Tuesday, April 22, 2025
முகப்புஉலகம்ஈழம்சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் போராட்டம்!

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் போராட்டம்!

-

சென்னை ஐஐடி மாணவர்கள் ஈழப்படுகொலையைக் கண்டித்து கடந்த ஞாயிறன்று (மார்ச் 17, 2013) ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம், விவாதம் மற்றும் பேரணி நடத்தினர். காலை 8 மணிக்கு ஆசிரியர்கள், முத்தமிழ் மன்றம், அலுவலர்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் ஆதரவோடு சுமார் 20 மாணவர்கள் ஆய்வு மாணவர் இராஜ்மோகன் தலைமையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை வரை நீடித்த போராட்டத்தில் இராஜபக்சே அரசு நடத்திய பச்சை படுகொலையை அம்பலப்படுத்தி சானல் 4 வெளியிட்ட ஆவணப்படம் திரையிடப்பட்டது.

ஐஐடி மாணவர் போராட்டத்தை வாழ்த்தி பேசிய புமாஇமு மாநிலத்தலைவர் தோழர். கணேசன், ஈழத்தமிழர் படுகொலையில் சிங்கள இனவெறியன் இராஜபக்சேவுக்கு இணையான குற்றவாளியான இந்திய அரசையும் அமெரிக்காவையும் அம்பலப்படுத்திப் பேசியது மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு விவாதத்தையும் கிளப்பியது. போராட்டத்தின் போது தமிழீழப் படுகொலையில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பங்கை அம்பலப்படுத்தியதோடு இப்பிரச்சனைக்காக போராடும் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, போலி கம்யூனிஸ்டுகள், திமுக, அதிமுக போன்றவற்றின் கருங்காலித்தனத்தை அம்பலப்படுத்தியும், இப்பிரச்சனைக்கான தீர்வை ஒரு மக்கள் போராட்டத்தின் மூலம் கட்டமைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. அப்போது போலி கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளரான ஒரு மாணவர் துண்டுப் பிரசுரம் வினியோகிப்பதைத் தடுக்க முயன்று முடியாததால் பின் வாங்கினார்.

பொதுவாக, இந்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி நாம் வினியோகித்த துண்டுப் பிரசுரம் ‘ரொம்ப தீவிரமாக இருக்கு. இது எம்எல் கட்சியோட முழக்கம் போல இருக்கு’ என்று ஒரு சில மாணவர்களால் பேசப்பட்டது. மாலையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட டாக்டர் எழிலன், பியுசில் சுரேஷ், தேவசகாயம் ஐஏஎஸ், டெக்கான் குரோனிக்கில் பத்திரிகையாளர் பகவான் சிங் போன்றோர் தமிழீழ இனப்படுகொலையில் இந்திய அரசின் பங்கை அம்பலப்படுத்தி பேசினர்.

  • ஈழத்தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி ஐநாவுக்கும் காவடிதூக்குவதை நிராகரிப்போம்!
  • நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்குக் குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!
  • தமிழகத்தில் மீண்டும் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்!
  • இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க, சிங்கள குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க, ஈழத் தமிழின மக்களின் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்ட – குறுக்கு வழித் தீர்வு ஏதுமில்லை. தமிழகத்தின் வீதிகளில் 80 களின் மக்கள் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்வோம்!

போன்ற முழக்கங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும், இந்தியிலும், தெலுங்கிலும், துளு உட்பட இன்னுபிற இந்திய மொழிகளிலும் கையிலேந்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 க்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும், அலுவலர்களும் மாலையில் கஜேந்திரா சர்கிளிலிருந்து கிளம்பி பேரணியாக மெயின் கேட் வரை சென்று திரும்பினர்.

தேசிய நிறுவனமான ஐஐடி யில் தமிழீழ இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த இப்போராட்டத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை தமிழக மாணவர்களோடு பிற மாநில மாணவர்களும் கலந்து கொண்டது இலங்கைப் பிரச்சனையை இனியும் தமிழர்களுடையது மட்டுமாக சுருக்கிப்பார்க்க முடியாது என்பதை நிறுவியது. ஐஐடி வரலாற்றில் ஒரு பொதுப் பிரச்சனைக்காக மாணவர்கள் ஒருங்கிணைந்து போராடுவது இதுவே முதல் முறை என்பதால் வளாகத்தை அரசியல் படுத்துவதன் முதற்படியாக இப்போராட்டம் அமைந்தது எனலாம்.

தகவல் : பு.மா.இ.மு.

  1. ஐநா சபையை நிராகரித்து விட்டீர்கள். சரி. நூரெம்பர்க் போன்ற ஓர் விசாரணையை யார் நடத்த வேண்டும் என்கிறீர்கள்? புரியவில்லை.

    • சில முட்டாள்கள் கருதுவதைப் போல ஐ.நா சபையை எல்லாம் நிராகரிக்கவில்லை ஐ.நா ஏகாதிபத்திய கைப்பாவையாக செயல்படுகிறது என்பதை தான் அம்பலப்படுத்துகிறோம்.

      • அறிவாளி அவர்களே, கீழே உள்ளதற்கு என்ன அர்த்தம்? (வெட்டி சொல் விளையாட்டில் இறங்க மாட்டீர்கள் என நம்புகிறேன்).
        // ஈழத்தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி ஐநாவுக்கும் காவடிதூக்குவதை நிராகரிப்போம். //

        இந்த முட்டாளை தவறாக புரிந்துகொள்ளாதீர்கள். ராஜபக்சே விசாரிக்கப் பட வேண்டும் (மேலும் அங்கே தமிழர்களிடம் தனி ஈழம் குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும்) என்பதே என் கருத்து. ஆனால், இந்தியா, அமேரிக்கா, ஐநா எல்லாரும் இலங்கையின் கூட்டாளி என நீங்கள் ஒதுக்கிய பின்பு, ராஜபக்ஷே விசாரணையை யார் நடத்த வேண்டும் என விரும்பிகிறீர்கள் என எனக்கு புரியவில்லை. விளக்கினால் நலம்.

      • வெங்கடேசன், நான் உங்களைக் கூறவில்லை முகநூலில் விவாதிக்கும் இரண்டு முட்டாள்களைக் கூறினேன்.

  2. வெங்கடேசன்,

    நூரெம்பர்க் விசாரனையைக் கோரும் நீங்கள், இன்றைய நிலையில் அது ஐ,நா சபை போன்ற ஒரு அமைப்பினரால் மட்டுமே சாத்தியப்படும் என்பதை எப்படி மறக்கிறீர்கள்? என்கிற உங்கள் வாதத்தை வேறு கோணத்திலிருந்து கொஞ்சம் ‘வளர்த்துப்’ பார்த்தால் கீழ் வரும் கேள்விக்கு கூட இந்த வகையில் பொருந்திப் போகும் என்று கருதுகிறேன்.

    “இந்தியாவில் ஒரு புதிய அரசை நிர்மாணிக்கப் போவதாக சொல்லும் நீங்கள் டாஸ்மாக்கை மூட அரசுக்கு கோரிக்கை வைத்து முழக்கம் எழுப்புகிறிர்கள்?”

    சரி, அப்ப ஏன் ஐ.நா கிட்டே காவடி தூக்க வேணாம்னு சொல்றீங்க? அது மட்டும் எப்படி சரியாகும்? இது உங்கள் கேள்வி.. சரிதானே?

    ஒரு பிரச்சினையில் முழுமையில் என்ன தீர்வாக சொல்லப்படுகிறது என்பதை வைத்துத் தான் அதன் பகுதியாக நடக்கும் நிகழ்வு ஒன்றில் வைக்கப்படும் முழக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அப்படியல்லாமல், இடையே பேசப்படும் அல்லது முன்வைக்கப்படும் ஒரு முழக்கத்தை அப்படியே உருவியெடுத்து கத்தரித்து வெட்டி ஒட்டி அதற்கு பொருள் விளக்கம் எழுதினால் இப்படித்தான் விளங்கும்.

    முதலில் ஈழப் பிரச்சினைக்கு ஐ.நா தான் இறுதித் தீர்வு என்பதையோ, அதற்காக ஐ.நாவை தலையிடக்கோரி அழுத்தக்குழுக்களின் மூலமோ அரசியல் கட்சிகளின் மூலமே அழுத்தம் கொடுத்து, அதன் மூலம் அந்த அமைப்பைத் தலையிடச் செய்து ஒரு தீர்வைப் பெற்று விட முடியும் என்றோ, நீதி கிடைத்து விடும் என்பதோ ம.க.இகவின் நம்பிக்கை இல்லை என்று கருதுகிறேன். அது போன்ற நடவடிக்கைகளை இவர்கள் குறுக்கு வழி என்கிறார்கள். இன்றைக்கு தமிழின அமைப்புகள் மாணவர்கள் தீவிரமாக போராடி வரும் வேளையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன். மாணவர்களோடு போட்டோ எடுத்துக் கொள்வது, மெரினாவில் வீக் என்ட் கூட்டம் போட்டு களைவது, பேஸ்புக்கில் சலம்புவது என்பதாக மட்டும் தங்களது நடவடிக்கைகளைக் குறுக்கிக் கொண்டு விட்டுள்ளனர். நாம் தமிழர் சீமான் ஜெனீவாவுக்கு உல்லாச சுற்றுப்பயணம் சென்றுள்ளார். ம.க.இ.கவோ, தமிழக்க வீதிகளில் மீண்டும் ஒரு மக்கள் எழுச்சியை இடையறாத போராட்டங்களின் மூலம் கட்டியமைக்கப்பட வேண்டும் என்கிறார்கள். அதைச் செய்யும் முயற்சியிலும் இருக்கிறார்கள்.

    இவர்களின் முழக்கங்களில் இருக்கும் “மீண்டும் ஒரு மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்” என்பதோடு சேர்த்துத் தான் நூரெம்பர்க் விசாரனை தேவை என்கிற முழக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    மக்கள் எழுச்சியின் அடிப்படையில் ஆளும்வர்க்கத்தைப் பணிய வைப்பது என்பதே இந்த முழக்கங்களின் சாரம். அதனால், தான் ம.க.இக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மக்களைத் திரட்டும் விதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. வினவில் அது பற்றி வந்து கொண்டிருக்கும் பதிவுகளை நீங்கள் கவனிக்கிறீர்கள் என்றே கருதுகிறேன். மக்கள் தங்கள் போராட்டங்கள் மூலம் ஒரு சொந்த பலத்தின் அடிப்படையில் ஐ.நாவைத் தலையிடச் செய்து பணிய வைப்பது வேறு, லாபியிங் செய்து காவடி தூக்குவது வேறு. சரிதானே?

    ஊழல் ஒழிய வேண்டுமென்று கேஜ்ரிவாலும் சொல்றார் நாங்களும் சொல்றோம், அதற்காக இரண்டும் ஒன்றாகி விட முடியாதல்லவா?

    • மன்னாரு, உங்கள் விளக்கத்துக்கு நன்றி. இந்த போராட்டம் தொடர்பான வினவு கட்டுரைகள் அனைத்தையும் படித்து வருகிறேன். (மருதையன் அவர்களின் பேட்டி வீடியோவை மட்டும் இன்னும் பார்க்கவில்லை).

      லாபியிங் செய்யாமல் மக்கள் சொந்த பலத்தின் அடிப்படையில் ஐநாவை எப்படி பணிய வைக்க முடியும் என எனக்கு புரியவில்லை. இந்த மக்கள் எழுச்சி தமிழத்தில் மட்டுமே உள்ளது. இத்தகு எழுச்சியை வைத்து அதிக பட்சம் மதுவிலக்கு, தருமபுரி தலித்துகள் மீதான வன்முறை போன்ற தமிழக பிரச்சனைகளில் வேண்டுமானால் தமிழக அரசை அடி பணிய வைக்க முடியலாம். ஈழப் பிரச்சனை வேறொரு நாடு சம்பத்தப்பட்டது. இதில் ஐநா அடி பணிய வேண்டுமானால் எழுச்சி உலக அளவில் இருக்க வேண்டாமா? காஷ்மீர், பாலஸ்தீனம், கொசோவோ, திபெத் என வெளிப் பிரச்சனைகளில் தமிழக மக்கள் எந்த பெரிய அக்கறையும் காட்டாதபோது மற்ற மாநிலத்தவரோ, மற்ற நாட்டவரோ ஈழப் பிரச்சனையில் ஐநா அடி பணியும் அளவுக்கு எப்படி எழுச்சி காட்டுவார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்? இந்த அடிபணிதல் எப்படி நடைபெறும்:? இதன் roadmap அல்லது milestones என்ன என்று தெளிவு படுத்துவார்களா? கனவுலகில் மிதக்கிறார்கள். இவர்கள் மிகவும் விரும்பும் புரட்சி போன்ற ஒன்று மாணவர்களிடையே தோன்றியதும் அதீத ஆர்வக் கோளாறோடு இருக்கிறார்கள்.

      • போராட்டத்தை இன்னும் முறைப்படுத்தினால் நன்று. உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கணும்னா ஒரே வழிதான் இருக்கு. அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் GST ரோட்டை மறிக்கணும் திரிசூலம் பக்கத்துல, கத்திப்பாராவுல மற்றும் பெருங்களத்தூர்ல. ஒட்டுமொத்த சென்னையே ஸ்தம்பிச்சி நிக்குதா இல்லையானு மட்டும் பாருங்க. சென்னை ஸ்தம்பிச்சா தமிழகம் இயங்காது. தமிழகம் இயங்காட்டி உள்துறைக்கு தலைவலி. ஒட்டுமொத்த கவனமும் நம்ம பக்கம் திரும்பும்.

        மறிச்சு நின்னு பதாகையை காமிச்சா மட்டும் பத்தாது. அங்கேயே உக்காந்துரணும். போலிசு தூக்கிட்டுப் போவும். விட்டபிறகு மறுபடியும் வந்து உக்காந்துரணும். வேற எங்கயும் உதிரிப்போராட்டம் தேவையில்ல. எல்லாரையும் அங்க வரச் சொல்லுவோம். அப்ப மட்டும்தான் உலகம் நம்மளத் திரும்பிப் பார்க்கும். இல்லன்னா இதுவரைக்கும் நடந்த அத்தனையும் வீண்தான் ஆகும்.

  3. வெங்கடேசன்,

    //இதில் ஐநா அடி பணிய வேண்டுமானால் எழுச்சி உலக அளவில் இருக்க வேண்டாமா? காஷ்மீர், பாலஸ்தீனம், கொசோவோ, திபெத் என வெளிப் பிரச்சனைகளில் தமிழக மக்கள் எந்த பெரிய அக்கறையும் காட்டாதபோது மற்ற மாநிலத்தவரோ, மற்ற நாட்டவரோ ஈழப் பிரச்சனையில் ஐநா அடி பணியும் அளவுக்கு எப்படி எழுச்சி காட்டுவார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்? //

    நீங்கள் சரியானதொரு அம்சத்தைத் தொட்டுள்ளீர்கள். எதார்த்தத்திலிருந்து பரிசீலிக்க முன்வருவதற்கு பாராட்டுக்கள்.

    முதலில் ஐ.நாவை உலகளவிலான எழுச்சி மட்டும் பணியவைக்காது என்பதை ஈராக் / ஆப்கான் போர் எதிர்ப்பு போராட்டங்களை நீங்கள் கவனித்திருந்தாலே புரிந்து கொள்ள முடியும். அமெரிக்காவின் படையெடுப்புக்கு எதிராக அனேகமாக உலகம் முழுவதிலும் எதிர்ப்பு பேரணிகளும் ஆர்பாட்டங்களும் நடந்தன.

    நீங்கள் சொல்வது போல் தமிழக அளவிலான எழுச்சி போதவே போதாது என்பது சரி தான். இன்றைக்கு தமிழர் நலனுக்கு மட்டுமல்ல, இந்தியாவைப் பொருத்தவரையில் காஷ்மீர், வடகிழக்கு மற்றும் தண்டாகாரண்யா / மத்திய இந்திய பழங்குடியினர் என்று திரும்பிய திசையெல்லாம் ஆளும் வர்க்க அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. நவதாராள பொருளாதாரக் கொள்கைகள் சாதாரண மக்கள் நலனை தகர்த்துக் குலைத்துள்ளது.

    ஆக, இந்தப் பிரிவினர் மொத்தத்திற்கும் ஒரே எதிரியாக இருப்பது இந்திய ஆளும் வர்க்கம். இதே இலங்கைக்கும் பொருந்தும். ஈழத் தமிழர் விடுதலையை அங்கே உள்ள மக்கள் தான் முன்னெடுக்க முடியும். ஈழத்துக்கான ‘போராட்டம்’ தமிழகத்தில் நடக்க முடியாது. தாய்த்தமிழகத் தமிழர்களைப் பொருத்தவரை ஒரு விரிவாக்க நலன் கொண்ட நாட்டின் பிரஜைகள் எனும் வகையில் தமது நாட்டை ஈழத்தில் (தமிழர் நலனுக்கு எதிராக) தலையிடாத வண்ணம் தடுத்து வைப்பது எனும் அளவில் தான் இருக்க முடியும். சீமான் ஒரு மேடையில் சொன்னது போல், ‘போர் அங்கே நடக்கும்; புரட்சியும் போராட்டமும் இங்கே நடக்கும்’ என்பதெல்லாம் வெற்று சவடால் மட்டுமல்ல, தமிழகத் தமிழர்களை குழப்பி திசைதிருப்பும் உத்தி.

    இந்திய அரசை தமிழர்கள் பணிய வைப்பது என்பது தம்மைப் போல் இந்தியா முழுமையும் ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரோடு தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதும், அதனடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட எதிர்ப்பு அணியை உருவாக்குவதாலும் தான் முடியும். அதற்கு கன்னடன் எதிரி, மலையாளி எதிரி, தெலுங்கன் விரோதி என்று எல்லோரையும் தள்ளி நிறுத்தும் தமிழினவாத சவடால் அரசியல் ஒருக்காலும் பயன்தராது.

    அடுத்து ஐ.நா.

    முதலில் ஐ.நா மன்றம் என்பதே ஏகாதிபத்திய நலன்கள் பாதிக்காதவாரு உலக ஒழுங்கமைப்பைக் கட்டிக்காப்பதற்கான ஒரு நிறுவனம் தான். அவர்களிடம் இருந்து நியாயம் நீதிக்கு உட்பட்ட ஒரு தீர்வை பெறுவது என்பது ‘கொக்கு தலையில் வெண்ணை’ வைக்கும் வேலை. ஆக, தமிழர்களுக்கு சாதகமாக ஐ.நாவைத் தலையிடச் செய்வது என்பது மனுப்போட்டோ லாபியிங் செய்தோ முடியக்கூடிய காரியமல்ல.

    இந்தியாவெங்கும் மக்கள் எழுச்சி, இந்தியாவில் உள்ள தங்கள் சந்தை நலனுக்கு பாதிப்பு, அதன் மூலம் தனது மூலதனத்திற்கு பாதிப்பு வந்து விடுமோ என்கிற நிர்பந்தத்தை ஏகாதிபத்தியங்களுக்கு ஏற்படுத்துவதும், இணையாக இலங்கையில் ஆளும் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு எதிராக ஒரு பரந்து பட்ட மக்கள் எழுச்சி உருவாவதும் நடக்கும் போது தான் இந்தக் கொலைகாரர்களை தண்டிக்க முடியும். அது ஒரு நிர்பந்தத்தின் அடிப்படையில் பணியவைப்பது என்கிற அளவில் தான் இருக்க முடியும். கெஞ்சிக் கூத்தாடுவது, பரிதாபத்தை வரவழைக்கும் முயற்சிகள், லாபியிங், காவடி தூக்குவது உள்ளிட்ட தமிழினவாதிகளின் குறுக்கு வழிகள் உதவாது.

    எனவே தான் வினவு இதை குறுக்கு வழியில் – இன்று நினைத்து நாளைக்கே – சாதிக்கப்படக் கூடிய விசயமல்ல என்கிறார்கள். நீண்ட கால நோக்கில் ஒரு மக்கள் எதிர்ப்பியக்கத்தைக் கட்டியமைக்க வேண்டியுள்ளது என்று சொல்கிறார்கள். அதற்கு இந்த மாணவர் எழுச்சி ஒரு துவக்கமாக இருக்கலாம்.

    இதைச் சாதிக்கக் கூடிய அரசியல் சிந்தாந்த பலம் தமிழினவாதிகளின் குறுகலான புத்திக்கு கிடையாது என்பது மாத்திரம் நிச்சயம். ஒரு புரட்சிகரமான ஸ்தாபனத்தின் தலைமையில் மட்டும் தான் இதைச் சாதிக்க முடியும்.

    • இந்த மாணவர் கூட்டம் இன அழிப்பு தொடர்பான புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை பார்த்துவிட்டு தமிழ், தமிழினம் என்ற வார்த்தைகளில் மயங்கி உணர்ச்சி பொங்க எழுந்துள்ளது. ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும், தமிழ் ஈழ வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்ற குறிப்பிட்ட கோரிக்கைகளால் கவரப்பட்டுள்ளது. இவர்களிடம் ஏகாதிபத்தியம், ஆளும் வர்க்கம், முதலாளித்துவம் என்று போராட்டத்தை விரிவு படுத்தினால் ஏற்பார்களா? போராட்டத்தை தொடர்வார்களா? மகஇக வினர் வேண்டுமானால் காக்கி சட்டைக்கு பயப்படாமல் இருக்கலாம். மாணவர் கூட்டம் அப்படி இருக்குமா? கும்பலாக காலையில் பிடித்துப் போய் மண்டபத்தில் தங்க வைத்து டீ-பன் கொடுத்து மாலையில் விடிவிக்கும் வரை வேண்டுமானால் தாங்குவார்கள். பத்து நாள் உள்ளே வைத்தால் தாங்குவார்களா?

      இந்தியா அளவில் ஆளும் வர்க்க அத்துமீறல்களை எதிர்க்க நாடு தழுவிய கூட்டு எழுச்சி நடப்பது சாத்தியம் தானா? கோஹிமா எங்கிருக்கிறது என்று இந்த மாணவர்களுக்கு தெரியுமா? (உனக்கு மட்டும் என்ன தெரியும்னு கேட்டுடாதீங்க! ஒன்னும் தெரியாதுன்னு இப்பவே சொல்லிடறேன்). நீங்கள் கோடிட்டது போல போரட்டத்தீ ஓசூரை தாண்டும் போது காவிரி குறுக்கே வராதா? பாலக்காடு பக்கத்தில் முல்லைப்பெரியார் முட்டுக்கட்டை ஆகுமே. எங்கிருந்து இந்திய அளவில் போராட்டம் உருவாகும்?

      இலங்கையில் தமிழரும் சிங்களரும் ஆளும் வர்கத்தை எதிர்ப்பதில் அவ்வளவு எளிதில் ஒன்று கூடி விடுவார்களா? பிரபாகரன் கொன்றொழித்த சிங்களர்களின் பிணங்களை காட்டியே ராஜபக்சே இருவரையும் பிரிப்பார்.

      நாடாளுமன்ற தேர்தல் வரை போராட்டம் தொடர்ந்தால் நாற்பது தொகுதிகளுக்கு ஆசைப்பட்டு ஓட்டு பொறுக்கிகள் ஈழ விஷயத்தில் உருப்படியாக ஏதாவது செய்யலாம். அந்த அளவிலேயே ஆளும் வர்கத்தை பணிய வைக்க முடியும் என்பதே என் எண்ணம்.

      முன்பொருமுறை வினவு கூறியது “இலக்கு இமயம் என்றால், பயணம் அதை நோக்கியே இருக்க வேண்டும். பரங்கி மலையை காட்டி, இதுவே இலக்கு என்பதோ, இவ்வளவு தான் முடியும் என்பதோ கூடாது” (எந்த கட்டுரை என்பதும், சரியான வார்த்தைகளும் நினைவில் இல்லை). இதெல்லாம் சரிதான். ஆனால் இமயத்தில் ஏறுவது எளிதல்ல. அதற்கு நிறைய திராணி வேண்டும். மலையேற்ற பயிற்சி வேண்டும். Aconcagua, Eiger, Mont Blanc போன்றவற்றையெல்லாம் ஏறிப் பயிற்சி எடுத்து விட்டுத்தான் நெடிதுயர்ந்த இமயச் சிகரங்களில் காலடி வைக்க முடியும். இதெற்கெல்லாம் முதல் படி பரங்கி மலையே. ஈழ விஷயத்தில், பெரிய கனவு கண்டுகொண்டிருக்காமல் புதிதாக எழுச்சி கொண்டுள்ள மாணவர் கூட்டத்தை வைத்து concrete goal எதையாவது அடைய முடியுமா என்று பார்ப்பதே புத்திசாலித்தனம்.

      செயல் ஏதும் செய்யாமல், கம்பியூட்டர் கிடைத்தது என்று ஏதேதோ எழுதிவிட்டேன். மன்னிக்கவும். இந்த மாணவர் எழுச்சி பிசுபிசுத்துப் போகாமல் ஈழ விஷயத்திலோ, மற்றேதோ விதத்திலோ குறிப்பிடும்படியாக சிறிதாகவேனும் எதையாவது சாதிக்க பிள்ளையார் அருள் புரியட்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  4. வெங்கடேசன்,

    ஒரு பரந்துபட்ட மக்கள் எழுச்சியை சாத்தியமாக்க நீங்கள் சுட்டியபடியும், அதற்கு அப்பாலும் ஏராளமான தடைகள் இருப்பது உண்மை தான். ஆனால், அதற்குத் தீர்வு,

    //நாடாளுமன்ற தேர்தல் வரை போராட்டம் தொடர்ந்தால் நாற்பது தொகுதிகளுக்கு ஆசைப்பட்டு ஓட்டு பொறுக்கிகள் ஈழ விஷயத்தில் உருப்படியாக ஏதாவது செய்யலாம். அந்த அளவிலேயே ஆளும் வர்கத்தை பணிய வைக்க முடியும் என்பதே என் எண்ணம்.//

    இதுவல்ல என்பதை மட்டும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி எதிரியைப் பற்றி மிகையாகவோ, குறைவாகவோ மதிப்பிட்டு உடனடியாக தொட்டறியத்தக்க பலன்கள் எதையாவது பெற்றுவிட முடியுமா என்கிற முயற்சிகள் தான் ஈழப் பிரச்சினையில் கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டு ‘உணர்வாளர்களின்’ அணுகுமுறையாக இருந்தது.

    “விட்டால் சீனன் புகுந்து கொள்வான்”, “சீனன் சுற்றி வளைக்கிறான்”, “புலிகள் இந்தியாவுக்கு விசுவாசிகளாக இருப்பார்கள்” – இப்படியும், இன்னும் ஏராளமான தர்க்கங்களின் அடிப்படையிலும் உடனடியாக அதிரடியாக எதையாவது செய்து ஈழத்தைப் பெற்று விடமுடியுமா என்கிற அணுகுமுறை தான் ஒரு முள்ளிவாய்க்காலை நமக்குப் பரிசளித்திருக்கிறது. இதே பாதையில் சென்று இன்னுமொரு முள்ளிவாய்க்காலை நாம் ஈழத்தமிழர்களுக்குப் பரிசளிக்கப் போகிறோமா?

    வை.கோ, பழ.நெடுமாறன், சீமான் மற்றும் இன்னபிற பெயர்பலகை தமிழ் ‘உணர்வு’ கும்பல் நேரடியாக பிரபாகரனை தவறான அரசியலின் பால் வழிநடத்தினர் என்பதும், ஒருலட்சத்திற்கும் அதிகமான மக்களை தங்கள் அரசியல் ஓட்டாண்டித்தனத்திற்காக சிங்கள பேரிணவாதத்திற்கு காவுகொடுத்தனர் என்பவை மட்டும் அவர்கள் இழைத்த துரோகம் அல்ல. இந்த “நாளைய தீர்ப்பு” சினிமா பாணியிலான Rhetorical அரசியல் கலாச்சாரத்தை தமிழர்களிடையே ஆழமாக விதைத்ததும் அவர்களின் குற்றம் தான்.

    நமது இளைஞர்கள் ராபின் ஹூட், சேகுவேரா பாணி சாகசங்களை இரசிக்கவும், வழிபடவுமான ஒரு கலாச்சாரத்துக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அது பலன் தராது என்பதை புலிகளின் வீழ்ச்சியிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

    மக்களை நம்புவதே ஒரே தீர்வு. மக்களிடம் செல்வது மட்டுமே தீர்வு. இதற்கு நீங்கள் சுட்டிக்காட்டிய தடைகள் உள்ளது என்பது உண்மையே. அதில் நீங்கள் குறிப்பிடாத சிலவற்றை நாமே துவக்கினோம், எனவே நாமே முன்னின்று அவற்றைக் களைந்து கொள்ள வேண்டிய கடமை நமக்குள்ளது. விதர்பா விவசாயிக்காக கரையாத நமது இதயத்திலிருந்து ஈழத் தமிழனுக்காக மராட்டியன் ஏன் அழவில்லை என்று கேள்வியெழும்புவது தார்மீக ரீதியிலேயே தவறானது என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    எனவே தான் இதை ஒரு நீண்ட பாதை என்கிறார்கள் வினவு குழுவினர். வாழ்வது கடினம்; மரணம் சுலபம் என்பதற்காக நாம் சுலபமானதைத் தேர்ந்தெடுப்பதில்லை அல்லவா? ஈழத் தமிழினத்திற்கு நீதி கிடைக்க நாம் துவங்க வேண்டிய நீண்ட பயணம் இந்த மாணவர் போராட்டத்திலிருந்தே துவங்கட்டுமே?

    • வெற்றி பெற வாழ்த்துக்கள். என்னோடு இவ்வளவு நேரம் செலவு செய்து உரையாடியமைக்கு நன்றி.

  5. பதிவுகளில் குழப்பம் புகுந்து விட்டது. ஈழத் தமிழ் இன அழிப்புக்கு நீதியும் நிலையான அரசியல் தீர்வும் அவசிமானது. அதனை விட அவசியமும் அவசரமுமானது அங்கே நடைபெறும் சிங்கள இராணுவ அடக்குமுறையும் தொடரும் இன அழிப்புக் கட்டுமானங்களும் உடனடியாக அகற்றப் பட்டு ஐ.நா. அமைதிப் படை காண்காணிப்பில் ஓர் இடைக்கால சிவில் ஆட்சியும் அதன் பின்னர் ஒரு பொது மக்கள் வாக்கு மூலம் உருவாக்கப்படும் நிலையான அரசியல் தீர்வுத் திட்டமும் ஆகும்.

    இவற்றை நுரென்பேர்க் நீதி விசாரணை ஒத்த விசாரணைக்கு ஐ.நா.சபை கோரிக்கை விடுக்க வேண்டும். ஆனால் எந்த வித விசாரணைக்கும் உள்ளாகாதவாறு இந்திய அரசும் அதன் ஆதரவு நாடுகளும் ஶ்ரீலங்கா அரசைப் பாது காத்து வருகின்றன. இந்திய அரசின் ஆதரவும் அனுசரணையும் இல்லாமல் ஒரு துரும்பும் ஐ.நா.வில் அசையாது.

    தமிழ் நாடு மாநில அரசு நிறைவேற்றிய 2 தீர்மானங்களையும் இந்திய மத்திய அரசு ஏற்றுச் செயற்பட்டாலே எல்லாம் சரியாகிவிடும். ஆனால் மத்திய அரசுகள் அதனைக் கண்டு கொள்ளாமலே இலங்கை அரசுடன் இராணுவ வர்த்தக ஒப்பந்தங்களைப் போட்டு அந்நாட்டின் வளங்களையும் மக்களையும் அழித்து வருகிறது.ஈழத் தமிழர் பிரச்சினைகளை இந்தியாவிலேயே பேச மத்திய அரசு பல தடைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தி வரும் பொழுது தீர்வு எப்படிச் சாத்தியமாகும்.

    இப்பொழுது இந்த மாணவ அமைப்புகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு யாரும் முட்டுக் கட்டைகளைப் போடாமல் முடிந்த அளவு தார்மீக ஆதரவு வழங்கினால் கூட அடுத்த 50 வருடங்களிலாவது ஈழத் தமிழ் மக்களுக்கு அமைதியான நிலையான அரசியல் தீர்வு சாத்தியமாகும்.

    இனிமேலாவது மனித நேயமிக்க நல்ல இதயங்களாவது தமது இறுக்க மனப் போக்கை விடுத்து தாராள மனித கருணை உள்ளத்தோடு செயற்படுவது கோடி புண்ணியமாகக் கருதப்படும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க