privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஈழம் : திருச்சியில் புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!

ஈழம் : திருச்சியில் புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!

-

  • ழத் தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!
  • நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்கு குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!
  • தமிழகத்தில் மீண்டும் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்!

என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் 15.03.2012 அன்று திருச்சி தலைமை தபால் நிலையம் முற்றுகையிடப்பட்டது. அப்பகுதி சாலையும் மறிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கியது. அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த முற்றுகை மற்றும் சாலை மறியல் பின் காவல் துறையின் கைது நடவடிக்கையுடன் முடிந்தது. தற்போது 14 பெண்கள் 5 குழந்தைகள் உள்ளிட்டு 35 பேர் கைதாகியுள்ளனர். இங்கு சாலை மறியலின் போது இந்தியக் குடிமகன் ஒருவன் ‘முற்றுகை என்றால் அஞ்சலகத்தை மட்டும் செய்ய வேண்டியதுதானே, சாலையை ஏன் மறிக்கிறீர்கள்?’ என்று சண்டைக்கு வந்துள்ளார். போலீசும் ஆமாம், ‘கேளுங்கள்’ என்று கொம்பு சீவி விட்டது. எனினும் இதில் தோழர்கள் நமது நியாயத்தை உணர்த்தி விவாதித்தனர். மேற் கொண்டு எதிர்க்க அடிப்படையில்லாத நிலையில், ‘எங்கள் வேலை பாதிக்கிறதே’ என்று தனது சுயநலத்தை முன்வைத்து சிறுமைப்பட்டுப் போனார்.

இதே நேரத்தில் ம.க.இ.க – செயலர் தோழர் சீனிவாசன் தலைமையில் 6 பெண்கள் 7 ஆண்கள் மாவட்ட காங்கிரசு அலுவலகத்தின் முன் இராஜபக்சே மற்றும் மன்மோகன் உருவ பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் அனைவரையும் காவல் துறை சுற்றி வளைத்து கைது செய்தது. கைது செய்த போது தோழர்கள் ஏற்க மறுத்து போராடியதால் தள்ளுமுள்ளும் பரபரப்பும் ஏற்பட்டது. இங்கும் சுமார் அரை மணி நேரம் சாலைகள் மறிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கியது. எனினும் இங்கு மக்கள் நமது கோரிக்கையின் நியாயத்தை அங்கீகரித்து ஆதரித்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் நடத்திய எழுச்சிகரமான முற்றுகைப் போராட்டங்கள் மற்றும் இரயில் மறியலை முன்வைத்து மாவட்ட ஆட்சியரும் காவல் துறை அதிகாரிகளும் அக்கல்லூரி முதல்வரை கண்டித்து எச்சரித்த தகவல் கிடைத்து கொதித்தெழுந்த கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, ‘தங்கள் கல்லூரி முதல்வரை கண்டித்த மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளீதரன் மன்னிப்பு கேட்ட வேண்டும்’, ‘தமிழகத்தில் ஆட்சியராக இருந்து கொண்டு தமிழ் மக்களின் உணர்வை மதிக்காத மாவட்ட ஆட்சியரை கண்டிப்பது’ என்ற வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். இவ்வூர்வலத்தில் ராஜபக்சேவின் கொடும்பாவியை பாடையில் வைத்து முன்னால் பறையடித்துக் கொண்டு சவ ஊர்வலமாகவும் சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாணவர்கள் உள்ளே வராதபடி வெளி கேட்டை சாத்தி அதிகமான காவலர்கள் உள்ளே செல்ல முடியாதபடி தடுப்பரண்களாக நின்றனர்.

மாணவர்கள் ஆட்சியரை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அனுமதி பெற்று வருகிறோம் என்று சொன்ன அலுவலர்கள் வரவேயில்லை ஒருமணி நேரத்திற்க்கு மேலாக மாணவர்கள் வெயிலில் வெளியே காத்திருக்கும் நிலை ஏற்ப்பட்டது. அப்போது ஒரு மாணவி 3 மாணவிகள் மயக்கமடைந்தனர் அதில் ஒரு மாணவி உடல் மோசமானதால் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு ஆட்சியர் அலுவலகத்தினுள் அனைத்து மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். ஆட்சியர் ஜெயஸ்ரீயிடம் நமது போராட்டத்தின் நிலைபாட்டை பு.மா.இ.மு தோழர்.சங்கத்தமிழன் விளக்கினார். உள்ளே மாணவர்களை தவிர யாரையும் அனுமதிக்கவில்லை. பத்திரிக்கையாளர்களையும் அனுமதிக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் இதற்கு பதில் அளிக்கையில் ‘தங்கள் கோரிக்கை சரியானதுதான். நானும் ஒரு தமிழச்சிதான், எனக்கும் பற்று உள்ளது’ எனவும் கூடுதலாக ‘தமிழக அரசு உங்களது போராட்டத்தை ஒடுக்காது ஆகவே யாரும் வன்முறையில் இறங்காமல் காந்தி வழியில் அகிம்சையாக போராடுங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். தங்களது கோரிக்கையை ஒரு பேப்பரில் எழுதி அனைவரும் கையெழுத்து போட்டு தாருங்கள் அதை நான் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறேன்’ என தன் பாணியில் தந்திரமாக பேசி மாணவர்களை அனுப்பி வைத்தார்.

வெளியே வந்த மாணவர்களை, ‘நம் போராட்டங்களை இனி நாம் தொடர்ந்து நடத்தலாம். நம்மை அரசு தடுக்கக்கூடாது என்பதற்குத்தான் இம்முற்றுகை. போராட்டத் தீ பரவட்டும்! அடுத்த வேலையை நாம் நாளை கல்லூரியில் பேசுவோம்’ என உற்சாகத்துடன் கலைந்தனர். இதற்கிடையில் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி வரும் இலங்கை இராணுவத்துக்கு துணைநின்று துரோகம் செய்யும் இந்திய இராணுவத்தின் 117-வது பட்டாலியன் தலைமையகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கெதிரான தீர்மானத்தையே சகிக்காமல் தமிழ் மக்கள் மற்றும் மாணவர்களின் உணர்வோடு விளையாடும் இத்தகைய போக்குகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமென எச்சரித்து ம.க.இ.க., பு.மா.இ.மு மற்றும் தோழமை அமைப்பினர் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

தகவல் – ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு.,பெ.வி.மு., திருச்சி.