privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: தமிழ்நாடு முழுவதும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்!

ஈழம்: தமிழ்நாடு முழுவதும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்!

-

1. பென்னாகரம் ஆட்டோ ஓட்டுனர்கள்

ஈழத்தமிழின படுகொலைக்கு நீதிகேட்டும் நூரம்பர்க் போர்க்குற்ற விசாரணை வேண்டியும் பென்னாகரம் ஆட்டோ ஓட்டுனர்கள் பென்னாகரம் டெம்போ ஸ்டாண்டு அருகில் 21.3.2013 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருந்தனர்.

ஆட்டோ ஓட்டுனர் சங்க உறுப்பினர் மாதேஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவர் பாரதி உரையாற்றினார்.

பென்னாகரம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஜானகிராமன், ரமேஷ்வர்மா, மகாலிங்கம், பாலசரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சுமார் 80க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்.

தகவல் : செய்தியாளர், புதிய ஜனநாயகம், பென்னாகரம்

2. கும்மிடிப்பூண்டி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜார் வீதியிலுள்ள பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பில் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 19.3.2013 காலை 9.00 மணியளவில் தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட கலைக்குழுவின் புரட்சிகர பாடல்களும், பகுதி தோழர்களின் உரைகளும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தன. பு.ஜ.தொ.மு.வின் மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் சிறப்பானதொரு கண்டன உரையாற்றினார்.

புஜதொமுவின் இணைப்பு சங்கங்களைச் சேர்ந்த தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் : பு.ஜ.தொ.மு.

3.  ஓசூர்

18.03.2013 அன்று காலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் அதியமான் பொறியியற் கல்லூரி, எம்.ஜி.ஆர் கல்லூரி ஆகிய மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதற்கு கல்லூரி வாகனத்திற்கு காத்திருந்தபோது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசுரங்கள் விநியோகித்து போராட்டத்திற்கு அறைகூவி கடிதம் கொடுத்து பேசினர். அப்போது மாணவர்கள் கல்லூரியில் சக மாணவர்களிடம் பேசி போராட்டம் செய்ய முயற்சி செய்கிறோம் என கருத்து தெரிவித்து சென்றனர். அதனைத் தொடர்ந்து ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களிடமும் பிரசுரம் கொடுத்து போராட முன்வர அழைத்தனர். அந்தவகையில் 19.03.2013 காலையில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் முழக்கமிட மாணவர்களும் ஆவேசமாக முழக்கமிட்டனர். மதியம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விடுமுறை அறிவித்தது. அரைநாள் வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இருப்பினும் இத்தொழிற்பயிற்சியில் பயிலும் மாணவர்களில் சிலர் விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்-யை சார்ந்தவர்கள். இவர்கள் நீங்கள் ஓ.கே சொன்னால் எங்கள் கேங்கை அழைத்து பிரமாண்டமாக போராட்டம் செய்யலாம் என்றனர். பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. அடுத்த நாள் 20.03.2013 அன்று காலை 10மணி முதல் மாலை 5மணிவரை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக ஓசூர் ராம்நகரில் தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்திற்கு பாகலூர் பகுதி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமைத் தாங்கினார். அச்சங்கத்தை சேர்ந்த மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன், தோழர் சங்கர், தோழர் இ.கோ.வெங்கடேசன் கண்டன உரையாற்றினர். தமிழ்தேச குடியரசு இயக்கத்தை சார்ந்த தோழர் முருகேசன் கலந்துக் கொண்டு போராட்டத்தை வாழ்த்திப் பேசினார்.

இவ்வார்ப்பாட்டத்திற்கு திரளான மக்கள் கலந்துக் கொண்டும், ஆதரவு தெரிவித்தும் சென்றனர்.

4. கே அக்ரஹாரம்

ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி பென்னாகரம் அருகே உள்ள கே. அக்ரகாரம் கிராமத்தில் உள்ள பொது மக்கள் 19.3.2013 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தர்ணா போராட்டம் நடத்தினர்.

ஊர்க்கவுண்டர் A.S.வேலு தலைமை தாங்கினார். மந்திரி கவுண்டர் A.K.பெருமாள் முன்னிலை வகித்தார். பெண்கள் உள்பட 150 பேர் கலந்து கொண்டனர்.

தகவல் : செய்தியாளர், கோபால், புதிய ஜனநாயகம், பென்னாகரம்,

5. கோவை

கோவை துடியலூர் பகுதியில் தொடர் முழக்க போராட்டம் காலை 10. மணிக்கு துவங்கயது. தோழர் ஜெகநாதன் இந்த கூட்டதிற்கு தலைமை வகித்தார். மனிதஉரிமை பாதுகாப்பு மையம் தோழமை அமைப்பிலிருந்து தோழர்கள் உரையாற்றினார்கள் .

2009-ல் இலங்கையில் ஈழத்தமிழ் பகுதியில் நடந்தது மனித உரிமை மீறல் என்று அமெரிக்கா சுருக்கி பார்க்கிறது. அங்கு நடந்தது இனப்படுகொலை.

இந்த இனப்படுகொலைக்கு இந்திய அரசு ஆயுதங்கள், நிதி உதவி, இந்திய இராணுவத்தையெல்லாம் அனுப்பி போராட்டத்தை முறியடித்தது. மக்களை படுகொலை செய்தது. இலங்கை அரசின் இனப்படுகொலையில் இந்திய அரசும் சேர்ந்தது. அதனால் இந்திய அரசு மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும்.

போர்க்குற்றவாளிகளை சுதந்திரமான, நடுநிலையான விசாரணை மூலம் தண்டிக்க இரண்டாம் உலகப் போருக்கான நூரம்பர்க் போர்க்குற்ற விசாரணை போல் சுதந்திரமாக நடத்தினால்தான் தண்டிக்க முடியும் என்று தோழர்கள் முழக்கமிட்டனர்.

மாலை 4.30 மணியளவில் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் கோபி அவர்கள் தனது உரையை துவங்கினர் . அதனை தொடர்ந்து மாவட்ட பொருளாளர் தோழர் பூவண்ணன் உரையாற்றினார். கண்டன உரையாக தோழர் விளைவை ராமசாமி அவர்கள் சிங்கள இனவெறியன் ராஜபக்சே கும்பல் நடத்திய இனப்படுகொலையை வெறும் மனித உரிமை மீறல் என்று நாடகமாடி இராஜபக்சே கும்பலை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை நிராகரிக்க வலியுறுத்தியும், இந்தப்போரை வழிநடத்திய இந்தியாவே இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவருவது அயோக்கியத்தனம் என்பதை அம்பலப்படுத்தியும், இதற்கு தீர்வாக இராஜபக்சேக் கும்பலை நூரம்பர்க் போர்க்குற்ற விசாரணை போன்ற பொதுவிசாரணையின் மூலம் தண்டிக்க வேண்டும் என்பதை என்னும் கருத்தை பதித்தார். நன்றி உரை தோழர் நித்தியானந்தம் பேசினார்.

6. மதுரை

20/3/13 அன்று மாலை 6 மணி அளவில், ம.க.இ.க.,பு.மா.இ.மு.,பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகளின் சார்பில் “ஈழப்படுகொலைக்கு ராஜபக்சே கும்பலின் மீது நூரம்பர்க் போன்ற விசாரனை வைத்து தண்டிக்க வேண்டும். 80கலின் மக்கள் எழுச்சியை மீண்டும் உருவாக்க வேண்டும்” என்ற முழக்கத்தின் அடிப்படையில் இளம் தோழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

இவ்வார்ப்பாட்டம் முழுவதும் உரை நிகழ்த்தாமல், இந்திய அரசை அம்பலப்படுத்தியும், ராஜபக்சே கும்பலை தூக்கிலிடக்கோரியும் விண்ணதிர‌ முழக்கமிட்டு கொண்டே இருந்தார்கள். நகரின் இதயப்பகுதியான பெரியார் நிலையத்தில் நடந்தால் ஆயிரக்கனக்கான மக்கள் ஆச்சரியத்தோடும், நம்பிக்கையோடும் பார்துக்கொண்டிருந்தனர்.

இளம் தோழர்களின் உணர்வுபூர்வமான பங்கேற்பை பார்த்து ஒருவர்,”இந்த சின்ன பசங்க மூத்திரத்தை பார்சல் பண்ணி டில்லிக்கு அனுப்பிவைக்க வேண்டும், அப்போதாவது மத்திய அரசுக்கு புத்தி வருதானு பாப்போம்” என்றான். உடன் தோழர்களின் அருகில் சென்று கைகொடுத்து வாழ்த்திச் சென்றார்.

இளம் தோழர்கள் நடத்திய இவ் ஆர்ப்பாட்டம் மக்களை மிகவும் எழுச்சியோடு போராட உத்வேகம் ஊட்டும் படி இருந்தது.

7. மதுராந்தகம்

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் செயல்பட்டு வரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில், மதுராந்தகம் தபால் நிலையம் முன்பாக, 20.03.2013-புதன்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது.

பு.ஜ.தொ.மு-காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு தோழர் அறிவரசன் தலைமையேற்க, மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் கண்டன உரை நிகழ்த்தினார். பகுதி தொழிலாளத் தோழர்களும் பொதுமக்களும், இளைஞர்களும் திரளாக இப்போராட்டத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து கலந்துகொண்டார்கள்.

தகவல் : பு.ஜ. செய்தியாளர்கள், மதுராந்தகம்.

8. கல்பட்டு

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்திலிருந்து சூனாம்பேடு செல்லும் (பாண்டிச் சேரி சாலை) சாலையில் உள்ள, பொருளாதாரத்தில் பின் தங்கிய கிராமங்களான கல்பட்டு, புத்திரன்கோட்டை ஆகிய கிராமங்களின் இளைஞர்களும் ஏனைய பொதுமக்களும் சமூக உணர்வில், போர்குணத்தில் தங்களை ஏனைய வளர்ச்சியுற்ற கிராம-நகர-பெருநகர மக்களைவிட மேம்பட்டவர்களாக பறைசாற்றிய நிகழவுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இன அழிப்புப் போரின் குற்றவாளிகளை தண்டிக்கக் கோரியும், ராஜபக்சேவின் இன ஒழிப்பு நடவடிக்கைக்கு உதவி செய்துவந்த, தற்போதும் அவனைக் காப்பாற்றுகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அரசினைக் கண்டித்தும் ஒரு மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டத்தினை அறிவித்து சிறப்பாக நடத்தியும் காட்டியிருக்கிறார்கள்.

எந்த ஒரு ஓட்டுப்பொறுக்கி கட்சியினையும் ஏற்காமல் மேற்படி கிராமங்களைச் சார்ந்த இளைஞர்கள் ஒரு தன்னெழுச்சியான போராட்டத்தை நிகழ்த்தியிருக்கின்றனர். இவர்களின் இத்தகைய நியாயமான போராட்டத்திற்கு பொதுமக்கள் திரளாக வந்திருந்து தங்களது மேலான ஆதரவை நல்கியிருகின்றனர்.

மேற்படி போராட்டத்தில் புதிய ஜனநாயகம் இதழ்களில் வந்திருந்த செய்திகளின் அடிப்படையிலும், பு.ஜ.வின் முழக்கங்களையும் முழங்கினார்கள். இப்போராட்டங்களில் கலந்துகொண்டு, மேற்படி கிராம மக்களின் போராட்ட உணர்வை வாழ்த்திப் பேசினார்கள், பு.ஜ.தொ.மு-வைச் சார்ந்த தோழர்கள் பிரகாஷ், அறிவரசன் ஆகியோர்.

தகவல் : பு.ஜ.செய்தியாளர்கள், மதுராந்தகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

9. நாமக்கல்

நாமக்கல் ஆர்ப்பாட்டம், திருச்சங்கோடு வட்டம், திருச்சங்கோடு அண்ணா சிலை அருகில் நடந்தது. தலைமை தோழர் உதயகுமார், பு.ஜ.தொ.மு, 20 பேர் கலந்து கொண்டனர்.

10. நாட்றாம்பாளையம்.

தேன்கனிக்கோட்டை வட்டம் நாட்றாம்பாளையம் பகுதியில் செயல்பட்டுவரும் புரட்சிகர அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக 19.03.2013 அன்று தர்ணா போராட்டம் கிராம மக்களை திரட்டி நடத்தப்பட்டது. நாட்றாம்பாளையம் விவசாயிகள் விடுதலை முன்னணி கிளையின் அமைப்பாளர் தோழர் சரவணண் தலைமையில் நடத்தப்பட்ட இந்த தர்ணா கிராம மக்களிடையே ஈழமக்களின் துயருக்காக நாம் ஒவ்வொருவரும் தத்தம் பங்களிப்பை தந்திடவேண்டும் என்ற உணர்வை விதைத்தது. இந்த தர்ணாவில் ஓட்டுக்கட்சிகளின் துரோகத்திலிருந்து பாடம்கற்று அவர்களை புறக்கணித்து இந்திய அரசிடம் மனுக் கொடுக்கும் அடிமை மனப்பான்மையை தூக்கியெறிந்து போர்க்குணமாக தெருவில் இறங்கி மக்கள் எழுச்சியை தோற்றுவிக்கும் வகையில் நாம் களத்தில் பங்களிப்பை செலுத்திடவேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தினர்.

11. பென்னாகரம்

விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் பெண்ணாகரம் 4 ரோடு அருகில் (ராம்பாலாஜி திரையரங்கம் அருகில்) 20.3.2013 அன்று புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

வி.வி.மு. செயற்குழு உறுப்பினர் தோழர் சிவா தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் தோழர் கோபி, தோழர் அருண் ஆகியோர் உரையாற்றினார்கள்.

வி.வி.மு. செயற்குழு உறுப்பினர்கள் தோழர் முருகன், மாரியப்பன், ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள் 150 பேர் உட்பட 300 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல் : செய்தியாளர், புதிய ஜனநாயகம், பென்னாகரம்

12. பென்னாகரம் வழக்கறிஞர்கள்

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் ஜானகிராமன் தலைமையில் பென்னாகரம் வழக்கறிஞர்கள் கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடந்தது.

13. கடலூர்

20.3.2013 அன்று காலை 10 மணிக்கு கடலூர் தலைமை அஞ்சலகம் முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் தொடர்முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மாலை 6 மணி வரை நடந்த இந்த தொடர் முழக்கப் போராட்டத்தை பயணிகளும், பாதசாரிகளும், கார், ஆட்டோ ஓட்டுனர்களும் என ஆயிரக்கணக்கானவர்கள் ஆதரித்தனர்.

14. சிவகங்கை

தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் 20.3.2013 மாலை 5 மணிக்கு சிவகங்கையில் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு தோழர் கணேசன் தலைமையேற்க, தோழர் ஆனந்த், தோழர் கல்யாணக்குமார், தோழர் குருசாமிமயில்வாகனன், தோழர் நாகராசன் ஆகியோர் உரையாற்றினார்கள். 30 தோழர்கள் கலந்துகொண்டனர்.

மாலையில், சுமார் 500க்கும் அதிகமானோர் கூடியிருக்கும் அரண்மனை வாசலில், பல்வேறு கட்சியினரும் மக்களும் ஆங்காங்கே கும்பலாக நின்று நமது நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு மறைவான இடத்தில் சுமார் 20 பேர் அமர்ந்திருந்தார்கள். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போதே அங்கு நிதி வசூலிக்கச்சென்ற தோழர்களிடம் நீங்கதான் கரெக்டா பேசுகிறீர்கள் என்று சொல்லி நிதியளித்திருக்கிறார்கள். பிறகுதான் தெரிந்தது அவர்கள் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் முக்கியப்பிரமுகர்கள் என்று.

ஓட்டுக்கட்சிகளையும் தமிழினவாதிகளையும் நார்நாராகக் கிழித்து விட்டீர்கள், என்று ஒரு பார்வையாளர் சொன்னார்.

15. திருவாரூர்

திருவாரூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் 20.3.2013 காலை 10 மணிக்குத் தொடங்கி நாள் முழுவதும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தோழர் கு.ம.பொன்னுசாமி தலைமை தாங்கினார்.

தோழர் காளியப்பன், தோழர் ஜி வரதராஜன், தோழர் காவிரி தனபாலன், தோழர் ப. சீனிவாசன், தோழர் ஆசாத், தோழர் சுபாஷ் காந்தி, தோழர் முகமது சர்வத்கான், தோழர் ராஜ்குமார், தோழர் முரளி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

தகவல் : பு.மா.இ.மு

16. வேலூர்

வேலூர் ம.க.இ.க சார்பில் 19.02.2013 அன்று “ஈழம் : தேவை முற்றிலும் புதியதொரு கொள்கை – நடைமுறை!” என்ற சிறு வெளியீடு வேலூர் மாவட்ட மக்களிடம் சுமார் ஆயிரத்துக்கும் மேல் விநியோகம் செய்யபட்டது. மேலும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை விளம்பரப்படுத்தி மைய சுவரொட்டிகள் மாவட்டம் முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டது.

முழுநாள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரியபோது, வேலூர் காவல்துறை கடைசிவரை அனுமதி தராமல் இழுத்தடித்தது. ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த இடத்தில் 20.03.2013 அன்று காலையிலேயே கைது செய்வதற்கான முன்தயாரிப்புகளை செய்திருந்தது போல அரசுப்பேருந்து ஒன்றை நிறுத்தியிருந்தது வேலூர் காவல் துறை. ஆர்ப்பாட்டம் துவங்குவதாக அறிவிருத்திருந்த 9 மணிக்கு காவல் நிலையத்திற்கு மாவட்டத் தலைவரை நேரில் வரவழைத்து முழு நாள் ஆர்ப்பாட்டத்திற்கு தடையை அறிவித்துவிட்டு வெறும் 2 மணி நேரத்திற்கு மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள காலை 10 மணிக்கு அனுமதி வழங்கியது காவல்துறை.

அதன்பிறகு ஒலிபெருக்கி, சாமியானா ஏற்பாடு செய்யப்பட்டு காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை அண்ணா கலையரங்கம் அருகில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ம.க.இ.க மாவட்டத் தலைவர் தோழர் இராவணன் முன்னிலை வகிக்க, தோழர் இராஜன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். தோழர் அன்பு மற்றும் தோழர் வாணி ஆகிய இருவரும் ஆர்ப்பாட்டத்தின் அவசியத்தையும் கோரிக்கைகளையும் விளக்கிப் பேசினர்.

சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்ற இந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் கலந்து கொண்டு எழுச்சியோடு முழக்கமிட்டனர். சிங்கள இனவெறியன் இராஜபக்சேவையும் அவனுக்குத் துணைபோன இந்திய அரசையும் படுகொலைக்கு பக்கபலமாய் இருந்த அமெரிக்காவையும் அதன் எடுபிடியான ஐ.நா மன்றத்தையும் அம்பலப்படுத்தியது இந்த ஆர்ப்பாட்டம்.

நாம் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்த போது, நாம் நடத்திய இடத்திற்கு பின்புறமாக உள்ள சாலையில் சுமார் 25 ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோவில் கருப்புக்கொடி கட்டிக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அதே வேளையில் வலதுபுற சாலையின் அருகில் வேலூர் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் சுமார் 15 பேர் ஈழப்பிரச்சனையையொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆட்டோ ஓட்டுநர்கள் வைத்திருந்த பதாகையில் இராஜபக்சேவை மட்டும் தண்டிக்க வேண்டும் என இந்திய அரசிடம் கோரிக்கை வைப்பதாக மட்டுமே இருந்தது. பத்திரிக்கையாளர்களோ இராஜபக்சே வருத்தம் தெரிவித்தாலே போதும் என்ற வரம்போடு முழக்கமிட்டனர்.

ஆனால், நாம் மட்டுமே இராஜபக்சே மற்றும் இந்திய அரசு ஆகிய இருவருமே ஈழப்படுகொலையை முன்னின்று நடத்தியவர்கள் என்பதையும் குறிப்பாக இந்தியத் தரகுமுதலாளியகளின் பொருளாதார நலனுக்காகவே ஈழப்போராட்டத்தை ஒடுக்கினர் என்பதையும் ஓங்கி ஒலித்தோம். மேலும் சர்வதேச பயங்கரவாதி அமெரிக்கா, ஈழத்தழிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும், அதை ஐ.நா நிறைவேற்றும் என்று நம்ப வைக்க எத்தனிக்கும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளை அம்பலப்படுத்தி அறைகூவினோம்.

மற்றொருபுறம் நகரின் மற்றொரு பகுதியில் கல்லூரி மாணவர்கள் சுமார் 500 பேர் பேரணி நடத்தினர். இவர்களுக்கும் ஈழப்போரில் துரோகி யார்? நண்பன் யார்? என்ற தெளிவோ, தீர்வு எது என்ற புரிதலோ இல்லாமல்தான் பொதுவாக இராஜபக்சேவை மட்டுமே இலக்காக்கிப் போராடினர். இவர்கள் செல்ல வேண்டிய திசையை நமது வெளியீ மட்டுமே குறிப்பாக வழிகாட்டுவதாக இருந்தது. மொத்தத்தில் ஈழப் பிரச்சனைக்காக வேலூரே இன்று போர்க்கோலம் பூண்டிருந்தது.

முதல் நாள் பிரச்சாரத்தின் போதே அமெரிக்காவையும், ஐ.நா வையும் நாம் அம்பலப்படுத்தியதை ஏற்க மறுத்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் “நாளை ஆர்ப்பாட்டத்திற்கு வந்து உங்களை சந்திக்கிறேன், நீங்கள் ஆதாரமில்லாமல் பேசுகிறீர்கள்” என்றார். அதன்படி நேரில் வந்தவர், நமது வெளியீட்டை முழுமையாக படித்துவிட்டும் மற்றும் முழக்கங்களை முழுமையாக கவனித்துவிட்டும் நம் நிலைப்பாட்டின் மீது நம்பிக்கையடைந்தவிதமாக முதல் நாள் பேசிய தோழரைப் பார்த்து வணக்கம் வைத்துவிட்டு தொடர்ந்து படிபடிப்படியாக நெருங்கி வந்து நின்றார்.

வாகனத்தில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தி முழக்கங்களை படித்துவிட்டு வெளியீடும் பெற்றுக் கொண்டு சென்றனர். ஆர்ப்பாட்டத்தின் நியாயத்தை உணர்ந்த ஒரு ஆதரவாளர் போராட்டத்தில் குரல் எழுப்பிக் கொண்டிருந்த அனைவருக்கும் மதிய உணவு அளிக்க விருப்பம் தெரிவித்தார்.

மொத்தத்தில் ஆர்ப்பாட்டத்தை கவனித்த, நமது வெளியீட்டை படித்த பெரும்பாலானவர்கள் ஈழப்பிரச்சனையில் சரியான தீர்வை நோக்கி முன்னேற இனியும் ஓட்டுப்பொறுக்கிகளை நம்பி பலன் இல்லை என்ற புரிதலுக்கும் நம்முடன் இணையலாம் என்ற விருப்பத்துக்கும் வருவதை உணர முடிந்தது. இதன் வெளிப்பாடாகவே ஐந்து, பத்து வெளியீடுகள் என கேட்டு வாங்குவதும் அல்லது மீதித் தொகையை நன்கொடையாக எடுத்துக் கொள்ளுங்கள் என ஐம்பது ரூபாய் வரைகூட கொடுத்ததும் நடந்தது.

தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்