privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்தூக்குத் தண்டனையும் தினமணியின் கொலவெறியும் !

தூக்குத் தண்டனையும் தினமணியின் கொலவெறியும் !

-

ருணை மனுவை நிராகரிப்பதில் குடியரசுத் தலைவர் காலதாமதமாக நடந்து கொண்டார் என்பதால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பஞ்சாபின் தேவேந்திரபால் புல்லர் தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து தினமணி இன்று ஒரு தலையங்கம் (சர்ச்சையில் நியாயமில்லை) எழுதியிருக்கிறது.

தேவேந்திரபால் சிங் புல்லர்
தேவேந்திரபால் சிங் புல்லர்

தலைப்பைப் பார்த்தால் கொஞ்சம் பவ்யமாகத் தெரியும். ஆனாலும் சோழியன் குடுமி சும்மா ஆடுமா, வைத்தி மாமாவின் பேனா விசம் கக்காமல் இருக்குமா?

உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது குறித்தும், பொதுவில் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரியும் நாடெங்கும் நடக்கும் விவாதம் தினமணியின் தூக்கத்தைக் கெடுத்திருக்கும் அதே நேரம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வைத்தியின் மனதை கள்வெறியுடன் ஆடவைத்திருக்கிறது.

சில்லறைத் தகராறு கொலை வழக்குகளோடு தடா, தீவிரவாத வழக்குகளின் தூக்குத் தண்டனைகளை ஒப்பிடக்கூடாது, குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் அறிவுரை கூறக்கூடாது, மீண்டும் பரிசீலிக்குமாறு கேட்க முடியாது, காலதாமதத்தைக் காட்டி தண்டனையைக் குறைக்க முடியாது, என்று தீர்ப்பின் வைர வரிகளை மேற்கோளிடும் வைத்தி, தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் ஏனைய கைதிகளுக்குமான தீர்ப்பு இது; ஒற்றை வரிகளில் ஒவ்வொரு வாதத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ள தீர்ப்பும் இதுதான் என்று உச்சிமோருகிறார்.

தமிழக மூவர் மற்றும் சந்தன வீரப்பன் வழக்கிலுள்ள அப்பாவிகள் உட்பட அனைத்து கைதிகளையும் தூக்கில் போடவேண்டியதுதான் என்று நேரடியாக சந்தோஷப்படமால் தீர்ப்பின் வழியாக சட்டப்படியே மகிழ்ச்சியடைகிறார் வைத்தி. அதாவது இதற்காக யாராவது தினமணியை விமரிசித்திருந்தால் அது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும், ஜாக்கிரதை!

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

குடி அரசை கொலை அரசாக மாற்றிவரும் காங்கிரசு அரசு மற்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் காலத்தில் தினமும் மந்திரம் சொல்வது போல கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு ஏராளமான பேர் தூக்குத்தண்டனைக்கு காத்திருக்கும் நிலையை வைத்தி தீபாவளி போல கொண்டாடுகிறார். அதனால் ஜனாதிபதிகள் மீது வைக்கும் விமரிசனத்தை கொண்டு பொங்கி எழுகிறார்.

கருணை மனுவை கால தாமதாக தள்ளுபடி செய்வதில் குடியரசுத் தலைவர்களுக்கு உள்நோக்கம் இருப்பதாக கூறுவது அபாண்டம், குடியரசுத் தலைவர் பதவி மீதுதான் அரசியல் சாயம் பூசப்படாமல் இருக்கிறது, அதன் மீது சேற்றை வாரி இறைக்க கூடாது என்று பாடம் எடுக்கிறார் வைத்தி.

இந்திரா காந்தி காலம் தொட்டு சோனியா காலம் வரை இடையில் வாஜ்பாயி காலம் உள்ளிட்டு இருந்த குடியரசுத் தலைவர்களெல்லாம் சொக்கத் தங்கமாம். அரசியல் செய்யாத அரிய மாணிக்கங்களாம். இதைக் கேட்டால் பிரியங்கா குழந்தை கூட விழுந்து விழுந்து சிரிக்கும். தங்களது குடும்பத்திற்கு இத்தகைய ரப்பர் ஸ்டாம்ப் அடிமைகள் செய்த சேவைகள் அந்தக் குழந்தைக்குத் தெரியாதா என்ன?

வைத்தி மாமா இன்னும் கொஞ்சம் கூரிய பார்வையுடன் குடியரசுத் தலைவர்களின் யோக்கியதைக்கு சான்று தருகிறார். அதாவது தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிதான் கருணை மனுக்களை விரைந்து முடிவெடுத்தார். அவருக்கு முந்தைய தலைவர்கள் கிடப்பில் போட்டனர். ஏன்? அப்படியாவது அந்த கைதிகளுக்கு வாழ்நாள் கொஞ்சம் நீடிக்கட்டுமே என்ற நப்பாசைதானாம். அப்படி நீட்டி விட்டு இறுதியில் தூக்கு என்று முடிவெடுத்தால் அந்த நீட்டப்பட்ட நாட்கள் இலாபம்தானே என்று பச்சையாக பாயிண்டை முன்வைக்கிறார் வைத்தி. அதாவது வெட்டப்படும் ஆட்டிற்கு தழை வைத்து மஞ்சள் தண்ணி தெளித்தால் அந்த அளவிற்காவது ஆடு ஃபிரஷ்ஷாக இருக்குமே, அது இலாபமில்லையா என்கிறார். தேர்ந்த பாசிஸ்டுகள் கூட இப்படி வக்கணையாக யோசிக்க மாட்டார்கள்.

கருணை அரசியலாக்கப்பட்டு விடுமோ என்றுதான் பல தருணங்களில் மேற்கண்ட குடியரசுத் தலைவர்கள் கருணை மனுக்களை நிராகரிக்காமல் காலதாமதமே மேல் என்று நினைத்தார்களாம். அப்படி கருணை உள்ளம் கொண்டு யோசித்தவர்களைத்தான் நாமெல்லாம் நாக்கில் நரம்பே இல்லாமல் விமரிசிக்கிறோமாம்.

சரி, வைத்தி மாமாவின் பார்வையையே எடுத்துக் கொள்வோம்? அப்சல் குருவின் கருணை மனு தாமதத்திற்கு காரணம் காஷ்மீரில் மீண்டும் ஒரு தலைவலியை வரவழைத்துக் கொள்ள வேண்டாம் என்று ஆளும் வர்க்கம் கருதியதே. பின்னர் காஷ்மீரை விட ‘இந்துக்களின்’ ஓட்டு அதிகம் என்பதால் பாஜகவிற்கு போட்டியாக அப்சல் குருவை கொன்றார்கள். மூவர் தூக்கைப் பொறுத்தவரை தமிழகத்தில் நடந்த போர்க்குணமிக்க போராட்டங்களே இத்தனை ஆண்டு தாமதத்தை சாதித்தது. தற்போது அப்சல், கசாப் வழியில் வேறு வழியின்றி மூவர் தூக்கு கருணை மனுவை தள்ளுபடி செய்வதாக ஒரு கணக்கு காண்பித்து பிரணாப் முகர்ஜியை செயல்பட வைத்தது காங்கிரசு அரசின் முடிவு.

இந்த முடிவால் தமிழகத்தில் காங்கிரசு சுத்தமாக துடைத்தெரியப்படும் என்று தெரிந்தும் சோனியாவிற்காகவோ இல்லை இலங்கை அரசை குஷிப்படுத்தவோ மூவர் தூக்கு கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய அரசியல் சதுரங்க ஆட்டத்தையெல்லாம் காந்தி குரங்கு போல கண், காது, வாய்களை மூடிக்கொண்டு காணாமல் போ என்று சொல்லிக் கொடுக்கிறார் வைத்தி.

இறுதியில் இனி யாரும் குடியரசுத் தலைவர் தாமதமாக முடிவெடுத்தார் என்று கூறிக்கொண்டு வழக்கு போட முடியாது என்று எச்சரிக்கை செய்கிறார் வைத்தி. ஆனாலும் அந்த எச்சரிக்கையுடன் கூடவே கொஞ்சம் கருணையையும் பிச்சை போல போடுகிறார்.

அதாவது குடியரசுத் தலைவரின் நடத்தைக்கு களங்கம் கற்பிப்பதை விட்டுவிட்டு நாடாளுமன்றம் மூலமாக மரண தண்டனை கூடாது என்று மாற்றுவது சரியான வழிமுறையாக இருக்கும் என்கிறார். அதாவது கண்ணுக்கெட்டிய தூரத்தில் மரண தண்டனை ஒழிப்பு என்பது இல்லை என்பதால் கும்பலோடு கும்பலாக மரண தண்டனை ஒழிப்பு என்று கோஷம் போடுவதற்கு வைத்தி மாமா வெட்கப்படவில்லை.

ஆனாலும் அடுத்த வரியில் இந்த வெட்கத்தை அவரது விசேடமான பாசிசம் காட்டிக் கொடுத்து விடுகிறது.

” ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்குச் சமமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தியவர்களுக்கான தூக்கு தண்டனையைக் குறைப்பது கூடாது என்று நாடாளுமன்றம் முழுஆதரவுடன் கருத்து தெரிவிக்குமேயானால், அத்தகைய குற்றவாளிகளுக்கு குடியரசுத் தலைவரும்கூட கருணை வழங்க முடியாது என்பதையும் சட்டப்படி உறுதி செய்துவிட்டால், இத்தகைய சிக்கல் ஏற்படாது. கயிறா? கருணையா? ஏதாவது ஒன்றை விட்டுவிடத்தான் வேண்டும்!”

தினமணிஇதுதான் வைத்தி மாமா எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று அம்மணமாக ஆடும் இடம்.

அதாவது தமிழக மூவர் போன்ற ‘தேசத்தின் மேல் படையெடுத்தவர்களுக்கு” குடியரசுத் தலைவரே கருணை வழங்க முடியாது என்று நாடாளுமன்றம் மூலம் ஒரு சட்டம் கொண்டு வந்துவிட்டால் அவரது கவலை முடிவுக்கு வரும். அதன்படி முதலாவதாக இனி யாரும் குடியரசுத் தலைவரை விமரிசிக்க முடியாது, இரண்டாவதாக தேசத்தின் மீது போர் தொடுத்த பயங்கரவாதிகளுக்கு தூக்கு நிச்சயம். இதுதான் சோழியன் குடுமி ஆடியதன் இரகசியம்.

ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதற்குச் சமமான தீவிரவாத தாக்குதலாக இல்லாமல் ஈழத்தமிழர் மீது போரே தொடுத்தவர்கள்தான் ராஜிவ் காந்தி தலைமையிலான இந்திய அரசாங்கம். இந்த அரசு பயங்கரவாதிகளை காப்பாற்றத்தான் அப்பாவி தமிழக மூவர்களை கொல்ல வேண்டும் என்று குதிக்கிறது வைத்தியின் மனது.

அரசு பயங்கரவாதத்தை ஒரு ஊடக பாசிஸ்டு எப்படி முட்டுக்கொடுப்பார் என்பதை கற்க வேண்டுபவர்கள் உடனடியாக வைத்தி மாமாவிடம் வேலைக்குச் சேருங்கள்! வைத்தி மாமாவின் அருமை பாசிச ஜெயாவுக்கு தெரிந்தது போல இந்திய அரசுக்கு தெரியவில்லையோ என இனி யாரும் கவலைப்படத் தேவையில்லை. தேனொழுக நஞ்சை தயாரிக்கும் லேகியம் வைத்தியிடம் அண்டா அண்டாவாக ஸ்டாக் உள்ளது.