privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஈழம்: சென்னையைக் குலுக்கிய மாணவர் முன்னணியின் பேரணி, ஆர்ப்பாட்டம்!

ஈழம்: சென்னையைக் குலுக்கிய மாணவர் முன்னணியின் பேரணி, ஆர்ப்பாட்டம்!

-

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி இன்று நடத்திய ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு உற்சாகத்தை வழங்கியது என்றால் மிகையாகாது

ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு மாணவர்கள் போராட்டம் ஓய்ந்து விடும் என்று நினைத்தவர்களின் எண்ணத்தை பொய்யாக்கி ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் சார்பில் நடந்த பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும்  நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானம் ஒரு ஏமாற்று!
இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சே கும்பலை தண்டிக்க
நூரம்பர்க் போன்ற ஒரு விசாரணையே சரியான மாற்று

என்ற முழக்கங்களுடன் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும், போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசு தாக்கியதைக் கண்டித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகிலுள்ள பூங்கா நகரிலிருந்து தொடங்கி பேரணியும் மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

பேரணிக்கு ஏதோ 50 பேர் வருவார்கள் என்று போலீஸ் எதிர்பார்த்திருந்தது, ஆனால் 25க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 800க்கும் அதிகமான மாணவர்கள் உணர்வுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.  இதில் 5 பொறியியல் கல்லூரிகளும் அடக்கம்.  பேரணியின் வழி நெடுக பகுதி மக்கள் கூடி நின்று மாணவர்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவை தெரிவித்தனர். பேரணியில் சென்ற மாணவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்தனர். பேரணி பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு, கூடி நின்ற மக்களிடம் மாணவர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் உரையாற்றினார்.

ராஜபக்சே போலவும், அமெரிக்க அதிபர் ஒபாமா போலவும் மன்மோகன் சிங் போலவும் வேடமிட்ட நபர்கள் சிங்கள இராணுவத்தினரை பயன்படுத்தி ஈழத் தமிழ் மக்களை படுகொலை செய்ததை சித்தரிக்கும் காட்சிகளை தோழர்கள் நடித்துக் காட்டினர்.

மெமோரியல் ஹால் முன்பு நூற்றுக் கணக்கான மாணவர்கள் கூடி நின்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இறுதியில் தோழர் கணேசன் உரை நிகழ்த்தினார்.

மாணவர்கள் போராட்டங்களை கைவிட்டு படிக்கத் திரும்ப வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னதற்கு பதிலாக, ‘நாங்கள் படித்துக் கொண்டே உரிமைகளுக்காக போராடுவோம், மூடியிருக்கும் கல்லூரிகளை திறக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று ஜெயலலிதாவின் பொய்யான ஈழப் பாசத்தை அம்பலப்படுத்தி தோழர் கணேசன் பேசினார். மேலும் ஜெனிவா தீர்மானத்தின் மோசடியையும், ஓட்டுக்கட்சிகள் ஈழ ஆதரவு அலையை அறுவடை செய்யும் பித்தலாட்டத்தையும் மாணவர் போராட்டத்தை சீர்குலைக்க அவர்கள் செய்யும் சதியையும் அம்பலப்படுத்தி பேசினார். நேற்று காங்கிரஸ் குண்டர்கள் திருச்சியில் மாணவர்களை தாக்கியதை கண்டித்தவர், காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் கருமாதி செய்யப்படும் என்றார். பேரணி துவங்கியதிலிருந்து மாணவர்கள் அனைவரும் இறுதி வரை கலையாமல் கட்டுப்பாட்டுடனும், போராட்ட உணர்வு குன்றாமலும் பங்கேற்றது வந்திருந்த பத்திரிகையாளர்களை ஆச்சரியமூட்டியது.

கல்லூரிகள் மூடப்பட்டிருந்த விடுமுறையின் போதும் பெருந்திரளான மாணவர்கள் பேரணியிலும் ஆர்ப்பாட்டதிலும் கலந்து கொண்டனர். ‘நமது இறுதி இலக்கை அடையும் வரை தொடர்ந்து போராடுவோம்’ என்று மாணவர்கள் உறுதி ஏற்றுக் கொண்டனர்.

படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.

வீடியோ