Friday, August 19, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா சிரிப்பாய் சிரிக்கிது அமெரிக்க தகவல் சுதந்திரம்!

சிரிப்பாய் சிரிக்கிது அமெரிக்க தகவல் சுதந்திரம்!

-

‘அமெரிக்காவில் அரசு நிர்வாகத்தின் தகவல்களை மக்கள் தெரிந்து கொள்வதற்கான Freedom of information act- தகவல்கள் அறியும் உரிமை சட்டம் மக்களுக்கு தகவல்களை தராமல் எப்படி அலைக்கழிக்க உதவுகிறது’ என்று அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

முதலில் அசோசியேட்டட் ப்ரெஸ் என்ன சொல்கிறது என பார்ப்போம்,

அமெரிக்காவில் அரசு நிர்வாகம், கணக்கு தொடர்பான தகவல்களை பெற முழு உரிமை இருக்கிறது. ஒரு விண்ணப்பம் அளித்தால் போதும். இது நம் ஊரில் உள்ள தகவல் பெறும் உரிமை சட்டம் போன்றது.

‘அமெரிக்க அரசின் 33 துறைகளில் இந்த தகவல் பெறும் உரிமை சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது’ என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து அசோசியட்டட் பிரஸ் அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2012-ம் ஆண்டு தகவல்கள் பெறுவதற்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களில் மூன்றில் ஒரு பங்கு “நாட்டின் பாதுகாப்பு”ஐ காரணம் காட்டி நிரகரிக்கப்பட்டுள்ளன. மூன்றில் இரண்டு பங்கு விண்ணப்பங்களுக்கு, கொடுக்கப்பட்ட விவரங்கள் முழுமையாக இல்லாமல் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒபாமா பதவியேற்ற பின் தான் பல விண்ணப்பங்கள் “நாட்டின் பாதுகாப்பு” எனக் கூறி நிரகரிக்கப்பட்டுள்ளன, ஜார்ஜ் புஷ் காலத்தில் நிராகரிக்கப்பட்டதை விட இது அதிகம். 2011-ல் 75 சதவீத விண்ணப்பங்கள் வரை தகவல்கள் தரப்பட்டன. ஆனால் 2012-ல் அது 57 சதவீதமாக குறைந்து விட்டது.

அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. பற்றிய தகவல்கள் பெரும்பாலும் மறுக்கப்பட்டு விட்டன. தொலைபேசி ஒட்டுக்கேட்பு, இதர உளவு சம்பந்தப்பட்ட வேலைகள் நடக்கின்றனவா என்பதை அறிந்து கொள்ள கொடுக்கப்பட்ட சுமார் 2,390 விண்ணப்பங்கள் உடனே நிரகரிக்கப்பட்டன.

ஏதாவது வம்பு வரும் எனத் தெரிந்த விபரங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் “அரசு பாதுகாப்பு“ என்ற போர்வையில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கம்யூனிச நிர்வாகங்கள் சுவர் எழுப்பி ரகசியமாக ஆளுகின்றன, மக்களுக்கு நிர்வாகத்தில் பங்கில்லை என்ற பொய்யை பரப்பி கையோடு எங்கள் நிர்வாகம் முழுக்கவும் “ஒளிவு மறைவற்றது” எனக் கூறி அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சனால் 1966-ல் கொன்டு வரப்பட்ட சட்டம் தான் தகவல் அறியும் உரிமை சட்டம். ஆனால் ஆரம்பத்திலேயே அரசுக்கோ, நாட்டிற்கோ கேடு விளைவிக்குமானால், அதன் பாதுகாப்பு கருதி சில தகவல்கள் கொடுக்கப்படாது என்று ஒரு செக் வைக்கப்பட்டது.

அதன்பின் பல புதிய திருத்தங்கள் செய்யபட்டன, ஒவ்வொரு துறையாக, ஒவ்வொரு தகவலாக விலக்கு அளிக்கப்பட்டது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில், வால் வீதிகளில் மக்கள் நேரடியாகவே அமெரிக்காவின் ஆன்மாவான முதலாளித்துவத்தை தாக்கும் இந்த நேரத்தில், விக்கிலீக்ஸ் ஆவணங்கள் மூலம் உலகம் முழுவதும் அமெரிக்க அரசும் அதன் போர் வெறியும் அம்பலப்பட்டு நிற்கும் போது இன்னும் தகவல் பெறும் உரிமை  என்பதெல்லாம் தனக்கு சவக் குழி வெட்டும் என்பதை அரசு உணர்ந்துள்ளது.

‘பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் அமெரிக்கக் குடிமக்களாக இருந்தாலும் ஆளில்லா விமானங்களால் கொல்லப்படுவதை அரசு எப்படி நியாயப்படுத்துகிறது?’ என்பதைத் தெரிந்து கொள்ள அமெரிக்க மனித உரிமைகள் சங்கம் ஒரு விண்ணப்பத்தை கொடுத்தது.  அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு ‘எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை’ என அமெரிக்க அரசு அம்பலப்பட்டது.

ஆனால் இவர்கள் சர்வாதிகாரம் என்ற சொன்ன சோவியத் யூனியனின் நிர்வாகத்திலோ, ஒவ்வொரு சட்டமும் பரந்து பட்ட மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு, திருத்தங்கள் செய்யப்பட்டு நிறைவேற்றபட்டன என்பது வரலாறு. ஆனால், இந்த ‘ஜனநாயகவாதிகள்’ ஏன் தடுமாறுகிறார்கள்?

மக்கள் முதலாளித்துவத்திற்கு எதிராக பொங்கி விடுவார்களோ என அவர்களை கண்காணிக்க அவர்களின் மின்னஞ்சல் முதல் அவர்கள் செல்லும் பஸ்கள் வரை கண்காணிப்பையும் உளவுக் கருவிகளையும் பொருத்தும் ஒரு ஏமாற்றுக்கார அரசு தன் ஆட்சியை எல்லாம் வெளிப்படையாக நடத்த முடியாது.

ஈராக்கில் அமெரிக்க ராணுவம் என்ன செய்கிறது? எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது? வங்கிகளுக்கு அரசு கொடுத்த பணம் எவ்வளவு, தனியார் நிறுவனங்களின் லாபி பட்ஜெட் எவ்வளவு போன்ற தகவல்கள் வெளியானால் எல்லோருக்கும் மகிழ்ச்சி தான். ஆனால் அமெரிக்கா அவற்றை நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் வெளியிடாது.

வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்கத் தூதுவர்கள் உளவு வேலை பார்த்ததையும், அமெரிக்க ராணுவத்தின் அட்டுழியங்களையும் விக்கிலீக்ஸ் வெளிக்கொண்டு வரவில்லை என்றால் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அவை வெளிவந்திருக்குமா?

‘கம்யூனிச அரசுகள் சர்வாதிகாரம் கொண்டவை, ஜனநாயகமற்றவை. நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்று மக்களுக்கு தெரியாது. ஆனால் முதலாளித்துவ ஜனநாயகமோ ஒளிவு மறைவில்லாமல் அரசின் நிர்வாகத்தை மக்கள் முன் வைக்கிறது. இது தான் உண்மையான ஜனநாயகம்’ என்ற அவதூறும் பெருமிதமும் இப்பொழுது அம்பலப்பட்டு நிற்கின்றன.

பளபளக்கும், மணம் வீசும் தன் கோட்டு சூட்டின் உல்லே அழுகிப் போய் நாற்றமெடுக்கும் அதன் நிர்வாகத்தை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படுத்த அமெரிக்கா தயாரில்லை? இனியாவது அமெரிக்காவை இரும்புச் சுவர் ஆட்சி என்று ஒத்துக்கொள்வீர்களா?

மேலும் படிக்க:

Freedom of (some) information: US ‘national security’ hampers data access
Personal emails might fall under government inspection
Not Just Buses, Street Lights Are Also Recording Conversations

 1. //..பளபளக்கும், மணம் வீசும் தன் கோட்டு சூட்டின் உல்லே அழுகிப் போய் நாற்றமெடுக்கும்..//
  ” சூட்டின் உள்ளே”

  இனியாவது அமெரிக்காவை இரும்புச் சுவர் ஆட்சி என்று ஒத்துக்கொள்வீர்களா?

  ஆமா.. அதுக்கு இப்ப இன்னான்றே…

  • Yes their country their safety, their values, but issue in this article is they compare their self with old communist countries and tells as they are transparent.

   but in fact noting is transparent there. can you explain why there is gaps between their words and act ?

  • அவங்க நாடு அவங்க சேப்டி, எப்படி போன உங்களுக்கென்ன…

   சரி, உங்க சொந்த நாடு, நீங்க பொறந்த மண்ணு,
   அமெரிக்காவுக்கு அடிமையாக கெடக்குது, எல்லா நாட்டுகாரனும் உங்க நாட்டு வளத்தை அள்ளிட்டு போறானுங்களே, இதை தெரிஞ்ச நீங்க பொங்கி எழ போரீங்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க