைகள் எளிதில் நுழைந்து இராணுவ, அரசியல் இரகசியங்களை அறிய முடியாத நாடுகள் எதுவும் கிடையாது.

இலங்கை அரசின் வேண்டுகோளை அமெரிக்கா ஏற்று, விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்து தனது நாட்டில் வேட்டையாடியது. ஆகவே, சர்வதேச கிரிமினல்களான ராஜபக்சேக்கள் ஈழத்தில் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் எதுவும் அமெரிக்கா அறியாதவை அல்ல. அமெரிக்கா விரும்பினால் போஸ்னியா, ஆஃப்கான், ஈராக்கில் செய்ததைப் போல இப்போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி இலங்கையின் மீது நேரடித் தண்டனை நடவடிக்கையாக அதிரடி இராணுவத் தாக்குதல்கள் நடத்த முடியும். ஆனால், அமெரிக்கா அவ்வாறு செய்யாமல் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை ராஜபக்சேக்களே விசாரிக்கலாம், தக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று மென்மையாக அணுகுகிறது. ஏனென்றால் இலங்கை அதன் பகை சக்தி அல்ல; நட்பு நாடுதான்.

அமெரிக்காவும் அதன் எடுபிடி நாடுகளும் சொல்லிக் கொள்வதைப் போல “உலகில் எங்குமே பயங்கரவாதக் குற்றச் செயல்களும் அரச பயங்கரவாதப் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் நடக்கவே கூடாது. எங்கும் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும்” என்பது அவற்றின் உண்மையான நோக்கமல்ல. அமெரிக்காவே உலகின் பல நாடுகளிலும் உள்ள பாசிச பயங்கரவாத, முடியரசு சர்வாதிகார இராணுவக் கொடுங்கோன்மை அரசுகளை மட்டுமல்ல, பல பயங்கரவாத கிரிமினல் குற்றக் கும்பல்களையும் ஊட்டி வளர்க்கிறது. தானே உலகின் பல இடங்களில் ஆள்கடத்தல்கள், வதை முகாம்கள், படுகொலைகள், ஆளில்லா விமானங்களை ஏவி கொத்துக் குண்டுகளை, நச்சுக் குண்டுகளை வீசி சிவிலியன் மக்களைப் படுகொலைகள் புரிவது ஆகிய இராணுவ – அரச பயங்கரவாதக் குற்றச் செயல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

ராஜபக்சே பீகாரில்
சிங்களப் பேரினவாத இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலப்பட்டு வரும் வேளையிலும், பீகார் மாநிலத்திற்கு வந்த ராஜபக்சே கும்பலுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவ்வாறான ஒரு நாடு இலங்கையின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களை விசாரித்து நடவடிக்கை எடுத்திடக் கோரும் ஒரு தீர்மானத்தை சர்வதேச மனித உரிமை அரங்கில் முன்மொழிந்து, அதன் எடுபிடி நாடுகள் ஆதரிக்கின்றன என்றால், இவை அனைத்தும் சர்வதேச பூகோள – அரசியல் மற்றும் இராணுவ உள்நோக்கங்களுக்காக நடத்தப்படும் வெறும் அரசு தந்திர மாறாட்டங்கள் தவிர வேறொன்றும் அல்ல. உலகின் கிழக்கு நாடுகளையும் மேற்கு நாடுகளையும் இணைக்கும் பெருங்கடல் வழித்தடத்தில், சர்வதேச இராணுவ, பொருளாதார, போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடத்தில் உள்ள இலங்கையை அமெரிக்கா தனது முழுமையான மேலாதிக்கத்தின் கீழ் இருத்திக் கொள்வதற்கான நோக்கங்களை உள்ளடக்கியதுதான். மற்றபடி போர்க் குற்றங்களுக்காகவும் மனித உரிமை மீறல்களுக்காகவும் நடுநிலை விசாரணை நடத்தி இலங்கை அரசு மீதும் ராஜபக்சேக்கள் மீதும் தண்டனை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அமெரிக்காவின் நோக்கமே கிடையாது.

எனவேதான், இலங்கை அரசு மீதான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசே விசாரித்து தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற வரம்புகளைத் தாண்டாத ஒரு தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்து, ஐ.நா. அவையின் மனித உரிமைகள் அமைப்பின் கடந்த ஆண்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அது போதாதென்று, “இலங்கை அரசின் இறையாண்மையைப் பாதிக்கக் கூடாது” என்று இலங்கை அரசுக்குத் துணை போகும் வகையிலான இந்தியா கொண்டு வந்த திருத்தமும் மறுக்காமல் ஏற்கப்பட்டது. கடந்த ஆண்டுத் தீர்மானத்தை ஒரு அணுஅளவு கூட நிறைவேற்றவில்லை. ஆனாலும், இலங்கை அரசுக்கு எதிரானதென்று கூறப்படும் இந்த ஆண்டுத் தீர்மானமோ, இந்தியத் திருத்தத்தோடு மேலும் நீர்த்துப் போவதற்காகவே அமெரிக்காவால் முன்வைக்கப்படுகிறது.

இவ்வாறான அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்; ஈழ மக்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – என்பவைதாம் கருணாநிதி, வீரமணி, திருமா தலைமையிலான “டெசோ” அமைப்பின் கோரிக்கை. இக்கோரிக்கைகளோடு, இலங்கை ராஜபக்சே கும்பலின் போர்க் குற்றங்கள் மீது நடுநிலையான சர்வதேச விசாரணை, சர்வதேச நீதி மன்றத்தால் தண்டிக்கப் படவேண்டும் என்று மற்ற பிற தமிழினவாத அமைப்புகள் கோருகின்றன.

ஈழத் தமிழினப் பிரச்சினையில் எவ்வளவோ பின்னடைவுகள் – இழப்புகளுக்குப் பிறகும் சரியான பாடங்கள் கற்றுக் கொள்ளப்படவில்லை. மீண்டும் துரோகங்கள், அதே தவறுகள் அரங்கேற்றப்படுகின்றன. முதலாவதாக நட்பு சக்திகளையும், எதிரி சக்திகளையும் வரையறுத்துக் கொள்வதில், அதற்கேற்ப இயக்கங்களை வழிநடத்துவதில் மீண்டும் தவறிழைக்கப்படுகிறது.

இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் என்ன நேர்ந்தாலும் இலங்கையின் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராகவும், ஈழத் தமிழினத்துக்கு ஆதரவாகவும் நிலையெடுக்கவே மாட்டா. அதில்தான் இந்தியாவின் அரசியல், பொருளாதார, அரசுதந்திர, பிராந்திய விரிவாக்க ஆதிக்க நலன்கள் தங்கியிருக்கின்றன. இலங்கையில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆதிக்கம் பெறுவதைக் காட்டி இந்தியா ஈழத்தை ஆதரிக்க வேண்டுமென்றோ, ஈழம் இந்திய நலன்களுக்கு எதிராகப் போகாது; எப்போதும் துணைநிற்கும் என்று வாக்குறுதியளித்தோ இன்னும் பலவாறான “தாஜா”க்கள் செய்தோ இந்தியாவின் ஆதரவைப் பெறமுடியாது. பிரபாகரன் காலத்திலேயே அதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தோற்றுப்போய்விட்டன. அமெரிக்காவும் இந்தியாவைப் போன்ற தன்மை உடைய நாடுதான்; அதைவிட மேலாக உலக மேலாதிக்கத்துக்காக வெறிபிடித்து அலையும் நாடுதான்.

இலங்கையின் சிங்கள இனவெறி அரசின் போர்க் குற்றங்களை விசாரித்துத் தண்டிப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் துணை நிற்குமென்பது, பொய்த் தோற்றத்தை உருவாக்கி உலகத் தமிழர்களை ஏமாற்றுவதுதான். ஈழ ஆதரவு நாடகமாடும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா தலைமையிலான இரண்டு திராவிடக் கட்சிகளும் நன்கு தெரிந்தே இத்தகைய ஏமாற்று வேலையைச் செய்கின்றன. ஏனெனில், இந்திய அரசின் சதிகளை அறிந்திருந்தும் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு வெறும் பார்வையாளர்களாகவே இருந்து அதற்குத் துரோகத்தனமாகத் துணைபோனவைதாம், இக்கட்சிகள். ஓட்டுக் கட்சி அரசியல் ஆதாயத்துக்காக அவ்வப்போது ஈழ ஆதரவு சவடால்கள் அடித்தாலும், இவை தமது பிழைப்புவாத அரசியல் நலன்களுக்கு மாறாக ஒருபோதும் ஈழ ஆதரவு நிலையெடுக்கமாட்டா.

இன்றைய நிலையில் ஈழப் பிரச்சினையில் அக்கறையுள்ள தமிழர் அமைப்புகள் என்ன நிலை எடுத்துள்ளன? அவை என்ன செய்கின்றன? அவை சரியானவைதானா? விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் விமர்சனமற்ற விசுவாசம் காட்டும், பிரபாகரனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட, தவறே செய்யாத, தன்னிகரற்ற பிம்பமாக வழிபடும் தமிழினவாதக் குழுக்கள் மேற்கண்ட கேள்விகளை எழுப்புகிறவர்கள் மீது பாய்ந்து குதறுவதற்குத் தயாராக உள்ளன. விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைவர் பிரபாகரன் மீதும் விமர்சனம் வைத்தவர்கள், பிரபாகரன் தலைமையை ஏற்காதவர்கள் எல்லோரும் ஈழத் தமிழினத்துக்கே எதிரானவர்கள்; எதிரியின் கைக்கூலிகள்; அப்படிப்பட்ட ஈழத் தலைவர்களைக் கொன்றதுகூடத் தவறல்ல; அப்படிப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் சொல்வதையும் செய்வதையும் ஏற்கக்கூடாது என்பதுதான் அத்தமிழினவாதக் குழுக்களின் நிலைப்பாடு.

இந்திரா, எம்.ஜி.ஆர், “ரா” போன்ற எதிரிகளுக்குத் துணைபோன அதேசமயம், ஈழ விடுதலைக்கான சகோதர இயக்கத்தினரை புலிகள் அழித்தொழித்தனர். தப்பிக்கவே வழியில்லாத ஓரிரு சதுரக் கிலோமீட்டர் அளவுள்ள புவிப் பரப்பில், ஈழத்தின் எதிரிகள் (இந்தியா, அமெரிக்கா) வந்து காப்பார்கள் என நம்பி இலட்சக்கணக்கான தமிழர்களைக் குவித்தனர். இவ்வாறு ஈழ விடுதலைப் போரைத் தலைமையேற்று வழிநடத்துவதில், நண்பர்களையும் எதிரிகளையும், ஈழப் போரின் அரசியல் நிலைமைகளையும் மதிப்பீடு செய்து அணுகுவதில் தொடங்கி ஏராளமான அரசியல், இராணுவப் பிழைகள் செய்த பிரபாகரன் மீதுதான் உலகமகா அரசியல், இராணுவத் தலைவர் என்ற கருத்துருவாக்கமும் தனி நபர் வழிபாடும் உருவாக்கப்பட்டது.

இதில் தமிழகத் தமிழினவாதக் குழுக்களின் பங்கு கொஞ்சமல்ல. இதோ பலாலியில் புலிக் கொடியேற்றி விட்டார்கள்; நாளையே சுதந்திரத் ஈழம் பிறப்பிக்கப்படும் என்றார்கள்; முள்ளிவாய்க்காலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு கூட புலிகள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்கள்; மூன்று வாரங்களுக்கு முன்புகூட புலிகள் முல்லைத்தீவில் முடங்குவதற்குக் காரணம் பிரபாகரன் ஏதோ இரகசியத் திட்டங்கள் வைத்திருக்கிறார் என்றார்கள்.

இப்போதும்கூட, பிரபாகரன் அரசியல் – இராணுவத் தவறே செய்யவில்லை; 20 நாடுகள் கூட்டுச் சேர்ந்து இனப்படுகொலையை நடத்தினர் என்று கூறி, ஈழப்போரின் பேரிழப்பு, பின்னடைவுக்கான காரணங்களைத் திரும்பிப் பார்ப்பதற்கு மறுக்கிறார்கள். அவ்வாறு செய்தால் விடுதலைப் புலிகள், பிரபாகரன் மீது தாம் உருவாக்கிய பிம்பங்கள் கலைந்து போகும்; அதில் தமது பங்கிற்குப் பொறுப்பேற்க வேண்டிவரும். அதனால்தான் பிரபாகரன் கொல்லப்பட்ட உண்மையைக்கூட ஒப்புக்கொள்ளும் துணிவற்றவர்களாயுள்ளனர். மேலும் பிரபாகரன் நடந்த அதே பிழையான அரசியல் பாதையில் போகின்றனர்.

இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரித்துத் தண்டிப்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் துணை நிற்குமென்ற நம்பிக்கையை,பொய்த் தோற்றத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் இப்போதும் இந்த “தமிழினத் தலைவர்”களும், “தமிழினவாதக் குழு”க்களும் “தமிழினப் போராளி”களும் ஏற்படுத்துகின்றனர். ஈழத்தில் நடந்த போர்க் குற்றங்களில் இந்தியாவும் கூட்டுப் பங்காளிதான் என்று முள்ளிவாய்க்காலுக்குப் பிறகாவது கண்டுபிடித்த சிலர், தமிழக அரசியல் கட்சிகளும் சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டு அழுத்தம் கொடுத்தால் இந்தியா, அமெரிக்கா மற்றும் உலக நாடுகளது நிர்ப்பந்தத்தின் மூலமாக சர்வதேச விசாரணை நடத்தி ராஜபக்சேக்களை வீழ்த்த முடியும்; ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி, ஈழம் தன்னாட்சியும் பெறவும் முடியும் என்று நம்பச் சொல்லுகிறார்கள்.

ஆனால், இவை எல்லாமும் இனவாத அடிப்படையிலான இலட்சியமும், தீர்வும், ஓட்டுக் கட்சி பாணியிலான அரசியல், நடைமுறை சிந்தனையும்தாம். இன்றைய ஈழம், இலங்கை, மற்றும் அனைத்து நாட்டு அரசியல் நிலைமைகளை அடிப்படையாகக்கொண்டவையல்ல. இன்றைய ஈழப் பிரச்சினையின் யதார்த்த நிலையில் உடனடியான, தற்காலிகத் தீர்வு எதுவும் கிடையாது. எல்லாவற்றையும் அரிச்சுவடியிலிருந்து தொடங்கி அமைப்பையும் இயக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இனவாத நோக்கில் உலகின் பிற்போக்கு, பாசிச அரசுகளின் தயவை நம்புவதற்கு மாறாக, சிறியவையானாலும் ராஜபக்சேக்களின் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகள் உட்பட உலகின் முற்போக்கு, புரட்சிகர சக்திகளின் வர்க்க ஒற்றுமையைக் கட்டிப் போராடுவதுதான் நீண்டகாலம் பிடித்தாலும், சிரமமானது என்றாலும் அவசியமானது, உறுதியானது, சரியானது.
____________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________

 1. நல்ல கட்டுரை.. ஆனால் கட்டுரை முழுக்கத் தேடித் பார்த்தாலும் இந்த இன ஒழிப்புப் போரில் சீனாவின் பங்கு, அதன் வல்லாதிக்க முனைப்பு, கியுபா, வெனிசுலா போன்ற நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு அளித்த ஆதரவு இவை பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை. வினவின் நடு நிலை வாழ்க.

  • //அப்படங்கள், சிங்கள இனவெறிப் பாசிச -அரச பயங்கரவாதப் போர்க் குற்றவாளிகள் மற்றும் இந்திய ஆட்சியாளர்கள் போன்ற அவர்களின் சர்வதேசப் பங்காளிகள் தவிர உலக மக்கள் அனைவரின் நெஞ்சங்களையும் பதைபதைக்கச் செய்துவிட்டன.//

   சர்வதேசப் பங்காளிகளீல் சீனாவையும் நினைத்துக் கொண்டு படியுங்களேன்.

 2. வினவு சொல்வது போல அந்த நோக்கத்தில் செயல்படும் அமைப்புகள் இயக்கங்கள் ஏதாவது தமிழ்நாட்டில் இருக்கின்றனவா?

  • அந்த நோக்கத்தோடு செயல்படுகின்ற அமைப்புகள் தமிழகத்தில் எதற்கு தேவை ? அவை ஈழத்தில் தான் தேவை. அத்தகைய அமைப்புகள் ஈழத்தில் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.

 3. humanness………நல்லா கேட்டீங்க……ஆனா பாருங்க……பதிலையே காணோம்……பதில் சொல்லமுடியாத கேள்விகளை ”வினவு ”னா எப்படி?

 4. சிறப்பான கட்டுரை.

  நேற்றே நான்கு பிரதிகள் எடுத்து நண்பர்களிடம் வழங்கியுள்ளேன்.இன்னும் பிரதிகள் எடுத்து வேறு நண்பர்களிடம் வழங்கயுள்ளேன்.

  //இன்றைய ஈழப் பிரச்சினையின் யதார்த்த நிலையில் உடனடியான, தற்காலிகத் தீர்வு எதுவும் கிடையாது.// இதை புரிந்து கொள்ள முடியவில்லை.கூடுதலான விளக்கம் நண்பர்களிடம் எதிர்பார்க்கிறேன்.

  கருத்தரங்கம் ஒன்றை நடத்த பரிசீலிக்க கேட்டுக்கொள்கிறேன்.

 5. இந்த கட்டுரையின் சில கருத்துக்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள இயலும். இந்த பிராந்தியத்தில் இலங்கையை பிரித்து புதிதாக ஒரு நாட்டை உருவாக்கினால் தங்களுக்கு நல்ல பலனளிக்கும் என வல்லாதிக்க அரசுகள் நினைத்திருந்தால் அல்லது அமெரிக்கா என்னும் ஒரு வல்லாதிக்க அரசு நினைத்திருந்தால் கூட தமிழீழம் உருவாகியிருக்கும் (அது பெரும்பான்மை தமிழர்களுக்கு பலனளிக்கும் ஒன்றாக இருந்திருக்குமா என்பது இன்னொரு விடயம்). வல்லாதிக்க அரசுகளுக்கு பிடிக்காமல் போன ஒரே காரணத்தால் உலகில் எத்தனையோ மக்கள் போராட்டங்கள் எப்படி எப்படியெல்லாமோ திசை திரும்பி எப்படி எப்படியெல்லாமோ சிதைந்து ஒழிந்து போயுள்ளன. ஈழ விடுதலைப்போராட்டம் அவற்றில் ஒன்று. ஆனால் வல்லாதிக்க அரசுகள் விரும்பிய காரணத்தால் இஸ்ரேல் போன்ற நாடுகளும் செயற்கையாக வலிந்து உருவாக்கப்பட்டு உள்ளன. ஆகையால் வெறும் மக்கள் போராட்டம் மட்டும் விடுதலையை பெற்று தந்துவிடாது. அந்த மக்கள் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்கிற தேவை ஒரு சில வல்லாதிக்க நாடுகளுக்காவது ஏற்பட வேண்டும். மேலும் பொதுவுடைமை பூத்துக்குலுங்கும் சீனா, கியூபா, வெனிசுவெலா ஆகிய நாடுகள் இந்த பிரச்சினையில் என்ன நிலையை எடுத்தன என்பதும் ஆராயப்பட வேண்டியது. இந்த நாடுகளை குறை கூற முடியாது. எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் தத்துவத்தை இவர்கள் பின்பற்றுகிறார்கள். தற்போதைய உலக அரசியல் மிகவும் சிக்கலான ஒன்று. வேலுப்பிள்ளை பிரபாகரன் சர்வதேச அரசியல் விவகாரங்களில் அடி முட்டாள். வைகோ மாதிரியான தமிழக அரசியல்வாதிகள் பிரபாகரனை விட அடி முட்டாள்கள். ஆ….ஊ என்றால் ”தமிழகத்தில் புரட்சி வெடிக்கும், இந்தியா சுக்கு நூறாகிவிடும், சிதறுண்டு போகும்” என்றெல்லாம் இந்த வைகோ பிதற்றி வருகிறான். தில்லியில் உட்கார்ந்து இருக்கும் அரசியல் ராஜதந்திரிகளும் அதிகாரவர்க்கத்தினரும் இவனை மாதிரி முட்டாள்களா இந்தியா சுக்கு நூறாக? இவன் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் நடைப்பயணங்கள் போனாலும் இவன் கட்சி உருப்படவே உருப்படாது!. தி.மு.க கட்சியும் டெசோ போன்ற ஏற்பாடுகளும் சுய அரசியல் லாபத்தை மட்டும் நோக்கமாக வைத்து மேற்கொள்ளப்படும் கயமைத்தனம். கருநாநிதியின் கயமைத்தனத்தால் ஈழ மக்கள் பலியானார்கள். ’டெசோ’வானது தமிழக மக்களை பலிகடாக்களாக ஆக்கும் ஒரு முயற்சி. ஈழத்தில் கடைசிக்கட்ட போரில் இத்தனை மக்கள் பலியானதற்கு இப்போது குடியரசு தலைவராக உட்கார்ந்திருக்கும் பிரணாப் முக்கர்ஜியின் பங்கும் ஒரு காரணம். கடைசி கட்டப்போரை எப்படி நடத்துவது என இந்தியாவின் சார்பில் திட்டமிட்டவர்கள் இந்த பிரணாப் முக்கர்ஜியும் கேரளத்தை பூர்வீகமாக கொண்ட அதிகாரிகளும் தான். சோனியா காந்திக்கும் அவர் மகனுக்கும் இதில் பங்கிருக்கும் என தோன்றவில்லை. பிரணாப் முக்கர்ஜியோடு தான் தி.மு.க தலைமைக்கு கூடிக்குலாவல் எல்லாம். தமிழக மக்களையும் சும்மா சொல்லக்கூடாது. பெரும்பாலான சாதாரண தமிழக மக்களுக்கு ராஜபக்ச யார் என்று கூட தெரியாது. தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். இப்போது போராட்டத்தில் குதித்திருக்கும் கல்லூரி மாணவர்களும் இதே மாதிரியான தற்குறிகள் தான். சீமான் மாதிரியான தமிழுணர்வு கோமாளிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இந்தியாவுக்கு வெளியேயும் மதிக்கப்படக்கூடிய தமிழக தலைவர்கள் யாரும் இல்லை. கருநாநிதி போன்றோரின் பெயரை கேட்டால் தில்லியில் காறித்துப்புவதாக கேள்வி (தில்லியில் மட்டுமா?). அப்புறம் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினரிடையே இவ்வளவு நடந்தும் ஒற்றுமை வரவில்லை. இது மிகப்பெரிய பலவீனம். தமிழ் நாடு இல்லாமல் இருந்திருந்தால் ஒரு வேளை தமிழீழப்போராட்டம் உருப்பட்டிருக்குமோ என்னமோ தெரியவில்லை.

  • //தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். இப்போது போராட்டத்தில் குதித்திருக்கும் கல்லூரி மாணவர்களும் இதே மாதிரியான தற்குறிகள் தான்.//

   எத்தனை கல்லூரிகளுக்கு போனீங்க எத்தனை மாணவர்களிடம் பேசினிங்க…

  • //தமிழ் நாடு இல்லாமல் இருந்திருந்தால் ஒரு வேளை தமிழீழப்போராட்டம் உருப்பட்டிருக்குமோ என்னமோ தெரியவில்லை.//

   உண்மை. உண்மை தமிழ்நாட்டு காரியவாத தமிழர்கள் தலையிடாமலிருந்தால் தமிழீழம் மலர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசம்.

  • சபாஷ் சலனன் அவர்களே …
   குலப்பமான சூழ்நிலை தான் மிச்சம் …
   முடிவு எடுக்க
   இந்திய அரசியல்வாதிகளால் மட்டுமே முடியும்…

   இது புலிகல் தோற்றதரகான போராட்டம் அல்ல …
   அமெரிக்கா திரி கோனமலையை பிடிக்கநடக்கும் போராட்டம்

   அமெரிக்கா வரும் பின்னே..
   குழப்பம் வரும் முன்னே…

  • // சோனியா காந்திக்கும் அவர் மகனுக்கும் இதில் பங்கிருக்கும் என தோன்றவில்லை.. //

   அதனால்தான் அவர்கள் சொக்கத் தங்கம், அந்த தங்கம் பெற்ற சிங்கம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்..

  • பிரபாகரனின் உலக அரசியல் அறிவைப்பற்றியும், வைகோவின் சவடால்களைப்பற்றியும், சீமான் போன்ற தமிழிணவாத கோமாளிகளைப் பற்றியும் மிகச்சரியாக கூறினீர்கள், ஆனால் மக்கள் போராட்டங்கள் வெற்றி பெற வேண்டுமானால் அது ஏகாதிபத்தியங்களின் தயவைப் பெற வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் ஏகாதிபத்தியங்களின் தயவில் உருவாகும் நாடு பெருபாண்மை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா இருக்காதா என்பது வேறு விசயம் என்று நீங்களே தான் மேலே கூறியுள்ளீர்கள்,அவ்வாறு அமைக்கப்படும் நாடு நிச்சயமாக சுதந்திரம் மிக்க நாடாக இருக்க முடியாது மாறாக அது ஏகாதிபத்தியங்களின் அடிமை நாடாகத் தான் இருக்க முடியும்.

   இறுதியாக கூறியுள்ளது ஏற்கத்தக்கது தான் என்று கருதுகிறேன்.

 6. தனி ஈழம் கோருவது இருக்கட்டும், தனித் தமிழ்நாடு எப்போது கோரப்போகிறீர்கள்?

 7. சாதாரண தமிழக மக்கள் மிகப்பலருக்கு ராஜபக்ச யார் என்று கூட தெரியாது. தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. இப்போது போராட்டத்தில் குதித்திருக்கும் கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். (ஏதோ ஆர்வக்கோளாறில் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள்) இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்கி பிரச்சாரம் செய்யவேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். மற்ற மாணவர்களுக்கும் தெரியப்படுத்தலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடும் மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. சட்டக்கல்லூரி மாணவர்களை பற்றி பொது மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. எப்போதும் கல்லூரிக்குள் ரகளை செய்பவர்கள், சாதி மோதலில் ஈடுபடுபவர்கள் என்னும் எண்ணம் உள்ளது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது. இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. ஆனால் அது இறையாண்மை கொண்ட தனி நாடு. அதனால் தான் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டை உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே உலகம் கவனிக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இதை கவனிப்பார்களா என தெரியவில்லை.

  • நல்ல கருத்துக்கள் ஆனால் நாம் எதிர்பார்ப்பது எல்லாம் உடனடி தீர்வு, எனவே இந்த கருத்தில் ஒத்துப்போகும் இயக்கங்கள் இதனை முன்னெடுக்க வேண்டும்.

 8. அம்மா நினைத்திருந்தால் அப்பொதே ஒபாமாவிற்கு கட்டளையிட்டு, தமிழர்களை காப்பாற்றியிருப்பார், என்று இன்னமும்நம்பும் தமிழன்! எந்த தவறு, எஙகு நடந்தாலும் அதற்கு கருணானிதியே காரணம் என்றவர், காவேரி ஆணையம் அமைத்தது த்மிழகத்திற்கு உதவாது என்றவர், இன்று வெற்று அறிவிக்கைக்கு, தானே மாலை போட்டுக்கொள்கிரார்கள்! கருணானிதி மேல் காழ்ப்புணர்ச்சி யினால் நல்ல பல திட்டங்களை முடக்குகிறார்கள்! இவர்களை இனம் காணாத, பாமரத்தமிழன் பார்ப்பன வலையில் சிக்கி, ஏன்றும் பார்ப்பன தாசனாகவே இருக்க விதி போலும்! எதிர்ப்பு சக்திகளை ஒருவருக்கு ஒருவர் எதிராக திருப்பி விடுவதே, அவாளின் அர்த்த சாச்த்ர அரசியல்! இலங்கையிலும் அஃதே! பிரபாகரனும், இந்திய பார்ப்பன ராஜ தந்திரிகளை குறைத்து மதிப்பிட்டு விட்டார்! இந்தக்கும்பலின் வலையில் விழுந்து, சக தமிழ் போராளிகளை அழித்தார்! கடைசியில் தன்வினை தன்னையே சுட்டுவிட்டது! ஆண்டன் பால்சிஙகத்திற்கு பிற்கு, அறிவுறுத்த யாரையும் கொண்டிருக்கவில்லை!

  • ஆண்டன் பாலசிங்கத்திற்குப் பிறகு பிரபாகரன் உங்களைக் கூப்பிட்டு அறிவுரை கேட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா..

 9. //தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே உலகம் கவனிக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இதை கவனிப்பார்களா என தெரியவில்லை.// நண்பர் சலனன் கருத்து சரியானதே! ஆனால் தலையேற்க யாருக்கு தகுதியிருக்கிறது? யாருக்கு இந்திய ஆதிக்க சக்திகளை எதிர் கொள்ள துணிவு உள்ளது? இதனால் தானே தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்க சக்திகள் மீண்டும் தலையெடுக்கின்றன?

  • // ஆனால் தலையேற்க யாருக்கு தகுதியிருக்கிறது? //

   நீங்களே இப்படி குஷ்புவை மறந்துவிட்டு பேசினால், பின் தமிழர்களின் கதி என்னவாகும்…

 10. தமிழ்நாட்டின் இயக்கஙள் …

  இவர்களை கொன்டு அதிகபட்ஷம் என்ன செய்யலாம்…?

  கன்டிக்கிரேன்…
  வன்மையா கன்டிக்கிரேன்..
  கடும் கன்டனம் தெரிவிக்கிரேன்…

  இதிக்கூட சரியானநேரத்தில் செய்ய முடியாது…

 11. உலகத்துல யூதர்னு ஒரு குருப்பு இருந்தாங்க…
  அவனுவ எல்லம் பிலான் போட்டு ….

  ஒரு நாட்ட உ ருவாகினனுக…
  அதுக்கு முன்னாடி தன்நாடு உருவாக…
  உலகத்தை எப்படி சிந்திக்க வைக்கனும்னு பிலான் போட்டானுக…

  ஒரு பிலான் போட்டா நாசமா போய்டுமேன்னு…

  இரன்டா பிலான் போட்டானுக…

  அதுல ஒரு பிலான்தான் ஜனனாயகம்…

  இன்னொரு பிலான் சோசியலிசம்…

  இதுகளை உருவாக்கிய மார்க்ச் ஒரு யூதர்…

  இவனுக போட்ட முடிச்சு…

  50 வருசம் கலித்துதான்…
  அவிழும்..

  இலன்கை போரை ஆரம்பிச்சதே..இச்ரேல்தான்…

  Reference: ostrovsky book “by the way of deception “..
  he said we do several false flag murders in both sides in srilanka..
  …..both sides crouch on each others…

 12. அது எப்படி சிஙள இடது சாரிகளின் ஆதரவோடு சாத்தியமாகும் ? கொஞசம் வரலாட்றை படித்துப் பாருஙகள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க