Monday, April 12, 2021

அதிதியின் கதை!

-

ணி இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களிலிருந்து, பாதுகாப்பு வழங்குவதற்கான மசோதா 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இரண்டு வருடங்களாக நிலுவையில் இருந்த இச்சட்டம், லோக்சபாவில் செப்டம்பர் 3 2012 அன்றும், ராஜ்யசபாவில், பிப்ரவரி 26 2013 அன்றும் ஏற்கப்பட்டு இப்போது நடைமுறையில் உள்ளது.

பாலியல் தாக்குதல்
படம் உதவி : இந்து நாளிதழ்

இந்த சட்டத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை, ஒழுங்குபடுத்தப்பட்டு நடத்தப்படுவதாக சொல்லப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நடைமுறையிலிருந்து பரிசீலிக்கலாம். பன்னாட்டு நிறுவனங்களானாலும் சரி, உள்ளூர் பெருநிறுவனங்களானாலும் சரி பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் பெண்களின் புகார்கள் பெரும்பாலும் உதாசீனப்படுத்தப்பட்டு அவர்கள் பணியிலிருந்து தூக்கியெறியப்படுகின்றனர் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது கே.பி.எம்.ஜி என்ற பலம் பொருந்திய நிதி மேலாண்மை நிறுவனம்.

உலகம் முழுவதும் 156 நாடுகளில் கிளைகளைக் கொண்ட கே.பி.எம்.ஜி.யின் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத். கொல்கத்தா, புனே, கொச்சி, சண்டிகர், அகமதாபாத்பாத் நகரங்களில் இயங்கும் அலுவலகங்களில் 4,800 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

30 வயதுகளின் இறுதியில் இருந்த சார்டட் அக்கவுண்டன்ட் ஆன, அதிதி போஜ்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)  2006ம் ஆண்டு கே.பி.எம்.ஜி, மும்பை கிளையில் பணியாற்றிவந்தார். அவர் பணியிடத்தில் சக ஊழியர்களாலும், மேல் அதிகாரிகளாலும் பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளானர். ஆபாச மின்னஞ்சல்கள், உடைகளையும் உடலையும் விமர்சிக்கும் அருவருக்கத்தக்க பேச்சுகள், முன்னாள் மேல் அதிகாரியுடன் இருந்த உறவினை கொச்சைப்படுத்தி அநாகரிகமாக பேசுதல் போன்ற மூன்றாம் தரமான நடத்தையை இவர் மேல் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.

தனக்கு நடந்த தாக்குதல்களைக் குறித்து மனித வளத் துறையினரிடம் முறையிட்ட அதிதிக்கு நியாயம் கிடைக்கவில்லை. ‘குழுவாக இணைந்து வேலை செய்யும் தன்மை இல்லாதவர்’ என்று குற்றம் சாட்டப்பட்டு அந்த இயல்பை மாற்றிகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளார். இதனால் அதிதி தன் வேலையை ராஜினாமா செய்தார். முதலில் அதை ஏற்க மறுத்த நிறுவனம், பின்பு அவரை நிரந்தர பணி நீக்கம் செய்து, அவரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது.

ஊடகங்களில் விஷயம் வெளியில் வந்ததும் கே.பி.எம்.ஜி நிறுவனம், உச்சநீதிமன்றத்தின் ‘விசாகா வழிகாட்டல் முறைக்கு’ ஏற்ப விசாரணை கமிட்டியை உருவாக்கியது. ‘தன்னை வேலையிலிருந்து தூக்கி எறிந்தவர்களுக்கு, தன்னைக் கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை’ என்று கூறி விசாரணை கமிட்டியை அதிதி புறக்கணித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை மாதம் 2007-இல், பாலியல் தொல்லைகள் தந்த மூன்று பேரின் மீதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்டிக்காமல் விட்ட ஏழு மேலதிகாரிகளின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்.

அவினாஷ் விஜயசங்கர் – சி.ஏ., விக்ரம் உத்தம் சிங் – நிதித் துறை தலைவர், அபிசர் திவானி -பார்ட்னர், அனீஷ் மலூ – இணை இயக்குனர் ஆகிய குற்றவாளிகள் மீதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக நிலோபர் ஈரானி – இயக்குனர், ரிச்சர்ட் ரெக்கி – சி.ஈ.ஓ., ரஸ்ஸல் பெரேரா, சமீத் மாத்துர் ஆகிய உயர் அதிகாரிகள் மீதும் புகார் பதிவு செய்யப்பட்டது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.எஸ். கந்தேபார்கர், வி.கே.தகில்ரமணி ஆகியோரைக் கொண்ட அமர்வு ஆகஸ்ட் 2008-இல் இந்த வழக்கினை விசாரித்தது. ‘நடந்த பாலியல் குற்றங்களைக் குறித்து, அலுவலகத்தில் அதிதி புகார் செய்ததற்கான ஆதாரங்கள் இல்லையென்றும், நிறுவனத்தின் உட்கட்ட விசாரணையில் அவர் பங்கேற்கவில்லை என்றும்’ காரணங்களை கூறி, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தனர்.

வெற்றி கண்ட கே.பி.எம்.ஜி நிறுவனம், ‘அதிதியின் சார்பாக மகாராஷ்டிரா மாநில பெண்கள் கமிஷன் நடத்திய ஆய்வு நியாயமானதாக இல்லை’ என்று உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. செப்டம்பர் 2008-இல் வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான அமர்வு, ஆய்வு நடவடிக்கைகளை தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. நவம்பர் 2008 உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்க்கும் அதிதியின் மேல் முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் பன்சல் தள்ளுபடி செய்தனர்.

மூன்று பாலியல் குற்றவாளிகளும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மேலாளர்களும் எந்த விதமான தண்டனையும் இல்லாமல் உயர்ந்த பதவிகளில், லட்சங்களில் சம்பாதித்துக் கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.

அதிதி நடந்த கொடுமைகளுக்கு நியாயம் கேட்டு, தேசிய பெண்கள் கமிஷன், மகாராஷ்டிரா மாநில பெண்கள் கமிஷன், மும்பை உயர்நீதி மன்றம், போலீஸ் என்று எல்லாரையும் அணுகியும் நியாயம் கிடைக்காமல் போராடிக்கொண்டிருக்கிறார். மதிப்புடன் வாழும் உரிமையையும் வேலை செய்யும் உரிமையும் இத்தனை ஆண்டுகளாக இழந்துள்ள அதிதி ‘அரசு தன்னை முழுமையாக கைவிட்டுள்ளது’ என்று குமுறுகிறார்.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான, விக்ரம் உத்தம் சிங் கே.பி.எம்.ஜி.யில் முக்கிய பதவி வகித்து வந்திருக்கிறார். பெண்கள் மீதான வன்முறை பற்றிய  ஊடக கவனம் அதிகமான பிறகு அண்மையில் இச்சம்பவம் தொடர்பான செய்திகளும் வெளிவந்து, வழக்கு உயிர்ப்பிக்கப்பட்ட நிலையில்தான் தன் பதவியை சென்ற ஆண்டு இறுதியில் ராஜினாமா செய்துள்ளார்.

நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் ‘பெண்களின் நலன்களை பாதுகாக்கும் நடைமுறைகள் நிறுவனத்தில் இல்லை’ என்பதைக் குறித்து பற்றி மாநில பெண்கள் கமிஷனுக்கு எழுதிய கடிதம் காணாமல் போயிருக்கிறது. அனகா சர்போத்தார் என்ற இக்கமிஷனின் முன்னாள் உறுப்பினர், தான் அந்த கடிதத்தை பார்த்தாக உறுதி செய்தும், கமிட்டியின் மற்ற இரண்டு, பெண் உறுப்பினர்கள் அதை அந்த கடிதத்தை பார்த்ததில்லை என்று கூறுகின்றனர்.

இப்படி எல்லா தரப்பிலும் கே.பி.எம்.ஜி நிறுவனத்தின் செல்வாக்கு கோலோச்சியிருக்கிறது.

ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் அலுவலகங்களை கொண்டிருக்கும் ஐ.எஸ்.எஸ். குழுமத்தை சேர்ந்த ஐ.எஸ்.எஸ். ஹைகேர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணி புரிந்த பெண் ஊழியர் சகானா வில்லியம்ஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் தாக்குதல்களைப் பற்றி புகார் கொடுத்துள்ளார். உடனே அவரை நிரந்தர பணி நீக்கம் செய்து பல தவறுகளுக்கு அவரை பொறுப்பாக்கி  குற்றவாளியாக்கியுள்ளது அந்நிறுவனம். சகானா மீது அவதூறு வழக்கையும் தொடுத்துள்ளது.

சகானா வில்லியம்ஸ் நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூட உயர் நீதிமன்றத்தை அணுகவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.

‘பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பண பலம், செல்வாக்கு மூலம் எந்த விதமான சட்ட மீறல்களிலிருந்தும் தப்பித்து விட முடிகிறது. அவர்களுக்கு எதிராக போராடும் பாதிக்கப்பட்டவர்களை பலியாக்கி, பொருளாதார ரீதியாகவும், நேரடியாகவும் சுரண்டுகிறார்கள்’ என்கிறார் ஜனநாயக மாதர் சங்கத்தின் மகாராஷ்டிரா மாநிலச் செயலாளர் சோனியா கில்.

“பெண்களுக்கு பணியிடங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற உருவாக்கப்பட புதிய மசோதாவில், நிறுவனங்கள் அதன் விதிமுறைகளை பின்பற்றத் தவறினால் அதைப்பற்றி பாதிக்கப்பட்ட பெண் நீதி மன்றதை அணுக முடியும் என்ற வசதி செய்யப்பட்டிருக்கிறது” என்கிறார் சமூக ஆர்வலர் அனாகா சர்போதார்.

ஆனால், “உட்பிரிவு 10ல் வழக்காடலுக்கு முன் சமரச பேச்சு வார்த்தைக்கு இடம் அளிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரை திரும்பப் பெற நிர்ப்பந்திக்கப்படும் வாய்ப்பும், அச்சுறுத்தப்படும் சூழலும் ஏற்படும்” என்கிறார் அவர்.

பெண்களின் உழைப்பை மட்டுமின்றி பாலியல் ரீதியாகவும் சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களை எத்தனை புதிய சட்டங்களும் கட்டுப்படுத்தப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

மேலும் படிக்க
At MNCs sexual harassment complainants face uphill battle

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க