privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககோவில்பட்டி சிலை உடைப்பு: தேவர் சாதிவெறி ரவுடித்தனம்!

கோவில்பட்டி சிலை உடைப்பு: தேவர் சாதிவெறி ரவுடித்தனம்!

-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் சங்கரலிங்கபுரம் பகுதியில் 23/03/2013 அன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத சிலரால் தேவர் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் இரும்பு கிராதி வைத்து பாதுகாக்கப்பட்டிருக்கும் அந்தச் சிலையை அவ்வளவு எளிதாக யாரும் உடைத்துவிட முடியாது. அதனால் இரும்பு கிராதியின் இடைவெளி வழியே கடப்பாரையை உள்ளே செலுத்தி சிலையின் மூக்கையும் கையையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். இது காலை 6.30 மணிக்கு அந்தப் பகுதி வழியே சென்றவர்களால் கவனிக்கப்பட்டு காட்டுத்தீ போல் செய்தி பரவுகிறது. 8.30 மணிக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்தப்பகுதியில் ஒன்று திரள்கின்றனர். மூக்கிலும் கையிலும் லேசாக சேதப்படுத்தப்பட்டிருப்பது போதாது என எண்ணினார்களோ என்னவோ இரும்பு கிராதிக் கூண்டு தூக்கி வீசப்படுகிறது. செங்கல் சிமெண்டால் செய்யப்பட்ட அந்தச் சிலை முற்றிலும் தகர்க்கப்படுகிறது. எட்டரை மணிக்கு முன்பு மூக்கும் கையும் மட்டுமே சேதப்படுத்தப்பட்டிருப்பதை நேரில் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். மட்டுமல்லாது சேதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட கடப்பாறையும் இரும்புக்கூண்டுக்கு உள்ளேயே கிடந்திருக்கிறது. பிறகு அந்தக் கடப்பாறை குறித்து தகவல் இல்லை. யார் உடைத்தார்கள் என்பதற்கு முக்கியமான தடயமாக இருந்திருக்கக் கூடிய அந்தக் கடப்பாறை குறித்து காவல்துறையும் அக்கரை கொள்ளவில்லை.

கோவில்பட்டி
படம் : மாலைமலர்

ஓர் ஓடையால் கிழக்கு மேற்காக பிரிக்கப்பட்டிருக்கும் சங்கரலிங்கபுரம் பகுதியில் மேற்குப் பகுதியில் தேவர் சாதியினரும் கிழக்குப் பகுதியில் தாழ்த்தப்பட்ட (பள்ளர்) சாதியினரும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களிடையே அவ்வப்போது சிறு சிறு உரசல்களும் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கின்றன. ஜான் பாண்டியனின் கொடிக்கம்பை வெட்டிச் சரித்தது, திருவிழாக்களின் போது ஒலிபெருக்கியை சப்தமாக வைக்கக் கூடாது என்று தகராறு செய்வது, போவோர் வருவோரை இழிவாக பேசுவது, தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பொதுப்பாதையை அடைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது, கபாடிக் குழுவில் எதிரெதிர் குழுவினர் வென்றுவிடக் கூடாது என்பதற்காக குறுக்கு வழிகளைக் கையாள்வது என எப்போதும் தேவர் சாதியினரின் கைதான் இங்கு ஓங்கியிருக்கும். இந்த நிலையில் தான் சிலை சேதப்படுத்தப்பட்ட நிகழ்வு நடந்திருக்கிறது.

எட்டரை மணிக்கு திரண்ட கூட்டத்தினர் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிராக மூன்று கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் செய்கிறார்கள்.

1. உடைக்கப்பட்ட சிலைக்கு மாற்றாக உடனே மாற்றுச் சிலை நிறுவப்பட வேண்டும்.
2. இடித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
3. சங்கரலிஙகபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பொது ரேஷன் கடையையும், சுடுகாட்டையும் தனித்தனியாக மாற்றவேண்டும்.

காவல்துறை உயரதிகாரிகள் அங்கே வந்து கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம், இன்றே வேறொரு சிலையை தருவித்துத் தருகிறோம் என்று உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்படுகிறது.

ஆனால் இதன் பிறகு அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் புது ரவுடிகளும், மறுகாலனியாக்கத்தால் பயனடைந்த புதுப்பணக்காரர்களும் பிரச்சனையை முடித்துவிட விரும்பாமல் கோவில்பட்டி நகரெங்கும் வாகனங்களில் வலம் வந்து கடையை அடைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். கடையை அடைக்க மறுத்த 15 கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. இப்படி அடித்து நொறுக்கப்பட்ட கடைகளில் தேவர்சாதியினர் நடத்தும் கடைகளும் அடக்கம். 4 பஸ்களும் சேதப்படுத்தப்படுகின்றன. ஒரு காவலர் மட்டும் கடையடைப்பை எதிர்க்க அவர் தாக்கப்படுகிறார். நகரெங்கும் இவர்கள் சுதந்திரமாக சுற்றி வந்து ரவுடித்தனம் செய்தும், கவல்துறையினரையே அடித்துப் போட்ட பின்பும் இந்த ரவுடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மட்டுமல்லாமல் கடையை அடைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று புகார் செய்தபோது, “சொல்கிறார்கள் அல்லவா கடையை அடைத்துவிட்டுப் போக வேண்டியது தானே” என்று ஒத்தூதியிருக்கிறார்கள். இதனிடையே சிலை உடைப்புக்கு காரணமானவர்கள் என்று கூறி 25 வயதிற்குட்பட்டவர்கள் 11 பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. எந்த அடிப்படையில் அவர்களைக் கைது செய்தார்கள் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. யாரையாவது கைது செய்து காட்டவில்லை என்றால் பிரச்சனையாகும் எனும் எண்ணத்திலேயே வழக்கம் போல் கைது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். கிழக்கு பகுதி மக்களோ என்ன நடக்குமோ எனும் பதட்டத்தில் இதை எதிர்ப்பதற்கும் இயலாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாது, திரைப்படங்களில் காமடியனாக வந்து போணியாகாமல் சாதி வெறியனாக வலம் வந்து கொண்டிருக்கும் கருணாஸ் இரவில் கோவில்பட்டி வந்து, அனைத்து மக்களும் நலமாக வாழ வேண்டும் என்றெண்ணி தன் வாழ்நாளை அர்ப்பணித்த தேவர் சிலையை இடித்தார்களே காந்தி சிலையை இடிப்பார்களா என்று உசுப்பேற்றி விட்டு கருணாநிதி பாணியில் இந்த நேரத்தில் தான் நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று பேசிச் சென்றிருக்கிறார்.

பின்னர் கன்யாகுமரி மாவட்டம் மயிலாடியிலிருந்து போலீசின் ஏற்பாட்டில் கற்சிலை ஒன்று மதியம் 3.30 மணிக்கு கொண்டுவரப்பட்டு மேளதாளத்துடன் ஏற்கனவே சிலை இருந்த இடத்திற்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது.

மறுநாள் முற்பகல் 11 மணிவரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. 11 மணிக்கு மேல் மேற்குப் பகுதியின் பெண்கள் கையில் கம்பு துடைப்பம் போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டு கிழக்குப் பகுதிக்கு சென்று தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். காவலுக்கு நின்ற போலீசார் அவர்களை தடுக்கவோ, திருப்பியனுப்பவோ செய்யவில்லை. மாறாக அவர்களுக்கு துணை நின்றுள்ளனர். ஏனென்றால் அங்கு காவல் பணிக்காக கோவில்பட்டி பகுதியிலுள்ள தேவர்சாதி காவலர்களை மட்டும் பொருக்கியெடுத்து போட்டிருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து அந்தக் கும்பலுடன் ஆண்களும் இணைந்து கொண்டார்கள். இதில் மேற்குப் பகுதியை ஒட்டியிருக்கும் பால்கார அம்மாவின் வீட்டையும், மாடுகள் கட்டுவதற்கான கொட்டகையையும் முழுவதும் இடித்து தகர்த்திருக்கிறார்கள். குறிப்பாக மேற்குப்பகுதியுடன் இணைந்திருக்கும் பத்து வீடுகளை மட்டும் குறி வைத்து அடித்திருக்கிறார்கள். அதிலும் தர்மபுரி தாக்குதல் போலவே, நேரடியாக ஆட்களைத் தாக்காமல் பொருட்களை சேதப்படுத்துவதிலேயே கண்ணாக இருந்திருக்கிறார்கள்.

போதிய கால அவகாசம் அளித்த பின்னர் தடுக்க முயன்ற காவல் துறை மீதும் மேற்குப் பகுதியினர் கல்வீசி தாக்கியிருக்கின்றனர். இதனால் தடியடி நடத்தி ஆதிக்க வெறியர்களை அடித்து விரட்டியிருக்கின்றனர். அதேநேரம் அந்தப் பகுதியில் இருக்கும் சில வழக்குறைஞர்களும் மக்களும் ஒன்றிணைந்து தாக்குதலை தடுக்கவும், சிலையை உடைத்ததாக பொய்யாகக் கூறி கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களை விடுதலை செய்யவும் கோரி அம்பேத்கார் சிலை முன்பு சாலை மறியல் செய்திருக்கின்றனர். ஆதிக்க சாதியினர் சாலை மறியல் செய்தபோது கோரிக்கைகளை ஏற்று ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்து அதன்படி சிலையையும் வரவழைத்துக் கொடுத்த காவல்துறை ஒடுக்கப்பட்டவர்கள் சாலை மறியல் செய்த போது அவர்களிடம் என்னவென்று கேட்காமல் தடியடி நடத்தி கலைத்திருக்கின்றனர். தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டு பதட்டம் தடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகமெங்கும் ஈழ மக்களுக்காக எழுச்சியும் போராட்டங்களும் நடந்துவரும் இவ்வேளையில் மக்கள் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பும் வண்ணம் இராமேஸ்வரம், கோவில்பட்டி என திட்டமிட்டு கலவரச் சூழல் ஏற்படுத்தப்பட்டு வருவதாக எண்ணத் தோன்றுகிறது. தமிழுணர்வை விட தேவர் சாதி  உள்ளிட்ட ஆதிக்க சாதி உணர்வு அதிகம் என்பதால் அப்படித் தோன்றுகிறது. அதிலும் ஆதிக்க சாதியினருக்கு ஒரு மாதிரியும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வேறொரு மாதிரியும் நடந்து கொண்டு கிளப்பப்படும் சிறு பொறிகளை ஊதி நெருப்பாக மாற்ற காவல்துறை முயல்வதாகவும் தெரிகிறது. அந்தப் பகுதியில் இருக்கும் பாலன் எனும் இரகசிய காவலரின் குடும்பத்தினரும் உறவினர்களும் நடந்த சாலை மறியலிலும் கலவரத்திலும் முன்னணியில் நின்றிருக்கின்றனர். என்றாலும் மக்களிடம் போதிய ஆதரவு இல்லாததால் பெரிய அளவில் எதுவும் நடக்காமல் முடிவுக்கு வந்திருக்கிறது. இதை அனைத்து பகுதி மக்களும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உணர்ச்சியை தூண்டிவிடும் வண்ணம் நடைபெறும் அரசின் சதிகளுக்கு பலியாகாமல் முறியடித்து சமூகப் பிரச்சனைகளுக்கான நம்முடைய போராட்டங்களை தொடர வேண்டும் என்பதே நம்முடைய நலனுக்கு உகந்ததாக இருக்கும்.

– வினவு செய்தியாளர்