ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி இன்று நடத்திய ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கு உற்சாகத்தை வழங்கியது என்றால் மிகையாகாது
ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு மாணவர்கள் போராட்டம் ஓய்ந்து விடும் என்று நினைத்தவர்களின் எண்ணத்தை பொய்யாக்கி ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் சார்பில் நடந்த பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானம் ஒரு ஏமாற்று!
இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சே கும்பலை தண்டிக்க
நூரம்பர்க் போன்ற ஒரு விசாரணையே சரியான மாற்று
என்ற முழக்கங்களுடன் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும், போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசு தாக்கியதைக் கண்டித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகிலுள்ள பூங்கா நகரிலிருந்து தொடங்கி பேரணியும் மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
பேரணிக்கு ஏதோ 50 பேர் வருவார்கள் என்று போலீஸ் எதிர்பார்த்திருந்தது, ஆனால் 25க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 800க்கும் அதிகமான மாணவர்கள் உணர்வுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் 5 பொறியியல் கல்லூரிகளும் அடக்கம். பேரணியின் வழி நெடுக பகுதி மக்கள் கூடி நின்று மாணவர்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவை தெரிவித்தனர். பேரணியில் சென்ற மாணவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்தனர். பேரணி பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு, கூடி நின்ற மக்களிடம் மாணவர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் உரையாற்றினார்.
ராஜபக்சே போலவும், அமெரிக்க அதிபர் ஒபாமா போலவும் மன்மோகன் சிங் போலவும் வேடமிட்ட நபர்கள் சிங்கள இராணுவத்தினரை பயன்படுத்தி ஈழத் தமிழ் மக்களை படுகொலை செய்ததை சித்தரிக்கும் காட்சிகளை தோழர்கள் நடித்துக் காட்டினர்.
மெமோரியல் ஹால் முன்பு நூற்றுக் கணக்கான மாணவர்கள் கூடி நின்று முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இறுதியில் தோழர் கணேசன் உரை நிகழ்த்தினார்.
மாணவர்கள் போராட்டங்களை கைவிட்டு படிக்கத் திரும்ப வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னதற்கு பதிலாக, ‘நாங்கள் படித்துக் கொண்டே உரிமைகளுக்காக போராடுவோம், மூடியிருக்கும் கல்லூரிகளை திறக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று ஜெயலலிதாவின் பொய்யான ஈழப் பாசத்தை அம்பலப்படுத்தி தோழர் கணேசன் பேசினார். மேலும் ஜெனிவா தீர்மானத்தின் மோசடியையும், ஓட்டுக்கட்சிகள் ஈழ ஆதரவு அலையை அறுவடை செய்யும் பித்தலாட்டத்தையும் மாணவர் போராட்டத்தை சீர்குலைக்க அவர்கள் செய்யும் சதியையும் அம்பலப்படுத்தி பேசினார். நேற்று காங்கிரஸ் குண்டர்கள் திருச்சியில் மாணவர்களை தாக்கியதை கண்டித்தவர், காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் கருமாதி செய்யப்படும் என்றார். பேரணி துவங்கியதிலிருந்து மாணவர்கள் அனைவரும் இறுதி வரை கலையாமல் கட்டுப்பாட்டுடனும், போராட்ட உணர்வு குன்றாமலும் பங்கேற்றது வந்திருந்த பத்திரிகையாளர்களை ஆச்சரியமூட்டியது.
கல்லூரிகள் மூடப்பட்டிருந்த விடுமுறையின் போதும் பெருந்திரளான மாணவர்கள் பேரணியிலும் ஆர்ப்பாட்டதிலும் கலந்து கொண்டனர். ‘நமது இறுதி இலக்கை அடையும் வரை தொடர்ந்து போராடுவோம்’ என்று மாணவர்கள் உறுதி ஏற்றுக் கொண்டனர்.
படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
வீடியோ
சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக இந்த பதிவு இடையில் முழுமையாக இல்லாமல் விடுபட்டிருந்தது, சரிசெய்யப்பட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.
ஈழம் மாணவர்களை ஒன்றுபட்டு போராடச்செய்துள்ளது.மாணவர்களின் போராட்டம்,தமிழக மற்றும் இந்திய உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தி போராடச்செய்யவேண்டும்.மாணவர் ஒற்றுமை ஓங்கட்டும்,போராட்டம் வெல்லட்டும்.
ஈழ போரட்டத்தில் இந்திய அரசுக்கும்,மாணவர்களை ஒடுக்கும் காக்கிச்சட்டை ரவுடிகளுக்கும். மாணவர்கள் கொடுத்த முதல் செருப்படி இந்த ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் போரட்டம் தோடரட்டும் மாணவர்கள் போரட்டம் ஓங்குக மாணவர்கள் போரட்டம்
நன்றி!
ஏதோ வலுவான “சக்தி” பின்புலத்திலிருந்து மாணவர்களை இயக்குகிறது.
அந்த ‘சக்தி’, அநீதிக்கெதிராகப் போராட வேண்டும் என்ற, மனிதர்களுக்கே உரிய ‘நியாய உணர்வு’ தான்.
சுயநலமுள்ள சுரண்டும் வர்க்கத்துக்கு மட்டுமே இப்படித் தோன்றும்.
எப்படி முதலாளித்துவ வர்க்கத்துக்கு ‘சொத்துக் குவிப்பு’ப் பேராசை எனும் ‘சக்தி’ ‘இயல்பாகவே’ பின்னிருந்து இயக்குகிறதோ அப்படி!
நான் சொல்வதையே செம்பியன் சொல்லிவிடுகிறார்.
தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். எப்படிப்பட்ட வஞ்சகமும் அநியாயமும் ஈழ மக்களுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியாத மாணவர்கள் பல இடங்களில் சிரித்துக்கொண்டே குரல் எழுப்புவதையும் மறியல் செய்வதையும் புகைப்படங்களில் காண முடிந்தது. இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளுக்கு காரணம் அறியாமையே. இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இன்றைய மாணவர்கள் தான் எதிர்காலத்தில் பல்வேறு அதிகார அமைப்புக்களிலும் தொழில்களிலும் (உள்ளூரில் இருந்து உலகளவில்) பொறுப்பு வகிக்கப்போகிறவர்கள். அடுத்த தலைமுறைக்கு இந்த விடயங்களை கொண்டு போகிறவர்களும் இவர்கள் தான். ஆகவே தமிழகத்து மாணவர்கள் ஈழ விவகாரத்தில் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கு விளக்கி அறிவூட்ட வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடிய மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் அதிகம் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களுக்கு மனிதாபிமான உணர்வு இல்லையா? கடின உழைப்புக்கும் நுண்ணறிவுக்கும் சொந்தக்காரர்களான அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது.
இன்றைக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்களாகவும் மிகப்பெரிய பதவிகளிலும் இருக்கிறார்கள். பலர் பெரும் பணக்காரர்களாக உள்ளார்கள். ஆகையால் தான் இந்தியா போன்ற பெரிய நாடுகளின் தடைகளையும் மீறி சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக இவர்களால் உலகளவில் லாபி செய்யவாவது முடிகிறது. இன்றைய உலகில் சாதாரண மக்கள் எத்தனை கோடி பேர் ஒன்றாக சேர்ந்து கொண்டு போராடினாலும் அதற்கு பலன் அவ்வளவாக இருக்காது. ஆனால் அறிவுஜீவிகளை அதிகம் கொண்ட ஒரு சிறிய இனம் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். வெறும் ஒன்றரை கோடி பேர்களை கொண்ட யூத இனம் இதற்கு ஒரு உதாரணம். இந்திய மக்கள் தொகையில் வெறும் இரண்டு சதம் கூட இல்லாத பார்ப்பனர்கள் மொத்த இந்தியாவையே கட்டுப்படுத்துவதற்கு காரணம் அவர்களின் சாதி அறிவுஜீவிகளை அதிகம் கொண்டிருப்பதால் தான். ஆகவே தமிழகத்தில் மிகுந்த ஆங்கில புலமையும் தமிழ் இன உணர்வும் கொண்ட திறமையான மாணவர்களை உருவாக்கவேண்டும். உலகெங்கிலும் நம் மக்கள் உயர் அதிகார பீடங்களை அலங்கரிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நம் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்.
இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. சிங்களர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடி தான். ஆனால் தனி நாடும் இறையாண்மையும் இருப்பதால் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிடையே இவ்விடயத்தில் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையும் தேவை. ஆனால் தி.மு.க என்னும் கட்சி இருக்கும் வரை தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை வருவது கடினம் என்றே தோன்றுகிறது. இவர்களின் ‘டெசோ’ சார்பில் நடந்த முழு அடைப்பே இதற்கு ஒரு உதாரணம். ஆளும் கட்சியின் ஆதரவு மறைமுகமாகவாவது இருந்தால் தான் இம்மாதிரியான போராட்டங்கள் முழு வெற்றியடைய முடியும். ஆனால் ஆளும் அ.தி.மு.க-வின் ஒப்புதல் இல்லாமல் கருநாநிதியாலும் அவரின் எடுபிடிகளாலும் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்டது தான் இந்த டெசோ பந்த். இப்போது தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த ஈழப்பேரழிவை முன்னிறுத்தி சுய ஆதாயம் தேட கருநாநிதி முயன்று வருகிறார். வரும் நாட்களில் இவரும் இவர் கட்சியும் எடுபிடிகளும் பல்வேறு போராட்டங்களையும் பித்தலாட்டங்களையும் முன்னெடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வார்கள். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வருகிறதல்லவா? ஆகவே கொலைகாரனின் கூட்டாளியாக இருந்து ஆதாயம் தேடியது போதாதென்று பிண வீட்டிலும் ஆதாயம் தேடும் இந்த மாதிரியான திராவிட கட்சிகளிடம் தமிழகத்து மக்கள் வரும் நாட்களில் உஷாராக இருக்க வேண்டும். அது தான் இப்போதைய தேவை.
1. ஈழத்தின் வரலாறை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பது மிகச் சரியானதே.
2. அதே வேளை, யூதர்களைப் போல, பார்ப்பனர்களைப் போல தமிழர்களையும் ஒரு ஒடுக்குமுறை கருவியாக மாற்ற வேண்டும் எனக் கருதுவதானது நாம் எதற்காகப் போராடுகிறோமோ அதற்கே எதிரானது.
3. எதற்கெடுத்தாலும் தி.மு.க. வையும் கருணாநிதியையும் வசைபாடிவிட்டால் அது ஈழ விடுதலைக்கு இட்டுச் செல்லும் என்று கருதுவது நகைப்புக்குரியது.ஈழத்தின் எதிரிகள் யார் யாரென்று வரையறுக்கவே தெரியாதவர்கள் தான் ஈழ விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்கின்றனர். இதே தவறை தான் ஈழ ஆதரவாளர்களும் விடுதலைப்புலிகளும் செய்தனர்; இத்தகைய பேரழிவுக்கும் காரணமாயினர்.
மீண்டும்அதையே இங்கிருப்பவர்கள் ஆரம்பத்திலிருந்து துவங்குகின்றனர். வட்டப் பாதைகள் இலக்கை அடைவதில்லை.
பிரச்சனை தமிழர்கள் பூர்வக்குடிகளா அல்லது குடிபெயர்ந்தவர்களா என்பதைவிட மிகச் சிக்கலானது. நாம் இந்த விடயத்தின் முழுப் பரிமாணத்தையும் புரிந்துகொண்டோமா என்பதை பரிசீலிக்க வேண்டியுள்ளது. பல ஈழ ஆதரவாளர்களும் தமக்கு ஈழம் பற்றி எல்லாம் தெரியும் என்றும், அவர்களின் பிரதிநிதிகள் தாங்களே என்றும் காட்டி மக்களைஊம் சில மாணவர்களையும் ஏமாற்றி ஈர்த்து உணர்ச்சிச் சுரண்டலை நிகழ்த்த்தி வருகின்றனர். காங்கிரசைக் குறைசொல்வது, கருணாநிதியைத் திட்டுவது, பிரபாகரனை புகழ்ந்து தனது உறவாகச் சித்தரிப்பது, நாம் நினைத்தால், இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தால், காங்கிரசை ஒலித்தால் ஈழம் மலர்ந்துவிடும் என்று உரக்கப் பேசுவது என்ற பொது உத்தியைத்தான் (steriotyped stratergee) அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஈழ நண்பர்களிடம் “இங்கே பெரும்பாலானோர் தனி ஈழம் கேட்டுப் போராடுகின்றனர்” என்று கூறினோம். “நல்ல கற்பனை” என்று புன்னகை செய்தனர். நம்மால் இப்போதைக்குச் செய்யக் கூடிய ஒரு வேலை தேர்தலைப் புறக்கணித்து ஈழத்தமிழரின் வாழ்வாதாரங்களை பெறவும், அடிப்படை உரிமைகள் மற்றும் குறைந்தபட்ச சுதந்திரத்தை அவர்களுக்கு உறுதிபடுத்தவும் தொடர்ந்து போராடுவதுதான். இறுதி இலக்காக அவர்களின் தன்னுரிமை என்பதே தற்போதைய சாத்தியம்.
நன்றி சலனன் ! என் கருத்தும் அஃதே! இனி தமிழகம், பித்தலாட்டகாரர்களின் லாவணிகளமாக அல்லாமல், சுய சிந்தனை யுள்ள மாணவர்கள் கையில் ஒப்படைக்கலாம்! அறிவை மழுஙகடிக்கும், பிரச்சினையை திசை திருப்பும் பார்பன இந்திய ஏகாதிபத்திய ஆதரவு ஏடுகளை புறக்கணிக்கவும்!
‘புரட்சி இப்போதைக்கு சாத்தியமில்லை; அது மிகச் சிக்கலானது. எனவே முதலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று பின்னர் தேவைப்பட்டால் ஆயுதத்தையும் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி விடலாம்’ என்கிற போலி கம்யூனிஸ்டு மற்றும் ஓடுகாலி முன்னாள் புரட்சிக் குழுக்களின் வாதத்தை ஒத்ததே திரு. புரத்தான் வாதத்தின் சாராம்சமும்.
இந்நூற்றாண்டின் மிகப்பெரிய கொடூரத்தை அனுபவித்த பின்னரும் பிரிந்து போவதைப் பற்றி ஈழ மக்கள் முடிவெடுக்கவில்லை என்று பிரச்சாரம் செய்வது; பொது வாக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்ட தேர்தல் அதிகாரிகளைப் போன்ற பாவனையில், ‘ஈழ நண்பர்கள்’ என சொல்லப்படும் அந்த நபர்களின் ‘நல்ல கற்பனை ‘ என்ற நக்கல் ஆகியவை குரூர நகைச்சுவை.
‘செய்ய முடிந்தவை’ என்று குறிப்பிடப்பட்டள்ள பட்டியலில் உள்ளவை எந்த ஆதாரங்களின், அடிப்படைகளின் கீழ் உத்தரவாதமளிக்கப்படுகின்றன?
தேசிய இன விடுதலை என்பதோ தன்னுரிமை என்பதோ பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் பல்வேறு தேசிய இனங்களையும் ஒன்று கலக்கச் செய்வதற்காக மார்க்சியத்தால் அங்கீகரிக்கப்படும்/வழங்கப்படும் ஒரு (முதலாளித்துவ) ஜனநாயக உரிமையேயன்றி வேறல்ல.
ஈழப் பிரச்சனை முன்னணிக்கு வந்துள்ள வேளையில் இந்தியாவிலும் தேசிய இனப் பிரச்சனைகள் அதிகரித்திருக்கின்ற இன்றைய நிலையில் தேசிய இனப் பிரச்சனை குறித்த மார்க்சிய அடிப்படையிலமைந்த பொது அரங்கிலான ஆழமான விவாதம் தேவை.