Saturday, August 13, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க மாணவர் எழுச்சி: போராடும் பண்பு வளரட்டும்!

மாணவர் எழுச்சி: போராடும் பண்பு வளரட்டும்!

-

pachiappa-48
பச்சையப்பா கல்லூரி மாணவர் போராட்டத்தில் தோழர் எழுமைலையை குறிவைத்து தாக்கும் போலீசு!

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர இருக்கும் தீர்மானத்தையொட்டி, “ராஜபக்சேவை இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்கவேண்டும், போர்க்குற்றத்துக்காக தண்டிக்க வேண்டும், தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்” என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. சட்டக்கல்லூரி மற்றும் கலைக்கல்லூரி மாணவர்கள் மத்தியில் தொடங்கிய போராட்டம் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை அனைவரையும் ஈர்த்திருக்கிறது.

தமது கோரிக்கைகள் பற்றிய தெளிவான புரிதல் இல்லையெனினும், அமெரிக்க தீர்மானம் ஒரு மோசடித் தீர்மானம் என்பதும், இந்திய அரசு இந்த இன அழிப்புப் போருக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்ற உண்மையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாணவர்கள் மத்தியில் சென்றிருக்கிறது. இந்திய அரசின் தயவைச் சார்ந்துதான் ஈழத்தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என்ற அடிமைத்தனமான கருத்தை முறியடிக்க முடியும் என்பதற்கான துவக்கமாக இதனைக் கொள்ளலாம்.

பொதுவான மனிதாபிமானக் கண்ணோட்டம் அல்லது தமிழின உணர்வு போன்றவற்றால்தான் பல மாணவர்கள் வழிநடத்தப்படுகின்றனர். இருப்பினும், 2009 இனப்படுகொலை தோற்றுவித்த தமிழக மக்களின் கோபத்தை கருணாநிதி எதிர் ஜெயலலிதா, காங் எதிர் பாஜக என்ற சட்டகத்துக்குள் அடக்கி, எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்து ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பித்த ஆழ்வார் கூட்டத்தின் அரசியல் தந்திரத்திற்கு வெளியில் இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த அளவில் இது ஓட்டுப்பொறுக்கி அரசியலின் காலடியில் சரண்டைவதிலிருந்து வெளியே வந்திருக்கிறது. இருப்பினும் இதனை அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில் குறியாக இருக்கும் நெடுமாறன் வகையறாவைச் சேர்ந்த ஜெயலலிதாவின் ஐந்தாம்படை, மாணவர் போராட்டம் நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று வாழ்த்துரை வழங்கி வருகிறது.

2009 தேர்தலில் இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்த ஜெயலலிதா, ஒன்றுபட்ட இலங்கை என்று பேசுவது மட்டுமின்றி, அமெரிக்க தீர்மானத்துக்கு திருத்தம் சொல்வதோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார். போராட்டம் நடைபெறும் எந்த இடத்திலும் வன்முறையோ பொதுச்சொத்துக்கு சேதமோ நிகழவில்லை என்ற போதிலும், ஆகப்பெரும்பான்மையான இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரதம்தான் நடத்தி வருகிறார்கள் என்ற போதிலும், 525 பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து, விடுதிகளைக் காலி செய்யச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது ஜெயலலிதா அரசு. இருந்த போதிலும், அம்மாவின் ஐந்தாம்படை இவை குறித்து சதித்தனமான மவுனம் சாதிப்பதுடன், மாணவர்களின் கோபம் அம்மாவுக்கு எதிராகத் திரும்பிவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறது.

நடைபெற்று வரும் இந்த மாணவர் போராட்டம், இனப்படுகொலை, போர்க்குற்றம், இந்திய இலங்கை உறவு என்ற எல்லைகளைத் தாண்டி ஆளும் வர்க்கம் மற்றும் அரசு எந்திரத்தின் கவலைக்குரியதாகியிருக்கிறது. கிரிமினல் குற்றநடத்தை கொண்டோரின் விவரங்களைத் திரட்டி வைப்பதன் மூலம், குற்றப் புலனாய்வு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போல, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களின் பெயர், ஊர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்து வருவதாக மத்திய மாநில புலனாய்வுத்துறையினர் வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றனர் (தினத்தந்தி, 17.3.2013). போராட்ட எண்ணத்தில் இருக்கும் மாணவர்களின் டேட்டா (விவரங்கள்) போலீசுக்கு அவசியம் தேவைப்படுவதாகவும், எங்காவது குற்றம் நடந்தால் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளோரை அழைத்து விசாரிப்பதைப் போல, போராட்டம் நடக்கின்ற இடங்களில் இவர்களை அழைத்து விசாரிக்க முடியும் என்றும் கூறியிருக்கின்றனர்.

இது மட்டுமின்றி, இத்தகைய போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களுடைய பெயர்கள் மேற்படி பட்டியலில் ஏற்றப்பட்டுவிட்டால், பின்னாளில் அவர்கள் அரசு வேலைக்கு தெரிவு செய்யப்படும்போது, மாணவப் பருவத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டது குறித்த விவரத்தையும், போராட்டத்தின் தன்மை, கோரிக்கைகள், எழுப்பிய முழக்கங்கள், போராட்ட நாள் ஆகிய அனைத்தையுமே உளவுத்துறை தொகுப்பான முறையில் அரசுக்கு அளிக்கும் என்றும், இதன் காரணமாக இத்தகைய போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் இந்தியா முழுவதும் எந்த இடத்திலும் அரசு வேலைவாய்ப்புக்கு செல்ல இயலாது என்றும் எச்சரித்திருக்கின்றனர் உளவுத்துறையினர்.

“போராட்ட குணம் கொண்ட மாணவர்களை அடையாளம் காண்பது” என்பதுதான் இந்த உளவுத்துறை எச்சரிக்கையின் முக்கியமான பகுதி. மனிதாபிமான நோக்கிலோ, இன உணர்விலோ அல்லது பாலச்சந்திரன் என்ற குழந்தை படுகொலை செய்யப்பட்டிருக்கும் அநீதியைக் கண்டு பதைத்தோ ஒரு மாணவன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். இந்தக் குறிப்பிட்ட போராட்டம் அல்லது கோரிக்கையின் நியாய அநியாயங்களைக் காட்டிலும், “மாணவர்களின் போராட்ட குணம்” என்பதுதான் ஆளும் வர்க்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் எச்சரிக்கையடையச் செய்திருக்கிறது.

இன்று ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கேட்டுப் போராடும் இந்த மாணவர்கள், நாளை தமிழக மக்களின் உரிமை பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடக் கூடும். மறு காலனியாக்க கொள்கைகளால் உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உரிமைகள் பறிக்கப்பட்டு வரும் சூழலில், பொதுத்துறைகள், இயற்கை வளங்கள், விளைநிலங்கள் உள்ளிட்ட மக்களின் பொதுச்சொத்துக்கள் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாக மாற்றப்பட்டு வரும் சூழலில், எல்லா ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும் இந்த மறுகாலனியாக்க கொள்கையின் ஏவலர்களே என்ற உண்மை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அம்பலமாகி வரும் சூழலில், “மாணவர்களின் போராட்ட குணம்” தலையெடுத்திருப்பது ஆளும் வர்க்கத்தை கவலையடையச் செய்திருக்கிறது. கண்ணுக்கு முன்னால் தெரிகின்ற ஈழப்பிரச்சினை என்ற வரம்பைத்தாண்டி, வரவிருக்கும் பிரச்சினையின் உண்மையான பரிமாணத்தை உளவுத்துறை அடையாளம் கண்டிருக்கிறது. ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக இந்த நாட்டை பரிபாலனம் செய்பவர்கள் ஓட்டுக்கட்சிகள் அல்லர்; ஆளும் வர்க்க நலனுக்காகவே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் அரசு எந்திரம்தான் என்ற உண்மையை உளவுத்துறையின் இந்த அறிக்கையிலிருந்து மாணவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

பாசிச நடவடிக்கையான இந்தக் கண்காணிப்பை எதிர்க்க வேண்டும், முறியடிக்க வேண்டும் என்கிற அதே நேரத்தில், நாம் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டுதான் தீரவேண்டும். சுமுகமான அரசுப்பணி அல்லது உத்திரவாதமான வாழ்க்கை, அவற்றுக்கு குந்தகம் நேராத வண்ணம் மனச்சாட்சியின் ஆறுதலுக்காக சில போராட்டங்கள் என்ற மாய்மாலத்தை பேணிக்கொள்வதற்கு நடுத்தர வர்க்கம் விரும்பினாலும், அதனை அனுமதிக்க ஆளும் வர்க்கம் தயாராக இல்லை. இருக்கின்ற வாழ்க்கையையே பறித்து விரட்டும் நடவடிக்கை ஈழத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

உத்திரவாதமான வாழ்க்கை என்ற மாயைதான் துப்பாக்கியை விடவும் ஆபத்தான ஆயுதம். உயிரை மட்டுமின்றி மானத்தையும் பறிக்கும் ஆயுதம். அப்படியொரு வாழ்க்கையை, அரசு வேலைவாய்ப்பை இழந்து விடுவீர்கள் என்று மிரட்டுவதன் மூலம் போராட்டக் குணத்தின் மீது தண்ணீர் ஊற்றுகிறது உளவுத்துறை. அரசுப்பதவி என்பது ஆளும் வர்க்கத்துக்குச் செய்யும் ஊழியம்.  அங்கே மக்கள் விரோத நடவடிக்கைகள் மட்டுமே சாத்தியம். அத்தகைய பதவிகளைப் பெறுவதை வாழ்க்கை இலட்சியமாக கொண்டதனால்தான், ஓட்டுக்கட்சிகள் பிழைப்புவாதிகளாக இருக்கிறார்கள். மக்களின் கண்ணீரை தன் சொந்த ஆதாயத்துக்கு பயன்படுத்தும் இழிபிறவிகளாக இருக்கிறார்கள்.

நடைபெற்று வரும் இந்த மாணவர் போராட்டத்திலிருந்து, மக்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்ட, போராட்ட குணம் கொண்ட ஒரு புதிய தலைமுறை உருவாகவேண்டும். உருவாக்குவோம்.

(18.3.2013 அன்று எழுதப்பட்டு புதிய கலாச்சாரம் – மார்ச், 2013 இதழில் வெளிவந்துள்ள தலையங்கம்)

 1. தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். எப்படிப்பட்ட வஞ்சகமும் அநியாயமும் ஈழ மக்களுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியாத மாணவர்கள் பல இடங்களில் சிரித்துக்கொண்டே குரல் எழுப்புவதையும் மறியல் செய்வதையும் புகைப்படங்களில் காண முடிந்தது. இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளுக்கு காரணம் அறியாமையே. இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இன்றைய மாணவர்கள் தான் எதிர்காலத்தில் பல்வேறு அதிகார அமைப்புக்களிலும் தொழில்களிலும் (உள்ளூரில் இருந்து உலகளவில்) பொறுப்பு வகிக்கப்போகிறவர்கள். அடுத்த தலைமுறைக்கு இந்த விடயங்களை கொண்டு போகிறவர்களும் இவர்கள் தான். ஆகவே தமிழகத்து மாணவர்கள் ஈழ விவகாரத்தில் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கு விளக்கி அறிவூட்ட வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடிய மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. சட்டக்கல்லூரி மாணவர்களை பற்றி பொது மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. எப்போதும் கல்லூரிக்குள் ரகளை செய்பவர்கள், சாதி மோதலில் ஈடுபடுபவர்கள் என்னும் எண்ணம் உள்ளது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் அதிகம் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களுக்கு மனிதாபிமான உணர்வு இல்லையா? கடின உழைப்புக்கும் நுண்ணறிவுக்கும் சொந்தக்காரர்களான அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது.
  இன்றைக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்களாகவும் மிகப்பெரிய பதவிகளிலும் இருக்கிறார்கள். பலர் பெரும் பணக்காரர்களாக உள்ளார்கள். ஆகையால் தான் இந்தியா போன்ற பெரிய நாடுகளின் தடைகளையும் மீறி சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக இவர்களால் உலகளவில் லாபி செய்யவாவது முடிகிறது. இன்றைய உலகில் சாதாரண மக்கள் எத்தனை கோடி பேர் ஒன்றாக சேர்ந்து கொண்டு போராடினாலும் அதற்கு பலன் அவ்வளவாக இருக்காது. ஆனால் அறிவுஜீவிகளை அதிகம் கொண்ட ஒரு சிறிய இனம் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். வெறும் ஒன்றரை கோடி பேர்களை கொண்ட யூத இனம் இதற்கு ஒரு உதாரணம். இந்திய மக்கள் தொகையில் வெறும் இரண்டு சதம் கூட இல்லாத பார்ப்பனர்கள் மொத்த இந்தியாவையே கட்டுப்படுத்துவதற்கு காரணம் அவர்களின் சாதி அறிவுஜீவிகளை அதிகம் கொண்டிருப்பதால் தான். ஆகவே தமிழகத்தில் மிகுந்த ஆங்கில புலமையும் தமிழ் இன உணர்வும் கொண்ட திறமையான மாணவர்களை உருவாக்கவேண்டும். உலகெங்கிலும் நம் மக்கள் உயர் அதிகார பீடங்களை அலங்கரிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நம் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

  இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. சிங்களர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடி தான். ஆனால் தனி நாடும் இறையாண்மையும் இருப்பதால் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிடையே இவ்விடயத்தில் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையும் தேவை. ஆனால் தி.மு.க என்னும் காட்டிக்கொடுக்கும் கூட்டிக்கொடுக்கும் நயவஞ்சக கட்சி இருக்கும் வரை தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை வருவது கடினம் என்றே தோன்றுகிறது. இவர்களின் ‘டெசோ’ சார்பில் நடந்த முழு அடைப்பே இதற்கு ஒரு உதாரணம். ஆளும் கட்சியின் ஆதரவு மறைமுகமாகவாவது இருந்தால் தான் இம்மாதிரியான போராட்டங்கள் முழு வெற்றியடைய முடியும். ஆனால் ஆளும் அ.தி.மு.க-வின் ஒப்புதல் இல்லாமல் கருநாநிதியாலும் அவரின் எடுபிடிகளாலும் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்டது தான் இந்த டெசோ பந்த். இப்போது தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த ஈழப்பேரழிவை முன்னிறுத்தி சுய ஆதாயம் தேட கருநாநிதி முயன்று வருகிறார். வரும் நாட்களில் இவரும் இவர் கட்சியும் எடுபிடிகளும் பல்வேறு போராட்டங்களையும் பித்தலாட்டங்களையும் முன்னெடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வார்கள். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வருகிறதல்லவா? ஆகவே கொலைகாரனின் கூட்டாளியாக இருந்து ஆதாயம் தேடியது போதாதென்று பிண வீட்டிலும் ஆதாயம் தேடும் இந்த மாதிரியான திராவிட கழிசடைகளிடம் தமிழகத்து மக்கள் வரும் நாட்களில் உஷாராக இருக்க வேண்டும். அது தான் இப்போதைய தேவை.

  • //தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள்.//
   இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்று நீங்கள் சொல்வது யாரை? மலையகத் தமிழர்களையா? அப்படியானால் அவர்களுக்கும் வடக்கு கிழக்குத் தமிழர்களைப் போல பாரம்பரிய பிரதேசம் உண்டு. அவர்களும் வட-கிழக்கு தமிழர்களைப் போன்ற தேசிய இனத்தவரே. மலையகத் தமிழர்கள் இந்தியாவிலிருந்து சென்றதால் இன்னும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்று இன்னும் அழைத்தால் உங்களை ஆபிரிக்க வம்சாவளித் தமிழர் என்றுதான் அழைக்க வேண்டும்.

 2. முதலாளித்துவ நெருக்கடி தன்னெழுச்சியான போராட்டங்களை உலகம் முழுவதும் தோற்றுவித்திருக்கின்றது. இப் போராட்டங்களை எல்லாம் மக்கள் சார்ந்த புரட்சிகர அரசியல் தலைமைகள் வழிநடத்துவதற்குப் பதிலாக எதிரிகளால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. வால் ஸ்ரீட் போராட்டத்திலிருந்து அரபு நாடுகளின் எழுச்சி வரைக்கும் பிற்போக்கு அரசியல் தலைமைகளால் கையகப்படுத்தப்பட்டு சீரழிக்கப்பட்டடுகள்ளது. இந்த நிலைமையைப் தமிழக மாணவர்கள் புரிந்துகொள்வதும் புரட்சிகர அரசியல் தலைமைகளை அடையாளம் கண்டுகொள்வதும் அவசியம்.
  http://inioru.com/?p=34259

 3. பேருடைமை வர்க்கங்களின் ஆளும் கும்பல்கள் மக்களின்,இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் பலவற்றை கடந்த காலங்களில் அடக்கியொடுக்கியிருக்கிறது,அதைவிட அதிகமாக திசைதிருப்பியிருக்கிறது.இந்த உண்மைகளை கவனத்தில் கொள்ளவில்லையெனில் இப்போதைய மாணவர் போராட்டங்களும் திசைதிருப்பப்பட்டுவிடும்.எனவே மாணவர் போராட்டங்கள் உடனடியாக மக்கள் போராட்டங்களுடன் இணைக்கப்படவேண்டும்,சரியான தலைமை உருவாகவேண்டும்.

Leave a Reply to கெளதம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க