Saturday, August 20, 2022
முகப்பு செய்தி ஒரு வரிச் செய்திகள் - 15/04/2013

ஒரு வரிச் செய்திகள் – 15/04/2013

-

செய்தி: பிரதமர் பதவிக்கான வேட்பாளரை இந்த ஆண்டு இறுதிக்குள் பாரதிய ஜனதா கட்சி அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கெடு விதித்துள்ளது. அவ்வாறு அறிவிக்கப்படும் வேட்பாளர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

நீதி: பன்றிக் கூட்டத்தில் கன்றைத் தேடும் ‘கவித்துவம்’ அதாவது கண்றாவித்துவம் இதுதான்!

______

செய்தி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் தான் கூட்டணியில் இருந்து விலகுவதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் விடுத்து வந்த மிரட்டலை பா.ஜ., புறக்கணித்துள்ளது.

நீதி: இது தலைப்புச் செய்தியாக வந்திருப்பது தினமலரில். அவாளை அடித்தால் இவாளுக்கு வலிக்கும்.

_______

செய்தி: “இந்தியாவிலேயே உண்மையான மதச்சார்பற்ற கட்சி பா.ஜ.க.தான். நரேந்திர மோடி உண்மையான மதச்சார்பற்றவர். நரேந்திர மோடியை பா.ஜ.க.விலிருந்து வேறுபடுத்திப் பேசக் கூடாது” என்று கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

நீதி: ஓநாயை ஓநாய்க் கூட்டத்தில் இருந்து வேறுபடுத்தி பார்ப்பது பிழைதான். இதைக்கூட புரிந்து கொள்ளாத ஜக்கிய ஜனதா தளத்திற்கு பிடித்திருப்பது பைத்தியமா, படியாதா பேரமா?

_______

செய்தி: தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் வேட்பாளர் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என சிவசேனையும், தேர்தலுக்கு பின் ஒருமித்த கருத்தின்படி முடிவு செய்யலாம் என சிரோன்மணி அகாலிதளமும் தெரிவித்துள்ளன.

நீதி: மோடியை முன்வாசலில் வரவேற்றால்தான் பிரச்சினை, பின் வாசல் வழியாக கொண்டு வந்து விட்டால்?

______

செய்தி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையம் அமைப்பதற்காக, கடலோர கண்காணிப்புப் பகுதி ஒப்புதலை வழங்க மத்திய சூற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

நீதி: ஒரு மனிதனை கொலையே செய்த பிறகு கையைக் காலை ஒடிப்பதற்கு யார் அனுமதி கொடுத்தால்தான் என்ன?

______

செய்தி: “உத்தர பிரதேசத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் அரசு, எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் போக்கை கடைப்பிடித்து வருகிறது. எங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமாஜ்வாதி குண்டர்களுக்கு சரியான பாடம் கற்பிப்போம்,” என, அம்மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி எச்சரிக்கை விடுத்தார்.

நீதி: மாயாவதிஜி நீங்கள் செய்தால் பாடம் கற்பித்தல், அவர்கள் செய்தால் பழிவாங்கலா? நீதி, அநீதிக்கு அப்பாற்பட்டதுதானே ஓட்டுக்கட்சிகளின் குழாயடிச் சண்டை?

_____

செய்தி: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், முதல்வராக விருப்பமுள்ளதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.

நீதி: வேம்புலி அம்மன் கோவில் கூழை, க்யூவில் நின்று அம்பானி குடித்த மாதிரி என்ன ஒரு பணிவு!

______

செய்தி: ஆந்திர முன்னாள் முதல்வர், மறைந்த, ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன் மோகன் ரெட்டி மீதான, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், இப்போதைய காங்கிரஸ் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஜெகனுக்கு எதிராக, அமைச்சர்கள் பலர் திரும்பியுள்ளனர்.

நீதி: கூட்டுக் கொள்ளையில் பங்கு போடும் போது இதெல்லாம் சகஜமப்பா!

______

செய்தி: ‘அணைகளில் தண்ணீர் இல்லையெனில், சிறுநீர் கழித்தா பெருக்க முடியும்’ என, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், தன் பேச்சுக்கு பரிகாரம் தேடும் வகையில், நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.

நீதி: தார் பாலைவனத்தில் ஒரு வாரம் சோறு, தண்ணி கொடுக்காமல் தவிக்க விட்டால் கூட இந்த கொழுப்பு குறையாது.

______

செய்தி: கிராமப்புறங்களில் அனைத்து மகளிர் அஞ்சல் நிலையங்களைத் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

நீதி: தனியார் கூரியர் முதலாளிகளுக்காக தபால் சேவையை ஒழித்து வரும் வேளையில் மூடப்போகும் கம்பெனியில் எதுக்கய்யா மகளிர் அஞ்சல் நிலையம்?

______

செய்தி: கடலோரக் காவல்படைக்காக 8 ஹெலிகாப்டர்களைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை ரத்து செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

நீதி: வெளியே தெரியாத படி கமிஷன் வாங்குவதற்குரிய ஏற்பாடுகள் இன்னும் செய்து முடிக்கவில்லை என்று பொருள் கொள்க!

______

செய்தி: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சென்று வந்த, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மதுரையில் தென் மண்டல அமைப்புச் செயலர் அழகிரியை சந்திக்காமல், சென்னை திரும்பினார். இது, தி.மு.க., தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நீதி: பியூஸ் போன பல்பு மாதிரி இதே நியூசை இன்னும் எத்தனை தடவை போடுவார்களோ தெரியவில்லை.

______

செய்தி: ஜெயப்பிரதா எம்.பி.யிடம் கடுமையாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் அமர் சிங் கோரியுள்ளார்.

நீதி: ஜெயப்பிரதா சைரன் காரில் போனதும், அதை உ.பி. அதிகாரிகள் தட்டிக் கேட்டதும், தட்டிக் கேட்டதை தேசியப் பிரச்சினையாக்கும் அமர்சிங்கும்…..இதுதாண்டா இந்தியா!

______

செய்தி: நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் நடக்கவுள்ள விசாரணையின் போது, சி.பி.ஐ., சார்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு உதவியாக, அட்டர்னி ஜெனரல் உட்பட, மத்திய அரசு சார்பில், எந்த சட்ட நிபுணரையும் அனுப்புவது இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

நீதி: சிபிஐயை சுதந்திரமாக செயல்பட விடுகிறார்களாம். காங்கிரசு அரசின் பங்களா நாய்க்கு பெயிண்ட் அடித்துவிட்டால் அது சுதந்திர நாயாகி விடுமா?

______

செய்தி: நீண்ட காலமாக, வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களின் பெயர், முகவரியுடன் பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்த, வருமான வரித் துறை முடிவு செய்துள்ளது.

நீதி: போலீஸ் ஸ்டேசன் மற்றும் பொது இடங்களில் தமது ஃபோட்டோ ஒட்டப்படுவது குறித்து பிக்பாக்கெட்டுகளே கவலைப்படுவதில்லை, முதலாளிகளா கவலைப்படுவார்கள்?

______

செய்தி: கொல்கட்டாவில், “செக்ஸ்’ தொழிலாளர்களுக்கு, கள்ள நோட்டை கண்டறியும் பயிற்சியை வழங்க, அரசு சாரா அமைப்பு முன்வந்துள்ளது.

நீதி: விபச்சாரத்திற்கு கள்ளத்தனமாக ஏழைப் பெண்கள் சப்ளை செய்யப்படுதை தடுத்த நிறுத்த முடியவில்லை, கள்ள நோட்டையாவது கண்டுபிடிப்போம் என்கிறார்கள்!

______

செய்தி: “கடும் கோடை நிலவுவதால், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் விதத்தில், டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” என, டில்லி அரசு உத்தரவிட்டு உள்ளது.

நீதி: வறட்சிக் காலத்திலும் நட்சத்திர விடுதிகளுக்கு மட்டும் தண்ணீர் எப்படி தாராளமாகக் கிடைக்கிறது? சப்ளையை நிறுத்துங்கய்யா வெண்ணைகளா!

______

செய்தி: “திருப்பதி – சென்னை இடையே, ரயில்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும், திருப்பதி ரயில் நிலையம், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்” என, மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால், தெரிவித்தார்.

நீதி: வேலை வெட்டிக்காக நாடு முழுக்க சுற்றும் உழைப்பாளிகளுக்கு போதிய ரயில் வசதிகள் இல்லை, மொட்டை அடிப்பவன் ஊருக்கு மட்டும் ஏன் இந்த வெட்டிச் செலவு?

______

செய்தி: நாட்டின் முன்னணி தொழில் நிறுவனமான, “ரிலையன்ஸ்’ தலைவர், முகேஷ் அம்பானிக்கு, கடந்த பிப்ரவரி மாதம், “இந்தியன் முஜாஹிதீன்’ பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால், அவரின், “அன்டில்லா’ பங்களாவுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

நீதி: நாயக்கன் கொட்டாயிலும், ராமேஸ்வரம் கடலிலும், பெஸ்ட் பேக்கரியிலும் மக்களைக் காப்பாற்ற வராத போலீசும், இராணுவமும் தரகு முதலாளிகளின் காவல் நாய்கள்தான், யார் மறுப்பார்கள்?

______

செய்தி: சேலம் அரசு மருத்துவனையில் பிரசவம் பார்க்க செவிலியர்களுக்கு லஞ்சம் தராததால் மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண், மாநகராட்சி கழிப்பிடம் அருகே குழந்தை பெற்றார்.

நீதி: நல்லவேளை, கழிப்பிடத்தை தனியாருக்கு டெண்டர் விடவில்லை!

  1. // செய்தி: சேலம் அரசு மருத்துவனையில் பிரசவம் பார்க்க செவிலியர்களுக்கு லஞ்சம் தராததால் மருத்துவமனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண், மாநகராட்சி கழிப்பிடம் அருகே குழந்தை பெற்றார்.

    நீதி: நல்லவேளை, கழிப்பிடத்தை தனியாருக்கு டெண்டர் விடவில்லை! //

    அவாள் மீது தவறு இருந்தால் இவாள் கண்டுக்கமாட்டா… வினவுமா தொழிற்சங்க சந்தர்ப்பவாதத்தில் சிக்கிக் கொள்ளவேண்டும்..?!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க