privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்!

இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்!

-

ணைய உலகில் கோலோச்சி வந்த கூகுள் இணையதளத்தின் சேவையான கூகுள் ரீடர் (கூகுள் படிப்பான்) தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது.

கூகுள் ரீடர் சன்செட்இணயத்தில் நாம் விரும்பும் வாசிக்கும் இணையதளத்தின் புதிய கட்டுரைகளையும் செய்திகளையும் ஒரே இடத்தில் தொகுத்துப் படிக்க வசதியாக கூகுள் ரீடர் இணைய பக்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது இலவச சேவை. ஆனால் சில நாட்களுக்கு முன் கூகுள் ரீடரில் நுழைந்த வாசகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, நுழைந்தவுடன் ஒரு சேதி “கூகுள் ரீடர் வரும் ஜூன்-30 தேதியுடன் தனது சேவையை நிறுத்திக்கொள்ளும்”.

‘கூகுள் ரீடர் பெரும் எண்ணிக்கையில் புதிய வாசகர்களை ஈர்க்கவில்லை. அதனால் அதை இழுத்து மூடுகிறோம்’ என்று தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது கூகுள் நிர்வாகம்.

கூகுள் ரீடர்க்கு பழக்கப்பட்ட வாசகர்கள் பிற படிப்பான் சேவைகளை (குறிப்பாக இலவச) தேடுவதும், இதுதான்  சாக்கு என்று பிரபல படிப்பான் சேவை தரும் இணையதளங்கள் தங்கள் சேவைகளை கட்டண சேவைகளாக்குவதும் நடந்து வருகிறது. அறிவிப்பு வெளிவந்த 48 மணி நேரத்தில் பிற இணைய படிப்பான் சேவைகளுக்கு 5 லட்சம் வாசகர்கள் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. பலர் கூகுள் ரீடரை மூடக் கூடாது என்று கூகுள் நிர்வாகத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்பி வருகிறார்கள்.

‘கூகுள் ரீடர் சேவையை நிறுத்திக்கொள்கிறது, அவ்வளவு தானே மாற்று சேவைகளுக்கு செல்லலாமே, அதில் விவாதிக்க என்ன இருக்கிறது’ என்று பலர் நினைக்கிறார்கள். விவாதிக்க நிறையவே இருக்கிறது.

இணைய சேவைகள், இணையம் என்பது 21-ம் நூற்றாண்டின் தகவல் தொடர்பு புரட்சிக்கான களம் என்று பலராலும் நம்பப்படுகிறது, அதனால் இணையத்தில் ‘போராளி’களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. ஃபேஸ்புக் புரட்சி, டிவிட்டர் புரட்சி, இணைய சுதந்திரம், கட்டற்ற சுதந்திரம் என்று பலரும் மல்லுக்கட்டி வாதாடிக் கொண்டிருக்கும் சுதந்திரங்களை பற்றித் தான் நாம் பேச வேண்டும்.

ஆனால் ‘புரட்சிக்கு வாய்ப்பையும், கட்டற்ற சுதந்திரத்தையும்’ கொடுக்கும் மெய்நிகர் உலகில் தாங்கள் விரும்பிய படிப்பானை தக்க வைத்துக் கொள்வதற்குக் கூட இணைய போராளிகளுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் இதிலிருக்கும் சோகம்.

இணையத்தை இயக்கி ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும், நுழைந்தவுடனே “ஏ கருணாநிதியே..” “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என ஸ்டேட்டஸ்கள் போட்டு லைக்குகளுக்காக தவம் கிடப்போர் நாளை வருமானமில்லை என்று இந்த வசதியை ஃபேஸ்புக் மூடிவிட்டால் என்ன செய்வர்?

ஆர்குட்டில் இருந்து ஃபேஸ்புக்கிற்கு மாறியது போல், ப்ளாகில் இருந்து கூகுள் பஸ்ஸுக்கு போய், கூகுள் ப்ளஸ்ஸுக்கு மாறியது போல் பரதேசியாய் இன்னொரு இணைய சேவையை தேடி செல்ல வேண்டியதுதான்.

இணைய சேவைகள் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன, அவர்களுக்கு லாபம் வரும் வரையில் அவை தொடர்கின்றன, லாபமில்லை என்றால் ஈவு இரக்கமில்லாமல் கொன்றொழிக்கப்படுகின்றன. கட்டற்ற சுதந்திரம், பேச்சுரிமை, சுதந்திர சந்தையில் வாடிக்கையாளர்தான் ராஜா என்றெல்லாம் முழங்கும் இணைய முற்போக்குவாதிகள் இதை எப்படி எதிர்கொள்வார்கள்?

ஃபேஸ்புக்கில் போராளிகள் போடும் ஸ்டேடஸுக்கும், பகிரும் ‘சே குவாரா’ படங்களுகாகவுமா அந்த இணைய தளம் நடத்தப்படுகிறது? ஒவ்வொரு ஃபேஸ்புக் பயனருக்கும் தெரியும் விளம்பரங்களும், பயனர் பற்றிய தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு விற்கப்படுவதிலும் தான் அந்த இணைய சேவை தொடர்கிறது.

ஒரே ஒரு வலைப்பதிவு பக்கத்தை தொடங்கி அதில் 100 ஹிட்டுகள் வந்தவுடன் கூகுள் விளம்பரத்தை சந்தில் போட்டு, 2000 ஹிட்டுகளுக்கு பின் வீட்டுமனை விளம்பரத்தை சைடில் போடும் பதிவர்களுக்கு இப்படி ஒரு நப்பாசை என்றால் இந்த சேவையை வைத்து பல லட்சங்களை லாபம் ஈட்டத் திட்டமிடும் பன்னாட்டு முதலாளியின் ஆசை எவ்வளவு இருக்கும்?

கூகுளின் ஆசைக்கு ரீடர் சம்பாதிக்கவில்லை, காலி. நாளை கூகுள் மெயில் சம்பாதிக்கவில்லை என்றாலும் காலி. இவை காலி என்பதால் வருமானம் தரும் வேறு சேவைகளை ஆரம்பிப்பார்கள். இத்தகைய சேவைகளை ஏற்கனவே வேறு முறைகளில் பயன்படுத்தி இயங்குபவர்கள் எல்லாம் வேறு வழியின்றி அவர்களது நிபந்தனைக்கு உட்பட்டால்தான் இணைய சேவை வசதிகள் கிடைக்கும். இப்படி இணைய உலகமே முதலாளிகளின் லாப வேட்டையின் வெற்றி தோல்விகளில்தான் இயங்குவதாக மாற்றப்பட்டிருக்கிறது.

இணையம் என்பது அவர்கள் லாபமீட்ட உதவும் வங்கியாகவும், இணைய பயனர்களின் அந்தரங்கத்தை திருடி காசு பார்க்கும் புரோக்கராகவும் தான் இருக்கும். அது விடுவிக்கப்படும் போது தான் உண்மையாகவே மக்கள் நலன் சார்ந்த தகவல் தொடர்பு புரட்சியை அது சாதிக்கும். அந்த நிலைமையை இணையத்தின் வளர்ச்சி சாதித்துவிடாது. ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் உலகமயத்திற்கும் எதிராக உலக மக்கள் அரசியல் களத்தில் நடத்தும் போராட்டத்தின் வெற்றியே உண்மையில் அத்தகைய தகவல் தொடர்பு புரட்சியை கொண்டு வரும். அதுவரை இணையம் என்பது அவர்களின் கையில் கிடைத்திருக்கும் அமுதசுரபி. நாமெல்லாம் அதை தலையில் சுமந்து கொண்டு திரியும் விளம்பர அடிமைகள். அவ்வளவுதான்.

– ஆதவன்