privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்சத்தியமூர்த்தி பவன் முற்றுகை: மாணவர்களைத் தாக்கிய காங்கிரசு கயவாளிகள்!

சத்தியமூர்த்தி பவன் முற்றுகை: மாணவர்களைத் தாக்கிய காங்கிரசு கயவாளிகள்!

-

மிழகத்தின் வீதிகளிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும், இரயில் நிலையங்களிலும், மத்திய அரசு அலுவலகங்களின் வாயில்களிலும் மறித்து நின்ற மாணவர்கள், சிங்கள இனவெறியன் இராஜபக்சேவுக்குப் பக்கத் துணையாய் நின்று ஈழப்போரை முன்னின்று நடத்திய, காங்கிரசு கயவாளிகளின் கூடாரத்தையும் மறிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஈழத்தில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், இலட்சக்கணக்கான மக்கள் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட போதும், காங்கிரசு தலைமையிலான இந்திய அரசுதான் ரேடார் கருவிகளையும், இந்திய இராணுவ அதிகாரிகளையும் ஈழப்போரின் களத்துக்கே அனுப்பிவைத்து இப்போரை வழிநடத்தியது என்பதும் அம்பலமான நிலையிலும் கூட நாடாளுமன்றத்தின் நாற்காலிகளை இறுகப் பற்றிக் கொண்டிருந்த கருணாநிதியின், ஈழ ஆதரவு நாடகத்தின் இறுதிக்காட்சிகள் ஊடகங்களை ஆக்கிரமித்திருந்த வேளையில்தான் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் காங்கிரசு அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

நேற்று (19.03.2013) மதியம் 12.00 மணியளவில் இராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவின்யூ அருகே, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் செயற்குழு  உறுப்பினர் கிருஷ்ணகுமார் தலைமையில் அணிதிரண்ட அனைத்துக் கல்லூரி மாணவர்கள், அங்கிருந்து புறப்பட்டு, காங்கிரசு காரியக் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

ஈழப்போரை முன்னின்று நடத்திய இந்திய அரசிடமே ஜெனிவாவில் அமெரிக்கா முன்மொழியும் தீர்மானத்தை ஆதரிக்கக் கோருவதும்; ராஜபக்சேவுக்கு எதிராக இந்தியாவே தனியாகத் தீர்மானம் கொண்டு வரவேண்டுமெனக் கோருவதும் அயோக்கியத்தனம் என்றும்; மன்மோகன் அரசையும் போர்க்குற்றவாளியாக அறிவித்துத் தண்டிக்க வேண்டுமென்பதே இம்மாணவர்களின் கோரிக்கை.

காங்கிரசு ஒழிக! என்று மாணவர்கள் முழக்கமிட்டிருந்தால் கூட இவ்வளவு ஆத்திரம் கொண்டிருப்பார்களா? என்று தெரியவில்லை, “இராஜபக்சே ஒழிக!” என்று ஓங்கி ஒலித்த மாணவர்களின் முழக்கத்தைக் கண்டு ஆத்திரம் கொண்டனர், காங்கிரசு கயவாளிகள்.

“இது என்ன இராஜபக்சே வீடா? முடிஞ்சா இலங்கைக்குப் போங்கடா? இங்க ஏன்டா வர்றீங்க?” என மாணவர்களிடம் எகிறியது மட்டுமின்றி, “இவனுங்களையெல்லாம் அடிச்சு வண்டியில ஏத்துங்க” என்று போலீசுக்கும் ஆணையிட்டது, காங்கிரசுக் கட்சிக்கு சொந்தமான அந்தக் குரல்.

அதுவரை, இராஜபக்சேவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்த மாணவர்கள், தற்பொழுது, “ஆதரிக்காதே! ஆதரிக்காதே! இராஜபக்சேவை ஆதரிக்காதே!” என்று காங்கிரசுக்கு எதிராகவும் முழக்கமிடத் தொடங்கினர்.

இதனால், ஆத்திரம் தலைக்கேறிய, காங்கிரசு காலிகள் போலீசைப் பார்த்து, “இவனுங்களை அடிச்சி நீ உள்ள ஏத்துறியா? நான் அடிச்சி வெளியேத்தவா?” என எகிறியது. மாணவர்களை அடித்து ஏற்றச் சொல்லி சாலையை மறிக்கவும் தொடங்கினர்.

போலீசையும், காங்கிரசு கும்பலையும் சளைக்காமல் எதிர்கொண்ட மாணவர்கள் உறுதியுடன் தமது முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஒரு கட்டத்தில், காங்கிரசு அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்த மாணவர்களைக் கைது செய்து, பலவந்தமாகப் பிடித்து வேனுக்குள் தள்ளியது. கைது செய்யப்பட்டு போலீசின் கட்டுப்பாட்டில் இருந்த மாணவர்களை வேனுக்குள் புகுந்து கொண்டு தாக்கத் தொடங்கினர், காங்கிரசு காலிகள்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீசிடம் “எங்களை அடிக்கிறத வேடிக்கை பார்க்கிறீங்களா? உங்களால முடிஞ்சா அடிக்கிறத தடுங்க; இல்லாட்டி எங்களை இறக்கிவிடுங்க நாங்க பார்த்துக்கிறோம்” என்றனர் மாணவர்கள்.

“காங்கிரசுகாரன் உன்னை பார்க்க வந்தா செருப்ப வீசுவீங்க.. மண்டைய உடைப்பீங்க! இப்ப அவுங்க ஆபிஸ்க்கு வந்து நீ போராடினா, கொஞ்சுவாங்களா? அப்படித்தாண்டா பன்னுவாங்க” என்றான், உளவுத்துறை போலீசு ஒருவன்.

ஈழப்போர் குறித்து, சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிப் பதிவுகள் மாத்திரமல்ல; இராஜபக்சேவுக்கு எதிராகத் தமிழகத்தில் நடைபெறும் மாணவர் போராட்டங்களும், இப்போராட்டம் தொடர்பான ஓட்டுக்கட்சிகளின் அணுகுமுறைகளும் கூடத்தான் பல உண்மைகளை உணர்த்தி வருகிறது .

அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க்கோருவதும்; இந்திய அரசே இராஜபக்சேவுக்கு எதிராகத் தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டு மென்றுக் கோருவதும் கேலிக்கூத்தென்பதை நடைமுறை உணர்த்திவிட்ட நிலையில், அனைத்துப்பிரிவு மக்களையும் அணிதிரட்டி 80-களின் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்பதைத் தவிர மாற்று இருக்கிறதா, என்ன?

தகவல்: ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி.

__________________________________________________________________________________________________

இது தொடர்பாக ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கை:

__________________________________________________________________________________________________

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி,  தமிழ்நாடு
9566149374

19.03.2013

சிங்கள இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் எனக்கோரியும்; ஈழத்தில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், இலங்கை அரசுக்கு ரேடார் கருவிகளை வழங்கியும், ஈழப்போரின் களத்துக்கே இந்திய இராணுவ அதிகாரிகளை அனுப்பி வைத்து இப்போரை வழிநடத்திய மன்மோகன் அரசு – காங்கிரசு கட்சியை கண்டிக்கும் விதமாகவும், எமது ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் சார்பில், காங்கிரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது இளைஞர் காங்கிரசை சேர்ந்த நிர்வாகிகள் கடுமையான வார்த்தைகளால் திட்டி தாக்குதலைத் தொடுத்திருக்கின்றனர். மாணவர் சமுதாயத்தின் மீது தொடுக்கப்பட்ட இந்த தாக்குதலை  ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

ஈழப்போரில் ஈவிரக்கமின்றி அப்பாவி மக்களையும், போராளிகளையும் வக்கிரமான முறையிலும் கொடூரமாகவும் இனப்படுகொலை செய்த இராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் மட்டுமின்றி, இதற்குப் பக்கபலமாக துணைநின்ற காங்கிரசுக் கும்பல் தலைமையிலான இந்திய அரசாங்கம் அம்பலப்பட்டு போயுள்ள நிலையில், மக்களின் கோபம் காங்கிரசு கட்சிக்கு எதிராகத் திரண்டுள்ளது. இதனை சகித்துக்கொள்ள முடியாத காங்கிரசுக் கட்சியினர், போராடும் மாணவர்களைத் தாக்கியிருக்கின்றனர்.

மாணவர்கள் மீது தாக்குதலை தொடுத்ததோடு மட்டுமின்றி, போராடிய மாணவர்களை அடித்து போலீஸ் வேனில் ஏற்ற வேண்டும் எனக்கோரி சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களைத் தாக்கிய இளைஞர் காங்கிரசின் துணைத்தலைவர் விஜய் இளஞ்செழியன், பொதுச் செயலாளர் அனுராதா அபி மற்றும் பிஜூ ஜாக்கோ, பிரேம்குமார் உள்ளிட்ட காங்கிரசாரை கைது செய்ய வேண்டுமெனவும் எமது அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

இத்தகைய தாக்குதலை கண்டு எமது அமைப்பு அஞ்ச போவதுமில்லை; காங்கிரசு கயவாளிகளை எதிர்த்த எமது போராட்டத்திலிருந்து நாங்கள் பின் வாங்கப்போவதுமில்லை.

ஈழப்போரை முன்னின்று நடத்திய, பல்லாயிரக்கணக்கான மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த போர்க்குற்றவாளி இராஜபக்சேவின் கூட்டாளியாக செயல்படுகின்ற காங்கிரசு கட்சிக்கு, மாணவர் போராட்டத்தை விமர்சிக்கவோ எதிர்க்கவோ அருகதையில்லை.

காங்கிரசு கட்சியின் தலைமை அலுவலகம் மட்டுமல்ல; மாவட்டம் தோறும் உள்ள காங்கிரசு அலுவலங்களை நோக்கி மாணவர்கள் படையெடுக்கவும்; எவ்வித குற்றவுணர்வின்றியும், கூச்சநாச்சமின்றியும் துணிவோடு தமிழகத்தின் வீதிகளில் உலா வருகின்ற அனைத்து காங்கிரசு பிரபலங்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ப கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல்; செருப்பு மாலை அணிவித்தல்; சாணி கரைசலால் அபிசேகம் செய்தல் உள்ளிட்ட உரிய “மரியாதையை“ செலுத்த முன்வர வேண்டுமென தமிழக மக்களையும் மாணவர்களையும் எமது ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி கேட்டுக்கொள்கிறது.

மாணவர்களின் போராட்டத்தை பிசுபிசுக்க வைப்பதற்காக, கலை-அறிவியல் கல்லூரிகளைத் தொடர்ந்து அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறையை அறிவித்திருப்பது; நள்ளிரவென்றும் பாராது விடுதிகளை இழுத்து மூடி மாணவர்களை விரட்டியடிப்பது; கல்லூரி முதல்வர்களைக் கொண்டு மாணவர்களை மிரட்டுவது; கல்லூரி வாயில் முன்பாகப் போலீசைக் கொண்டு நிறுத்தி பீதியூட்டுவது என்ற சில்லறைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடும் தமிழக அரசின் நடவடிக்கைகளை எமது ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

காலவரையற்று மூடிய கல்லூரிகளை உடனே திறக்க வேண்டுமென்றும் எமது ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி கோருகிறது.

இவண்,

த. கணேசன்,
ஒருங்கிணைப்பாளர்,
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி.

______________________________________________________________________________________________________________